மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

  • By Magazine
  • |

A. தர்மராஜ் (த.ராசு)

பாதிக்கப்பட்ட பெண் பார்வையற்றவர் என்பதால் அவரது சாட்சியை கண்ணுள்ள சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. செவிவழி சாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆட்டோ டிரைவர் தான் வண்டியை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும், ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ததை நேரில் பார்த்ததாக யாரும் சாட்சியம் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாக மட்டுமே கூறப்பட்டிருப்பது செவிவழி சாட்சியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆட்டோ ஓட்டுநருக்கு தண்டனை வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல என்று வாதிடப்பட்டது. ஆனால், சராசரி மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக  கருதப்பட முடியாது. அப்படிக் கருதினால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கைக்கே முரணாகி விடும்.

பார்வை இழந்த அந்தப் பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம். ஆனால் அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாகக் கருதுகிறேன். அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்கிறேன். கண்பார்வை இல்லாத ஓர் இளம்பெண் மீது அன்பும், இரக்கமும் காட்டாமல், அவருக்கு பாலியல் கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு இதயமே இல்லை. அவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய 7 ஆண்டு சிறைத்தண்டனையில் ஒருநாள் கூட குறைப்பதற்கு விரும்பவில்லை. அந்த தண்டனையை உறுதி செய்கிறேன். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கிறேன். புலன் விசாரணை செய்த அதிகாரியை பாராட்டுகிறேன். இந்த தீர்ப்பு பலராலும் ஏற்கப்பட்டு பாராட்டப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2017-லேயே உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் கூட இந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தலைமை செயலாளர்,  போக்குவரத்துத்துறை செயலாளர் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நினைவூட்டியும் கூட இதிலே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அது குறித்து நீதிமன்றம் அதிருப்தியே தெரிவித்தது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுபோக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த பார்வைக் குறைவுடைய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஓ.பி.சி பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்துறை) பணிதான் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தார். அந்த பிரிவில் உள்ள 304 பேருக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கும் போது 286-வது இடத்தில் உள்ள தனக்கு அந்த பணியிடம் ஒதுக்கப்படாதது ஏன் என்று கேட்டிருந்தார். மொத்த பணியிடங்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையிலும் தனக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வினா எழுப்பியிருந்தார். ஆகவே இதிலே தகுந்த திருத்தம்  வழங்கும்படி கேட்டிருந்தார். இதன் மீது தகுந்த திருத்தம் வழங்கிட நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதன்படி ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர்நிலைக் குழுவை மறுசீரமைப்பு செய்து கண்காணிப்புக் குழுவை அமைக்கலாம் என்று தமிழக அரசை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டபடி தமிழக அரசும் குழுவை அமைத்தது. குழுவின் தலைவராக மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் இருப்பார். உறுப்பினர்களாக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாடு, மனித வள மேலாண்மை ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர், உறுப்பினர் செயலாளராக இருப்பார். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை இந்த உயர்நிலைக்குழு கண்காணிக்கும்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்து முட்டுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் ஏப்ரல் 2022-ல் உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் பணியிடத்தில் ஒருங்கிணைப்பு தொற்றுநோய்க்குப் பின் உலகில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பை மையமாக வைத்து உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்கள் இணைந்து முகாம் நடத்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். அலுவலர்கள் பலர் வழி நடத்தினர்.

2020 டிசம்பரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தனியார்துறைப் பணிகளில் தங்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 29-வது உலக மாற்றுத் திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. மேலும், அரசு துறைகளில் பின்னடைவு காலிப்பணியிடங்களை 3 மாத காலத்தில் நிரப்பி அதனை உறுதிப்படுத்த வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை குறைந்த பட்சம் 3000 ஆக உயர்த்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

முதுகலைப் படிப்பை நிறைவு செய்திருந்த பார்வையற்ற கல்லூரி மாணவி ஒருவர் வேலை பெறுவதற்காக ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலின் போது அந்த கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் சிலர், பார்வையில்லாத நீங்கள் எப்படி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பீர்கள், எப்படி விடைத்தாள் திருத்துவீர்கள், மாணவர்களை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைப்பீர்கள் என்று. அந்த மாணவி தன்னம்பிக்கையுடன் தான் அறிந்த வரையில் விளக்கிக் கூறுகிறார். அவர் கூறியதையெல்லாம் அக்கல்லூரி நடைமுறைக்கு ஒத்து வராது என்று தோன்றியதால் அவருக்கு வேலை தர மறுக்கின்றனர். இது இந்திய பொது சமூகத்துக்கும் மாற்றுத் திறனாளிகளின் உலகத்துக்கும் இடையே உள்ள இடைவெளிக்கான ஒரு உதாரணமாக வெளி உலகத்தால் பார்க்கப்ப்டடது.

உலக நாடுகளில் இந்தியாவில் தான் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகம். மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை இங்கு 7 கோடிக்கு மேல் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகள் பலவகையாக உள்ளன. உடல் குறைபாடு, புலன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு என்று பலவகையாக உள்ளன.

இங்கு உள்ள மாற்றுத் திறனாளிகளில் பெரும்பாலோர் வேலை வாய்ப்பின்றி ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வேலையில் இருப்பவர்களும் கூட முறை சாரா துறைகளில் தினக் கூலிகளாகவே இருக்கின்றனர். இவர்களில் 45 சதவீதம் கல்வியறிவு பெறாதவர்களாகவே உள்ளனர். 30 லட்சம் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பள்ளிப் படிப்பையே நிறைவு செய்வதில்லை என்று யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கின்றன. 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதபடி வசதிக் குறைவாகவும் உள்ளனவாம். இதற்கென மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதது தான் இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. வேலைக்கும் உயர் கல்விக்கும் தகுதியான மாற்றுத்திறனாளிகள் சேர்க்கையின் போது கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம் என்று தெரிய வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு மேல்நாட்டு அரசுகள் அக்கறையோடு எடுக்கின்ற அளவிலான அக்கறைகள் இந்தியாவில் எடுக்கப்படாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் திருவொற்றியூரில் மாற்றுத்திறனாளிகள் 216 பேர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை, வங்கிக் கடன் மானியம், ஆவின் உதவி உபகரணங்கள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முதலான உதவிகளை வழங்கினார். அத்துடன் நவீன மூன்று சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், காதொலி கருவிகள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

2024 லோக்சபா தேர்தலின் போது பதட்டமான ஓட்டுச் சாவடிகளைக் கண்டறிவதற்கான பணியின் போது ஓட்டுச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் முறைப்படி செய்து தரப்படாத குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டது. இதே குறைபாடு ஒவ்வொரு தேர்தல்களிலும் காணப்படுகின்ற போதிலும் இதுவரையிலும் இதிலே அக்கறை செலுத்தப்படவில்லை என்று தெரிகிறது.

ஹஜ் பயணம் மேற்கொள்வதில் இவர்களுக்கென்று உள்ள தடையினை விலக்கி விடுவது குறித்த கோரிக்கை மீது இவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் இவர்களது சங்கம் நினைவூட்டு  வைத்த போதிலும் அரசு அதனை செவிமடுக்காத நிலை தான் நீடிக்கிறது. அவர்களின் இந்த கோரிக்கை மீதான இந்த நிலை இன்று வரையிலும் அப்படியே தான் உள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொது வெளியில் பேசுகின்ற போது, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் படியான சொற்களை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மனித சமத்துவத்தை மதிப்பது, சரிசமமான கண்ணியம் அளிப்பது இதனை அரசியல் கட்சிகள் செயல்பூர்வமாகவும் உறுதிபடுத்த வேண்டும் என்கிறது தேர்தல் கமிஷன்.

நாங்களும் வாழ வந்தவர்கள் தான்

2017-ல் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் ஒரே நேரத்தில் 104 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் கோல்டன் புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. உலகிலேயே இத்தனை எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திருமணம் நடந்திருப்பது அதுவே முதல் முறையாக அமைந்தது. இந்த மெகா நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் 77 பேர் இந்துக்கள், 26 பேர் முஸ்லீம்கள், ஒருவர் சீக்கியர். மத்திய சமூகநீதித்துறை அமைச்சரின் முன்நிலையில், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவரவர் மத வழக்கப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தம்பதிகளுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுப்பொருட்கள் வந்திருந்தன.

ஊனமுற்றோரில் பல பிரிவினர் அடங்குகின்றனர். இதில் பார்வை இழந்தவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்கு உரியது. பார்வையற்ற மாணவர்களுக்கென ஒரு வழிகாட்டிக் கருத்தரங்கம் 2017-ல் சென்னை முகப்பேர் நொளம்பூரில் உள்ள  நேத்ராலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற போது, பார்வையற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் எந்த வகையான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது, அவர்களுக்குள்ள வேலை வாய்ப்புகள் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஒருமுறை மாநில அமைச்சர் ஒருவர் மாற்றுத் திறனாளியை கேவலமாகப் பேசியதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உடல் ஊனமுற்றோர் நலத்துறை என்று இருந்த பெயர் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்பட்டது. அந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் கூட்டத்தில் ஊழியர்களில் ஒருவராய் கலந்து கொண்டிருந்த ஊனமுற்றவரைக் காண நேர்ந்த அமைச்சர் இது போன்ற ஊனமுற்றோரை பணியில் வைத்திருந்தால் அவரால் எப்படி வேலையை ஒழுங்காக செய்ய முடியும்? என்று கடிந்து கொண்டார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கென்று ஓர் அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு உதவித்தொகை வழங்கும்படி தமிழ்நாட்டில் 2017-ல் போராடியது. இதர மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீதம் ஊனம் இருந்தாலே நிபந்தனைகள் ஏதுமில்லாமல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லாமலிருந்தது. ஆகவே மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று இங்கேயும் வழங்ககோரி 2016-ல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய போராட்டக் குரல்கள் உரிய காலத்தில் முழுமையாக செவிசாய்க்கப் படவில்லை. மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதும் அவமானத்துக்கு உள்ளாவதுமாக இருந்தனர். மேலும் உடல் அளவில் 75 சதவீத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளி மாணவியை சேர்த்துக் கொள்ள மறுத்ததால் பெற்றோர் போராட்டம் நடத்தினர். அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் 11-ஆம் வகுப்பில் சேர வரும்போது தலைமை ஆசிரியை மறுத்ததால் தான் இந்த போராட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கென்றே ஒரு சிறப்புப் பள்ளி இருப்பதால் அங்கு சேர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்ட அந்த மாணவி சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

