நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி

நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி

  • By Magazine
  • |

தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்?

நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் தாக்குதல் உத்திகளை தவிர்த்து தாக்குதலில் இருந்து ஒழிந்து (மறைந்து) எதிரியின் தாக்குதலின் முயற்சியிலிருந்து விலகி நமது தற்காப்புக்கு தேவையான அளவு மட்டுமே தாக்குதல் நடத்தும் உத்திகளை முன்னிலைப்படுத்தி கற்றுக் கொடுத்து வருகிறேன்.

எனது பயிற்சி முறையில் பிரதானமாக சுமார் ஆறு விதமான ஒளிந்து மாறும் யுக்திகளை கற்று கொடுத்து வருகிறேன். தற்காப்பு என்றாலே ஒளிந்து மாறும் பயிற்சி முறை தான் மிகவும் சிறப்பானது. “ஒளிவதனால் சுவடு தன்னை முறையாய் செய்யே” என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் கூறியுள்ளார்.

ஆகவே  ஒளிந்து மாறும் நுட்பங்களை கற்றுக் கொடுத்து வருகிறோம். ஒரு வன்முறையாளர் நம்மை தாக்கும்போது ஒளிந்து மாறுதல் என்ற நுட்பத்தை பயன்படுத்தி எதிரி வெறும் கை கால்களால் அல்லது ஆயுதங்களுடன் மோதும் போதும் கூட இந்த  நுட்பத்தை கையாண்டு எதிரியின் தாக்குதல்கள் நம் மேல்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். தப்பிக்க முடியாத சூழ்நிலையில் தேவை ஏற்பட்டால் மட்டும் போதுமான அளவு தாக்குதல் நடத்தலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

ஒளிந்து மாறுதல் என்பது தற்காப்பு கலைக்கு மட்டுமல்ல நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். வாழ்வில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை தவிர்ப்பதன் மூலம் அதனால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்.

நீங்கள் ஏன் தாக்குதல் முறைகளை கற்பிப்பதில்லை?

மனிதர்கள் பலவிதமான குண நலன்கள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் சாந்த குணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆக்ரோஷ குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மட்டுமல்ல சிலர் மிகவும் சிறிய விஷயங்களுக்கு கூட முன் கோபம் அடைந்து தாக்கி விடக் கூடிய அபாயம் உண்டு அப்படி தாக்கினால் எதிரில் உள்ள நபருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு விடும் என்பதால் தான் தாக்குதல் வித்தைகளை கற்றுக் கொடுப்பதில்லை. இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் மனிதர்களின் கோபங்களால் வன்முறைகள், அடிதடி, கொலை போன்ற பல செய்திகளை காண முடிகிறது. பல நேரங்களில்  ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டால் கூட அது கொலையில் முடியக்கூடிய சம்பவங்களை காண முடிகிறது. வன்முறையை வன்முறையால் வெல்லக் கூடிய காலங்கள் கழிந்து விட்டன. நமக்கு பொறுமை அதிகமாக இருந்தால் முடிந்தவரை ஆபத்துக்களை தவிர்க்க முடியும். பலசாலியாக இருந்தாலும் பலம் இல்லாதவராக இருந்தாலும் பொறுமை மட்டும் இருந்தால் பல பிரச்சினைகளையும் அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் தவிர்க்க முடியும் ஆகவே மனித வாழ்வில் பொறுமை மிக அவசியம்.

நல்ல மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

எங்களிடம் ஒரு மாணவன் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதற்கு வந்தால் அவனுடைய பொறுமையை சோதிப்போம். அவருக்கு சமூகத்தின் மீதான கடமை உணர்வு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். அவர் வன்முறையாளரா என்பதையும் பல விதங்களில் அவருக்கே தெரியாமல் சோதனை செய்து அவர் நல்ல உள்ளம் படைத்தவராக இருந்தால் மட்டுமே தற்காப்பு கலை நுட்பங்களை கற்றுக் கொடுக்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு வர்ம மருத்துவத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். தற்போது கடினமான பயிற்சி முறைகளை தவிர்த்துவிட்டு எளிதாக பயன்படுத்தக்கூடிய முறைகளை மட்டும் பயிற்சி அளிக்கிறோம்.

அகத்தியர் வாக்குபதி ஒருவருக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க பன்னிரண்டு ஆண்டுகள் வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது ஒத்து வரவில்லை. என்னை பொறுத்தவரை 12 ஆண்டுகள் அல்ல அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தால் குறைந்த ஆண்டுகளிலே கற்றுக் கொடுக்கலாம்.

தாங்கள் ஆயுத கலையை பயிற்சி அளித்து வருகிறீர்களா?

நல்ல முறையில் தற்காப்புக் கலையை பயின்றால் ஒருவர் ஆயுதம் எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது. நம்பிக்கை இருக்க வேண்டியது ஆயுதத்தில் அல்ல ஒருவரது மனதில் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு பலவீனமான மனிதனாக இருந்தாலும் அவரது மனம் வலிமை மிக்கதாக இருந்தால் வேறு எந்த ஆயுதமும் தேவை இல்லாமல் அவரால் ஒளிந்து மாறும் முறையின் மூலம் தற்காத்துக் கொள்ள முடியும்.

இதனை சித்தர்கள் மனம் தன்னை அடக்க வேண்டும் கொடிதான கோபம்தனை தொலைக்க வேண்டும். ஆரேனும் காலம் கொண்டால் அப்பனே குருபரனை தேட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆக நல்ல ஒரு ஆசிரியரின் திறமை என்பது தனது மாணவனை சாந்தகுணமுள்ளவனாக மாற்றுவது ஆகும். மேலும் எப்படி ஒரு சூழ்நிலையில் கோபம் கொள்ளாமல் இருப்பது என்பது குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும்

அதாவது ஒரு பிரச்சினை உருவாகி அடிதடி ஏற்பட போகிறது என்று தெரிந்த உடனே அதனை பொருட்படுத்தாமல் சாதுரியமாக பேசி அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். மேலும் வாக்குவாதத்தினால் தான் பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆகவே நாவை அடக்க கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல முறையில் பேசுவதன் மூலமே பல பிரச்சினைகளை தடுக்க முடியும். வார்த்தைகள் முற்றி பல கொலைகள்  நடந்துள்ளது. இதனை பழைய ஆசான்கள் நாக்கு கொண்டு தடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது பேச்சின் வலிமையால் ஒரு பிரச்சினையை தடுக்க முடியும். ஒருவர் வன்முறையாக பேச வந்தால் நாம் அவரை போல் வன்முறை பேச்சை கையாளாமல் பொறுமை காக்க வேண்டும். அதற்குரிய மனப்பக்குவத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளை ஆசான்கள் உருவாக்க வேண்டும். அதையும் மீறி தாக்க முயற்சித்தால் ஒளிந்து மாறும் நுணுக்கத்தை பயன்படுத்தி தப்பித்துக் கொள்ளலாம்.

லட்சக்கணக்கான ஆசான்கள் இருந்தாலும் அவர்கள் செய்யாத  நோக்கு வர்மம், சுண்டு வர்மம் நீங்கள் மட்டும் செய்வது எப்படி?

 அகத்திய மாமுனிவர் எழுதிய நூலின் நூல்களின்படி எனது ஆசான்கள் கற்றுத்தந்த முறையின் படி இப்படிப்பட்ட கலைகள் உலகில் இருக்கின்றன என்பதை செய்து காண்பிப்பதற்காக நோக்குவர்மம், சூண்டுவர்மம் இவைகளை மிகவும் கடினமாக பயிற்சி செய்து அவற்றை நிரூபித்துள்ளேன். இப்படிப்பட்ட பழங்கால கலைகள் உலகில் இருக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே நான் இதனை செய்து காட்டினேன்.

இதனை சில வெளிநாட்டவர்கள் முன்னிலையிலும் செய்திருக்கிறேன். மனதை கட்டுப்படுத்தி விட்டால் இது போன்ற சாதனைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதனை பயிற்சி செய்ய நீண்ட வருடங்கள் தேவைப்படும் என்றாலும் தொடர் முயற்சியின் மூலம் அடைய முடியும். வர்ம சூத்திரம் என்ற நூல் வர்மக்கலையின் அடிப்படை நூல் ஆகும். அந்த நூல் ஒருவரின் உடலை தொடாமல் மெய்தீண்டா காலம் என்ற முறையின் மூலம் பிறரது உடலில் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று கூறுகிறது. அந்த நூலில் உள்ள வெற்றி என்ற பச்சிலை என்ற கருத்தின் மூலம் ஒரு மனிதன் வாழ்வில் சமூகத்திற்கு எப்படி எல்லாம் உதவ வேண்டும் என்று  உதாரணம் கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு செடியில் இலை உருவாகிறது. பின்னர் அது காய்ந்து கீழே விழுகிறது. அதன் பின்னர் அந்த செடி அல்லது பிற செடி மரங்களுக்கு அது உரம் ஆகிறது. அதுபோல ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் மறைந்த பின்னரும் இந்த சமூகத்திற்கு அவர்கள் பெற்ற கல்வியையோ, செல்வத்தையோ, கலை அறிவையோ பிறருக்கும் சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ வேண்டும் என்பதை குறிக்கிறது.

