கவிக்கொண்டல் செங்குட்டுவன்

கவிக்கொண்டல் செங்குட்டுவன்

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

1957-ஆம் ஆண்டு, சென்னைக் கடற்கரையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தினை நடத்தியது தி.மு.க. அண்ணா அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையைத் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார், கட்சி ஏடான ‘நம்நாடு” பத்திரிகையாளர். அதற்கு முன்பான கூட்டங்கள் வரை கையால் குறிப்பு எடுத்தவர், அந்தக் கூட்டத்துக்கு அப்போது தான் அறிமுகமாகி இருந்த ‘ டேப் ரெக்கார்டர்” பதிவுக் கருவியைப் பயன்படுத்தினார்.

ஆனால், அண்ணாவின் பேச்சு பதிவாகவில்லை. கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பத்திரிகைக்கு அண்ணாவின் உரையைத் தயார் செய்ய வேண்டிய நிலையில், ‘ கவலைப்படாதீர்கள் அண்ணா, நான் நினைவிலிருந்தே எழுதுகிறேன்” எனஉறுதி கூறி, அண்ணாவின் பேச்சை அப்படியே எழுதிக் காட்டினார் அவர். அண்ணா வியந்து பாராட்டிய அந்தப் பத்திரிக்கையாளர் மா.செங்குட்டுவன். ‘கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்” என்றால், கட்சியினரும் கலை, இலக்கியத் துறையினரும் அறிவர். அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உயிர்த்தோழனாக, கட்சிக் கொள்கையில் ஊறி நின்ற உடன்பிறப்பு.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருத்தங்கூர்  என்கிற கிராமத்தில், 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் மாணிக்கனார் விருதாம்பாள், பெரியார், அண்ணா ஆகியோரின் சொற்பொழிவுகளைக் கேட்டு, தனது இளம் வயதிலேயே பகுத்தறிவு கொண்டு, சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் செங்குட்டுவன்.

நீதிக்கட்சி மாநாடு

1940-ஆம் ஆண்டு மன்னார் குடியில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுக்கு, அவரது ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மாநாட்டில் பெரியாரையும் நீதிக்கட்சித் தலைவர்களையும் முதன் முதலாக நேரில் பார்த்தவுடன், அந்தக் கூட்டத்தின் வாயிலாக அரசியல் எழுச்சி பெற்று, தொடர்ச்சியாகப் பெரியாரின் உரைகளைத் தேடிச் செல்லத் தொடங்கினார்.

அன்றைக்கு மன்னார் குடிநகரம் திராவிட இயக்க அரசியல் எழுச்சி கொண்ட நகரமாக இருந்தது. பட்டுக்கோட்டை அழகிரி, மன்னை நாராயணசாமி, எம்.ஆர்.இராதா, நாவலர், சி.பி.சிற்றரசு எனப் பலரும் இவர் படித்த பள்ளி விடுதிக்கு அரசியல் வகுப்பெடுக்க வந்துள்ளனர். பதினோராம் வகுப்பு படித்த போது, பள்ளியில் மாணவர்களைத் திரட்டி ‘ திராவிட மாணவர் கழகம்” உருவாக்கி, அதன் செயலாளராக இருந்தார்.

1947-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைத், ‘துக்கநாள்” எனப் பொரியார் போராட்டம் அறிவித்த போது, இவரும் சில நண்பர்களும் சுதந்திரதின அணிவகுப்பில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தலைமை ஆசிரியர் அழைத்து,‘ உங்க ஈ.வெ.ரா. கருத்துகளைப் பள்ளிகூடத்தில் வந்து காட்டாதீங்க” எனப் பிரம்படித் தண்டனையுடன், பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து திருவாரூர் வந்து மீண்டும் பதினோராம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளார். அப்படி வந்த இடத்தில் கலைஞர், கலைஞரின் நண்பர் தென்னவன் எனப் புதிய நண்பர்கள் வட்டம் அரசியல் ஆர்வத்தை மேலும் தீவிரமாக்கியது.

1949-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மாவூர் என்பவர் வீட்டில் பெரியார் நடத்திய 10 நாள்கள் மாணவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, சமூகநீதி அரசியலை ஆழமாகக் கற்றார்.

பத்திரிகைப் பணிகள்

பள்ளிப்படிப்புக்குப் பின் வேலை தேடிச் சென்னை வந்தவர், கட்சி தொடங்கப்படுவதற்கு   ஒருவாரத்துக்கு முன்பு, கட்சியின் ஏடாக அண்ணா தொடங்கிய ‘மாலைமணி”யில் செப்டம்பர்; 15 அன்று பணிக்குச் சேர்ந்தார். அவர் பணிக்குச் சேர்ந்த அடுத்த இரண்டு நாள்களில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அந்தத் தொடக்கநாள் கூட்டத்துக்கு முதலில் வந்து கூட்ட அறிக்கையில் கையெழுத்திட்ட 15 பேரில் செங்குட்டுவனும் ஒருவர். உறுப்பினரான, முதல் ஐவரில் ஒருவர்.

பொருளாதார நெருக்கடியில் பத்திரிகை ஓராண்டு காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், 1952-ஆம் ஆண்டில், மயிலாடுதுறையில் கட்சியின் முன்னோடி கிட்டப்பாவுடன் இணைந்து, கருணானந்தம் ஆலோசனையுடன்  ‘ எழுச்சி” என்ற இதழைத் தொடங்கினார். ஆசிரியர் செங்குட்டுவன், துணை ஆசிரியர் கிட்டப்பா என்கிற பெயருடன் வெளிவந்த இதழ் பெரும் வரவேற்பினைப் பெற்றது. அந்த இதழை அச்சடித்த அச்சகத்தின் உரிமையாளர் காங்கிரசுக்காரர். சில இதழ்களுக்குப் பின், இதழின் கருத்துகளுக்குப் பயந்து அச்சடித்துத் தருவதை நிறுத்தினார். பின்னர், அங்கிருந்து சென்னை வந்தவர், ‘விடுதலை” இதழில் பணிக்குச் சேர்ந்தார்.

அப்போது, தி.மு.க .கழகத்தைப் பெரியார் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலம். ஆனாலும், தி.மு.கவைச் சேர்ந்த செங்குட்டுவன் ‘விடுதலை”யில் வேலை செய்வதற்குப் பெரியார் எந்த எதிர்ப்பினையும் சொல்லவில்லை. ‘சுவரெழுத்து”சுப்பையா இது தொடர்பாக, பெரியாரிடம் ‘விடுதலை அலுவலகத்தில் ஒரு கண்ணீர்த்துளி இருக்கிறானே” எனக்கூறி இருக்கிறார். அதற்குப் பெரியார் ‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போ” எனக் கூறியதுடன், செங்குட்டுவனுக்கு யாரும் இடையூறு அளிக்கக் கூடாது என்று கண்டித்தும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.கவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டித் திராவிடர் கழகத் தோழர்கள் நெருக்கடி அளித்த போது, அந்தப் பணியில் இருந்து விலகியதுடன், 1957-ஆம் ஆண்டில் கட்சியின் ஏடான ‘நம்நாடு” ஏட்டில் பணிக்குச் சேர்ந்தார். 1972-ஆம் ஆண்டு கட்சி ஏடாகக் ‘கழகக் குரல்” தொடங்கிய போதும் அவர் தான் பொறுப்பாசிரியர்.

கவிக்கொண்டல்

கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கொள்கைப் பற்றுடன் அவர் பத்திரிகையாளராகவே தொடர விரும்பினார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக்குவதாகக் கூறி, அழைப்பு விடுத்த போது அதை வேண்டாமென்று மறுத்தவர். தொடர்ச்சியாக ‘மாலைமணி” தமிழின் ஓசை எனப் பத்திரிகைப் பணிகளின் ஊடே 1979-ஆம் ஆண்டில் இவர் தொடங்கிய ‘கவிக்கொண்டல்” இதழ், அவருக்குப் பிற்காலத்திய அடையாளமாக உருவானது.

இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு, மலேசியா-கோலாலம்பூரில் நடைபெற்ற 6-வது உலகத்தமிழ் மாநாடு ஆகியவற்றில் பெரும் பங்காற்றியவர் செங்குட்டுவன். 1955-ஆம் ஆண்டில் விடுதலையில் முதன்முதலாகப் பெரியார் பிறந்தநாள் சிறப்புமலர் தயாரிப்பு தொடங்கி, கழகத்தின் பலமலர் தொகுப்புகள் இவரது பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு, ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர் செங்குட்டுவன்.

அபேட்சகர்-வேட்பாளர், நகர்மன்றம் -நகராட்சி, அக்கிராசனர்- அவைத் தலைவர் எனப் பிறமொழிச் சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களின் புழக்கத்துக்குச் செங்குட்டுவன் பெரும் பங்காற்றியவர். தொடர்ச்சியாகத் தமிழிலக்கிய ஈடுபாட்டுடன், திராவிட அரசியலை இளைஞர்களுக்குக் கடத்திவந்த இவருக்கு 2018-ஆம் ஆண்டு பேராசிரியர் விருது அளித்து பெருமை சேர்த்தது கழகம். அந்தப் பெருமையுடன் அடுத்த இரண்டு மாதங்களில் வயது மூப்பு காரணமாகத் தனது 91 ஆவது வயதில் இயற்கை எய்தினார். திராவிடச் சிந்தனையிலேயே வாழ்நாளெல்லாம் திளைத்திருந்த கவிஞர் -எழுத்தாளர்-பத்திரிக்கையாளர். அவரது எழுத்துகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *