பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!!
பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம்.
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம்.
பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், கேஸ் அடுப்பு, டிவி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை இல்லாமல் சமையலுக்கு பழங்கால முறையில் விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தோம்.
பின்னர் அவரிடம் பேச தொடங்கினோம் அப்போது அவர் கூறியதாவது
எனது பெயர் ராஜரத்தினம். எனது தந்தையின் பெயர் சிமியோன்.. ஆசான் தாத்தாவின் பெயர் மாதவடியான் என்ற முக்கண்ணன் ஆசான் நாங்கள் நான்கு தலைமுறைகளாக விஷ வைத்தியம் செய்து வருகிறோம் .
நீங்கள் என்னென்ன விஷங்களுக்காக மருந்து செய்து வருகிறீர்கள்?
நாங்கள் பாம்பு கடி, பல்லி, ஓணான், பூரான், சுண்டெலி, சிலந்தி, சிறு பூச்சிகள், போன்றவற்றின் கடியால் ஏற்படும் விஷ பாதிப்புகளுக்கும், மேலும் நீண்ட கால விஷபாதிப்புகளால் ஏற்படும் விஷக்கடி என்ற விஷம் சார்ந்த நோய்களுக்கும் மருந்து செய்து வருகிறோம்.
அந்த கால பாம்பு கடி விஷக் கடி சிகிச்சை குறித்து சொல்லுங்கள் ?
எனது முன்னோர்கள் இன்று ஒருவர் பாம்பு கடிபட்டு வரப்போகிறார் என்றால் அவர்களது மனதில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்து இன்று ஒருவர் விஷ பாம்பின் கடிபட்டு சிகிச்சைக்கு வருவார் என்பதை அறிந்து முன்கூட்டியே மருந்துகளை செய்து வைத்து விடுவார்கள்.
ஒருவர் விஷ பாம்பின் கடிபட்டு வரப்போகிறார் என்பதை உங்களது முன்னோர்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள்?
இதுபோன்ற முன் அறிகுறிகளை உணர்ந்து வைத்தியம் செய்வதற்கு கடவுளின் அருள் முக்கியமாக தேவை . ஆகவே எனது முன்னோர்கள் கருட சித்து என்ற சித்தியை அடைந்து அதன் மூலம் வைத்தியம் செய்து வந்தனர்.
கருட சித்து என்றால் என்ன அதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள்?
கருட சித்து என்பது மிகவும் கடினமான சித்து (வழிபாடு)ஆகும். இது எல்லோருக்கும் அமைவதில்லை. மேலும் இதனை அடைவதற்கு முயற்சித்தால் சிலருக்கு பைத்தியம் கூட பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று எனது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
விஷ வைத்தியத்திற்கென்று என்னென்ன மருந்து முறைகளை பிரயோகித்து வருகிறீர்கள்?
நாங்கள் இதற்கென்று பிரத்தியேகமாக மூலிகை கூட்டு மருந்துகளை பயன்படுத்தி வருகிறோம். மேலும் வெள்ளை பாஷாணம், நரி விஷம், பாதரசம் ஆகியவற்றுடன் மூலிகைகளை பயன்படுத்தி வைத்தியம் செய்து வருகிறோம்.
வேறு என்னென்ன சிறப்பு முறைகளை கடைப்பிடிக்கிறீர்கள்
விஷக்கடிகளால் சிலருக்கு தலையில் விஷம் ஏறி நெஞ்சு அடைத்து விடும். அந்த விஷத்தை முறிப்பதற்கு மருந்து கொடுப்போம். மேலும் அப்படி கடினமாக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மந்திரம் உச்சரித்து குணப்படுத்துவோம்.
எந்த விஷ பாம்பு கடித்துள்ளது? அது ஆபத்தான கடியா ? இல்லை சாதாரண கடியா ?என்பது எப்படி கண்டுபிடிப்பீர்கள் ?
பாம்பின் கடிபட்டு இருக்கக்கூடிய பகுதியை பார்த்தால் அது விஷக்கடியா அல்லது சாதாரண கடியா என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது என்ன பாம்பாக இருக்கலாம் என்பதையும் யூகித்து கொள்வோம்.
ஒருவருக்கு விஷ பாம்பு கடியால் மரணம் ஏற்படும் என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?
எனது முன்னோர்கள் பழங்கால வைத்தியர்களின் அனுபவங்கள், மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றின் படி பாம்பின் ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அதன் விஷம் தோல்வழி ஏறி இருக்கும். பாம்பின் இரண்டு பல் பதிந்திருந்தால் அதன் விஷம் தசைவழி ஏறி இருக்கும். பாம்பின் மூன்று பல் பதிந்திருந்தால் அதன் விஷம் எலும்பு வழி ஏறி இருக்கும். பாம்பின் நான்கு பல் பதிந்திருந்தால் அதன் விஷம் எலும்பு? வழி ஏறி இருக்கும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாம்பு கடிபட்டிருக்கும் நபருக்கு மரணம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் காலை 6 மணிக்கு விஷப் பாம்புகள் கடித்தால் மரணம் ஏற்படும் என்றும் பகல் 12:30 மணி அளவில் கடித்தால் 80 சதவீதம் அளவிற்கு மரணம் ஏற்படும் என்றும் மாலை 6:00 மணிக்கு என்றால் மரணம் ஏற்படும் என்றும் எனது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது அனுபவத்தில் என்ன பாம்பு கடியால் பாதித்தவர்கள் அதிகமாக தங்களிடம் அல்லது தங்களது முன்னோர்களிடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர்?
எங்களது முன்னோர்களின் காலத்தில் நல்ல பாம்பு கட்டுவிரியன், சுருட்டை விரியன், சாரை பாம்பு மற்றும் பல்வேறு விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்பு கடிகளுக்கு மக்கள் எங்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். என்றாலும் இந்தப் பகுதியில் நல்ல பாம்பு கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம் பேர் எங்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் விஷ வைத்தியத்திற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதா?
இப்போதெல்லாம் பாம்பு கடிக்காக யாரும் சிகிச்சைக்கு எங்களைப் போன்றவர்களிடம் வருவதில்லை. உடனடியாக நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர்.
தற்போது ஓணான், பூரான் சுண்டெலி, சாதாரண எலி, சிலந்தி, மற்றும் சிறு பூச்சிகளால் ஏற்படும் கடி ஆகியவற்றின் எதிர் வினைனைகளால் ஏற்படும் விஷக்கடி என்ற பாதிப்புகளுக்கு மட்டுமே மக்கள் எங்களிடம் வருகின்றனர்.
இந்த பழங்கால விச வைத்திய முறைகளை கற்றுக்கொள்ள புதிய தலைமுறை ஆர்வம் காட்டுகின்றனரா?
பாம்பு கடி மற்றும் விஷ பாதிப்புகளுக்கு மக்கள் உடனடியாக நவீன மருத்துவமனைகளுக்கு செல்வதால் இத்தகைய மருத்துவ முறைகளை கற்றாலும் எந்த பயனும் இல்லை என்று புதிய தலைமுறை இளைஞர்கள் உணர்வதால் இந்த வைத்திய முறைகளை யாரும் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. ஆகவே இந்த வைத்திய முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
கடித்த பாம்பை கொண்டு அடிபட்ட நபரின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் முறை இருந்ததாக பொதுமக்களிடையே ஒரு கருத்து உள்ளது அதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?
விஷப்பாம்பால் கடிபட்ட நபரை ஒரு இடத்தில் இருத்தி வைத்து விட்டு ஒரு தென்னை ஓலையில் உள்ள ஈர்க்கிலை எடுத்து மந்திரம் உச்சரித்துக் கொண்டே இருந்தால் கடித்த பாம்பு அந்த இடத்திற்கு வந்து கடிபட்ட நபரின் விஷத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். பின்னர் அந்த பாம்பு உடனடியாக இறந்து விடும். அது மிகவும் சாபமாகும் என்று எனது முன்னோர்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். இதனை எனது அனுபவத்தில் நான் கண்டதில்லை.
தங்களின் முன்னோர்களின் வழி தாங்கள் தெரிந்து கொண்ட நம்ப முடியாத ஆச்சரியமான தகவல்கள் ஏதேனும் உள்ளதா?
வில் ஊணி என்ற ஒரு வகையான பாம்பு இருந்ததாகவும் அது சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் வரை நீளக் கூடிய தன்மையைக் கொண்டதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது இன்றைய காலத்தில் கூறப்படும் அனகோண்டா போன்ற பாம்பு வகையைச் சேர்ந்த உயிரினமா? அல்லது மலைப்பாம்பு அல்லது ராஜ நாகம் போன்றவற்றை குறித்து மிகைப்படுத்தி கூறப்பட்ட விஷயமா ? அல்லது உண்மையிலேயே அப்படி ஒரு பாம்பு இருந்ததா? என்பதும் தெரியவில்லை என்றார் அவர். அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.
பேட்டி கண்டவர்
ஜி. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்,
உதவி : திரு.R.அஜோய்
Leave a Reply