மாற்றுத் திறனாளிகள் ரயில் பெட்டிகளில் பயணம் மேற்கொள்வதில் சில அசௌகரியங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் மூன்றாவது ஏ.சி. பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் வரிசைப் படுக்கைகளில் இட ஒதுக்கீடு செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்தது. சாதாரணமாக இரண்டாம் வகுப்பு விரைவு ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு கீழ்வரிசைப் படுக்கைகளில் இட ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் சிரமமின்றி பயணிக்க முடியும். ஆனால் 3 ஏ.சி வகுப்பு பெட்டிகளில் அத்தகைய இட ஒதுக்கீடு முறை இல்லாததால் அந்தப் பெட்டிகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இந்தக் குறையை போக்கும் வகையில் ஏ.சி பெட்டிகளிலும் அவர்களுக்கென்று இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைத்து ரயில்வே நிலையங்களையும் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்றமுறையில் சிறப்பு கழிப்பிடங்கள், பார்வையற்றவர்கள் படிப்பதற்கென பிரெய்லி எழுத்துக்களைக் கொண்ட அறிவிப்புப் பலகை வைப்பது போன்ற வசதிகள் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

2017-ல் குறிப்பிடும்படியான ஒரு நிகழ்ச்சியாக தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை 15 மாவட்டங்களில் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. தகுதி, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டு இந்து முறைப்படி நடைபெறும் . இந்த திருமண திட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 100 பேருக்கு திருமணம் செய்து வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஜோடி ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படவும், 2 கிராம் தங்கத்தாலி, ஜவுளிகள், 2 மாதத்துக்கு போதுமான மளிகைப் பொருட்கள், 51 சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது. திருமணம் ஆகாத பிறவி ஊனம், வாய் பேச முடியாதவர்கள், விபத்தினால் ஊனமுற்றோர் போன்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டது. தமிழக அளவில் திட்டமிடப்பட்ட இந்த இலவச சுயம் வரம் மதுரையில் ஜீலையில் நடத்தப்படவும், அதில் தேர்வாகும் ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகஸ்டில் சென்னையில் தடபுடலாக நடத்தவும் திட்டமிடப்பட்டது.

மாற்றுத்திறானிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசு பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2017-ல் திருத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் அரசால் கண்டறியப்பட்ட பதவிகளின் அடிப்படையில் அது செய்யப்பட வேண்டும். வறையறுக்கப்பட்ட ஊனம் கொண்ட தகுந்த நபர் கிடைக்காத பட்சத்தில் வெவ்வேறு வகையிலான ஏதேனும் ஒரு மாற்றுத்திறன் கொண்டவர்களால் அப்பணியிடங்கள் நிரப்பப்படலாம். குறிப்பிட்ட பதவிக்கான நபர் கிடைக்காத பட்சத்தில் தான் ஊனமுற்றவரல்லாத மற்றொருவரால் அப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தவும் பட்டது.

பல்வேறு பணிகளில் திறமையுடன் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுக்கு அந்தப் பணி வாய்ப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் அரசுத்துறை, பொதுத்துறை, அரசு சாரா அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 2016-17 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற போது அதில் தலைமையேற்று பங்கு பெற்ற அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரியவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது முக்கியத்துவம் பெறுவது குறிப்பிட்டுக் காட்டப் பெற்றது. அந்த முக்கியத்துவம் கருதியே அரசுப்பணிகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். பொது போக்குவரத்து, அரசு கட்டிடங்கள் போன்றவற்றை மாற்றுத்திறனாளிகள் எளிமையான வகையில் அணுகுவது உறுதிப்படுத்த வேண்டிய ஒன்று. மாற்றுத்திறனாளிகள் எதிர்க்கொள்ள கூடிய பிரச்சினைகள் ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து அதனை சீர்ப்படுத்துகின்ற முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாத நிலைதான் இங்கு நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித்தன்மை உள்ளது. அதை உணர்ந்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து ஊக்குவிப்பதில் தான் அவர்களின் சக்தி, எதிர்காலம் போன்றவை அடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளும் சூழலையும், அதிகாரமளித்தலையும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். இது தான் அவர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றார் ஜனாதிபதி.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *