குமரி எழிலன்
சன்னலில் ஒரு சாயல் தெரிந்தது… அது
வானத்து நிலவோ …
நிலவைத் தொட
கைகள் துடித்தன
கண்கள் மட்டுமே
தழுவி மீண்டன…
தோற்ற மயக்கமா?
உண்மைத் தோற்றமா?
நிலவுக்கும் தெரியும்
கண்களுக்கும் புரியும்..
நாள் நட்சத்திரம்
தேதி குறிப்பிட்டா
கைகள் குலுக்கும்
காயங்கள் சேரும்..
காய்ச்சலுக்கு மருந்து
காத்திருக்குது
கடைகளில் அல்ல …
கண்களில் ….
கைகளில் …
இதயங்களில் ….
காலம்
உருண்டோடுகிறது
உலகம்
சுழன்று கொண்டிருக்கிறது
கற்பனையில் மட்டும்
வாழ்வது
கனவல்லவா
மந்திரத்தில்
மாங்காய்ப் பறிப்பதல்லவா…
பூக்கள் விரிந்துள்ளன
தீண்டும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காய்
கனிகள் கனிந்துள்ளன
பறிக்கும் கரங்களின்
தொடுதலுக்காய் ….
காலம்எனும்
காய்மட்டும் ஏன் இன்னும்
கனியவே இல்லை …
கவிதைகள்
எப்போது விதைகளாய்
மாறுவது…
தை… எப்போது
கவியாய்
இதழ்களைத் தொடுவது
கவிதை
எப்போது
கள் ஆகி
மயக்குவது…?
கவிஞன் எப்போது
கவிதையை
வாசிப்பது
கவிதை
நேசிக்கப் பட
மட்டுமா
வாசிக்கப்படவும்
வேண்டுமல்லவா…
Leave a Reply