ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சி மக்களுக்காக நடத்தப்படுகின்றது என்பது தான் ஏழைமக்களின் நம்பிக்கை. அம்மக்களில் வலிமை குன்றி, நலிவுற்று, வாழ வழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கால்வயிற்றுக் கூழுக்காவது வாழ வழிவகுக்கும் ஒருவகைப் பணிமுறை தான் நூறு நாள் வேலைத்திட்டம். அந்த வேலையில் ஒன்றிய அரசு கை வைத்துவிட்டது. அதற்கான ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்து அதற்கேற்ப ஆட்குறைப்பும் செய்துவிட்டது. இது சாதாரண ஏழை மக்களைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை என்னும் உணர்வைக் காட்டுவதாக தெருவெங்கும் பேசும் பேச்சாகக் கேட்கமுடிகிறது.
இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பல சம்பவங்கள் மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் பதை பதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 12-06-2025 அன்று அஹமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பறந்த ஏஐ171 என்ற ஏர் இந்திய விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாலேயே விழுந்து நொறுங்கிவிட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்துவிட்டனர். இரமேஷ் விஸ்வகுமார் புச்சர்வாடா என்ற நபர் விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பிவிட்டார். இந்த விமானம் விழுந்த இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 10 பேரும், அங்கு தரையில் நின்றுகொண்டிருந்த 19 பேரும் சேர்த்து மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இதற்கு என்ன காரணம் என பல வழிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், விமான பராமரிப்புக் குறைபாடுகளே முக்கிய காரணம் என பலரும் சந்தேகப்படுகின்றனர். சாதாரண குடிமக்களும் கூட நம்நாட்டு அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் என்று தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டதோ அன்றே மக்கள் விமானப் பயணத்தில் அச்சம் கொள்ளத் தொடங்கிவிட்டதாக குறிப்பிடுகின்றனர்.
ஒரு விமானம் சரிவர இயங்குவது என்பது, அதன் பராமரிப்பில் தான் உள்ளது. விமானங்களையும், அவற்றில் ஏற்படும் சுமைகளையும், விமான நிலையங்களையும் பராமரிப்பதில் தலைசிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த புகழ்பெற்ற செலிபிஐ (CELE- B1), அவர்களை விலக்கிவிட்டு அதனை அதானியின் AAHL என்னும் நிறுவனத்திடம் 2025 மே மாதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு விமான பராமரிப்பிலும் அதில் ஏற்றப்படும் பொருட்களின் எடை பராமரிப்பிலும் போதிய அனுபவமின்மையே இந்த விபத்துக்கான காரணம் என சிந்திக்கும் திறன் படைத்த பலரின் வாதமாகும். தனியார்மயம் என்றாலே லாபநோக்கினை மய்யமாகக் கொண்டது என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றே! அதனால் சாதாரண மக்களின் சந்தேகங்களிலும் காரணம் இல்லாமல் இல்லை. சாதாரண சொகுசு கார்களில் கூட பாதுகாப்பு காற்றுப்பைகள் உள்ளன. அந்த அளவு கூட வானூர்திகளில் இல்லாதது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே. தீ பற்றாத கவச உடையோ அல்லது ஒட்டுமொத்த அகக்கவச அமைப்போ கூட எதிர்காலங்களில் இத்தகைய உயிரிழப்பைத் தவிர்க்க சிந்திக்கப்பட்டால் பயனுடையதாக இருக்கும்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க நினைத்த நாம் நமது பாதுகாப்புக் குறைபாடுகளை சிந்திக்காதது ஏன்? என மக்கள் தெருக்கோடிகளில் பேசிக்கொள்கிறார்கள். அரசு அறிவியல் சார்ந்த சிந்தனைகளைக் குறைத்துக் கொள்கிறதா? எனக் கருதத் தோன்றுகின்றது. முந்தைய காங்கிரஸ் அரசு காலங்களில் நடத்தப்பட்ட எந்த இரகசிய தாக்குதல்களையும் அவர்கள் விளம்பரப்படுத்தி மக்கள் செல்வாக்கைப் பெற ஆசைப்படவில்லை. அப்படி இருக்க, இப்போது செய்யும் மறைமுக பாதுகாப்பு நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தி அரசியலாக்க நினைப்பது எதிரிகளுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பாக இருக்க வழிகாட்டிக் கொடுப்பதுபோல் மட்டுமல்லால் அண்டை நாட்டை விழித்தெழச் செய்து நமது பொருளாதார அழிவையும் பெருக்கிக் கொள்வதாக அல்லவா உள்ளது.
நல்லவர்களுக்கு விளம்பரம் எதற்கு? இது நம் நாடு. நம் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதுகாப்பான நடவடிக்கைகளால் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டியது. அதனை பகிரங்கப்படுத்தி அரசியலாக்குவது நாகரிகமுமல்ல… நம் தாய்நாட்டுக்கு பாதுகாப்புமல்ல… நம்நாட்டினை தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குவதை எதிர்க்க இந்தியாவின் அனைத்து கட்சிகளும் மட்டுமல்ல… அரசியல் சார்பில்லாத ஒவ்வொரு குடிமகனும் கூட அரசுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது மக்களின் தெருமுனை ஆதங்கங்களிலும் பேச்சுக்களிலும் காணமுடிகிறது. சிங்கப்பூரில் “புளும்பெர்க்” தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நமது முப்படைகளின் தளபதி சௌஹான், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா போர் விமானங்களை இழந்துள்ளது என ஒப்புகொண்டுள்ளார். இதுபோல், பல இராணுவ சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகக் கருத இடமளிக்கிறது. எதிர்காலங்களில் உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு இன்னும் முழுக்கவனம் செலுத்தவேண்டும் எனும் எச்சரிக்கைபோல் இந்நிகழ்வு அமைந்துள்ளது என பலரும் குறிப்பிடுகின்றனர்.
உலகின் கட்டமைப்பு பாரம்பரியத்தில், ஆதிகாலந்தொட்டே பல இனக்குழுக்கள் தடந்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. இது மனிதாபமானமற்ற ஒரு வக்கிர நடவடிக்கை ஆகும். இஃது இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ளவும், அதிகார எல்லையை விரிவாக்கவும், அடிப்படை பகையை ஒழிக்கவும், சாதி-மத-இனம் சார்ந்த வெறித்தனங்களால் அப்பாவி மக்களை பழிவாங்குவதும், மறைமுகமாகவும், நேரடியாகவும் பல நாடுகளில் நடந்தேறிக் கொண்டே வருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்கவும் இடமின்றி உயிரைக் கையில் பிடித்தபடி போராடும் அப்பாவி மக்களை காசாவில் காணமுடிகிறது. இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையில் நடக்கும் இனப்படுகொலை ஒருபுறமிருக்க, காசாவின் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு, தண்ணீர், மருந்துப்பொருட்களை இஸ்ரேல் செல்லவிடாமல் தடுப்பது மிகமிகக் கொடிய மனிதாபிமானமற்ற செயலாகும்.
வீடிழந்து, உறவிழந்து, பட்டினியால் காசா முழுவதும் அலைந்தலைந்து பசிபோக்கத் துடியாய் துடிக்கும் மக்களை, பசிக்க வைத்துக் கொன்றழிக்கத் திட்டமிட்டுள்ள இஸ்ரேலின் மனநிலை உலகின் மனசாட்சி உள்ள மனிதாபிமானமுள்ள மனிதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பச்சைக்குழந்தைகளின் பசிக்கதறல்கள்… அதனைக் கண்டு துடிக்கும் ஏழைப் பெற்றோர்கள்… ஏழைகளுக்காக ஏழையாகவே வாழ்ந்த இறைமகன் பிறந்த மண்ணில் மனமற்ற மனிதர்கள்… ஆயுதச் செலவின்றி படுபாதகம் செய்யும் ஒரு கொலைவெறிச் செயலாக இஸ்ரேல் இப்படி நடந்து கொள்வதனை ஐ.நா சபை கண்டித்து வருகிறது. ஜுன் 1-ஆம் தியதி சுமார் 12 தன்னார்வ ஊழியர்களோடு காசாவுக்கு உணவு, மருந்துப் பொருட்களை இத்தாலியிலிருந்து ஏற்றிச் சென்ற “மட்லின்” என்ற கப்பலை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிவாரணப் பொருட்களை காசாவுக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. அந்த கப்பலில், காலநிலை செயல்பாட்டாளரான கிரெட்டர் துன்பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரிமா ஹசன் போன்றோர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோலவே, மே மாதம் முதல் வாரம் “ஹாண்ட்லா” எனும் கப்பலில் தன்னார்வலர்கள் காசாவுக்கு எடுத்து சென்ற நிவாரணப் பொருட்களை, அந்த கப்பல் சர்வதேச எல்லையை நெருங்கும்போதே இஸ்ரேல் இராணுவம் டிரோன் மூலம் குண்டுவீசி தாக்கியுள்ளது. ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தையும், காசா மக்கள் பாதுகாப்பு தீர்மானத்தையும் அமெரிக்கா ஐந்து முறை தன் “வீட்டோ” அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது. ஐ.நா. சபையில் பேசிய பாலஸ்தீன பிரதிநிதி “ரியாத் மொன்சூர்”, பத்து லட்சம் குழந்தைகள் உள்பட இருபது லட்சம் அப்பாவி பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் பஞ்சத்தின் விழிம்புக்குள் கொண்டுவந்துள்ளது என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். காசாவின் மொத்த மக்களும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். உலகின் பசிக்கொடுமை மிகுந்த இடமாக காசா மாறி உள்ளது என ஐ.நா. மனிதாபிமான அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் “ஜென்ஸ் லார்கே” மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுபோன்று உலகில் எங்கும் நிகழாவண்ணம் சாதி-மத-இனவெறி எனும் பாகுபாடில்லாத அறிவு மற்றும் அறிவியல் நெறி சார்ந்த ஓர் மக்கள் கட்டமைப்பு உலகெங்கும் இணைந்து உருவாக வேண்டும் என்பதே மனிதாபிமானமுள்ள அனைத்து மக்களின் விருப்பமாகவும் உள்ளது

அன்புடன்,
ஆசிரியர்.
Leave a Reply