எதிர்காலம் எனும் நம்பிக்கை

எதிர்காலம் எனும் நம்பிக்கை

  • By Magazine
  • |

தலையங்கம்

உலக மக்களால் எப்போதும் கண்காணிக்கப் படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா. மக்கள் தொகையில் முதலிடத்தை எட்டிவிட்டதால் மற்ற நாடுகளின் பார்வைகள் அனைத்தும் இந்நாட்டின் சந்தைப்படுத்தலை எதிர்நோக்கியே இயங்கும். ஆனால் இங்கு வாழும் பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாடுகளில் குடியேறி சுகமான வாழ்க்கை வாழ்வதையேக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வாழ்ந்து வளமான செல்வங்களை ஈட்டி உயர்ந்த நிலைக்குச் சென்ற பெரும் கோடீஸ்வரர்கள் சுமார் 17000-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று குடியேறி உள்ளனர். 2025-ஆம் ஆண்டு மட்டும் 3500 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களின் சொத்து மதிப்பு இரண்டு லட்சத்து பதினெட்டாயிரத்து நானூறு கோடி (2,18,400 கோடி) என்ற தகவல்களை உலகளாவிய முதலீட்டு இடப்பெயர்வு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 50,000 பேர்கள் இவ்வாறு வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி உள்ளனர். இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக் காரணம் என்ன என்பதே யாருக்கும் புரியவில்லை. இங்குள்ள நெருக்கடிகளா? வரிச்சுமையா? இங்கு நிலவும் சமத்துவமின்மையா? இல்லை எளிமையாக வெளியேறுவதற்கான வழிகளா? இல்லை வழிகாட்டுதல்களா? புரியவில்லை. நம் நாட்டின் கடன் தொகைகள் ஏழைகளுக்கு மறுக்கப்பட்டு கோடீஸ்வரர்களுக்கு சலுகைகளாக வழங்கப்படுவதாலா? எதுவுமே புரியாத புதிர்களாகவே உள்ளது.

இதுபோலவே இங்கு மற்றொரு நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே வருகிறது. உயர்கல்வி பயிலும் பெரும்பாலோர் தங்கள் அறிவையும் திறனையும் அயல்நாடுகளுக்கு தாரை வார்ப்பது, இந்திய மண்ணில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படாதிருப்பதும் சரியான பணித்தளம் அமைத்து அவர்களை பாதுகாக்காததுமே ஆகும். மட்டுமன்றி கோடீஸ்வரர்களின் வங்கிக்கடன்கள் அவர்களின் வராக்கடன்கள் என எல்லாமே ஏழை மக்களையும் தான் பாதிக்கும் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.

சாதி-மத-இன-நெறி-மொழி முறைகளால் மக்கள் வாழ்க்கை சிதறிடிக்கப்படுவதற்கு ஏதுவான இந்திய சூழல் இத்தனை அறிவும் அறிவியலும் வளர்ந்த பின்னரும் உணரப்படவில்லையே என்று வருத்தப்பட வேண்டி உள்ளது.

நிமிர்ந்து பார்த்து நேராக சிந்திப்பவர்கள் மிகக் குறைந்த அளவே உள்ளனர். எனினும் பெண்களின் கல்வித்திறனும், சமூக ஈடுபாடும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் முன்னேற்றமாகவே உள்ளது.

இன்றைய நகைக்கடன் திட்டம், வங்கிக்கடன் திட்டம், விவசாயிகளின் வங்கிக்கடன் எல்லாமே ஏழைகளை மேல்நோக்கி எழுந்து நடைபோட அனுமதிக்கவில்லை. இந்தியாவின் விலைவாசி உயர்வுகளும் கூட கட்டுப்படுத்த முடியாத இடத்திற்கு சென்றுகொண்டே இருக்கிறது. சாதாரண மக்கள் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார்களோ என தோன்றுகின்றது.

இங்கு நிலவும் ஒருவிதமான மாயத்தோற்றம் மக்களை சிந்திக்கவிடாமல் தடுப்பதாக அறிஞர்கள் எதையோ வைத்து குறிப்பிடுகின்றார்கள் தெருக்கோடிகளில். “தாய் பிள்ளைக்கு இதோ நிலவை பிடித்து தருகிறேன்” எனக் கூறிக்கொண்டே கதை விட்டு கதை விட்டு வாயில் உணவை அடைத்து விடுவது போன்று உணர்வு பெருக்கை ஊட்டி சிந்திப்பதனை மறக்கடிக்கச் செய்யும் மாய வித்தைப்போல் இம்மண்ணில் ஏதோ நடக்கிறது என தெருக்கோடிகளில் கூறிக்கொள்வதையும் காதில் கேட்க முடிகிறது. கோபத்தின் இடையில் குணம் வேலை செய்வதில்லை. உணர்ச்சிப் பெருக்கில் உண்மை உணரப்படுவதில்லை. நம்பிக்கை என்பதும் அனுபவம் என்பதும் தனிமனித புரிதல் சார்ந்தது. இஃது அறிவுடையதா? உண்மையானதா? என்பது சிந்தனைத் தெளிவிலும் அறிவார்ந்த புரிதலிலும் தான் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்த மனிதர்களே வேற்றுமைகள் அற்ற ஒரு சமத்துவமான சமூகத்தைக் காணமுடியும்.

இன்றைய அரசியல் தலைவர்கள் தத்தம் கட்சிகளின் வெற்றியைப் பற்றியே சிந்திப்பதால் ஏராளமான ஏழைகள் கண்களுக்கேப் படாமல் கடன் தொல்லைகளால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தற்கொலைகள், கொலை, கொள்ளை என எங்கும் மலிந்து கிடக்கிறது. மத்திய மாநில அரசுகள் மக்களின் பிரச்சனைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். அரசின் வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். லஞ்ச, லாவண்யங்கள் குறைய வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் மதிக்கப்பட வேண்டும். வங்கி சட்டதிட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். ஏழை மக்களுக்கு எல்லா வழிகளிலும் பாதுகாப்பு வேண்டும்.

அன்புடன், 

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *