வர்மம்’எனும் மர்மக்கலை!

வர்மம்’எனும் மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அல்லிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பின்னல்வர்மம் பற்றி அறிவோம்.

பின்னல்வர்மம், நாபியின் நேர் பின்பாக முதுகெலும்பில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்னெல் வர்மம், வாயுக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.

“நானான நாபியின் பின்னே தானே

நலமான பின்னெல்லின் வர்மமாகும்”.

                                                                                                – கால வர்மநூல்

“வாதவீடாம் நாபி கூர்மத்தின் பின்

மருவி நிற்கும் பின்னல்வர்மம்”.

                                                                                                  – வர்ம குருநூல்

மேலும்,

“தாது வழங்காது மலசலக் கட்டாகும்

சந்தயரும் இரு காலின் நடைபோம் நாடி

சூதும் வாதும் போலே பிணங்கிக்கொள்ளும்

சுண்டுமே அபானம் பிடரிக்குள்ளே

மோதி விஷந்தாவிவிடுகில் வருத்தமாகும்

மொழி குளறில் சாதிக்க முடியாதென்றோ”.

                                                                                                  – வர்ம குருநூல்

“சாதிக்கும் இந்தவர்மம் சட்டெனவே மாறுதற்கு

                                கையிதம் செய் எதிர் கீழ்சுழி வாரிகோரியனுக்கி

பாதிக்கும் மேலான பரிதிபோல் வுள்ளுறும் பதிதலமாம்

                                மணியடங்கல் சென்னி செவிக்குற்றி வினையற

சோதிக்கும் தலமெல்லாம் தடவித் தட்டிப்போடத்

                                தண்ணீர் வட்டதாமரை போல் கண்ணீரை மாற்றும்

வேதிக்கும் வினைபோற்றும் மருந்துவகை விதவிதமாய்

                                செய்துவிட விதிகள் போமே”.

                                                                                                                வர்ம குருநூல்

“நானான நாபிக்கூர்மத்தின் பின்னே

நலமான பின்னெல்லின் வர்மமாகும்

தானான வர்மமது கொண்டதானால் மலமுடன்

சலமும் கட்டும் சந்துகால் விளங்காதாகும்

கோனான பிடரிமூலம் கடுப்புடன் தெறிப்பதாகும்

கால்குளறி நடக்கொட்டா சதியாகும்

மானான மாறலுடனமட்டல் செய்து வாக்கான

மாத்திரை அறிந்துடனவுசதம் பாரே”.

                                                                                                வர்ம காலநூல்

எனவும், மேலும்

 பின்னெல் எனப்பலவாம் பின்எல் அஃது

பின்னெல் ஒன்றுள்ளெல்லாம் மீந்துறப்

பின்னல் அடைதலான் நாடி ஒருங்குற

பின்னல் வன்மமஃது நாபியின் பின்னே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பின் எல் என்பது பலவாகும். அவைகளுள் பின் எல் என்ற ஒன்றும், உள் எல் என்ற ஒன்றும் போக நாடிகள் ஒருங்கிணைந்து பின்னல் அடைவதால் பின்னெல் வன்மம் என்றாயிற்று. அது நாபியின் பின்பக்கம் அமைந்துள்ளதாகும்.

                பின்னலுறும் வன்மம் கொண்டிடிலோ மிஞ்சி

பின்னலுறும் நடையுமுடல் தள்ளாடுமகமுற்றுத்

குன்னலுறும் மலம் கட்டித்தாதுவும் பலம்குன்றி

துன்னலுறும் நாடியதிலுள்ளுற சுண்டுறுமாமே.

                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                நாடிகள் பின்னலுறுவதால் உண்டாகும் பின்னல் வர்மம் மாத்திரை மிஞ்சிக்கொண்டால் நடை பின்னி உடலும் தள்ளாட்டமாகும். உடலும் அகம்நோக்கி குன்னலடையும். மலம் கட்டி தாதுபலம் குறைவடையும். நாடிகளில் தாக்கம் கொள்வதால் உடல் முழுவதும்  அகம் பற்றி மின்னல் போன்று நாடிகள் சுண்டி சுண்டி இழுக்கும் என்பதாம்.

பின்னலது கொண்டிடிலின்னுங் கேளுள்ளுற

மன்னவனே யானாலும் மலைத்து பல பிணிகள்

கன்னலென கடமதிலே பின்னலுறுமச்சம் பேதம்

துன்னலுறுந் துணுக்குமுடல் குடக்குமுறுமாமே.                               

வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பின்னல் வர்மங்கொண்டால் மன்னவனே வலிமை ஆனாலும் பல பிணிகள் உடலில் ஆச்சரியப்படுமளவிற்கு உண்டாகும். கரும்பின் சுவை போன்று உடலில் அச்சமும், பேதமையையும் தொற்றிக்கொள்ளும். உடல் மெலிவடைந்து சுறுசுறுப்பும் போய் பலவிதமான குடக்கம் எனும் எளிதில் உணரமுடியாத பிணிகள் உண்டாகும் என்பதாம்.

  தண்டிலுறும் பின்னலது தீரப் பெருமருந்து பேணி

கொண்டிடிலோ மறித்தண்டு மூளையுடன் காலும்

அண்டிவரும் அருமருந்து சற்பங்கு காலிக்காதல்

தொண்டிவரும் குறுந்தட்டிக் கூவிளத்தின் வேரே.

                                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                முதுகுத்தண்டில் உள்ள பின்னல் வர்மத்தில் கொண்ட காயங்கள் தீர, ஆட்டு முதுகெலும்பு, மூளை, கால் இவைகளுடன் சற்பங்குகாதல், கருங்காலிகாதல், குறுந்தட்டி, கூவிளவேர் இவைகளை சேர்ப்பாயாக.

  சேர்த்துறவாய் சீந்தில் நல்நன்னாரி மாவிலங்கு

கூர்ந்துறவாய் சிவன்மூலிவேம்பும் நல்லரிபத்தியும்

சார்ந்துலவும் அரிவல்லி அத்திநெருஞ்சிலும் சங்கு

நேர்ந்துலவும் ஆவாரை அரியதுவுமாறே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மேற்படி மருந்துகளுடன் சீந்தில், சிறுநன்னாரி, கெருடக்கொடி, வேம்பின்பட்டை, ஆடாதோடை இலை, தூதுவளை, நெருஞ்சில், இசங்கு, ஆவாரை, அரிசிவகை ஆறு இவற்றையும் சேர்க்க.

  ஆறெனும் மருந்துடன் அறியயின்னும் சேர்க்க

சீறெனும் சிவன்வேம்பு சிறுநெருஞ்சில்சிவகரந்தை

ஊறெனும் திறிகடுகு கோமம் மோதமுச்சீரகமும்

காறெனும் கண்டதிற்பிலித் தக்கோலம் சிறுதேக்கே.

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                அரிசிவகை ஆறு என்னும் மருந்துடன் அறியவே இன்னும் சேர்க்கின்ற மருந்தினைக் கேட்கில் சிவன்வேம்பு, சிறுநெருஞ்சில், சிவகரந்தை, திறிகடுகு, ஓமம், மோதம், மூச்சீரகம், கண்டத்திற்பிலி, தக்கோலம், சிறுதேக்குமாகும்.

  தேக்கடா மரமஞ்சள் கோட்டம் நல்வயம்பு வான்மிளகு

போக்கடா வாலுளுவை மரமஞ்சளிலுப்பைக்காதல் குப்பை

குக்கிலதிமதுரம் கூறுமமுக்கூரம் முப்பலையும் கூட்டி

வாங்கடா வகை சமனதாகவே ஒன்றுற.

                                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                சிறுதேக்கு எனும் மருந்துடன் மரமஞ்சள், கோட்டம், வயம்பு, வால்மிளகு, வாலுளுவை, மரமஞ்சள், இலுப்பைக்காதல், சதக்குப்பை, குக்கில், மதுரம், அமுக்கூரம், திறிபலைத் தோடும் வகை வகைக்கு சமமாகவாகும்.

ஒன்றுறவாகவே சேர் அரைப்பாகமாம் முச்சாதம்

நன்றுறவாகவே சேர் கொம்பரக்கு கற்கடகசிங்கி

என்றுறவாகவே சேர் மீறைத் தாளிசப்பத்திரியுமே

வென்றுறும் மாயம் வலம்புரி வகையுமாகவே.

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்    

மேற்கண்ட மருந்துகளோடு ஒன்றாக சேர்க்க அரைபாகமாக திறிஜாதி, கொம்பரக்கு, பறங்கிபட்டை, கற்கடகசிங்கி, மீறை, தாளிசபத்திரி, வலம்புரி மாயக்காயே.பாகமாகவே பட்டை யக்கறாக் கசகசாவும்

வாகமாகவே வாங்குபங்கயம் பலதுமதுவும்

தாகமாகவே தணலதில் புனலெட்டு விட்டு

வேகமாகவே வெந்துறும் ஒன்றிலே எடு.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மேற்படி மருந்துடன் பாகமாக சேர்க்கும் மருந்து கறுவாப்பட்டை, அக்கறா, கசகசா, தாமரை அல்லி வளையம் தண்டு என பலதும் சேர்த்து எட்டு மடங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு பங்காகக் காய்த்து எடுக்க வேண்டும் என்பதாம்.

  கொடுத்திடு காலை மாலை கணக்குறு முழக்கதாகவே

தொடுத்திடு அரிப்பொடித் தேனில் அளவுடனாகவே

தடுத்திடு புளிபுகையும் புணர்ச்சியஃத்துடன் போதையும்

விடுத்திடு பெருவகை சடலமும் பேணியே நின்றிடே.

                                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                எடுத்த மருந்ததை தினம் காலை, மாலை உழக்காகக் கொடுக்க வேண்டும். கொடுக்கும்போது அரிசி வறுத்த மாவினையும் தொடுத்து தேனில் கொடுக்கவும். தொடர்ந்து புளி, புகை, புணர்ச்சி, போதை மற்றும் மாமிசங்களையும் உண்ணாமல் பத்தியத்தைப் பேணிக்காத்து வரவும்.

 பேணியே நின்றுறில் பெற்றிடும் பேறுகேள்

நாணியே ஓடிடில் நால்வகைப் பிணிகளும்

கோணியே குலைந்துறும் நாடிகள் தெற்றலும்

தோணியேத் துலைத்திடும் தொல்பலபிணியுமே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இந்த வர்மதானத்தை முறைப்படி அறிந்து தடவல், தட்டல், தூண்டல் போன்ற முறைகளைக் கையாண்டு கையிதங்கள் செய்துவந்தால் நான்குவகையாகத் தோன்றும் பிணிகளும், நாடிகளில் ஏற்படும் குற்றங்களும் தொலைந்து போய்விடும் என்பதாம்.

 உற்றதோர் உள்வலி உறப்புறும் தண்டகம்

பெற்றதோர் வன்மமும் வாடுதல் அயர்தல்

மற்றதோர் வலிகளும் வீக்கமும் நரம்புறுநடுக்கம்

அற்றதோர் பிணியென ஆயிரம் போக்குமே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்                                                 

விளக்கம்

                உடலுக்குள் தோன்றும் வலிகள் நீங்கி முதுகெலும்பும் வலிமைபெறும். உடலில் கொண்ட வர்மங்கள் அவற்றால் உண்டான உடல் மெலிதல், அயர்வு மாறும். மேலும் உடல் வலிகள், வீக்கங்கள், நரம்புநோய்களால் வரும் நடுக்கம் போன்ற ஆயிரம் பிணிகளை போக்கும் என்பதாம்.

                போக்குறும் வன்மம் பின்னலைப் பேணியேத் தொட்டுறில்

நீக்குறும் தளர்ச்சையும் நினைவு குன்றலும் நேரிய சிக்கலும்

தாக்குறும் வன்மமமும் தளர்வுறும் குறியதும் வளர்வுறும்

நோக்குறும் மயக்கமும் நிறைவுறுமச்சமும் எனலே.

                                                                                                      – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பின்னல் வர்மத்தை நன்கு அறிந்து தூண்டி வந்தால் உடலின் தளர்ச்சை, ஞாபகமறதி, மலச்சிக்கல், வர்ம தாக்கங்களால் உண்டாகும் தளர்ச்சை, ஆண்குறி தளர்வு, மயக்க உணர்வு, அடிக்கடி தோன்றும் அச்ச உணர்வும் மாறும் என்பதாம்.

 பின்னல்வன்மம் கொண்டுறுலாங்குடன் மருந்து

தன்னலமின்றிக் செய்யுறத் தவறிடிலுற்றறும் வாதம்

வன்னலமின்றிப் பின்னுறும் கால்கள் வளர்ந்துறும்

அன்னக்குறைவும் அச்சமுமாகி தன்னைமெச்சுமே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பின்னல்வர்மம் தாக்கம் கொண்டால் உடனே சரியான மருந்து பரிகாரம் செய்யவில்லை என்றால் பின்னாட்களில் வாதமுண்டாகும். கால்களில் வலிமை குறைந்து நடக்கும்போது பின்னல் உண்டாகும். உணவு உண்ணும் அளவு குறையும். மனதில் அச்சம் தோன்றி எப்போதும் தன்னையே மெச்சிப்பேசும்.

                நாடிகள் தடைந்துமே நன்னலம் குன்றுறும்

                வாடியே மின்னியும் வளப்பம் குறைந்துறும்

                கோடிகள் தோறும் குத்துடனுழைச்சலுமாகும்

                தேடியே மருந்து செய்திடில் தெளிவுறுமாமே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

பின்னல் வர்மம் கொண்டால் ஆற்றல் இயங்கும் நாடிகளில் தடைகள் தோன்றி உடலின் நலம் குன்றிவிடும். முகம் வாடி அதன் வளமைக் குறைந்துவிடும். மூட்டுகளில் குத்துழைச்சல் உண்டாகும். எனினும் சரியான மருந்து வகை அறிந்து பரிகாரம் செய்திடில் எல்லா குற்றங்களும் மாறி தெளிவடையும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தில் தாக்கம் கொள்ளும்போது, காலின் உள்பொருத்துப் பகுதியில் களைப்பு உண்டாகி கால்கள் நடக்க முடியாவண்ணம் தளர்ச்சையாகும். மட்டுமன்றி, கால்கள் ஒன்றையொன்று பின்னிக்கொள்ளும். மலம், மூத்திரம் தடைபடுவதுடன் அபான நிலையிலும், பிடரிச்சுழியிலும் காய விஷமேறி குத்துவலி உண்டாகும் அல்லது விட்டிலைப் போல் விட்டுவிட்டுத் தெறிக்கும். இங்ஙனம் தோன்றில் சத்தமடைத்து வார்த்தைகள் தடுமாறி அசாத்தியமாகும். இவையனைத்தும் தாக்கம் கொள்ளும் மாத்திரையை பொறுத்து அமையும். மேற்கண்ட குறிகுணங்களுடன் நெஞ்சுவலி, இருமல் சுமையுடன் சிறிதே கபம், படபடப்பு, தாகம் உண்டாகும்.

இவ்வர்மம் கொண்டு பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரை மெல்ல தூக்கி, பாதிப்பின் தன்மைகளை அறிந்து எதிர்புறம் தட்டி, வர்மாணி தடவுமுறைப்படி தடவல் முறைகளை செய்து, அடங்கல்களை தூண்டி, பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி துணியால் கட்டிட்டு மருந்து எண்ணெயூற்றி, சிறந்த அகமருந்துகளும் செய்துவர, எல்லா குறிகுணங்களும் மாறி எளிதில் சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் மலச்சிக்கல், அரைகீழ்வாதம், காரணமற்ற வயிற்றுவலி, வயிற்றுநோய், ஆண்மைக்குறைவு, தான் நினைப்பது போல் தன்னை எண்ணிக்கொள்ளும் பிரமை, அச்ச உணர்வு, மெச்சிப்பேசுதல் போன்ற பல பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல், கை முட்டு, உள்ளங்கை, கால்முட்டு, புறங்கால், பாதம் போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டிவர, ஆண்மைக்குறைவு, ஞாபகசக்தி, மலச்சிக்கல், மூத்திரநோய்கள், வயிற்றுநோய்கள், உடல் கொழுத்து, தசை நோய்கள், நாடி குற்றங்கள், கை கால் தளர்ச்சை, பார்வைக்குறைவு, மலச்சிக்கல், மனக்குழப்பம், கழுத்துவலி போன்ற பல நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *