வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்

வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்

  • By Magazine
  • |

பேராசிரியர் முளங்குழி பா.லாசர்

மத்திய பிரதேச ராம்கார்க் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங்கின் மனைவி ராணி அவந்திபாய். பேரழகு நிறைந்த அவர் துணிச்சல் மிக்கவர். போர்க்கலைகள் அனைத்தையும் பயின்றவர். லோதி இனத்தைச் சேர்ந்த அவந்திபாயின் இளம் பருவத்திலேயே அவர் கணவர் விக்ரமாதித்ய சிங் வாரிசு இல்லாமல் இறந்தார். கணவர் இறந்ததும் அவந்திபாய் அரசியாய் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.  நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஆங்கில அரசு, ஆண் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று சட்டம் போட்டது. ராணி அவந்திபாய் அச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

நாட்டைக் கைப்பற்ற ஆங்கிலேயர் படையுடன் வந்தனர். ஒரு பெண் அரசியல் ஆட்சி புரிவதைத் தடுப்பதா என சினத்துடன் சீறியெழுந்த அவந்திபாய் 4000- படைவீரர்களுடன் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்தார். நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றுவதைத் தடுத்தே தீருவோம் என ஆவேசத்துடன் வீரர்கள் கடும்போர் புரிந்தனர். தீரத்துடன் போரிட்ட போதும் வெள்ளையரின் நவீன பீரங்கிப் படைக்கு முன்னால் அவந்திபாய் வீரம் எடுபடாமல் போயிற்று. தோல்வியைத் தழுவினார்.

ராணி அவந்திபாய் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் தனியாக அடைக்கப்பட்டார். வெள்ளையர் ராணி அவந்திபாயை சிறையில் அவமரியாதையுடன் நடத்தினர். பல அவமானங்களை தொடர்ச்சியாக சந்தித்த போதும் மனம் தளராத ராணி அவந்திபாய் வெள்ளையரின் பலத்த கட்டுக்காவலை மீறி சிறையிலிருந்து நம்பிக்கையான வீரர்களின் துணையால் தப்பிச் சென்றார். தனியாக வெள்ளையரை எதிர்க்க முடியாது என்ற காரணத்தால் ஜாண்சி  நாட்டுப்படையில் இணைந்தார்.

வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டியே தீருவேன். என்னுயிர் போனாலும் கவலையில்லை என்று தைரியமாக முழக்கமிட்டார். வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் தாங்கி களம் புகுந்தார். போர்ப்பயிற்சிகள் அத்தனையும் கற்ற ராணி அவந்திபாய் தைரியமாக வீரமுடன் போரிட்டார். வெள்ளை வீரர்கள் பலரைக் கொன்று குவித்தார். கடும்போர் மூண்டது.

ஆனாலும், வெள்ளையரின் வலிமை வாய்ந்த பீரங்கிப்படைக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆனால் வெள்ளையர் முன் தோல்வியடைய விரும்பவில்லை. எனவே போர்களத்தில் 1858- ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் நாள், தன் கரத்திலிருந்த வாளினால் பலமாக தன் மார்பில் குத்தி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

 வீரமங்கை ராணி அவந்திபாய் வீரச்செயல் இந்திய வரலாற்றில் விரிவாக   எழுதப்படவில்லை.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *