பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !

பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

விடுதலை, ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று.

விடுதலை இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய முளரி இதழ்.

விடுதலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுவிப்பு.

விடுதலை, வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம்.

குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, தனித்தன்மையை, விடுதலை உணர்வைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி எண்ணுகிறோமா?

படிக்கும் படிப்பிலிருந்து திருமணநாள் வரை, சமூக முடிவுகளுக்குட்பட்டுத் தன் ஆசைகளைத் தீயிட்டு, ஒரு குடும்பத்தின் வெளிச்சமாய் மாறி நிற்கும் பெண்களின் மனது, எதிர்பார்க்கும் விடுதலை உணர்வு என்ன? பெண்களைப் பொறுத்தவரை, தங்கள் விடுதலைக்கான வரையறை என்ன? என்பதை அவளிடம் அமர்ந்து பேச இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்?

காலம் மின்னல் வேகத்தில் ஊழிகளாகச் சுழன்றாலும் அதைக் காட்டும் கடிகார முற்கள் தேங்கியிருப்பது ஒரு வட்டத்திற்குள்தான்.

மகள், மனைவி, அம்மா, பாட்டி என வெவ்வேறு படி நிலைகளில் ஒரு பெண் தன் முதன்மையை உணர்த்தினாலும்  அவள் முடங்கிக்கிடப்பது குடும்பப் பொறுப்பு, குடும்பக் கௌரவம் என்கிற பெயர்களில் ஆண்களின் அதிகாரங்களுக்குள்தான்.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு, ஆண் துணையாக நிற்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் வெற்றி எதைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை உலகின் ஏதோ ஓரு ஆணால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் பெண்ணினத்தின் சாபம்.

பெண் விடுதலை என்பது விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதுபோன்று ஏழு கடலுக்கு அப்பால் உள்ள கிளியின் உயிரில் பூட்டி வைக்கப்படவில்லை.

நண்பன், தந்தை, உடன்பிறப்பு, கணவன், உடன் பணியாளர், மகன் எனப் பெண்கள் கூடவே பயணிக்கும் ஆண்கள் கையில் சிக்கிய பட்டாம்பூச்சியின் சிறகுகளாகத்தான் அது துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. ‘பாதுகாப்பு” என்ற பெயரில் இந்தக் குமுகாயம் கொடுக்கும் ஒவ்வோர் அக்கறையும் ஒவ்வொரு வகையான தடை என்பதை உணர்வதுதான் பெண் உரிமைகள் பெறுவதற்கான முதல் படி.

சதை, குருதி, எலும்பு எனப் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஒரே உயிரினம்தான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பெண்ணை மெலிவான பாலினம் ஆக்கியது இந்தக் சமூகம்தான்.

எண்ணிப் பாருங்கள்! நம் வீட்டில் இருக்கும் 30 அகவைப் பெண் ‘தனியே” பக்கத்துக் கடைக்குச் செல்கிறாள் என்றால், 8 அகவைச் சிறுவனை அவளுக்குத் துணைக்கு அனுப்பும் பண்பில்தான் நாம் இன்னும் உழன்று கொண்டிருக்கிறோம். பெண் வலுவற்றவள், ஆண் வீரமானவன் என்ற மூடநம்பிக்கை கருவேலம் விதைகளாய் இந்தக் சமூகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.

மகப்பேற்று அறையில், உயிருக்கே உறுதியில்லாத அளவுக்கு அச்சம்காட்டிய ஆயிரம் வலிகளைக் கடந்தும் குழந்தை முகத்தைப் பார்த்த நொடியில் புன்னகைக்கும் பெண்ணின் வலிமையைவிட ஒரு வலிமை இந்த உலகில் இருக்கிறதா? பெண்களின் கண்ணீர் வலுவற்றது என்றும் ஆண்களின் கண்ணீர் பாசத்தின் வெளிப்பாடு என்றும் கட்டமைத்தது இந்தக் சமூகம்தானே?

ஆண்கள் 8 மணிநேரம் அலுவலக வேலை பார்த்தால் போதும். பெண்கள் அதற்கு அப்புறமும் வீட்டு வேலைகள், குழந்தைகளின் படிப்பு என்று 13 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். இந்த உழைப்புச் சுரண்டலில் இருந்தெல்லாம் அவர்களுக்கு எப்போது விடுதலை?

இன்னும், மாதவிடாய் விடுப்பு, சொத்தில் சம உரிமை, பெற்றவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை, குழந்தை வேண்டும், வேண்டாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, தனக்கு நடந்த பாலியல் வன்முறையைத் தன் குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசும் உரிமை, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை, படைத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு, குடும்பத்தில் சம  உரிமை, மரியாதை, மற்றவர்களால் மதிப்பீடு செய்யப்படுவதிலிருந்து விடுதலை எனப் பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். உரிமையும் விடுதலையும் பெண்களைச் சுற்றியுள்ளவர்களிடம் தான் கட்டுண்டு கிடக்கின்றன. உங்கள் வீட்டுப்பெண் மேடை ஏற வேண்டும் என்று விரும்பினால் அது திருமண மேடையாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. வீடு தன் கதவை முதலில் பெண்களுக்குத் திறந்து விடட்டும்.

சமூகம் அவர்களைச் சம உரிமை கொடுத்து வாரிக்கொள்ளட்டும்

ஆகையால், பெண்களே! அடிபணியாதீர், தலை குனியாதீர்! தலைநிமிர்ந்து உங்கள் உரிமைகளைப் பேசுங்கள் அது வீடானாலும் சரி… நாடானாலும் சரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *