வீரமங்கை வேலுநாச்சியாருக்காக தலைகொடுத்த உடையாள்வெட்டுடையாள் காளி

வீரமங்கை வேலுநாச்சியாருக்காக தலைகொடுத்த உடையாள்வெட்டுடையாள் காளி

  • By Magazine
  • |

பேராசிரியர் முளங்குழி பா.லாசர்

சிவகங்கைச் சீமையைச் சீரோடும், சிறப்போடும் ஆட்சி செய்த மன்னன் முத்துவடுகநாத பெரிய உடையத்தேவரை, ஆலயத்தில் வழிபாடு செய்து திரும்பிய போது ஆங்கிலப்படை வஞ்சகமாய்ச் சூழ்ந்து கொன்றது. வேலுநாச்சியாரை கொலை செய்ய முயன்றது.

வேலுநாச்சியார் வெள்ளையர் படையினரிடமிருந்து தப்பி வருகிற போது தாகத்தால் சுருண்டு விழுந்தார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்ற பெண் ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்தாள். பசிபோக்க உணவு கொடுத்தாள். தான் உணவும், தண்ணீரும் கொடுத்தது மகாராணிக்கு தான் என்று அறிந்தாள். மகிழ்ச்சி அடைந்தாள். மனநிறைவு கொண்டாள். யார் கேட்டாலும் தெரியாது என்று சொல்லி விடு என்று கூறி விட்டு வேலுநாச்சியார் சென்று விட்டார்.

வெள்ளையர் படையினர் வந்தனர். ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உடையாளைக் கண்டனர். அவளிடம் வேலுநாச்சியாரை பார்த்தாயா? போன இடம் , போன திசை தெரியுமா? எனக் கேட்டனர்.

அதற்கு உடையாள் அவங்க போன திசை எனக்கு தெரியும். ஆனால் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக சொன்னாள். ஆங்கிலப் படையினர் உடையாளை பிடித்தனர். ஒரு கையை வெட்டினர் சொல்ல மாட்டேன் என்றாள். சித்திரவதை செய்தார்கள். அப்போதும் அவள் சொல்ல மாட்டேன் என்றே கூறினாள். அவள் தலையை வெட்டிக் கொன்றார்கள்.

அந்த உடையாளுக்கு வெட்டுடையாள் காளியம்மன் என்ற பெயரில் கோயில் எழுப்பப்பட்டது. கொல்லங்குடியில் கோயில் கொண்டு அம்மனாக வீற்றிருக்கிறார்.

வேலுநாச்சியார் வெள்ளையரை வென்று மீண்டும் சிவகங்கைக்கு அரசியானார். உடனே முதன் முதலாக கொல்லங்குடியிலுள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயிலுக்குச் சென்றார். சிறிய ஆலயத்தைப் பெரிய ஆலையமாக கட்டி எழுப்பினார். தன் கழுத்தில் அணிந்திருந்த எட்டாண்டுகள் கழற்றாமல் வைத்திருந்த வைரத்தாலியை கழற்றி அக்கோயில் உண்டியலில் போட்டார். தம் படையின் பெண்கள் பிரிவுக்கு உடையாள் படை என்ற பெயரை சூட்டினார்.

வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் தினமும் பூஜை நடத்த உத்தரவிட்டார். அதற்காக மூன்று கிராமங்களைத் தானமாக கொடுத்தார். கோயிலில் பூஜை செய்ய இரண்டு பூசாரிகளை நியமித்தார். சிவகங்கை செல்லும் வழியில் கொல்லக்குடி அருகில் அரியாக்குறிச்சியில் உடையாள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டுடையாள் காளியம்மன் கோயில் உள்ளது.

உலக வரலாற்றில் முதல் மனித வெடிகுண்டு குயிலி

தன் கணவன் சிவகங்கைச் சீமையின் மன்னன் முத்துவடுகாத உடையாத்தேவரை வஞ்சமாக கொன்ற வெள்ளையரைப் பழிவாங்க வீரமங்கை வேலுநாச்சியார் வீர சபதம் செய்தார். தளபதிகளான மருது பாண்டியரின் உதவியோடு படை திரட்ட திண்டுக்கல் அருகே விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்தார். குயிலியும் விருப்பாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் தான். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள்.

குயிலி உடல்நிலை சரியில்லாத தன் தாயைப் பார்க்க சிவகங்கைச் சென்று கொண்டிருந்தாள். அவரை வேலுநாச்சியாருக்கு சிலம்பக்கலை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் கண்டார். பேசத் தொடங்கினார். குயிலி சிவகங்கை செல்வதை அறிந்தார். உனக்கு எழுதப்படிக்க தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பொய் சொன்னாள் குயிலி.

சிவகங்கை அரண்மனையின் பக்கத்தில் மல்லாரியா என்ற பெயருடைய என் நண்பன் இருக்கிறான். அவனிடம் இந்தக் கடிதத்தை கொடுத்து விடு. மிக மிக அவசரம். உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன் என்றார். வேலுநாச்சியாரின் சிலம்ப வாத்தியார் என்ற மரியாதையோடு கடிதத்தைப் பெற்றுக் கொண்டாள் குயிலி. அன்றிரவு ஆர்வத்தில் கடிதத்தைப் பிரித்து படித்தாள் குயிலி.

சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் வெள்ளைக்காரர்களின் ரகசிய உளவாளி. வேலுநாச்சியாரின் திட்டங்கள், செயல்பாடுகள், பயணமுறைகள் அனைத்தையும் வெள்ளையருக்கு தெரிவித்திருந்தார். வேலுநாச்சியார் தன்னை ஒரு வளர்ப்பு மகள் போல் தன்மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்த காரணத்தால் காட்டிக் கொடுக்க கூடிய துரோகியான சிலம்ப வாத்தியாரான வெற்றிவேலின் நயவஞ்சகச் செயலைக் குயிலியால் பொறுக்க இயலவில்லை. கையிலே குத்தீட்டி ஏந்தினாள். சிலம்பு வாத்தியார் இல்லம் சென்றார். அவர் மீது பாய்ந்தாள். கீழே தள்ளி வெறி தீரும் வரை குத்திக் கொன்றார். செய்தியறிந்த மக்கள் அதிர்ந்தனர். குயிலியை, வேலுநாச்சியார், உடையாள் பெண்கள் படைப்பிரிவுக்குத் தளபதி ஆக்கினார்.

சிவகங்கை , ராஜராஜேஸ்வரி கோயிலுக்குள், குயிலி தலைமையிலான உடையாள் படை, வேலுநாச்சியாரோடு கடவுளை வணங்கச் செல்வது போல் ரகசியமாக உள்ளே புகுந்நது. வெற்றிவேல், வீரவேல் என வேலுநாச்சியார் முழங்கியதும் போர் தொடங்கியது. சார்ஜ் என்று ஆங்கிலத்தளபதி பான்சோர் கூறியதும் வெள்ளையர் படை திருப்பித் தாக்கத் தொடங்கியது. கடும்போர் நடந்தது. வெள்ளையர் படை வீரர்களின் தலைகள் சீவப்பட்டன. குயிலி தலைமையில் பெண்கள் படை தீவிரமாக போரிட்டுக் கொண்டிருந்தது.

வேலுநாச்சியார் படையினரிடம் இருந்த ஆயுதங்களை விட ஆங்கிலேயரிடம் அதிக அளவு நவீன ஆயுதங்கள் இருப்பதைக் குயிலி கண்டாள். இப்படியே போர் நீடித்தால் போரில் வெள்ளையரை தோற்கடிப்பது கடினம் என்பதைக் குயிலி உணர்ந்தாள்.

துப்பாக்கிகளும், பீரங்கிகளும் வெள்ளையர்க்கு பலம். அவற்றை அழித்தொழித்தால் தான் வெற்றி பெற இயலும். வேலுநாச்சியார் மீது உயிரையே வைத்திருந்த குயிலி, அவர் வெற்றிக்காக தன் உயிரையே தியாகம் செய்ய முடிவு செய்தாள். குயிலி தன் உடம்பு முழுவதும், ஆலயத்தினுள் விளக்கு எரிக்க வைத்திருந்த எண்ணெயை எடுத்து பூசினாள். ஆடையைத் துறந்தாள். உடம்பில் நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டு வெள்ளையரது ஆயுதங்களும், வெடி மருந்துகளுமிருந்த கிடங்கினுள் குதித்தாள். வெள்ளையரது ஆயுதக்கிடங்கு தீப்பற்றி வெடித்துச் சிதறியது. வேலுநாச்சியார் வெற்றிக்கு அதுவே காரணமாக அமைந்தது.

ஆயுதக்கிடங்கு அழிந்ததைக் கண்ட வெள்ளையர்கள் அதிர்ந்து போய், செய்வதறியாது திகைத்து நின்றனர். தோல்வியைத் தழுவினர். வேலுநாச்சியாரிடம் சரணடைந்தனர். வேலுநாச்சியார் வாளை உயர்த்தி வெற்றி முழக்கமிட்ட போது, அதற்கு காரணமான குயிலி உயிரோடு இல்லை. இந்திய வரலாற்றில் முதல் மனித வெடிகுண்டான குயிலி தன்னுயிர் தந்து வேலுநாச்சியருக்கு வெற்றியை தேடித் தந்தாள். குயிலி புகழ் தமிழ் மண்ணில் இன்றும் நிலைத்து நிற்கிறது. நாட்டுப்புறப் பாடல்களால் இன்றும் குயிலி தமிழ் நாட்டு மக்களால் புகழ்ந்து போற்றப்படுகிறாள். சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் குயிலியின் நினைவாக தீப்பாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. கோயிலின் பக்கத்தில் நடுகல்லும், சூலாயுதமும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *