முனைவர் முல்லைத்தமிழ்
சலப்பிற வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பின்னல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சலப்பிறவர்மம் பற்றி அறிவோம்.
மூத்திரக்காலத்திற்கு நேர் பின்புறம் முதுகெலும்புத்தொடரில் அமைந்துள்ளதே சலப்பிற வர்மமாகும். இவ்வர்மம் ஜலப்பிற வர்மம், சடப்பிறக்காலம், சரடயந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“ஆனந்தமான மூத்திரக்காலத்தின் பின்
சலப்பிறவர்மம்”.
– கால வர்மநூல்
“அறுதி ஜலப்பையினுட புறதாரைக்குள்
அறிஞர் உரை சலப்பிறவர்மம்”.
– வர்ம குருநூல்
மேலும்,
“ஆனந்தமான மூத்திரக்காலத்தின் பின்
சலப்பிறவர்மம் கொண்டால்
நானந்தமான மலம் ஜலம் அடைபட்டு
நடந்திட முடியாதாகும் மாத்திரைக்கு
கோனந்தமான உணர்வுமே குன்றிப்போகும்
குணமான அவுசதங்கள் பலவுமீய
வானந்தமான ஜீவன் நிலை பெற்றுயர்வு
அடைதலாகுமிது கணக்கறிந்துரையே”.
– கால வர்மநூல்
“இதன் குணமோ மலசலமும் அடைக்கும் நோவாம்
திடுக்கிட்டு நடக்க ஒட்டா மாத்திரை மிஞ்சில்
உறுதியாய் வாதம் வாதத்தோடொட்டி
ஒரு கிடையாய் கிடத்தி நீரொழிவில் சாவே”.
– வர்ம குருநூல்
“உறுதியென்ற சலப்பிறமிளக்குதற்கு
சடம் மலத்தியடி வயிறதனில்
நிறுதியென்ற மணிபூரகத்தடங்கல்
சுழற்றியே வெள்ளை கொண்டு
இறுதியென்ற கழுத்தடி மேலேந்தி
பக்க சர்வாங்கம் விரல் கொடுத்தனுக்கி
அறுதியென்ற அவுசதங்கள் பலதுமீய
பாழ்பட்ட சடலமதில் நாட்பட்ட முடமும் போமே”.
– குருசூக்ஷம்
என குறிப்பிடுகிறது. மேலும்,
பின்புலமாகும் வன்மம் நீர்ப்பைக்கெதிராம் சலப்புறம்
தன் பலமாகக் கொள்ளில் எருவுடன் நீருமடைக்கும்
வன்பலமாகக் கொள்ளில் வளர் கைகால் தளருமுடல்
முன் பலமறிந்து செய்யில் முனைப்புறுமாணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
நீர்ப்பையில் பின்பாகம் எதிராக இருக்கின்ற வர்மம் சலப்பிறவர்மமாகும். இஃது தாங்கும் மாத்திரை அளவில் தாக்கம் கொண்டால் மலம், நீர் அடைத்துக்கொள்ளும். மாத்திரை மிஞ்சி தாக்கம் கொண்டால் இயங்கும் கை கால்களும் தளர்ந்து உடலும் தளரும். இதற்கு இதன் மாத்திரை அறிந்து தக்க கைபாகத்துடன் கூடி மருந்தும் செய்ய நலமடையும் என்பதாகும்.
துளித்துமே நீரும் சாயும் தொடர்ச்சியாய் மலமுமாகும்
களித்துறல் கடந்து தானும் கசப்புடன் கோபம் ஆகும்
பழித்துடல் மேனியெங்கும் பதட்டமும் அசதி ஆகும்
கழித்துமே உடலும் குன்றி கால்களும் தளருந்தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மம் மாத்திரையில் தாக்கம் கொண்டால், தொடர்ச்சியாய் மலமும் நீரும் கசிந்துகொண்டே இருக்கும். மனதில் மகிழ்வு குன்றி சிடுசிடுப்புடன் கோபம் மிஞ்சும். உடல் முழுவதும் பதட்டமுண்டாகி அசதியும் தோன்றும். தசைகள் குன்றி தளர்வும் தோன்றும் என்பதாம்.
தொட்டுமேத் தூண்டுறில் நீரதுடனெருவும் கட்டும்
மட்டுறத் தடத்திலாகும் மாண்புறும் ஆண்மை மிஞ்சும்
கட்டுடல் வளமே மிஞ்சி களறுநோய் பலதும் போக்கும்
தட்டுடல் தலையின் நோவும் தளர்வதும் போகும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மத்தை முறைப்படி அறிந்து தூண்டிக் கொடுத்துவர, மலம் மூத்திர அடைப்பும் சரியாகிவிடும். ஆண்மை மிஞ்சும், உடலின் வலிமையும் மிஞ்சும். வயிற்றில் வரும் பல நோய்களையும் மாற்றும். தலைநோவு மாறும். உடலின் தளர்ச்சையும் போகும் என்பதாம்.
தானுறும் வன்மத்தீடு வகைபிணி பலதும் போக
மானுறும் மருந்தும் கையும் மகத்துவமாகப்பேணி
சேனுறும் வழிகளாய்ந்துசெய்திடில் திறத்திலாகும்
கோனுறும் மருந்தின் குறிப்பினையறிந்து சேரே.
– வர்ம யோகச்சூத்திரம்
பொருள்
சலப்பிற வர்மத்தால் வந்த ஈடு மற்றும் பல பிணிகளும் போக, மான் போன்று அமைதியாகவும் வேகமாகவும் செயல்படும் மருந்துகளினாலும் கைபாகங்களாலும் மகத்துவமாகச் செய்யும் வழிமுறைகளை நன்கு பேணி அவைகளைச் செய்யும் விதிமுறைகளையும் அறிந்து செய்துவர திறமாகத் தீரும் என்பதால் அதற்கான மருந்து வகைகளை குறிப்பறிந்து ஒன்றும் விடுபடாமல் முறைப்படி சேர்த்து விடு என்பதாகும்.
சேரேநீ காமரதி சாரணத்தி கற்பேதிவில்லையொடு முல்லையதுதன் வேரும்
பாரேநீ பாதிமதி சூடு சிவன்வேம்புடனே முப்புரமெரித்த முலிகைதன் வேரும்
வாரேநீ வாதிவிதி போக்குவிக்கும் வளர்மதுகக்காதலுடன் சர்பங்கும்
ஆரேநீ ஆதிவிதி மூட்டுவிக்கும் கருங்காலியின் காதலுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
பொருள்
நெருஞ்சில் – சாரணைவேர் – சிறுகண்பீளை – வில்லைவேர் -முல்லைவேர் – சிவன்வேம்பு – கெருடக்கொடி – இலுப்பைக்காதல் -சர்பங்குக்காதல் – கருங்காலிக்காதல்.
கருங்காலிக்காதலுடன் சந்தணமும் ஈந்தில் இருவேலி
வருங்காலி அரியாறும் அமுக்கூரம் ஏலமுடன் மூலம்
தருங்காலிக்குக்கிலுடன் மரமஞ்சள் குப்பையுடனோமம்
அருங்காலிக் கற்கடகசிங்கி கார்சீரமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சந்தணம், இருவேலி, ஈந்திமண்டை, அரிசிவகை ஆறு, அமுக்கூரம், ஏலம், நறுக்குமூலம், குக்கில், மரமஞ்சள், சதக்குப்பை, ஓமம், கற்கடகசிங்கி, கருஞ்சீரகம்.
கருஞ்சீரகம் சீந்திலுடைத் தண்டுடனே கொட்டமதிமதுரம்
பெருஞ்சீரகம் நல்ஜீரகம் பேணும் நல்கறுவாப்பட்டையுடனே
தருஞ்சீரகம் கொம்பரக்கு மீறையுடன் திறிகடுகுதிறிபலையும்
அருஞ்சீரகம் மாவிலங்குப்பட்டையதுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சீந்தில் தண்டு, கொட்டம், அதிமதுரம், பெருஞ்சீரகம், நல்ஜீரகம், கறுவாப்பட்டை, கசகசா, கொம்பரக்கு, மீறை, திறிகடுகு, திறிபலை வகைக்கு சமனெடையாய் எடுத்து தண்ணீரில் போடே.
ஆமுடனே மாயக்காமுள்ளிக் கசகசாவும்
தாமுடனே தண்ணீரை விட்டவனின்வேரும்
போமுடனே நாயுருவிகோலமுடன்வாசமதின்வேரும்
காமுடனே திறிசாதி வால்மிளகும் கூட்டே.
– வர்ம யோகச்சூத்திரம்
பொருள்
மாயக்காய் – நீர்முள்ளி – கசகசா – தண்ணீர்விட்டான் கிழங்கு -நாயுருவி – சிறுநன்னாரி – திறிசாதி – வால்மிளகும் கூட்டே.
கூட்டியெடு வகைவகைக்குதான்கழஞ்சிமூன்றே
தட்டியெடு தானுரலிட்டு பொடி பொடித்தே
மட்டிலெடு மண்கலசத்திட்டு புனல் வடித்தே
அட்டியெடு அனல்வற்றி எட்டிலொன்று தானே.
பொருள்
மேற்குறிப்பிட்ட அனைத்து மருந்துகளையும் வகைக்கு மூன்று களஞ்சளவாகக் கூட்டி எடுத்து கல்லுரலிட்டுப் பொடித்து மண் பாத்திரத்திலுள்ள நீரில் இட்டு தீயிட்டுக் காய்த்து எட்டிலொன்றாக்கி எடுக்க வேண்டும்.
புனலெட்டு அனலிட்டு எட்டிலொன்றெடுத்த வகை
கனல்விட்டு காலை மாலை கணக்கதுழக்காகவேயருந்திவர
தணல் விட்டுடல்குளிரும் தறுகும் பிணிபலவும் தீரும்
மணல் விட்ட புனல் மறைந்த கதையாகும் பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
எட்டு மடங்கு தண்ணீரில் கலந்து காய்ச்சி வடித்த மருந்தை காலை மாலை இளஞ்சூட்டில் உழக்காக அருந்திவர உடல் சூடு தணிந்து உடலின் பல பிணிகளும் மணல் மேல் விட்ட தண்ணீர்போல் மறைந்து போகுமென்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் மாத்திரையாய் தாக்கம் கொள்ளும்போது மலம், சலம் அடைத்துக்கொள்ளும், மிக்க வேதனை உண்டாகி மூச்சுமுட்டு அதிகரிக்கும். உணர்வு குன்றி, கை, கால்கள் செயலிழக்கும். அதிக படபடப்பு, அதிதாகம், அதிவியர்வை, மயக்கம் உண்டாகும். மூத்திர துவாரம் மற்றும் மல துவாரத்தின் வழியே இரத்தம் கசிந்தாலோ, மூத்திரம், மலம் தானாக கழிந்து, விந்து வெளியேறி மயக்கமுடன் ஜன்னி தோன்றினாலோ அசாத்தியமாகும். மாத்திரை மிஞ்சி தாக்கம்கொண்டால், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மம் கொண்டு பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரை உச்சியில் உள்ளங்கை மேல் கை வைத்து தட்டி, கழுத்துறை வழியே முதுகு தாரை பிரித்து தடவி, அடங்கல்களை அனுக்கிவிடவும். பின்னர், கீழிருந்து மேலாக ஏற்றி இறக்கி தடவி, மார்பு வழியே பக்கதாரை தடவல் செய்து, முன்னும் பின்னும் மாறல் தடவல் செய்து, அடங்கல்களை தூண்டி, பல மருந்துகளும் கொடுத்துவர சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் சொட்டுச்சொட்டாக மூத்திரம் கழிதல், மலச்சிக்கல், மலம் தன்னை அறியாமல் கழிவது, நீரழிவுநோய், அரைகீழ்வாதம், பார்வைக்குறைவு, தலைவலி போன்ற பல பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை உள்ளங்கை, பெருவிரல், மொழி போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டிவர, மலச்சிக்கல், மூத்திரச்சிக்கல், நரம்புநோய்கள், மண்ணீரல் நோய், ஆண்மைக்குறைவு, வயிற்றுநோய், கீழ்முதுகு விறைப்பு, அஜீரணபேதி போன்ற பல நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply