தற்காப்புகலை ஆசான் ஹாரிஸ்

தற்காப்புகலை ஆசான் ஹாரிஸ்

  • By Magazine
  • |

காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்றேன்

எனது தற்காப்பு கலை நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத சம்பவம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த திரு. ஹாரிஸ் ஆசான்

புதிய தென்றலுக்காக குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு , பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

அப்போது நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் …

தாங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டது எப்படி? 

எனது பெயர் ஹாரிஸ் ஆகும். வயது 60 ஆகிறது. ஒரு காலத்தில் எங்கள் பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஆகவே தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதற்காக எனது பதினெட்டாவது வயதில் என்னை எங்களது பகுதியில் வசித்து வந்த திரு. கொச்சுமணி ஆசான் என்பவரிடம் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுத்து எனது பெற்றோர் சேர்த்து விட்டனர்.

நான் அவரிடம் குரு வணக்கம்… ஒற்றைச் சுவடு, நடசாரி, ராட்டியம் மராட்டியம்,  சைலாத் , முதுகுசாரி, அலங்கார வீச்சு, கம்பு அடிமுறை, சிரமம்,  மறவனடி, குறுந்தடிமுறை போன்ற அடிமுறைகளை கற்றுக் கொண்டேன்.

தற்போது கொச்சுமணி ஆசான் அவர்களின் மகன் வழி மற்றும் மகள் வழி பேரன்கள் அருண், பபின்லீ இருவரும் தனது தாத்தாவின் அடிமுறை, களரி தற்காப்பு கலைகளை என்னிடம் கற்று வருகின்றனர் என்பது சிறப்பம்சமாகும்.

வேறு என்னென்ன கலைகளை கற்றுக் கொண்டுள்ளீர்கள்?

வேதக்கண் ஆசான்  என்பவரிடம் குறத்தி களி என்ற நாடக கலையை கற்றுக் கொண்டேன், மேலும் உறியடி என்ற கலையையும் கற்றுக் கண்டேன்.

தங்களது தனித்திறமைகளை சொல்லுங்கள்?

இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி வெகுநேரம் நடக்கும் திறமை எனக்கு உண்டு. இதனை உறியடி கலையுடன் சேர்த்து விளையாடி புகழ்பெற்றேன்.

மேலும் தற்காப்புகலை நிகழ்ச்சிகளின் போது தீப்பந்த வளையத்திற்குள் குதிப்பேன். எங்கள் தற்காப்பு கல குழுவினருடன் பல ஊர்களில் பொது நிகழ்ச்சிகளில் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன்.

தற்காப்புகலை நிகழ்ச்சிகளின்போது மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா?

ஒருமுறை மார்த்தாண்டம் அருகே தலவிளை என்ற இடத்தில் நடந்த தற்காப்புகலை  நிகழ்ச்சியின் போது எனது சாகசத்தை மற்றும் தற்காப்பு கலை திறமையை பார்த்து வியந்த காவல்துறை அதிகாரி ரூபாய் 500 பரிசாக வழங்கினார். அது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

தாங்கள் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை தங்களது வாழ்வில் உதவியுள்ளதா?

ஆம், ஒரு முறை ஊர் பிரச்சனையின் போது பலர்  மறைந்து இருந்து திடீரென என்மீது தாக்குதல் நடத்தினார்கள். நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலையின் மூலம் அவர்களை திறமையாக சமாளித்து உயிர் தப்பினேன். இதுவும் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியாகும்.

அன்றைய தற்காப்பு கலைக்கும் இன்றைய தற்காப்பு கலைக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் தென்படுகிறதா?

ஆம், அந்த காலகட்டத்தில் தற்காப்பு பயிற்சி என்பது தற்காப்பை முன்னிலைப்படுத்தி மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் இன்று அதனை விளையாட்டு கலையாக மாற்றி பயிற்சி அளிக்கிறார்கள்.

மேலும் இன்றைய காலத்தில் தற்காப்பு கலை பயிற்சிகள் பணத்துக்காக என்பது போல் ஆகிவிட்டது தரமான பயிற்சியை மக்களும் விரும்பவில்லை.

நாட்டுப்புற தற்காப்பு கலைகளின் வளர்ச்சி பற்றி தங்களது கருத்து என்ன?

 நமது பாரம்பரிய தற்காப்பு  கலைகள் ஒரு புறம் வளர்வது போல் தோன்றி வந்தாலும் மறுபுறம் மறைமுகமாக அழிந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சிலம்பம்/களரி மற்றும் நாட்டுப்புற தற்காப்பு கலைகளை முறைப்படுத்தி மேம்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பரியமான நாட்டுப்புற தற்காப்பு கலைகள் மேலும் வளர்ச்சி அடையும்.

தாங்கள் இதை கற்றுக் கொடுத்து வருகிறீர்களா?

என்னிடம் பல மாணவ மாணவிகள் இந்த கலையை கற்றுள்ளனர் தற்போதும் பலர் கற்றுக் கொண்டிருக்கின்றனர். நல்ல மாணவ மாணவிகள் அமைந்தால் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

தற்காப்பு கலை பயணத்தில் உங்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

இந்திய ராணுவத்தில் பணி பரிந்து வரும் எனது மகன்கள் டார்வின், ராஜன், ராஜு, மற்றும் எனது மனைவி பாய் ஆகியோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.  அதனால் தொடர்ந்து என்னால் தற்காப்புகலை பாதையில் பயணம் செய்ய முடிகிறது என்றார் அவர்.

 அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.                

பேட்டி கண்டவர்

ஜி. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்,

உதவி : திரு.R.அஜோய்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *