A. தர்மராஜ் (த.ராசு)
கல்வித்தகுதியும் வேலைவாய்ப்பும்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு விடுவதற்கு அரசாணை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தங்கள் சக்கர நாற்காலியுடன் சுலபமாக ஏறி இறங்க தேவைப்படும் ரூட் பஸ்களில் தனிவாசல் அமைக்கப்படுகிறது. மாவட்ட நூலகங்களில் மாற்று திறனாளிகள் படிப்பதற்கு வசதியாக தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் பார்வைத்திறன் குறைவுடையவர்கள் இருப்பார்களானால், அவர்கள் படிப்பதற்கு வசதியாக அவர்களுக்காக எழுத்துக்களைப் பெரிதாக்கிக் காட்ட உதவும். கருவியை தமிழக அரசு வழங்கிட ஏற்பாடு உள்ளது. இக்கருவியைக் கொண்டு கணினி, மடிக்கணினி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பொருத்தி படிக்க வேண்டிய எழுத்துக்களைப் பெரிதாக்கி எளிதாக படிக்க இயலும்.
அனைத்து வகையான ஊனமுற்றோருக்கும் மாநிலம் முழுவதும் ரயில் கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. அதுபோல நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் உச்சவரம்பு இல்லாமல் பயணம் செய்வதற்கு அரசு சலுகை உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 மற்றும் மனநலப் பாதிக்கப்பட்டோர், மூளைவளர்ச்சி குன்றியோர், பன்முக உடல் குறைபாடுகளுக்கான (மல்டிப்பிள் டிசெபிலிட்டீஸ்) தேசிய அறக்கட்டளை சட்டம் 1999) ஆகியவற்றின் கீழ் வரும் உடல் குறைபாடுள்ளவர்களைப் பணியில் தொடர்ந்து வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அவர்கள் அந்த தொழிலாளர்களுக்காக செலுத்த வேண்டியிருக்கும். வைப்புநிதி தொகையினை மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்து சலுகை அளிக்கப்படும்.
இது தொடர்பான விபரங்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியில் உள்ள நிறுவனங்கள் இதன் மூலம் பயன்பெற முடியும்.
மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு எழுதும் போது மற்றவர்களை விட அதிகமாக ஒருமணி நேரம் வழங்கப்படலாம் என்று உள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி முதலான மாவட்டங்களில் உள்ளன. இந்த மையங்களில் இந்தக் குழந்தைகளுக்கு சிறப்பு நிபுணர்களைக் கொண்டு தீவிர பயிற்சி வழங்கப்படுகிறது.

பார்வையற்ற குழந்தைகளை பயிற்சி மையத்திற்கு அழைத்து வரவும் திரும்ப அழைத்துச் செல்லவும் அந்த பாதுகாவலர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40 வழங்கப்படுகிறது.
இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்விபயிலும் மாணவ மாணவியருக்கும், பணிபுரியும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிட திட்டம் உள்ளது. காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகள் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை அவ்வப்போது அரசே திருப்பி செலுத்தி விடுகிறது.
இதேபோல். தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்களையும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் அரசு அமைத்து பராமரித்து வருகிறது.
காதுகேளாதவராய், கண் தெரியாதவராய், வாய் பேச முடியாதவராய், கை கால்களை பயன்படுத்த முடியாதவராய், மனநோயாளியாய் இருப்பவர்களையெல்லாம் ஊனமுற்றோர் என்று அழைப்பதற்கு பதிலாக, அவர்களின் ஒரு உடல் உறுப்பு செயல்பாட்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் மற்றைய உறுப்புகள் மேலும் சிறப்படைகிறது என்கிற அடிப்படையில் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கின்ற முறை 2007- ஆம் ஆண்டில் ஐ.நா.சபையில் விவாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலே இனி அவர்களை ஊனமுற்றோர் என்று அழைக்காமல் மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என முடிவெடுத்து 2010-11 நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி பார்வையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
27.03.2010 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் இணைப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மூன்றாம் பாலினத்தவரும் மாற்றுத்திறனாளிகளும்
இன்றைய மனித அறிவியலுக்கு புலப்படாத அளவில் பல்லாயிர ஆண்டுகளுக்கோ அல்லது பலகோடி ஆண்டுகளுக்கோ முந்தி நிகழ்ந்திருக்கக் கூடிய ஆண் பெண் மனித இனத்தின் படைப்புக் காலத்திலேயே மூன்றாம் பாலினமாக, அதாவது ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமர் அரவாணி என்று சொல்லப்படும் மூன்றாம் பாலினத்தவராய் ஒரு வித்தியாசமானதும் விநோதமானதுமான படைப்பு எப்போதேனும் மிக அபூர்வமானதாய் ஒரு பெண்ணானவள் ஆணின் மூலம் தாய்மையடையும் போது நிகழ்ந்து விடுவதாகிறது. அந்தக் குழந்தை பிறந்ததுமே அது ஆணுமல்ல, பெண்ணுமல்ல மூன்றாம் பாலினம் என்று சொல்லக் கூடிய அரவாணிக் குழந்தை என்பதை பெற்றெடுத்த, தாயானவள் உடனடியாக தெரிந்து கொள்ளும்படியாக அக்குழந்தையின் பாலுறுப்பு அமைந்திருக்கலாம்.
அப்படி இல்லாமல் அது பிறந்து சில நாட்கள் கழிந்த பிறகே பாலுறுப்பின் ஓரளவிலான வளர்ச்சியின் தோற்றத்தைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிற நிலை ஏற்படுகிறது.
குழந்தை பெற்றெடுக்கிற எந்த ஒரு தாயும் அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்- இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறாள், ஆசைப்படுகிறாள். நடைமுறை வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்கிற பெண்களில் அனைவருமே அப்படி தான் எதிர்பார்க்கின்றனர். மிகமிகப் பெரும்பான்மையான பெண்களுக்கு அப்படித்தான். அதாவது ஆண் அல்லது பெண் குழந்தை தான் பிறக்கின்றது. மிக மிக அபூர்வமான ஒரு சில தாய்மார்களே அவர்களே கூட எதிர்பாராத படி இவ்வாறு அரவாணிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள நேர்ந்து விடுகிறது. இதை அவமானத்துகுரிய ஒரு பெற்றெடுத்தலாக அந்த தாயும் அவளது வீட்டாரும் எண்ணுகிற நிலையில் அதனை வளர்த்து ஆளாக்குகிற பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிற நிலைக்கு நடைமுறை சமூக வாழ்க்கையாலேயே தள்ளி விடப்படுகிறாள். நடைமுறை வாழ்க்கையில் எந்த ஒரு தெருவிலும், ஊரிலும், நகரத்திலும் அடுத்தடுத்த வீடுகளில் என்று பார்போமானால் தாய், தந்தை, பிள்ளைகள் என்றும், இருந்தால் தாத்தா- பாட்டி என்று இணைந்து வாழ்வது தான் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சமூக வாழ்க்கையாக மதிக்கப்படுகிறது.
ஆகவே ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும் மனைவியும் அவர்களே சற்றும் எதிர்பாராத படி பிறந்துள்ள குழந்தை ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒருங்கே அமைந்திருக்கும். மூன்றாம் பாலினத்தார் என்று தெரிய வருமானால், அந்த நிமிஷத்திலேயே பிரசவ மகிழ்ச்சி மறைந்து போய் வெட்கமும் வேதனையுமான சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
அரவாணியாகப் பிறந்து விட்ட குழந்தையை வளர்த்து ஆளாக்கி மகிழ்கிற வாழ்க்கைச் சூழல் பொதுவாக எந்த ஊரிலும், நாட்டிலும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை நம்மை சுற்றிலுமே எங்கும் நிலவும் என்கிற சூழ்நிலையில், அவர்களுக்கென்று அவ்விதக் குழந்தைகளை ஏற்றுக் கொள்ளவும், வளர்த்து ஆளாக்கவும் முன்வர தயாரா இருக்கிற ஒரு தனிப்பட்ட கூட்டத்தினர் பொது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்பட்ட மனிதர்களைப்போல் அன்றும் இன்றும் என்றுமாய் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பொது வாழ்க்கையில் தனித் தனி வீடுகளை அமைத்தும் கொண்டு தெருக்களில், ஊர்களிலும், நகரத்திலும் ஒருவராய் கலந்து வாழ வழியற்றவர்களாய், ஒதுக்கப்பட்டவர்களைப் போல் சற்றே ஒதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களையெல்லாம் தங்கியிருந்து வருகிற குடியிருப்புகள் அமைந்திருக்கும் நிலப்பகுதி இவர்களுக்கு சொந்தமானதல்ல. மேலும் இவர்கள் பிறந்த இடம், ஊர் எல்லாம் அவர்கள் பிறந்த வெவ்வேறு இடங்களிலிருந்து ஒதுக்கி விலக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தவர்கள் தானே! இவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொழில் என்று ஏதுமில்லை. இவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள குடிமக்கள் யாரும் முன்வருவது வெகு அபூர்வம். அப்படியென்றால் செய்வதற்கு தொழில் இல்லை, வருமானம் இல்லை என்றால் வாழ்வது எப்படி?
மாற்றுத் திறனாளிகளை நம் உடன் பிறவா சகோதரர்களாக நினைத்துப் பார்த்து சமையல் வேலை, வீட்டு வேலைகள், பிற ஏதேனும் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்தலாம். அரசு அவர்களுக்கென்று ஒரு பயிற்சி நிலையத்தை நிரந்தரமாக ஏற்படுத்தி பல்வேறு வேலைகளுக்கும் இவர்களுக்கென்று பயிற்சிகளை அளித்து ஆங்காங்கே தங்குமிடங்களும் ஏற்படுத்தித் தரலாம். எந்த ஒரு பயிற்சிக்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் எல்லாமே இலவசமாக வழங்குவது கட்டாயமாக இருக்க வேண்டும். அனுதாபத்துக்குரிய நம் சகோதரர்களாக நினைத்து இதை செய்ய வேண்டும்.
அவர்களுக்கான தன்னுரிமைகள்
நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் ஆரம்பகாலங்களில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுபோடாத நிலை இருந்தது. இந்திய ஜனநாயகத்தில் இந்த நிலையானது மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று தீவிரமாக உணரப்பட்டது.
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2.68 கோடி பேர் மாற்று திறனாளிகளாக இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 2.21 சதவீதம். இவர்களில் பார்வைக்குறைபாடு, காது கேளாமை, பேச முடியாமை, கை கால்கள் பாதிப்பு, மன நோயாளிகள் என்று பல்வேறான இயலாமைகளால் பாதிக்கப்பட்டவர்களாய் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தலில் ஓட்டளிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம். தேர்தல் கமிஷனிடம் இருந்த போதிலும் அவர்களைப் பற்றிய விபரங்கள் ஆரம்பத்தில் அதனிடம் இல்லை. மாற்றுத்திறனாளிகளில் பலரிடம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதில் போதிய விழிப்புணர்வும் அக்கறையும், ஆர்வமும் இல்லாதிருந்தது தான் காரணம்.
மாற்றுத்திறனாளி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஓட்டளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்துகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அரசுகள் இதற்குத் தேவையான சிறப்பு ஏற்பாடுகளை போதிய அளவிற்கு செய்து கொடுப்பதில் போதிய அக்கரையும் விழிப்புணர்வும் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள், அவை நகர்ந்து செல்வதற்கான பாதையை சீராக அமைத்தல் போன்றவற்றில் இந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
மேலும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மின்னணு ஓட்டு எந்திரத்தில் ஓட்டளிப்பது எளிதாக இருப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களால் தான் ஓட்டளிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையாக வாக்குரிமை பெற்ற அனைத்துக் குடிமக்களும் மாற்றுத் திறனாளிகள் உட்பட தேர்தலில் வாக்களிப்பது உறுதி செய்யப்படுவதை தேர்தல் கமிஷன் வலியுறுத்துவதாக உள்ளது.
லோக்சபா தேர்தல்களில் ஓட்டுப்பதிவு 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. மாற்றுத்திறனாளிகளும் ஓட்டளித்தால் மட்டுமே இது சாத்தியப்படும். ஆகவே. வாக்களிப்பின் போது மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக உள்ளே சென்று வாக்களித்து விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு வரவும், வாக்களித்து விட்டு வீட்டில் கொண்டு விடவும் சிறப்பு வாகன ஏற்பாடு செய்யவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2021-ல் நிகழ்ந்த சம்பவம்
கண்பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ஒருபெண் பட்டமேற்படிப்பு படித்தவர். அவரைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த பகுதியில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்கப்படுவதாக கேள்விப்பட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சங்கீத பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர் சங்கீத பள்ளிக்கு செல்லாமல் ஒதுக்குப்புறமாக தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று அந்த பொண்ணை கொலை மிரட்டலுடன் பாலியல் கொடுமை செய்துள்ளார். பார்வையற்ற அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அழுததை அவ்வழியிலே வந்த இரு வாலிபர்கள் அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள வேறு சில பெண்களும் ஆண்களும் கூடிவிட்ட போது ஆட்டோ டிரைவர் அங்கிருந்து நழுவி விட்டார். போலீசில் புகார் கொடுக்கப்பட்டதைம் தொடர்ந்து கை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு மகளிர் கோர்ட்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. ஆட்டோ டிரைவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்புகளில் அடங்கியிருந்த அம்சங்களே இங்கு பெரிதும் கவனத்திற்கு உரியதாய் கருதப்பட்டது.
Leave a Reply