களரிக்கலை

களரிக்கலை

  • By Magazine
  • |

மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்

இந்தியாவின் தென்கோடியில் இறுதி எல்லையாக விளங்கும் கன்னியாக்குமரி மாவட்டம் 1672 சதுரகிலோமீட்டர் பரப்பளவையும் 71.5 கிலோமீட்டர் கடற்கரையையும் கொண்டதாகும். இது மூன்று புறமும் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூளப்பட்ட ஓர் இயற்கைவளம் கொழிக்கும் மாவட்டமும் ஆகும். இது நீண்டகாலமாக திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு கன்னியாக்குமரி மாவட்டம் எனும் பெயரைப் பெற்றது. இங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பழந்தமிழ் மொழியினை செந்தமிழ் வடிவில் பேசிவந்த திருவிதாங்கூர் சேரநாட்டு மன்னர்கள் காலத்தில், படிப்படியாக தமிழ்மொழியோடு மலையாள மொழியும் வளர்ச்சியுற்று நாளடைவில் பெரும்பான்மையான மக்கள் மலையாள மொழியை பேசியதால் அதுவே ஆட்சி மொழியாகவும் மாறியது.

கன்னியாக்குமரி மாவட்டம் முற்காலங்களில் பல்வேறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. குறுநில மன்னர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி மோதிக்கொள்வதால் பல்வேறு போர்களும் நடந்துள்ளன. சேர சோழ பாண்டிய மன்னர்களும் கூட இப்பகுதியில் போர்க்களம் அமைத்து நீண்டகாலம் போர் புரிந்துள்ளனர். இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் போன்றோர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் இன்று மூலச்சல் என்று அழைக்கப்படும் முல்லையூர், முல்லை மங்கலம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் யுத்தக்களம் அமைத்து போரிட்டு இறுதியில் சேரமன்னனை தோற்கடித்த செய்தி தலக்குளம் பெரியகுளத்து ஏலாவின் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். போர் நிகழ்வுகளின்போது போர்பயிற்சி அளித்தல் இருவகையாக கையாளப்பட்டுள்ளது. 1. நேர்முகப்போர்,    2. மறைமுகப்போர் எனும் முறைகளாகும். நேர்முகப்போரில் படைகள் நேருக்கு நேர் நின்று போர்புரியும். இதனை அறப்போர் என்பர். இந்த அறப்போர் முறை வல்லுநர் அடங்கிய படையை “வலங்கைப்படை” அல்லது “வலங்கை மகாசேனை” என்றும், மறைமுகமாக எதிரியை தாக்கி போர்புரியும் வல்லுநர்கள் பண்டகசாலைகளை அழித்தல், தீயிடல், பிற மன்னர்களின் பொருட்களை கவர்தல் போன்ற புறப்போர்முறைகளை செய்வர். இது மறப்போர் எனப்படும். இந்த மறப்போர் வல்லுநர்கள் அடங்கிய படையை “இடங்கைப்படை” அல்லது “இடங்கை மகாசேனை” என அழைப்பர். இங்ஙனம் தொடர் நிகழ்வைப்போல் அடிக்கடி போர்புரிதல் நிகழ்ந்துகொண்டே இருந்த காலத்தில் மலைப்பகுதிகளின் மணல்பாங்கான இடங்களில் போர்பயிற்சி மய்யங்களை ஏற்படுத்தி தொடர் பயிற்சிகள் நடந்துள்ளன. போர்பயிற்சியும், தற்காப்பு பயிற்சிகளும் கைதேர்ந்த வல்லுநர்களால் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பயிற்சி அளிக்கும் தலங்களுக்கு “களரி” எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். இந்த செய்தி பத்துப்பாட்டில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதுமரத்த முரண்களரி

வரிமணல் அகன்திட்டை

கருந்தொழில் கருமாக்கள்

கடல் இறலின் சூடுதின்றும்

வயல் ஆமை புழுக்கு உண்டும்

வளர் அடும்பின் மலர் மலைந்தும்

புனல் அம்பற் பூச்சூடியும்

நீலநிற விசும்பின் வலன் ஏர்புதிரிதரும்

நாள் மீன்விரா அயகோள் மீன்போல

மலர்தலை மன்றத்துப்பலர் உடன் குழீஇ

கையினும் கலத்தினும் மெய் உறத்தீண்டி

பெருஞ்சினத்தால் புறக்கொடாது

இருஞ்செருவின் இகல் மொய்ப்பினோர்”.

                                                – பத்துப்பாட்டு -11, பக்கம்-305, கு.வெ. பாலசுப்ரமணியன்

இன்று போர் பயிற்சி தலத்தை மட்டுமன்றி அக்கலையினை களரி எனும் ஆகுபெயராலேயே அழைக்கின்றனர். தமிழர்களின் இந்த பெயர் பண்டைய செந்தமிழ் நாடாக விளங்கிய இன்றைய கேரளத்தில் மிகவும் சிறப்புற்று விளங்குகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இது “சிலம்பாட்டம்” எனும் பெயருடன் சிறப்புற்று விளங்குகின்றது. இந்த போர்பயிற்சி முறையின் மிகவும் ஆழமான போர்முறை “அங்கைப்போர்” எனப்படும் முறையாகும். அங்கைப்போர் என்பது வெறும் கைகளால் நேருக்கு நேர் நின்று போர்புரிவது. இதில் முக்கிய பங்குவகிப்பது வர்மக்கலையாகும். வர்மக்கலை இன்று ஒரு சிறந்த மருத்துவக்கலையாக மாற்றப்பட்டு உலகெங்கும் பெயர்பெற்று விளங்குகின்றது.

இக்கலை கன்னியாக்குமரி மாவட்டத்தில் அனைத்துவிதமான நோய்களைத் தீர்ப்பதற்கும், அவசரகால உயிர்காப்பு தேவைகளுக்கும், தற்காப்பிற்கும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது பிறருக்கு கற்றுக்கொடுக்கப்படாமல் அழிந்து ஒழியும் நிலையை எட்டி இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கி.பி. 2000-2001-ல் சூழியல் அறிஞர் சந்தானகுமார் (பேராசிரியர், இந்துக்கல்லூரி), சூழியல் அறிஞர் ஜெயக்குமார் (ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) இவர்களின் துணையோடு மூலச்சல் முனைவர் இராஜேந்திரன் முதல்முதலாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வாயிலாக கல்லூரிப் படிப்பாக மாற்றி இன்று உலகம் முழுவதும் மறைப்பின்றி எல்லோர்க்கும் பயன்படும் மருத்துவக்கலையாக மாற்றப்பட்டுள்ளது.

இது கன்னியாக்குமரி மாவட்டத்தின் அழிக்கமுடியாத அடையாள மருத்துவ முறையாகும்.

இந்த தற்காப்புக்கலையானது குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் இரத்தத்தோடு கலந்த ஓர் உறவைப் பெற்றுள்ளதாகும். “மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டாம்” என்று சொல்வதுபோல் இக்கலை வல்லுநர்களை காவல்துறை, இராணுவத்துறை, ஊர்க்காவல் படை, காவல்துறை நண்பர்கள் படை, உளவுத்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்வதன் மூலம் எளிய பயிற்சிகளாலேயே சிறந்த வல்லுநர்களாக மாற்றமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆட்சிகள் நிகழ்ந்தபோதும் நடைபெறாத மாபெரும் புரட்சியாக, மறுமலர்ச்சியாக இக்கலை வல்லுநர்களின் கனவுகளுக்கு இவ்வாட்சியில் முழுமையான தீர்வு ஏற்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டுத் துறையின் அனைத்து பிரிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு சாதாரண மக்களின் வாழ்வில் லட்சியங்கள் நிறைவேற்றப்படுவது ஒரு தனி நிறைவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாட்சியின் மீது மதிப்பும் மரியாதையும் கூட பல மடங்கு அதிகரித்திருப்பதையும் காணமுடிகிறது.

களரிக்கலையின் தோற்றம்

அறிவியல் அடிப்படையில் இக்கலையின் தோற்றத்தினை ஆயும்போது மனித இனம் என்று உருவாகி விலங்குகளோடு விலங்கைப்போல் வாழத் தொடங்கியதோ அன்றே தொடங்கி விட்டது. விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், உணவுகளை வேட்டையாடவும் வெறுங்கைகளை நம்பி தொடங்கிய வாழ்க்கைப் போராட்டத்தில் படிப்படியாக மரங்களாலும், கற்களாலும் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாயுதங்களே நாளடைவில் அவன் வாழ்க்கையில் பல வகைகளில் பயன்படும் ஆயுதங்களாக மாறின. மனிதர்கள் அலைந்து திரியும் நிலையிலிருந்து கூட்டமாக நிலைபட்டு வாழத் தொடங்கிய போது நிலங்களையும் எல்லையிடத் தொடங்கினர். நிலங்கள் எல்லையிட்ட பின்னர் தலைவன் தோன்றினான். தலைவனுக்கும், அவன் நிலத்திற்கும் பாதுகாப்பு தேவைப்பட்டதால் வீரர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த வீரர்கள் தற்காப்புக்கலை வல்லுநர்களாகவும், எதிரிகளிடமிருந்து நில உடமைகளை பாதுகாப்பவர்களாகவும் மாறினர்.

பின்னர், குழு, குடி, சிறுகுடி, பெருங்குடி, அரசு, பேரரசு என உருவாக்கம் பெற்ற நில உடமை சமூகத்தின் பாதுகாவலர்களாக வீரர்கள் உருவாகி படை அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள் நீதி, நியாயம், நேர்மைமிக்க சமூக பாதுகாப்பு அமைப்புகளாக மாற்றமடைந்தன. அரசுக்கும், அரசுடமைக்கும், சமூகத்திற்கும், சமூக மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்த இந்த அமைப்பு, அரசர் மரபு அழிக்கப்பட்டபோது சிதைவடைந்து சின்னாபின்னமாகி பாதுகாப்பின்றி வறுமையை நோக்கி தள்ளப்பட்டது. அதனால் இக்கலை வல்லுநர்கள் இன்று நலிவுற்று விட்டதோடு இக்கலையும் அழிவின் விழிம்பை தொடும் நிலையை எட்டிவிட்டது. இந்த சூளலில் அரசின் பாதுகாப்பான திட்டம் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இக்கலை வல்லுநர்களுக்கு ஒரு புத்தொளியை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

களரிக்கலை வல்லுநர்கள் வாழும் இடங்கள்

கன்னியாக்குமரி மாவட்டத்தில் களரிக்கலை வல்லுநர்கள் எல்லா ஊர்களிலும் காணப்படுகின்றனர். எனினும் குறிப்பாக கீழ் குறிப்பிடும் ஊர்களில் ஏராளமாக உள்ளனர். களியக்காவிளை, மேக்கோடு, வன்னியூர், மலையடி, படந்தாலுமூடு, மீனச்சல், திருத்துவபுரம், குழித்துறை, காஞ்சாம்புறம், நித்திரவிளை, பூவாறு, செம்பருத்தி, கொல்லங்கோடு, தூத்தூர், முஞ்சிறை, காப்பிக்காடு, முள்ளங்கனாவிளை, புதுக்கடை, கருங்கல், திப்பிறமலை, பாலூர், மாங்கரை, கீழ்குளம், மிடாலம், பைங்குளம், குழிக்கோடு, குளச்சல், ஆனக்குழி, பாலப்பள்ளம், காட்டுக்கடை, தேங்காய்ப்பட்டணம், திக்கணங்கோடு, ஓலக்கோடு, பூட்டேற்றி, இராஜாக்கமங்கலம், பேயோடு, குருந்தன்கோடு, இரணியல், பெத்தேல்புரம், செம்பொன்விளை, ஊத்துக்குழி, புதுவிளை, தலக்குளம், பெருவிளை, ஆசாரிப்பள்ளம், இராமன்புதூர், ஈத்தாமொழி, இளங்கடை, தெங்கன்புதூர், பறக்கை, மணக்குடி, மைலாடி, சாமித்தோப்பு, லீபுரம், அஞ்சுக்கிராமம், கன்னியாக்குமரி, பொத்தையடி, கோவளம், கோட்டாறு, வடசேரி, புளியடி, துவரங்காடு, எட்டாமடை, ஞாலம், தெரிசனங்கோப்பு, வெண்டலிகோடு, செம்மங்காலை, மேல்புறம், கொல்லன்விளை, பத்மநாபபுரம், கொற்றிக்கோடு, குலசேகரம், செருப்பாலூர், களியல், திற்பரப்பு, திருவட்டார், ஆற்றூர், உண்ணாமலைக்கடை, எருதூர்கடை, தொடுவட்டி, கழுவன்திட்டை, பரக்குன்று, கோழிவிளை, பள்ளியாடி, சுவாமியார்மடம், தச்சக்கோடு, உண்ணாமலைக்கடை, மருதூர்குறிச்சி, வெள்ளிகோடு, கல்லுவிளை, கப்பியறை, செல்லங்கோணம், பூக்கடை, கோடியூர், மல்லன்விளை, வாடிவிளை, திருநயினார்குறிச்சி, மூங்கில்விளை, முட்டம், பரைக்கோடு, மூலச்சல், பனவிளை, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், கல்குறிச்சி, வேர்கிளம்பி, உள்ளொட்டி, பூவன்கோடு, முளவிளை, வியன்னூர், தெற்றிகோடு, அருமனை, கோதைக்கிராமம், புதுக்குடியிருப்பு, கோயில்விளை, இருளப்பபுரம், வெள்ளமடம் போன்ற பல இடங்களிலும் களரி வல்லுநர்கள் சிறப்புற்று வாழ்ந்துள்ளனர். இன்றும் பல இடங்களிலும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

களரிப்பயிற்சியின் வகைகள்

களரிப்பயிற்சியானது சிறப்பான கட்டுப்பாடுகளுடனேயே பயிற்றுவிக்கப் பட்டுள்ளன. முதலில் மெய் பயிற்சி எனப்படும் உடற்பயிற்சி பயிற்றுவிக்கப் பட்டுள்ளது. கண், கழுத்து, புயம், முழங்கை மூட்டு, மணிக்கட்டு, இடுப்பு, தொடைப்பொருத்து, கால்முட்டு, கரண்டை, விரல்கள் எனும் அசையும் அனைத்து பாகங்களுக்குமான முழுமையான இயக்கப்பயிற்சிகள் முறையாக செய்ய வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடலுக்கு வலிமை ஊட்டும் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்ட பின்னரே தற்காப்புப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளின்போது உடல் ஆரோக்கியமடைவதோடு மனதும் திடப்படுகிறது. திட்டவட்டமான உடல் இயக்கங்கள் தற்காப்பு நோக்கி சீர்படுத்தப்படுகிறது.

                இதனைத் தொடர்ந்து தற்காப்பு விளையாட்டுப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை:

1. சுவடுமுறைகள்

சுவடுமுறைகள் இருவகைப்படும்.

· ஒற்றைச்சுவடு

· பிரிவுச்சுவடு

ஒற்றைச்சுவடு என்பது ஒரு காலைத் தரையில் பதித்து எல்லா திசைகளிலும் தாக்கும், தற்காக்கும் நுட்பச் செயல்பாடுகளைக் கொண்டது.

பிரிவுச்சுவடு என்பது கால்களை மாற்றி மாற்றி பிரித்து நின்று எல்லா திசைகளிலும் இயங்கி தாக்கும், தற்காக்கும் நுட்பங்களைக் கொண்டது.

சுவடு தரவு முறைகளின் வகைகள்

1. நடசாரிச் சுவடுகள்

2. சாட்டச்சுவடுகள்

3. அங்கச்சுவடுகள்

4. சைலாத்துச் சுவடுகள்

5. தடவறைச் சுவடுகள்

6. சீனச்சுவடுகள்

7. கடத்தநாடன் சுவடுகள்

8. சிங்களச் சுவடுகள்

9. மல்லன் சுவடுகள்

10. பீமன்வழிச் சுவடுகள்

11. வாலிவழிச் சுவடுகள்

12. உயிர்வழிச் சுவடுகள்

பிரிவுச்சுவடுகளின் வகைகள்

1. நேர் சுவடுகள்

2. வட்டச்சுவடுகள்

3. குறுக்குச்சுவடுகள்

4. முக்கோண் சுவடுகள்

5. முனிச்சுவடுகள்

6. இருப்புச்சுவடுகள்

7. மறிச்சுவடுகள்

8. சாட்டச்சுவடுகள்

9. பாவலாச்சுவடுகள்

10. முதுகுசாரிச் சுவடுகள்

11. கூட்டச்சுவடுகள்

12. வியூகச்சுவடுகள்

இத்தகைய சுவடுகள் ஒவ்வொரு தரவுச்சுவடு வரிசைகளிலும் வெவ்வேறு நுட்பங்களோடும், செயல்பாடுகளோடும், கருவிகளோடும் கையாளப்படுகின்றன.

2. அடிமுறைகள்

அடிமுறைகள் என்பது தற்காப்பு பயிற்சிகளை நேரடியாக விளையாட்டாகச் செய்து பயிற்சி செய்யும் ஒரு முறையாகும். இது இரு நபர் தொடங்கி பலர் சேர்ந்து தாக்கும் முறைகளையும், அதனை தற்காத்துக்கொள்ளும் செயல்முறை நுட்பங்களையும் கொண்டதாகும். அடிமுறைகளும், தரவு வகைகளின் படி நடசாரி அடிமுறை, அங்க அடிமுறைகள், சீன அடிமுறைகள் பலவிதமாக மாறுபட்ட பயிற்சிகளைக் கொண்டதாகும்.

3. பிடிகள்

பிடிகள் என்பது எதிர் நிற்பவரை எளிதில் நுட்பமாக பிடிக்கும் முறையாகும். பிடிகளின் நுட்பங்களை அறிந்தவர்கள் ஒருவரை இயங்காதவாறு எளிதில் பூட்டிக்கொள்ள முடியும். அதுபோலவே பூட்டப்பட்ட நபர் எளிதில் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. எனில் பூட்டும் முன்னரே தற்காத்துக் கொள்ளவேண்டும் அல்லது பூட்டினைத் திறக்கும் அதிநுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகள் மிகவும் சிறப்பு பெற்றவைகள் ஆகும்.

இன்று நடைமுறையில் உள்ள பூட்டு முறைகள்

1. தெக்ஷணப்பூட்டு

2. துதிக்கைப்பூட்டு

3. வள்ளிப்பூட்டு

  • இறங்குவள்ளிப் பூட்டு
  • ஏறுவள்ளிப் பூட்டு

4. ஒத்தக் கப்பறப் பூட்டு (உறக்கக் காலப்பூட்டு)

5. மலத்திக் கப்பறப் பூட்டு

6. கமத்திக் கப்பறப் பூட்டு

7. பின்னல் பூட்டு

8. ஒடுக்குப் பூட்டு

9. பருந்தமுக்கிப் பூட்டு

10. கடுவாக்காலப் பூட்டு

11. கடுக்கன் கழற்றிப் பூட்டு

12. கீழ்வாரிப் பூட்டு

13. மேல்வாரிப் பூட்டு

14. சிங்கப்பூட்டு

15. தன்னெஞ்சடைத்தான் பூட்டு

16. முன்னெஞ்சடைத்தான் பூட்டு

17. சங்கு நெரிச்சான் பூட்டு

18. கால் பின்னிப் பூட்டு

19. சவாரிப்பூட்டு அல்லது குதிரைப் பூட்டு

20. அடிவாரிப் பூட்டு

21. அடிமலத்திப் பூட்டு

22. வாரியடக்கிப் பூட்டு

23. தோளேந்திப் பூட்டு

24. சிப்பிறப் பூட்டு

25. ஆனைவாரிப் பூட்டு

போன்றவை.

4. ஆயுதவரிசைப் பயிற்சிகள்

ஆயுதவரிசைப் பயிற்சிகள் என்பது ஆயுதங்களால் தாக்குவதும் தாக்குதலை தற்காத்துக்கொள்ளும் நுட்பங்களுமாகும்.

ஆயுதவரிசைகள்

i. சிரமம்

சிரமம் என்றால் மிகவும் கடினம் எனும் பொருளைக் கொண்டதாகும். இது சிறுகுச்சிகளை வைத்து பயிற்சி செய்யும் முறையாகும். இதில் பயன்படும் குச்சிகள் இரு அளவினைக் கொண்டது. இதனை எளிதாகக் குறிப்பிடுவது என்றால், நேர் மார்பளவு, எதிர் மார்பளவு எனும் இரு அளவிலாலான இரு குச்சிகள், மூன்றுக்குச்சிகள் அல்லது நான்கு குச்சிகளாலான பயிற்சி முறையாகும்.

நேர் மார்பளவு என்பது நம் கையை பக்கவாட்டில் நீட்டி அதன் நடுவிரல் முதல் அதனை சார்ந்த மார்பு புள்ளிவரை அளந்தெடுக்கும் அளவாகும். இந்த அளவில் தேர்வுச் செய்யப்படும் குச்சிகளால் பயிற்சி செய்யும் முறை “குறுதடி” சிரமம் எனப்படும். இதுபோன்று, கையை பக்கவாட்டில் நீட்டி நடுவிரல் முதல் அடுத்த மார்புவரை அளந்தெடுக்கும் குச்சியால் பயிற்றுவிக்கப்படும் சிரமம் “தெடுதடி சிரமம்” எனப்படும்.

சிரமம் எனப்படும் இந்த விளையாட்டுப் பயிற்சி மிகவும் சுறுசுறுப்பானதும், கையடக்கமானதுமாகும். இப்பயிற்சியினால் கண்பார்வை அதிகரிக்கும், மனம் ஒருங்கிணைந்து செயல்படும், உடலின் அனைத்து பாகங்களும் வலிமையடையும்.

சிரமப்பயிற்சி முறைகள் தரவுகளின் அடிப்படையில்,

  • சாமி வழி சிரமம்
  • மல்லன் வழி சிரமம்
  • பனையேறி மல்லன் வழி சிரமம்
  • பீமன் வழி குறுதடி சிரமம்
  • பீமன் வழி போர் சிரமம்
  • கூடல் வழி சிரமம்
  • அம்மன் வழி சிரமம்

என பலவகையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

ii. குறுதடி முறைகள்

iii. நெடுதடி முறைகள்

                iii. கத்தி அல்லது கடாரி முறைகள்

                iv. வெட்டுக்கத்தி அல்லது

                v.  வீச்சரிவாள் முறைகள்

                vi. கண்டக்கோடாரி முறைகள்

                vii. மான்கொம்பு அல்லது மடு

                viii. வாளும் கேடயமும்

                ix. சுருள் வாள் கேடயம்

                x. இருமுனைக் கூர்வாள்

                xi. கதாயுத வரிசை

                xii. வேல் கம்பு வரிசை

                xiii சங்கிலி வரிசை

                xiv. இடிகட்டைத் தடை வரிசை

                xv. தூசிக்கல் வரிசை

 போன்றவையும்

5. அலங்கார வரிசைகள்

1. லட்டு வீச்சு

2. சங்கிலி வீச்சு

3. நட்சத்திர வீச்சு

4. வட்ட வீச்சு

5. தொடர் வீச்சு

எனப் பல்வேறு வீச்சு முறைகளும், அவற்றோடு அக்கினி வீச்சு முறைகளும் இவ்வரிசையில் அடங்கும்.

6. குஸ்தி

குஸ்தியிலும் பல வரிசைகள் உள்ளன.

7. மல் வரிசை

                1. எறி மல்

                2. கெட்டு மல்

                3. பிடி மல்

  என பல பிரிவுகள் உள்ளன.

8. கசர்த் வரிசைகள்

                 1. பயில்வான் கசர்த்

                2. தென்டில் கசர்த்

                3. சக்கர கசர்த்

                4. அணில் கசர்த்

5. பாம்பு கசர்த்

6. நிலை கசர்த்

7. சாட்டக் கசர்த்

8. தவளைக் கசர்த்

9. பாய்ச்சல் கசர்த்

10. மல்லன் கசர்த்

11. தண்டால் கசர்த்

12. மறி கசர்த்

9. யோகப் பயிற்சிகள்

இம்முறையில் ஆசாரங்கள் எனப்படும் அடிப்படைப் பண்பாடுகள் பயிற்றுவிக்கப்படுவதோடு உணவுகள், ஒழுக்கங்கள், மூச்சுப் பயிற்சிகள், தத்துவங்கள் போன்றவையும் கற்றுத்தரப்படுகின்றன.

10. அரங்கேற்றப் பயிற்சிகள்

                 இம்முறையில் வர்மங்கள், இளக்குமுறைகள், அடிப்படை நுட்பங்கள், தடவுமுறை நுட்பங்கள், மருத்துவம், செய்முறைகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

களரி கற்பதன் பயன்கள்

  1. களரிக்கலையானது சிறந்த கட்டுப்பாடுகளோடு பயிற்றுவிக்கப்படுவதால்  மாணவர்கள், சமூகத்திற்கு பயன்மிக்க சிறந்த மனோ நிலையையும், உயர்ந்த பண்பாட்டையும் கொண்டு திகழ்கின்றனர்.
  2. உடற்பயிற்சிகள் முறைப்படி வழங்கப்படுவதால் ஆரோக்கியமான உடலும் அடிப்படையான மனக் கட்டுப்பாடும் உருவாக்கப்படுகின்றன.
  3. இக்கலை வல்லுநர்கள் ஒருகாலத்தில் அரசோடும், அரசின் அங்கங்கள் அனைத்தோடும் இணைந்து பாதுகாப்பாக இருந்துள்ளனர். அதனால் இக்கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அதுபோல இன்றும் மாணவர்கள் இப்பயிற்சியினை பெறுவதன் மூலம் தமிழர்களின் பழங்கால கலை ஒன்று அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
  4. இப்பயிற்சிகள் நோய் நொடியற்ற ஒரு ஆரோக்கியமான மன வலிமைமிக்க சமூகம் உருவாக துணைசெய்கிறது.
  5. ஊர்க்காவல் படை, அரசு சார்ந்த பாதுகாப்புப்படைகள் போன்றவைகளுக்கு எளிமையான திறன்மிக்க மாணவர்கள் இக்கலையின் மூலம் உருவாக்கப்படுகின்றனர்.

களரிக்கலை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம்

  1. தமிழர்களின் வீர மரபு சார்ந்த இக்கலையை அழியாமல் பாதுகாப்பது.
  2. நலிவுற்ற வல்லுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல்.
  3. வளமிக்க உடல்நிலையும், மனவலிமையும் உள்ள மாணவர்களை உருவாக்குதல்.
  4. சமூகம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழும் மனோநிலையை உடையவர்களாக மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது.
  5. காவல்துறை, இராணுவத்துறை, உளவுத்துறை, ஊர்க்காவல் படை போன்ற அனைத்து அரசு சார்ந்த பாதுகாவல் துறைகளுக்கும் வலிமைமிக்க இளைஞர்கள் உருவாக இது மிகவும் சிறந்த ஒன்றாகும்.
  6. இக்கலைக்கும், வல்லுநர்களுக்கும், அரசுக்கும் இடையேயான உறவு நெடுங்கால தொடர்பினைக் கொண்டதாகும். அதனால் இக்கலை கற்றவர்கள் அரசுக்கு நம்பிக்கையானவர்களாக விளங்குவர்.
  7. மனதிற்கும், உடலிற்கும் ஒரே நேரத்தில் ஆரோக்கியத்தைத் தரும் இவ்வரும்கலை அனைத்து கல்வி சாலைகளிலும் பயிற்றுவிக்கப்படுமானால் ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட மாணவர்களை உருவாக்க துணைசெய்யும்.
  8. வழிப்பறி, கொள்ளை, கொலை, களவு போன்ற கொடிய மனோபாவங்கள் மாறி இளைஞர் சமூகம் சீர்பெற வழிவகுக்கும்.
  9. தற்காப்பிற்கும், பிறர் பாதுகாப்பிற்கும் உதவும் வர்மக்கலை இக்களரிக்கலையில் பயிற்றுவிக்கப்படுவதால் அது சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.
  10. இக்கலையில் வர்மக்கலையோடு மன ஒருமைப்பாட்டிற்கான எளிமையான பயிற்சிகளும் பயிற்றுவிக்கப்படுவதால் உயர்ந்த பண்பாடு உடைய மனிதர்களை உருவாக்கமுடியும்.
  11. தமிழர்களின் வாழ்வில் நெடுங்காலமாக பயணித்து வந்த இக்கலையானது அழிவுநிலையிலிருந்து மீண்டும் மறுமலர்ச்சி பெற்று புதுவளர்ச்சியுடன் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *