பிரசர் மாமி

பிரசர் மாமி

  • By Magazine
  • |

கிருஷ்ணகோபால்

பிரசர் மாமியை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தாள். பிரசர் மாமி என் மனைவியின் தூரத்து  உறவினள். மனைவிக்கு மாமி முறை வரும், பிரசர் மாமியை நான் ‘சித்தி’ என அழைக்க வேண்டும். ஆனால் எனக்கு என்னவோ அவளைப் பற்றி பேச்சு வருந்தோறும் என் மனைவியிடம் பிரசர் மாமி என்றேச் சொல்லி வந்தேன். அதனால் அவள் சங்கடப்படவோ மனம் ஒவ்வாமை எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் பார்த்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் பொருட்படுத்த வேண்டிய விசயமா என்ன?

                பழுதடைந்து உழுத்துப் போய் நின்ற சன்னலை சரிசெய்ய வேண்டி பிரசர் மாமி அழைப்பதாக  ஒரு நாள் மனைவி சொன்னாள். அதனால் ஒரு விடுமுறை நாளில் மரவேலைச் சாதனங்களோடு பிரசர்  மாமி வீட்டுக்குச் செல்லும் போது பேச்சுத் துணைக்காக என் மனைவியும் கூடவே வந்திருந்தாள்.

                இதற்கு முன் அங்கு அவளோடு வேறு விசயங்களுக்காக சிலமுறை வந்திருந்தாலும் ஏனோ என் மனைவிக்குக் கேட்கத் தோணவில்லை. இன்று அதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்ததுப் போல் கேட்டும் விட்டாள்.

                “மாமி இவங்களுக்குப் பிரசர் இருக்கு. பிரசர் செக் பண்ணனும்”  எனத் தயங்கியவாறே சொன்னாள். “உங்களுக்குப் பிரசர் இருக்கா”           என பிரசர் மாமி என்னைப் பார்த்து கேட்கிற தொனியை வைத்துப் பார்த்தால் தனக்கு கம்பெனியா ஒரு ஆள் கிடைத்துவிட்டார் போலிருந்தது. அதன் பிறகு  “இவ்வளவு சின்ன வயசுல சவம் வந்திருக்கு” எனச் சொல்லி வருத்தப்படவும் செய்தாள்.

                “மாத்திர சாப்பிடச் சொல்லி எத்தனையோ நாள் சொல்லியாச்சி. திங்கமாட்டேன்னு அடம்பிடிக்கியாவ. டாக்டர் கொடுத்த மாத்திரைய அஞ்சு நாள் போலச் சாப்பிட்டாவ. யாரோ ஒரு கிருத்திருமி சொல்லிருக்காங் பிரசர் மாத்திர சாப்பிட ஆரம்பிச்சா ஆயுள் முழுசும் சாப்பிடணும்ணு அப்புறமா மொத்த மாத்திரையும் குப்பைத் தொட்டிக்கு போயிருச்சி. நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க மாமி. மாத்திர சாப்பிடச் சொல்லி” என்றாள் மனைவி.

                “மக்கா நீ மாத்திரை கண்டிப்பா சாப்பிடணும். இல்லைன்னா கைகால்கள் இழுத்து வச்சுக்கிரும். அப்புறமா குடும்பத்த யாரு கவனிப்பாங்க. ரெண்டு பொட்ட புள்ளைங்க வேற இருக்கு. அதுகள கட்டிக் குடுக்கணும். நீங்க ஸ்டாங்கா இருந்தாதானே அதெல்லாம் முடியும்.  ‘டெல்பி’ மாத்திரைதான டாக்டர் எழுதித் தந்திருப்பாரு. தினமும் ஒண்ணு வச்சி சாப்பிட்டா ஒண்ணும் செய்யாது” எனக் கரிசனையோடு பேசினாள்.

                நான் சற்று ஏளனத்தோடு தலையை மேலும் கீழும் ஆட்டியபடியே “கை கால்களை இழுத்து வச்சிக்கிடும் என்கிற வார்த்தைய சொல்லியே டாக்டருங்க யாவாரத்த பெருக்கிட்டு இருக்கானுவ. மக்கதான் பாவம்”.