பழங்காலத்தில் உள்ள பல கலைகள் அழிந்துவிட்டன என கூறப்படுகிறது அது உண்மையா?

கலைகள் ஒருபோதும் அழிவதில்லை. சாத்திரம் பொய் ஆனால் சந்திரனை பார் என்பார்கள். அதாவது சந்திரன் தேய்பிறையில் இருந்து முழு நிலவாக வளர்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பழையபடி தேய்பிறை ஆகிறது. மீண்டும் அது வளர்ந்து முழு நிலவாக மலர்கிறது. இதே போன்று கலைகள் அழிந்தது போல் தோன்றினாலும் மீண்டும் அவை மலரும்.

தாங்கள் இந்த களரி வர்மம் போன்ற கலைகளை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள்?

எனது அம்மா கண்ணூரில் பிறந்தவர். அந்த காலத்தில் அவரது வீட்டிற்கு ஒரு சன்னியாசி வந்துள்ளார். எனது அம்மாவின் குடும்பத்தினர் அவருக்கு உணவு, உடை  கொடுத்து நன்றாக உபசரித்துள்ளனர். பின்னர் 12 வயதான எனது அம்மா அவரிடம் ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார். எனது அம்மாவின் அறிவை கண்டு ஆச்சரியமடைந்த அவர் எனது அம்மாவின் குடும்பத்தினரிடம் இந்த குழந்தைக்கு நல்ல அறிவு உள்ளது. ஆகவே நிறைய கலைகளை இந்த குழந்தைக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு தங்குவதற்கு இடம் மட்டும் தாருங்கள். பகலில் பிச்சை எடுத்துக் கொள்கிறேன். இரவில் தூங்குவதற்கு இடம் கொடுத்தால் மட்டும் போதும். என்னிடம் உள்ள அனைத்து வித்தைகளையும் அந்த குழந்தைக்கு கற்று கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் எனது அம்மாவின் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எனது அம்மாவின் ஆர்வம் காரணமாக ஒருவிதமாக ஒத்துக் கொண்டுள்ளனர். பின்னர் எனது அம்மாவின் வீட்டில் தங்கி இருந்த அவர் எனது அம்மாவுக்கு வர்மம் வைத்தியம், களரி, கலை வேலைபாடுகள் போன்ற பல விதமான கலைகளை கற்றுக் கொடுத்துள்ளார். அந்த கலைகளை எனக்கு அம்மா கற்று கொடுத்தார்.

பின்னர் எனது அம்மா என்னை நிரகத் என்ற பகுதியை சேர்ந்த பாஸ்கரன் ஆசான் என்பவரிடம் களரி கலைகளை கற்றுக் கொள்வதற்கு சேர்த்து விட்டார். பின்னர் குமாரன் ஆசான், அகமது குஞ்சு ஆசான், பட்டணத்து ஆசான், ஜார்ஜ் ஆசான், போன்றவர்களிடமிருந்து தெக்கன் களரி தற்காப்பு வித்தைகளையும் வடக்கன் களரி தற்காப்பு வித்தைகளையும், வர்ம முறைகளையும், வர்ம சிகிச்சையும் கற்றுக் கொண்டேன்.

தெக்கன் களரிக்கும் வடக்கன் களரிக்கும் உங்களது பார்வையில் உள்ள வித்தியாசங்கள் என்ன?

தெக்கன் களரி முறையின் முக்கிய நோக்கமானது வர்ம முறை மற்றும் தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்தது ஆகும் வடக்கன் களரி முறையின் பிரதான நோக்கம்.

 சாதனைகளும் உடல் வலிமை தடவு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். ஆகவே இரண்டையும் ஒப்பிடும் போது தெக்கன் களரி முறை சிறந்தது ஆகும்.

களரி ஆசான்கள் கையாளும் முறைகளுக்குள் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன அது எதனால்?

ஆசான்களுடைய அறிவு அவர்களது திறமை, வயது, அனுபவம் அவர்கள் கற்றுக் கொண்ட முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கற்றுக் கொடுக்கும் சுவடு முறைகள் சுருங்கும் அல்லது பெரிதாகும் ஒரு சுவடை 100 சுவடாகவும், 100 சுவடுகளை ஒரு சுவடாகவும் மாற்றலாம். அப்படிதான் சுவடு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் அடிப்படை சுவடுகளை ஒட்டியதாகவே இருக்கும். அதனால் எந்த குழப்பமும் தேவையில்லை. எல்லா சுவடு முறைகளும் சிறப்பானவை தான்.

நீங்கள் எந்த சுவடு முறைகளை பின்பற்றி கற்பித்து வருகிறீர்கள்?

நான் பல்வேறு ஆசனங்களிடம் பல்வேறு விதமான சுவடு முறைகளை கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை ஆராய்ச்சி முறையில் சுருக்கி ஒரு சுவடு என்ற முறையில் மிகவும் சுருக்கி கற்பித்து வருகிறேன். ஏனென்றால் ஆயிரம் சுவடுகள் வைக்க வேண்டும் என்றாலும் முதலில் வைக்க வேண்டியது ஒரு சுவடு தான். ஒரு சுவடு வைத்தால் எத்தனை சுவடுகள் வேண்டும் என்றாலும் வைக்கலாம் என்றாலும் நாம் ஒருவரிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும், தாக்குவதற்கும் ஒரு சுவடு போதுமானது. அதாவது ஒருவர் தாக்குகிறார் என்றால் ஒரு சுவடு பின் வைத்து ஒளிந்து மாற வேண்டும் அல்லது தடுக்க வேண்டும். தற்காப்புக்காக திருப்பி தாக்க வேண்டும் என்றால் ஒரு சுவடு முன்வைத்து தாக்கவோ தடுக்கவோ எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆகவே தான் இந்த ஒற்றைச் சுவடு முறையை பின்பற்றி வருகிறோம்.

சுவடு முறைகளில் தங்களுக்கு பிடித்த முறை எது ?

எனக்கு மிகவும் பிடித்தது அங்கச்சுவடு 64 என்ற சுவடு முறை ஆகும்.  அந்த சுவடு முறையை செய்து முடித்த பின்னர் அந்த இடத்தை பார்த்தால் ஒரு ஓவியம் வரைந்தது போல் இருக்கும். ஒரு முக்கோணத்தின் மீது புதிய ஒரு முக்கோணத்தை வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படி மீண்டும் மீண்டும் முக்கோணங்களாக வந்து கொண்டே இருக்கும். ஆனால் ஒரு முக்கோணத்தின் மீது இன்னொரு முக்கோணம் படாமல் வந்து இறுதியில் ஒரு சிறந்த ஓவியத்தை போல் நமது கால்தடங்கள் ஆகி இருக்கும்.  ஆகவே அவை முடியும் போது 64 சுவடுகள் வரும் அவை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆகவே எனக்கு அந்தச் சுவடு முறை மிகவும் பிடிக்கும். இந்த சுவடு முறை சுமார் 60 எதிரிகள் சுற்றி வந்தாலும் அவர்களிடமிருந்து தப்பிக்கும் முறையாகும் என்பது இதன் சிறப்பம்சமாகும்

நீங்கள் எங்காவது தற்காப்புக்காக களரி கலையினை  பிரயோகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா?

நான் களரி ஆசான் மட்டுமல்ல நான் புட்பால் விளையாட்டு வீரனாகவும் இருந்து வந்தேன். கேரளாவில் பிரபலமான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஒரு புட்பால் போட்டியில் நான் கேப்டனாக இருந்தேன்.

அப்போது எனது அணியை சேர்ந்த ஒருவர் அடித்த பந்து எதிரணியை சேர்ந்த ஒருவர் மீது பட்டு அவருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அணியினர் எங்களது அணியினரை கூட்டமாக தாக்க தொடங்கினர்.  அப்போது சண்டையை சமாதானம் செய்வதற்காக சென்றேன். ஆனால் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்கள். அதனால் வேறு வழி இன்றி நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலையே பயன்படுத்தி  அவர்களிடமிருந்து தப்பித்தேன். அது எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.

நோக்கு வர்மத்தை தாங்கள் எங்கே நிகழ்த்தி இருக்கிறீர்கள்?

இந்த நோக்கு வர்ம கலையை இஸ்ரேல், ரஷ்யா போன்ற வெளிநாட்டவர்களிடம் செய்து காட்டியுள்ளேன். மேலும் இப்படி ஒரு கலை இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக உள்ளூர் காரர்களிடமும், மீடியாக்களிடமும் நிரூபித்துள்ளேன். இப்படி ஒரு கலை இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே நான் செய்து காட்டியிருக்கிறேன் என்றார் அவர். அரிதலும் அரிதான அழிவின் விளிம்பில் உள்ள கலைகளை மீட்டெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆசானுக்கு வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு விடை பெற்றோம்.

பேட்டி கண்டவர்

G. ஜெய கர்ணன் இணை ஆசிரியர்,

உதவி :

திரு.R. அஜோய் ,

திரு.S. மகேஷ் ,

திரு.அருள் N. சுதீர் சிங் குளன்,  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *