ஆறா காயங்கள்

ஆறா காயங்கள்

  • By Magazine
  • |

கா.திலீபன், தமிழாசிரியர்

 மேடு பள்ளம் நிறைந்த மலை கிராமம் அது.  முகிலன்  காலையில் குதூகலமாய் பள்ளிக்கு கிளம்பினான். மேட்டில் ஏறி பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஏடே! நில்லுடா என்ற கூச்சலுடன்  ஓடோடி வந்தாள் முகிலனின் செல்லப் பாட்டி. என்ன கிழவி இவ்வளவு நேரம் வீட்டுல தான இருந்தேன். இப்டி துரத்திக்கிட்டு வர்ற என்று  கோபத்தில் முகிலன் திட்டினான்.  தள்ளாடும் வயதில் இளப்புடன் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயைக் கையிற்குள் மறைத்து தந்தாள். சரி வர்றேன்.. என்று பள்ளிக்குச் செல்லும் நேரம் வரை தன் வீட்டிற்கு வந்த பாட்டியின் நினைப்பிலே முகிலன் நடந்து சென்றான்.   

                மாலையில் பள்ளி முடிந்தவுடன் நண்பர்களுடன்  கூடி விளையாடினான். பிறகு வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது .  இருள் சூழ்ந்த மேட்டுப்பகுதியைக் கண்டு காட்டு விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சத்தில்  என் பேரனைக் கண்டீர்களா! கண்டீர்களா  என்று அக்கம்பக்கத்தில்  வினாவிக்கொண்டு பாட்டி காத்திருப்பாள்.

                பாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். கடைக்குட்டி மகளின் பிள்ளையான முகிலன்  மீது ஏனோ! பெரும் பாசம்.

                 ஒருவழியாக மேட்டுப்பகுதியில் நடந்து வந்த தன் பேரனைக் கண்டவுடன்தான் பாட்டிக்கு பெரு மூச்சு.   வழியில் தன் பாட்டி நிற்பதைக் கண்டவுடன் கிழவி உனக்கு வேற வேலையே இல்லையா? வரவன் போறவன்கிட்டலா என்ன கேட்டுகிட்டு இருக்க, வா வீட்டுக்கு என்று கூறி அழைத்துச் சென்றான்.  அப்போதெல்லாம் பிஸ்கட்தான்.  பாட்டி ஒரு டம்ளர் டீ யும், ஆறு  பிஸ்கட்டும் கொடுப்பாள்.     மறுநாள் பள்ளிக்கு போகனும்.இந்தா இந்த சட்டயை தொவச்சிக் கொடு என்று இருள் சூழ்ந்த ஏழுமணிக்கு கொடுத்தாலும், பாட்டி கூன் விழுந்த தன் உடலால் தளர்ந்தவாறே தொவச்சிக் கொடுப்பாள்.

                பாட்டியின் கை விரல்களுக்கு இடையில் உள்ள காயங்களில் சோப்பு நுரை படுவதைக் கண்டதும் வேணா பாட்டி என் சட்டைய நானே தொவச்சிக்கிறேன் என்று முகிலன் கூறினான்.ஆனாலும் பாட்டியின் செல்லப் பிடிவாதத்தில் பேரனின் பேச்சு எடுபடவில்லை. முகிலனின் மாமா வீட்டில் பாட்டிக்கு மதிப்பே இல்லை.கால் கடுக்க நின்று முகிலனின் அத்தைக்கு தெரியாமல் மறைந்து நின்றுதான்  டீ வியைப் பார்ப்பாள்.  ஊருக்கே சோறு போட்ட  பாட்டிக்கு வீட்டிற்குள் சோறு போட ஆள் இல்லை.

                விடுமுறை நாட்களில் விளையாடிக் கொண்டிருக்கும் முகிலனை விரட்டிப் பிடித்து  கையிற்குள் மறைத்து வைத்து எண்ணெய்யை வம்படியாக  தேய்த்து விடுவாள். மாதமானால் போதும் வேகாத வெயிலிலும் பென்சன் பணம் வாங்க சென்றிடுவாள்,  அன்று பேரன்,பேத்திகளுக்கு விருந்துதான்.       மூன்று வடையை ஆறாய் பங்கு போடும்  பாட்டி கணித ராமானுஜனையும் மிஞ்சிடுவாள்.  வெயிலானாலும், மழையானாலும், தட்டுத் தடுமாறி கடைக்குட்டி மகளின் பிள்ளையான முகிலனைப் பார்க்க மலை மீது ஏறி வந்திடுவாள்.  அன்று மாலைப் பொழுது ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.பாட்டி வடையை நீட்டி எனக்கு கொஞ்சம் ரொட்டி கொடேன் என்று கேட்டாள். அதிகமான பசியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த முகிலன் சிறுபிள்ளைக் கோபத்தில்   ரொட்டியைத் தூக்கி எறிந்துவிட்டான்..

                ஆண்டுகள் பல கடந்தன.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பட்டணத்தில் மேற்படிப்பிற்காக முகிலன் சென்றுவிட்டான்.ஒவ்வொரு மணித்துளியும் பாட்டியின்   நெனப்புதான் .

                திடீரென்று அலைபேசியில் ஒர் அழைப்பு.  பாட்டியின் உடல்நிலை சரியில்லை என்ற  செய்தியைக் கேட்ட முகிலன்  கண்கள் இருண்டு, உள்ளம் பதறி பார்க்கச் சென்றான்.பேருந்தில் போகும்போதே முகிலனுக்கு சிறு வயது நினைவெல்லாம் கண் முன்னே வந்து சென்றது. சிறு வயதில் அறியாமல் கோபத்தில் வீசிய ரொட்டித்துண்டு நிகழ்வை எண்ணி கண்ணீர் சிந்தினான்.பாவம் என் பாட்டியின் மனது என்ன பாடுபட்டிருக்குமோ?  இன்றும் அந்த காயம் என் மனதில் ஆறா காயமாகிவிட்டதே என மனதிற்குள் நொந்துக் கொண்டான்.  தன் பாட்டியைப் பார்ப்பது இந்நாளே கடைசியாக இருக்கக் கூடாது என முகிலனின் மனம் தவித்தது. உயிர் போகும் நிலையிலும் தன்  முந்தானையில் முடிந்து வைத்த பத்து ரூபாயைத் தந்துச் சென்றாள் அவனின் செல்லப் பாட்டி. அறியாத வயதில் பாட்டியின் பாசம் அவனுக்கு புரியவில்லை, அவளின் பாசம் புரியும் பொழுது அருகில் பாட்டியில்லை.  வயதானவர்கள் என்றும் குழந்தைதான். பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *