குமரி எழிலன்
எல்லைகளில்லா உலகம் – இது
ஏற்ற தாழ்விலா கழகம்
எங்கே எதுவிளைந்தாலும்-அது
பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்
(எல்லைகளில்லா…)
உழைப்பில் உருவான உலகம் -இது
உலகோர்க் கெல்லாம் சொந்தம்
பசித்த வயிறு நிறைத்து – மகிழும்
பாரோர் எல்லாம் பந்தம்..
(எல்லைகளில்லா …)
விற்பனை என்பது பனையா – அட
கற்பனை போல் ஒரு வினையா
என்றொரு கேள்வி எழணும் – நாம்
எந்நாளும் எல்லாமும் பெறணும்
(எல்லைகளில்லா …)
போரெனும் ஆயுதம் இல்லை -பதவி
பேய் எனும் ஆவியும் இல்லை
ஏழைப் பணக்காரனில்லை – இனி
எனது உனதென்பதில்லை…
(எல்லைகளில்லா…)
அடிமை என்றொரு சொல்லே -இனி
அகர வரிசையி லில்லை
ஆணும் பெண்ணும் சமமே- சாதி
ஆணவக் கொலைகளும் இல்லை
(எல்லைகளில்லா…
கையில் வண்ணக்கயிறு – கட்டி
பேதம் காட்ட மாட்டோம் – இனி
பொய்யில் பொதிந்து வந்த
புனைகதைகள் பேசமாட்டோம்..
(எல்லைகளில்லா …)
Leave a Reply