A. தர்மராஜ் (த.ராசு)
ஆரம்பத்தில் நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென்று ஒரு சில மாநிலங்களில் மட்டும் தனிப்பட்ட இலாகாக்களும், மாவட்ட அளவிலான சமூக நலத்துறை அதிகாரிகளும் இருந்த நிலை இருந்தது. அப்படி இல்லாத மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழு அளவில் தீர்க்க முடியாத நிலையே இருந்தது. உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிலையே நீண்ட நாட்களாய் நிலவியது. மாற்றுத்திறனாளிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு தடை இருந்த நிலையில் அத்தடையினை விலக்கும் படி அவர்களுக்கான அமைப்பினர் டில்லியில் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர். இது குறித்த ஆலோசனைகள் இந்திய ஹஜ் கமிட்டிக்கு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக அப்போதுள்ள விதிமுறைகள் நீக்கப்பட்டு அவர்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ள வழி செய்யப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்க வேண்டிய கட்டாயமில்லை என்று 2018-ல் உச்சநீதிமன்றம் அறிவித்த போது அதனை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பு வரவேற்றது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க கட்டாயப்படுத்தக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதை அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியதுடன், ஆயினும் தேசியகீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காமல் அவமதித்ததாகக் கூறி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகள் மீது பிற்போக்கு அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும், பொது இடங்களில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவதில் மாற்றுதிறனாளிகளுக்கு விதி விலக்கு அளித்துள்ளதையும் அந்த அமைப்பு வரவேற்றிருந்தது.
ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலே கண்டிருந்தது. இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது. அதிலே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு பிரிவினராக வகைப்படுத்தவில்லை. இதனால் இந்த படிப்பில் சேரக்கூடிய வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே 2024-25 கல்வியாண்டுக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்ய வேண்டும். நான் ஜூன் 26-ஆம் தேதி கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்வுக் குழு தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கண்டிருந்தது. அரசு தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே மனுதாரர் 3-ஆம் பாலினத்தவர் என்று கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார் நீதிபதி.
கடந்த சில ஆண்டுகளில் சமூக ஆர்வலர்களில் விழிகளை உறுத்தக் கூடிய ஒரு காட்சி சில முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் காணப்பட்டது. இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் பற்பல திருநங்கைகள் நடமாடுவதைக் காண முடிந்தது. அவர்கள் தங்களை அருகிலே அழைத்து ஆசையாகப் பேசுவதைப் போல் நடித்து தங்களிடம் இருக்கும் பணம் நகை போன்றவற்றை அபகரித்துக் கொள்கின்றனர் என்று பணியில் இருந்த நடமாடும் காவலர்களிடம் முறையிட்டனர்.
இதனால் சமூகத்தில் சில தவறான பழக்கவழக்கங்கள் அதிகரித்து விடுமோ என்று ஒரு கவலையும் அச்சமும் உண்டானது. இப்படி ஏற்படாமல் இருக்க திருநங்கைகளுக்கு இதற்கென்று தனி கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த சமூகம் அவர்களை இன்னும் கூடுதலாக மதிக்கும் என்பதும் ஒரு மதிப்பீடாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின்ப்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அதிலே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் சிலீப்பர் பஸ்களிலும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் 2024 மார்ச்சில் கோரிக்கை வைத்தது.
அரசு பஸ்களில் பயணிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை முறைகேடாக அபகரித்து பிற பயணிகளை எச்சரிக்கும் விதத்தில் அதற்கான அபராதத்தொகை 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் என்பதை இருக்கையின் மேல்புறத்தில் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கென்று படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகைக் கட்டணத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியுள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள சோழிங்க நல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட கண்ணகி நகரில் வாழ்ந்து வருகின்ற ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதி வாய்ப்புகளை அருகாமையில் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு குடியிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ரிப்பன் மாளிமையில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை ஒருநாள் முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அதிலே 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையில் கலந்து கொண்டனர். தங்கள் வாழ்வாதரத்துக்காக பெட்டிக்கடை, தள்ளுவண்டிக்கடை அமைக்க வேண்டும் அதற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் உ.பி. மாநிலத்தில் உடல் ஊனமுற்றோர் நலத்துறையின் “மாற்று திறனாளிகள் திறன் மேம்பாட்டுத்துறை” என மாற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் காதி வாரிய அலுவலகத்தில் திடீர் விசிட் வந்தார். அப்போது அங்கே பணியில் இருந்த மாற்றுத்திறனாளியைப் பார்த்ததும் கடிந்து கொண்டார். இதுபோன்ற ஊனமுற்றவரை பணியில் வைத்திருந்தால் எப்படி வேலை நடக்கும்? அவரால் எந்த வேலையை ஒழுங்காக செய்யமுடியும்? என்று கேட்டார். இப்படி அவர் கேட்டது ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
மற்ற மாநிலங்களில் 40 சதவீதம் ஊனம் இருந்தாலே நிபந்தனைகள் ஏதுமின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. எனவே அதன் பொருட்டு இங்கே 2016-ல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் காட்டி அந்த அரசாணை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆகவே 40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து ஊனமுற்றவர்களுக்கும் உதவித்தொகை வழங்கும்படியும், 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் பல்நோக்கு சான்றுக்காக இணையதளத்தில் பதிவு செய்வதற்கு தமிழக அரசே முகாம்களை நடத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
அரசுகளின் அறிவுரைகள்
2021-ல் தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் பரவலாக பல பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. இதனை முன்னிட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பொதுமுடக்க நிவாரணமாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு ஆயிரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கைக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 2020- ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிவாரண உதவியைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும், நடப்பு ஆண்டுக்கு சட்டப்படி 25 சதவீத கூடுதல் நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் அவர்களைச் சென்றடைவதாகத் தெரியவில்லை என்றும், அவர்களின் நலனில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், இவ்வகையில் மாற்றுத்திறனாளிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுத்து தாக்கல் செய்திட வகை செய்யுமாறு அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தது.
2021 ஆகஸ்ட்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் வழங்கும் கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். பிறப்பு முதல் 18 வயது வரையிலான சுமார் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும் அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்குவாதம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் மற்றவர்களின் ஆதரவு தேவைப்பம் நிலையில் உள்ளனர். அவ்விதமான மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்கள் குடியிருக்கும் இருப்பிடங்களுக்கே சென்று வழங்குவதன் மூலம் அவர்களுக்கான கற்றல சூழலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு கல்வித் திட்டத்தைத் தொடங்க ஆலோசிக்கப்பட்டது. இதன்படி ஒரு மாணவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் சுமார் 8000 மாணவ மாணவியர்களுக்கான சுமார் 8 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
2021- டிசம்பரில் காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவது வலியுறுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெற்று இதனை விரைந்து முடிக்கும் படி வலியுறுத்தப்பட்டது. மேலும் இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 3 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, வங்கி கடன் மேளா ஆகியவை நடைபெற்றன. முகாமில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளிளுக்கு கரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.
2021-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் 4000 புதிய பேருந்துகள் வாங்கவும் அதிலே குறிப்பிட்ட சதவீத அளவுக்கு இருக்கைகள் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு முறைப்படி நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ரயில்களில் 3-வது நிலை குளிர்வசதிப் பெட்டிகளில் (3 ஏசி) மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்வரிசைப் படுக்கைகளில் இட ஒதுக்கீடு செய்யலாம் என்று இந்திய ரயில்வே முடிவு செய்து செயல்படுத்தியது. ஒரு சமயம் மாற்றுத்திறன் கொண்ட தடகள விளையாட்டு வீராங்கனை ஒருவர் 3 ஏ.சி வகுப்பு பெட்டியில் கீழ்வரிசை இருக்கை கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளான செய்தி பரபரப்புக்கு உள்ளானது. ஆகவே தான் இந்த நடவடிக்கை. அது மட்டுமன்றி அனைத்து ரயில்வே நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்துகிற வகையில் சிறப்பு கழிப்பிடங்கள், பார்வையற்றவர்கள் படிப்பதற்கான பிரெய்லி எழுத்து வடிவ அறிவிப்பு பலகைகள் போன்ற வசதிகள் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.
2017-டிசம்பரில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாற்றுத்திறனாளிகக்கு பொருளாதார ரீதியில் அதிகாரமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஆதாரத்தை வழங்கி ஊக்குவிக்கும் அரசு, பொதுத்துறை, அரசு சாரா அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விருது வழங்கும் விழா டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த போது இந்த கருத்தை வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்து அதை சீர்ப்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலை நம்நாட்டில் அதிகம் காணப்படுகிறது. மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, பிறந்த பிறகுபோடும் தடுப்பூசிகள் போன்ற கடமைகளில் கவனம் செலுத்துவதும் அவசியமே ஆகிறது.
இந்தியாவில் முற்போக்கான விதத்தில் உரிய கொள்கைகளை வகுப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் 50 சதவீதம் பேரும் வேலை வழங்க முடியும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன் எர்த் இன்சைட் என்ற அந்த அமைப்பு நடத்திய அந்த ஆய்வில், இந்தியாவில் 3 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்றும் இவர்களில் பாதிபேர் வேலை செய்வதற்கான திறன் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது அரசு, தனியார் மற்றும் முறை சாரா தொழில்துறை மற்றும் சுய தொழில்களில் 34 லட்சம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்றும் இன்னும் கூடுதலான அளவில் இவர்களை பயன்படுத்த வழி உள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Leave a Reply