– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
1986-ல் நடந்த சம்பவத்துக்கு நாற்பது வருடம் கழித்து தீர்ப்பா?
இது ராஜஸ்தான் மாநிலத்தில் 1986-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு ஆறு வயது ஒரு சிறுமியை ஒரு காமுகன் சிதைத்து விட்டான். பாலைவனத்தில் கஷ்டப்பட்டு ஒட்டகத்தில் வந்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணக்கு வந்தது. அப்போது இந்த போக்சோ சட்டம், அதாவது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 கிடையாது. பாலியல் குற்றங்களுக்கு அப்போது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் மட்டுமே இருந்தது. இ.த.ச. பிரிவின் கீழ் தண்டனை குறைவு. ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனையோ கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கீழமை நீதிமன்ற விசாரணையின் போது சிறுமியின் தாயார் நீதிமன்றத்தினுள் குழந்தை பக்கம் இருந்தது குறித்து குற்றவாளித் தரப்பு வக்கீல் ஆட்சேபனை செய்தார். ஆனால் நீதிமன்றமோ குழந்தை சாட்சியம் கொடுக்கும் போது தாயார் நீதிமன்றத்துக்குள் குழந்தைகக்கு பக்கபலமாக இருக்கலாம் என அனுமதி கொடுத்தது. இன்றைய போக்சோ கோர்ட்டுகளில் இருக்க அனுமதிப்பப்படுகிறது.
விசாரணையின் போது குழந்தை குற்றவாளியை தெரியும் என்ற பதில் மட்டுமே தந்ததேத் தவிர சம்பவம் பற்றி அதனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. சம்பவம் பற்றி ஒன்றும் சொல்லாததால் எல்லோரும் குழந்தையை அரசு வக்கீல் பிறள் சாட்சியாக ஆக்கிவிடுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசு வக்கீல் புத்திசாலித்தனமாக அதை செய்யவில்லை. இதை பயன்படுத்திய நீதிபதி குழந்தை சம்பவம் பற்றிய சாட்சியம் அளிக்கவில்லை என்றாலும் அது அழுது கொண்டிருந்த நிலையைப் பார்க்கும் போது சம்பவம் நடந்துள்ளது என்பதை இந்த நீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்துகிறது என்று கூறி குற்றவாளிக்கு ஏழு வருடம் தண்டனை கொடுத்தார்.
இதனை எதிர்த்து குற்றவாளி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டில் துரதிஷ்டவசமாக குற்றவாளிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்துவிட்டது.
இருப்பினும் குழந்தையின் பெற்றோர்கள் சும்மா இருக்கவில்லை. உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்தத் தீர்ப்பு கழிந்த மாதம் தான் பிறப்பிக்கப்ப்டடது. இத்தீர்ப்பால் உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஏழு வருட தண்டனையை குற்றவாளிக்கு உறுதி செய்தது. இப்படியொரு தீர்ப்பு வர நாற்பது ஆண்டுகள் நம் நாட்டில் ஆகியுள்ளது.
பாதிக்கப்பட்ட அன்றைய சிறுமிக்கு இப்போது வயது 46. திருமணமாகி இப்போது இவருக்கு திருமண வயதில் இரு மகள்கள் இருக்கிறார்களாம். குற்றவாளி இப்போது உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. இப்படி நீண்டகால தாமதத்தீர்ப்பு பெற்று பிரயோஜனம் தான் என்ன? குற்றவாளி இப்போது உயிரோடு இருந்தாலும் அவரை கண்டுபிடித்து ஜெயிலில் அடைக்க இன்னும் காலதாமதம் ஆகும். இந்த குளறுபடிகளையெல்லாம் சரி செய்ய வேண்டுமானால் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என இந்தியாவில் கூடுதலாக இன்னும் நான்கு உச்சநீதிமன்ற கிளைகள் அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தாமதமற்ற நீதி மக்களுக்கு கிடைக்கும்.
Leave a Reply