                “மக்கா முதல்ல டாக்டர்ங்கள கொறச் சொல்லுறத நிப்பாட்டுங்க. அவங்க தெய்வம் பிரசருக்கு டாக்டர் தந்த மாத்திரைய சாப்பிட்டு இருக்கிறதாலதான பிரசர் கன்ட்ரோல்ல இருக்கும். இல்லன்னா பிரசர் ஏறி இருதய குழாய் வெடிச்சி செத்த இடத்துல புல்லு மொளச்சிக்கும்”. என படபடவென்றாள்.

                மறுபடியும் நான் கிண்டலாகவே சொன்னேன்.

                 “பத்து வருசமா மாத்திர சாப்பிடுறீங்க சாப்பிட்ட பிறகும் நோய் குணமாகலியே. ஆயுசு முழுசும் ஒரு நோய்க்கு மருந்து சாப்பிடுவதிலிருந்தே புரியலியா. இதுக்குப் பின்னால வியாபாரம் இருக்குன்னு”.

                “இப்படி பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல.. என்ன மொவன் இப்படி பேசுறாரு”என என் மனைவியை நோக்கி தலை திருப்பினாள்.

                “ஆமாம் மாமி அவர் எப்பவும் இப்படித்தான். காய்ச்சலுக்குக் கூட மாத்திரை சாப்பிடாம வெந்நிய காய்ச்சி குடிச்சி சரிப்படுத்திடுவாரு. கண்ட கண்ட கொழைகள அவிச்சி தண்ணி குடிப்பாரு. யாரோ சேரக் கூடாதவங்களோட சேர்ந்து குண்டக்கமண்டக்க பேசுறாரு. நான் சொல்லித்தான் கேக்கல. மத்தவங்க சொன்னாலாவது கேப்பாங்கன்னு பாத்தேன், அதுவும் கேக்குற வழியில்ல. ஒண்ணுல ஒண்ணு ஆச்சுனா பிள்ளைங்க தான் கஷ்டப்பட்டுப் போயிருவாங்க. உங்க மகனுக்கு எல்லாம் வேடிக்கைதான்” என பெருமூச்சு விட்டு செயரில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள்.

                நான் என் வேலையில் கவனமாக இருந்தேன். பிரசர் மாமி இதற்கு முன் பிரசர் பரிசோதிப்பதற்காக  ஒவ்வொரு முறையும் மெடிக்கல் ஸ்டோரில்தான் ஏறி இறங்குவாள். ஒவ்வொரு முறையும் முப்பது ரூபாய் கொடுத்து வந்திருந்தாள். கனத்த உடலைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்ல சோம்பல்பட்டோ,  அல்லது ஒவ்வொரு முறையும் வீணாய் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறே என நினைத்துத்தானோ என்னவோ புதிதாக ஒரு பிரசர் மீட்டர் ஒன்றை மகனிடம் சிபாரிசு செய்து சின்னக் குழந்தையைப் போல் அடம்பிடித்து ஆன்லைனில் புக்கிங்செய்து வாங்கி வைத்துக் கொண்டாள்.

                இப்போது பிரசர் மீட்டர் மாமியோடு கூடவே இருப்பதால் தினமும் குறைந்தது பத்து முறையேனும் மீட்டரை பொருத்தி பிரசரின் அளவைத் தெரிந்து கொள்வாள். விடியற்காலையில் ஒருமுறை பிறகு மதியத்திற்கு முன்பு சமையலறைப் பணிகளை முடித்துவிடுவதற்கு முன்பே ஞாபகம் பிசகாமல் பிரசரை செக் செய்து  விடுவதும், பிறகு சமையல் முடிந்ததும் சோபாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே டீ.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருப்பாள். டீ.வி சீரியல் பார்த்து முடிந்ததும் ஒரு முறை பிறகு ஒரு குட்டித்தூக்கம்.. தூக்கத்தில் யாராவது போனில் அழைத்து விட்டால் நெஞ்சு படப்படப்பு கூடிவிடும். அப்போது நிச்சயமாக பார்ப்பாள். பிரசர் எகிறியிருக்கும். உடனே விழுந்தடித்து சென்று டாக்டர் கொடுத்த மாத்திரை ஒன்றை எடுத்து மிட்டாய் மாதிரி வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டு பத்து நிமிடம் கழித்து மிண்டும் பிரசர் மீட்டரை பொருத்தி செக் செய்யும் போது அவள் முகம் மலர்ந்திருக்கும். அவள் நினைத்த அளவிலேயே பிரசர் மீட்டர் காண்பிக்கும். பிறகு முழு திருப்தியோடு  அதை மூடி வைத்து விடுவாள்.

                சின்ன வேலை  என வந்தவன்  ரெண்டுநாள் வேலை இழுத்துச் சென்று விடும்போல் இருந்தது. அடுத்து வரும் விடுமுறை நாட்களான ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்ய திட்டமிட்டிருந்தேன்.

                அடுத்த வாரம் தனியே வந்து கேட்டுக்கு வெளியே நின்றேன். அப்போது நாய் குரைப்பைக் கேட்டு கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள் பிரசர் மாமி. வீட்டு நாய் குரைத்துக் கொண்டு கேட்டின் முன்னால் எட்டி எட்டி சாடியது. கேட் கதவு சாத்தியிருந்ததால் நாய் வெளியே வரவில்லை.  பிறகு நிதானமாக அவள் கனத்த உடம்பை கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி  துள்ளிக் குதிக்கும் நாயின் கழுத்து வாரைப்  பிடித்துக் கொண்டாள்.

                “இதுக்கு முன்னால் வரும்போது நாய் இல்லையே”.

                “இதுவா இது எங்கயோ போயிருக்கும். நாய் ஒண்ணும் செய்யாது. இந்த வள்ளு நாய்க்கெல்லாம் பயப்படுவாங்களா. சும்மா வீட்டுக்கு ஒரு அனக்கமா இருக்கட்டுமேன்னுதான். வெளியில போன குட்டிநாய்க்கு ஒருநாள் சோறு வச்சேன். பிறகு அது இங்கேயே ஒட்டிகிட்டு இதுவரை யாரையும் கடிச்சதில்லை” என்று சொல்லிவிட்டு.. ‘நீங்க பயப்படுவீங்கனா சங்கிலில கட்டிப் போடுறேன் ‘ என நாயின் கழுத்தில் கட்டியிருந்த வாரை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு படி கடந்து போகிறவர்கள். கடிக்கவோ தொந்தரவு செய்யவோ இயலாத தூரத்தில் கட்டிப் போட்டாள்.

                பிறகு நான் என்னுடைய ஆசாரி வேலை கருவிகளை சுமந்து உள்ளே கொண்டுச் சென்று  வேலைக்கு தயாரானேன்.

“ஒழுங்கா மாத்திரை சாப்பிடுறீங்களா” என ஆரம்பித்தாள்.. அவளிடம் எதுக்கு உண்மையைச் சொல்லி சங்கடப்பட வைக்கணும் என நினைத்து, “ஆமா நீங்க சொன்னப் பிறகு தினமும் மாத்திரை சாப்பிட்டு வாரேன்” என பொய் சொன்னேன்.

“வேலை செய்யறது இருக்கட்டும் சாமி வாங்க அண்ணைக்குப் பாத்ததவிட பிரசர் கொறஞ்சிருக்கா கூடியிருக்காணு பாப்போம்”. எனக்காக காத்திருந்ததைப் போல் பிரசர் மீட்டர் பேட்சை வலது கையில் முழங்கை அருகே சுற்றினாள். பிறகு பிரசர் மீட்டரின் சுவிட்சை ஆன் செய்தாள். அதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவள் ….

                “ஐயோ எனது இது பிரசர் தாறுமாறா ஏறியிருக்கு நீங்க ஒழுங்கா மத்திரை சாப்பிடலயா அதனாலதான் இப்படி காட்டுது”.

“இன்னா பாருங்க சித்தி, நாய்க்கு பயந்துதான் இதயத்துடிப்பு கூடியிருக்கு. அரைமணிநேரம் கழிச்சி மறுபடியும் பாக்கலாம்” என்றவாறு சன்னல் பாளியை சட்டத்தில் பூட்டி மரவேலை செய்ய ஆரம்பித்தேன். பிறகு நான் வேலையில் ஆழ்ந்துவிட்டேன். 

                “செக் பண்ணலாமா” என கொஞ்சம் தூரத்தில் நின்று அழைத்தாள். எனக்கு அவளின் போக்கு எரிச்சலை உருவாக்கியது. பிரசர் நோயை விடவும் பிரசர் மீட்டர் வைத்து பிரசர் செக் செய்வதே ஒரு நோயாக மாறியிருப்பதை உணர்ந்தவாறு வேண்டா வெறுப்பாக “சரி வாரேன் பாருங்க என பெஞ்சில் அமர்ந்தேன்”. அவள் வழக்கம்போல் பெல்ட்டை இடது கையில் இருக்கி மீட்டரின் சுட்சை ஆன் செய்தான்.

                “பாத்தீங்களா சித்தி இவ்வளவு நேரத்துக்குள்ள எவ்வளவு கொறஞ்சிருக்குன்னு. இத நோய்னு எப்படிச் சொல்றீங்க? இதுக்குப் போய் பத்து வருசமா மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கிறதா வேற சொல்றீங்களே. மனுசனுக்கு பிரசர் கூடி கொறையணும். சீரா இருக்கக் கூடாது. இதுதான் மனுச இயல்பு”

                “மக்கா நீ டாக்டர் மாதிரி பேசுறது தப்பு. படிச்ச டாக்டர்மாரு மக்கள கொல்றதுக்கா நினைப்பானுவ”.

“இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிய கட்டி வச்சுகிட்டு டாக்டர்மாரு சும்மாவா இருப்பானுவ மக்கள பயமுறுத்தி காசு பாக்கிரதுதான் அவங்களோட யுக்திணு உங்களுக்குப் புரியலியா..

                “மக்கா இப்படி பேசுற எனக்கு சுத்தமா பிடிக்கல”. “பிடிக்கலன்னா நான் ஒண்ணும் பண்ண முடியாது சித்தி “எனச் சிரித்துக் கொண்டே வேலையில் முழ்கினேன்.

                பெண்கள் டீ.வி சீரியல்களில் தன்னை இழந்து உருகி கொண்டிருப்பதைப் போல் இளைஞர்கள் தனக்கு விருப்பமான இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வேகமாகப் பயணித்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் போல் நாள் தவறாமல் அவள் பிரசர் மீட்டரிலே பொழுதை செலவழித்தாள்.

                இப்படித்தான் ஒருநாள் பகல் பதினொரு மணிக்கு முன் வரண்டாவில் ஆழ்ந்த யோசனையிலிருந்து விடுபட்டு மூலையில் பிரசர் மீட்டர் இருக்கும் பக்கம் வந்து உட்கார்ந்தாள். மிகவும் ரசனையோடு பம்பு பொருத்திய துணிகளை கையில் சுற்றி பிரசர் மீட்டரை ஆன் செய்தாள்.

                ரசமட்டத்தில் பிரசர் ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே ஏதோ அபாயம் ஒன்று நடப்பதைப் போன்று முகம் இருண்ட உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போதே கணவர் உள்ளே வந்தார்.

                “எப்பப் பார்த்தலும் பிரசர் மீட்டரையே கட்டிக்கிட்டு கிட  எந்த ஒரு வேலைகளையும் செய்யாத” என கோபத்தில் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றவர் அவருக்குத் தேவையான வேலைக் கருவி ஒன்றை எடுத்து விட்டு சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். கணவர் பேச்சை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும் அது அவளை பாதித்திருப்பதை உணர்ந்தாள். முன்பை விட பிரசர் ஏறியிருந்தது. அவளுக்கு பத்து மணிக்கு இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தது.

                மருத்துவர் மற்றும் நடைபயிற்சி தோழிகளின் அறிவுரைப்படி அவள் எதையும் மனதுக்குள் ஏற்றிக் கொள்ளாமல் இயல்பாகத் தான் நடமாடி வந்தாள். அப்படியென்றால் ஆட்கள் நடமாட்டத்திற்கும் ஒரு கை அசைவிற்கும் தும்மலுக்கும் இருமலுக்கும்  கூடவா பிரசர் கூடும்? கணவரின் பேச்சுக்கு எதிர்வினையாக கோபப்படவோ அவரின் முதுகுக்குப் பின்னால் கோப்பட்டு திட்டி தீர்க்கவோ இப்படி  எதுவும் செய்யாமல் எப்படி பிரசர் கூடியது.

                இரவு ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தப்பட்டதை மீறி அவள் பகலிலே ஒரு மாத்திரையை எடுத்து தண்ணீரில்  விழுங்கினாள்.  மருத்துவர் சொன்ன அளவை விட பிரசர் கூடவோ குறையவோ விடக்கூடாது என்பதுதான் அவளுடைய எண்ணம்.

                 இதையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றும் நடக்காதது போலவே பகல் கடந்து இரவு வந்தது. படுக்கையறையில் விடி விளக்கின் வெளிச்சம் பரவி நின்றது. நாய் செல்லமாகக் குரைத்துக் கொண்டே நானிருக்கிறேன் என்று அனக்கம் காட்டியது. இந்த நடு இரவில் பிரசர் மீட்டர் பக்கம் உட்கார்ந்திருப்பது அவளுக்கு அன்னியமாகவேப்பட்டது. அவளுள் ஒரு ஆராய்ச்சியாளர் ஒளிந்துள்ளதை அவள் உணர்ந்திருந்தாள். பகலில் இருக்கும் அளவை விட இரவில் பிரசர் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய பல நாட்கள் நினைத்திருந்தும் இன்றுதான் வாய்ப்பு வந்திருந்தது.

                அவள் அதிர்ச்சியடையும் படி என்ன நடந்தது? ஏன் இரவில் இப்படித்தான் காட்டுமா…?  இது பிரசர் மீட்டரில் ஏதேனும் கோளாராக இருக்கும் என பதட்டமானாள். மறுபடியும் சிறிது இடைவெளிவிட்டு கணக்கிட்டாள்.  அதே அளவில் தான்  பிரசர் மீட்டர் நின்றது. அவள் நெஞ்சு ஏறி இறங்கித் துடிப்பதை அவள் கேட்டாள். மறுபடியும் செக் பண்ணும் போது அளவைத் தாண்டவே இல்லை. இப்படி நடு இரவில் தனியே பிரசர் மீட்டர் செக் செய்வது இயற்கைக்கு விரோதம் போலும் என உணர்ந்தாள். நாளை பகலில்  இதுபோல் பார்த்து தெளிவுபடுத்த வேண்டும் எனக் காத்திருந்தாள். பகல் பொழுதில் பிரசர் மீட்டர் பக்கம் போகவே அச்சமடைந்தாள். பகல் பொழுதில் பிரசர் மீட்டரை பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள். பிறகு பிரசர் மீட்டர் அருகில் சென்று பிரசரை பரிசோதித்தாள் இரவு கண்ட அதே அளவில் பிரசர் காட்டியது .

                அடுத்தநாள் இரவு அதேபோல் நடுக்கதவை சாத்திவட்டு வரண்டாவில் வெளிச்சமிட்டு பிரசர் மீட்டர் அருகில் வந்து கையில் பொருத்து அளவிட்டாள். முந்தைய இரவு மற்றும் பகலைப் போலத்தான் அளவுக் காட்டியது.

                பிறகு என்னைப் போனில் அழைத்தார். இதை டாக்டரிடம் காண்பித்து சரியாக வேலை செய்கிறதா என கொண்டு செல்லப் பணித்தாள். நான் வாங்கி தெரிந்த நர்சிடம் கொடுத்து பரிசோதித்தேன்.                 அவர்  ‘சரியாகத்தான் இருக்கிறதென்றார்’. பிறகு அதை பிரசர் மாமிடம் கொண்டு  ஒப்படைத்தேன்.  அப்போது அவள் அதை வாங்கி பரிசோதித்தார். அப்போதும் அவருக்கு  வழக்கமான அளவு  இருப்பதை விடவும் குறைவாகவே பிரசர் காட்டியது. பிறகு என்னை  உட்கார வைத்து கையில் மாட்டி பரிசோதித்தாள். எனக்கும் பிரசரின் அளவு குறைவாகவே காட்டியது. பிரசரின் அளவு குறைவாக இருப்பதால் பிரசர் குறைவாகக் காட்டுகிறது  இதனால்  ஏன் பதட்டமடைகிறார் எனத் தெரியவில்லை. நோய் குணமாகி வருகிறதென்றால் ஏன் பதட்டமடைகிறாள் எனப் புரியாமலே அங்கிருந்துக் கிளம்பினேன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *