சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

Irretrievable Marriage

(நீடிக்கவே முடியாத திருமணம்)

– வழக்கறிஞர் பி. விஜயகுமார்

விவாகரத்து வழக்கு பல காரணங்களால் நீதிமன்றத்தில் கணவராலோ அல்லது மனைவியர்களாலோ தாக்கல் செய்யப்படுகிறது. பரஸ்பர விவாகரத்து கணவன்- மனைவி இவரும் சேர்ந்து தாக்கல் செய்வார்கள். பரஸ்பர வழக்கில் கணவன்- மனைவி இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விடும். ஒரு தரப்பினர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகளில் விவாகரத்து எளிதாக கிடைக்காது. ஏனென்றால் மறுதரப்பு கட்சிக்காரர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்.

சில வழக்குகளில் நீதிமன்றம் கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு வழியே இல்லை என எண்ணும் போது அப்பேர்ப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிவிடும். ஆனால் இவ்வகை வழக்குகள் அரிதினும் அரிதாக இருக்கும். இதை உச்ச நீதிமன்றம் மட்டுமே வழங்க முடியும். இவ்வழக்கு பரஸ்பர விவாகரத்து வழக்காக இருக்காது. கணவனோ அல்லது மனைவியோ என ஒரு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்காக மட்டும் இருக்கும்.

தற்போது இவ்வகை வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த கணவர்-மனைவி இருவரும் வேலை நிமித்தமாக திருமணம் முடிந்ததும் கனடா நாட்டிற்குச் சென்று பணிபுரிந்து வந்தனர். இருவருக்கும் அங்கு ஒரு மகனும் பிறந்திருந்தான். பிறகு கணவன் சற்று நோய்வாய்ப்படவே இருவரும் இந்தியாவிற்கு திரும்பி வந்தனர். பிறகு மனைவி கணவனுடன் சேர்ந்து வாழாமல் அவளுடைய வீட்டில் போய் நிரந்தரமாக தங்கி விட்டாள். கணவன் எத்தனையோ முறை தன்னுடன் வந்து வாழ கேட்டுக் கொண்டும் மனைவி கணவன் வீட்டிற்கு வரவில்லை. மாறாக மனைவி திரும்பவும் கனடாவிற்கு செல்வதற்கு கணவனை வற்புறுத்தினாள். ஆனால் கணவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு மனைவி மட்டும் குழந்தையுடன் கனடா சென்று தங்கிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் தமது மனைவிக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதற்கு மனைவியின் கொடூரச் செயல் (Cruelty) காரணத்தைக் காட்டி வழக்குப் பதிவு செய்திருந்தார். ஆனால் மாவட்ட நீதிமன்றமோ இங்கு மனைவியின் கொடூரச் செயல் ஒன்றும் நிரூபணமாகவில்லை என்று கூறி அவர் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

பிறகு இவ்வழக்கை கணவரால் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இங்கும் கீழ்கோர்ட் கூறிய தீர்ப்பு சரி என்று  உயர்நீதிமன்றம் கருதி அவர் மேல்முறையீடும் ரத்தானது. இருப்பினும் இவர் இவ்வழக்கை கைவிடவில்லை.

மேலும் இவ்வழக்கு மேல்முறையீட்டு மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கில் மனைவி ஆஜர் ஆகவில்லை. வழக்கு கடந்த 13 வருடங்களாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்படைந்தனர். கணவன் இவ்வாறு வழக்கில் தீர்க்மாக இருக்கையில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை எனக் கருதி கணவருக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இம்முறையான விவாகரத்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே வழங்கப்படும். இதற்குரிய உரிமை உச்சநீதிமன்றத்திற்கு அரசியல் சாசனம் ஆர்ட்டிக்கிள் 142 வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *