கை. செல்லத்தங்கம்
குழந்தைகள் நமது செல்வங்கள். எதிர்காலத்தின் தூண்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பர். குழந்தைப்பருவம் மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில் அவர்கள் பார்த்து, கேட்டு அறிவது பசிமரத்தாணி போல மனதில் பதிந்து விடும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பது என்பது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் சவாலாகவே உள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறந்து போன நிலையில் குழந்தைகள் உறவுகள்,
தாத்தா பாட்டியிடம் இருந்து பெறும் அன்பும் அனுபவ அறிவும் கிடைப்பதில்லை. இரவு பகலாக வேலை பார்க்கும் தம்பதியிடம் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என கேட்போமாயின் எல்லாம் எங்கள் குழந்தைகளுக்காக என்ற பதில் தான் 99% பேரிடம் இருந்து கிடைக்கும்.
1 வயதில் பேசத் தொடங்கும் மழலையை 2 வயதில் பள்ளிக்கு அனுப்பி விடுகிறோம். மூன்று வயதில் குழந்தைகள் பெரிய மனித தோரணையில் பேசத் தொடங்கி விடுகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று அர்த்தமா? இல்லை. தொலைக்காட்சிகள், செல்போன் காட்சிகள் போன்றவற்றில் வரும் குழந்தைகள் சானலில் உள்ள கேரக்டர்களாக தங்களை நினைத்துக் கொள்கின்றனர். குழந்தைகள் தங்களது தாய் தந்தையரையும் ஆசிரியரையும் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும். எனவே பெற்றோர்கள் நல்ல பழக்கவழக்கங்களினாலும், நற்பண்புகளாலும் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருத்தல் அவசியம்.குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வழக்கப்படுத்த வேண்டும். பெரியவர்களிடமும், உறவுகளிடமும் மதிப்புடன் நடக்கவும் சகமாணவர்களிடம் அன்புடனும், விட்டுக் கொடுத்து இருக்க வேண்டும் எனவும் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை பாதிக்கும் பாலியல் சீண்டல்கள்,
போதையின் தீமைகள் தெரிதல் அவசியம். திரைக்காட்சிகளில் வரும் புகை, போதையின் கெடுதல்களையும் , ஒரே நபர் பலரை அடித்து வீழ்த்துவது சாத்தியமற்றது என்பதையும், வெட்டு, குத்து, துப்பாக்கிச்சூடு போன்றவை நிஜமல்ல நிழல் என்பதையும் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளோடு அதிக நேரம் செலவு செய்து தொட்டு, தூக்கி, கொஞ்சி அரவணைத்து பாதுகாப்பு உணர்வை அதிகரிக்க வேண்டும்.
உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம் என்ற செயல்பாடு குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். கல்வியோடு சேர்த்து நாம் கொடுக்கும் பண்புகள் குழந்தைகளை சிறந்த மாணவர்களாக மாற்றும். குழந்தைகளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கும் அப்பாவை விட கூட அதிக நேரம் இருக்கும் அப்பாவைத்தான் பிடிக்கிறது. எல்லாக் குழந்தையும் நல்லக்குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் பெற்றோரின் வளர்ப்பில் தான் உள்ளது. குழந்தைகள் பாதை மாறாமல் பாதுகாப்போம். நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கும் பெரும்பங்கு உள்ளது. மாண்புகளை ஈன்றெடுக்கும் மாணவனைக் கண்டால் அந்த மரியாதைக்குரியவர் ஓர் ஆசிரியர் என்பர். மழலைகள் நமது எதிர்காலம், கண்ணைப்போல பாதுகாப்போம்.
Leave a Reply