இன்பம்

இன்பம்

  • By Magazine
  • |

– சஜிபிரபு மாறச்சன்

எப்போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, ஆடிப்பாடி விளையாடலாம் என்று தான் நினைக்கிறோம். இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மனவலிமையுடன் நாம் எதிர்கொள்ள பழக வேண்டும்.

முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லாமல் மண்ணில் வாழ்க்கை இல்லை.

இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம் தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலையை இழக்கிறான். துன்பம் வரும் போது அவனுள் விழிப்புணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும், இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாக பாவிக்கும் மனச் சமநிலை தான் மனிதனுக்கு முக்கியம்.

புழு தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச் சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி, அதில் விழுந்து அல்லல் படுகிறோம்.

புழு சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச் சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிப்படுகிறது. நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல், அவற்றை மனத்தின்மையுடன் வரவேற்போம். துன்பங்கள் துளையிடும் போது தான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும் புல்லாங்குழலாகும். ஒருபோதும் துன்பங்களை கண்டு துவண்டு போகாதீர்கள். துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே அது துன்பத்தை விட துயரமானவை. பிறருடைய துன்பங்களை நினைத்துப் பாருங்கள். இப்பழக்கம் நம்முடைய துன்பங்களைச் சகித்து கொள்ளும் முதல் பாடமாகும். நம் கை விட்டு போகும் எதுவும் நம்முடையது இல்லை என்று உணர்ந்தாலே பாதி துன்பம் விலகும். துன்பங்களை கண்டு வேதனைப்படாமல் இன்பங்களை கண்டு களிகூறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *