வேடன் எனும் கருஞ்சூறாவளி

வேடன் எனும் கருஞ்சூறாவளி

  • By Magazine
  • |

தக்கலை ஹாமீம் முஸ்தபா

கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன்,

“நான்

பாணன் இல்லை 

பறையன் இல்லை

புலையன் இல்லை

நீ

தம்புரானும் இல்லை

நீ தம்புரான் என்றால்

எனக்கொரு மயிருமில்லை

இனி காலமில்லை

காத்திருக்கப் போவதுமில்லை

பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை”

என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு மரபிலிருந்து அடுத்த நகர்வாக தன்னுடைய வலியை , தன்னோடு உள்ள மக்களின் வலியை மேற்கின் ராப் இசையைக் கொண்டுவந்து சேர்த்து வேடன் கொடுக்கிறார்.

அது வெறும் வலியாக மட்டும் தங்கிவிடாமல் விடுதலையின் குரலாக பிரவாகிக்கிறது .இளம் மலையாள உலகம் வேடனுடன்  சேர்ந்து இசைக் கிறது. அவர்களுக்கு இப்போது வேடன்  ஆசான் .

நம்முடைய இசைச் சூழலில்  கேட்போரை மகிழ்வூட்டும் ஒன்றாக மட்டுமே இசை மாறி உள்ள நிலையில் வேடன் அதை மக்களின் விடுதலையின் கருவியாகக் கொள் கிறார்.

சாதிப்படிநிலையின் , சாதியின் பெயரால் நிகழும் ஒடுக்கு முறையின்  கொடுமுடி பிடித்து வேடன் தன் குரல் கொண்டு உலுப்பும் போது வைதீகம் அதனை இந்து முஸ்லிம் முரணாக மாற்றப்பார்க்கிறது .

 ‘நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை’ என்னும் வேடனின் குரலில் ஒலிக்கும் ‘மயிர்’ என்னும் சொல் மலையாளத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் அசாத்திய மானவை.

மலையாள இணைய உலகு முழுவதும் வேடன் இப்போது பேசுபொருள் . வைதீகம், மார்க்சியம், தலித் தியம் , ஜனநாயக சக்திகள் , மலையாள முஸ்லிம்கள் என பல்வேறு குரல்கள் இணையத்தில் வேடனை குறித்து தொடர்ந்து ஒலிக்கின்றன .. இரு தரப்பிலும் சில பதிவுகள்வரம்பு மீறினாலும் உரை யாடலின் வாசல் தாராளம் திறந்துள்ளது .

இந்த உரையாடல்களில் எனக்கு நெருக்கமாக இருந்த ஒரு தொடர்.,’வேடனின் கண்களின் வழியாக வேடன் கூறும் பிரச்சனைகளை காண முற்படுவோம்’.  நாராயண குரு, அய்யன்காளி ,அம்பேத்கர் எல்லோரும் மீண்டும் உரையாட லில் மேல் எழும்பி வருகிறார்கள்.

கேரள அரசியலில் நெடுநாள் கழித்து தலித் விடுதலை முன்னுக்கு வருகிறது . வேடனின் தெய்வத்தின் நிறம் கறுப்பாக இருக்கிறது . இந்த நாட்டில் காடு களவு குற்றமில்லை.சோறு களவு குற்றம் என்னும் இரட்டை நீதியை வேடன் மக்களின் முன் வைக்கும்போது அதிகாரம் எரிச்சல் படுகிறது.

உள்ளூர் விடுதலை வரலாறு தொடங்கி உலக விடுத லையின் வரலாறு வரை மேடையில் பரிமாறப்படுகிறது . ஐநா மன்றத்தில் யாசிர் அரபாத் ஒருகையில் ஒலிவ இலையோடும் ஒருகையில் துப்பாக்கியோடும் பேசியதை அந்த மக்க ளுக்கு நினைவு கூறுகிறார் .

பாலஸ்தீன போராளி யாசிர் அரபாத்தை நினைவு கூர்வதன் வழியாக இப்போதைய பாலஸ்தீன் மக்களின் மீதான இஸ்ரேலின் அழித்தொழிப்பு மீண்டும் மக்களின் முன்னால் உரையாடலுக்கு வருகிறது.இது கேரளாவின் இந்து அடிப்படைவாதத்தை ஆவேசமூட்டுகிறது . ஒரு புறம் வேடன் சாதியை நோக்கி அஸ்திரம் வீசுகிறார் . இதனை முன்புபோல் அத்தனை எதிராக வைதீகத் தால் முறித்துப் பேசமுடியவில்லை .இன்னொரு புறம் நிகழும் பாலஸ்தீனத்துக்கு குரல் கொடுக்கிறார்.

‘பூமி நான் வாழும் நிலம் ‘என்றொரு பாடல் உலகில் ஒடுக்கப்பட்டவர்களின்  வலியை அத்தனை வீரியமாய் வெளிப் படுத்துகிறது .நாம் வாழும் பூமி அனுதினமும் நரகமாக மாறிக்கொண்டிருப்பதை உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு வரிசைப்படுத்து கிறார். சோமாலியா, ஆபிரிக்கா ,நியூயார்க் ,பாலஸ்தீனம், செஞ்சீனம், அயர்லாந்து என்று பாடலுக்குள் இடம்பெறும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அவரது நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் திணறுகிறது . சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஏற்பாடாகியிருந்த வேடனின் நிகழ்ச்சி நான்கு பாடல்களுடன் முடிவுக்கு வந்தது .காராணம்  நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தின் மக்கள் கொள்ளளவையும் தாண்டி  கூட்டம் கூடிவிட்டது.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எல்லா விதைகளையும் போகிற இடங்களில் எல்லாம் வேடன் தூவிக்கொண்டே செல்கிறார். அந்தக் கலைஞன் இப்போது பேசுவது ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை அல்ல அவர்களின் விடுதலையை. .அதிகாரச் சூண்டையில் காலகாலமாக கொக்கிப்புழுக்கள் ஆக்கப் பட்ட மக்களை விடுதலை செய்வதே வேடனின் தலையாயம்

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வெடிப்புற ஒலிக்கும் வேடனின் குரல் வைதீகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது . சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர் என்.ஆர். மதுவின் காணொலி கண்டேன்.

அதில் அவர் கேரள வரலாற்றில் புலையர்கள் எவ்வாறு எல்லாம் உயர்நிலையில் இருந்தார்கள் என்று பேசிக் கொண்டே இருந்தார்,  அவரே “மக்கள் அதிகம் வருவ தற்காக வேடனின் பாட்டு வைக்கும் நாம் ஒருவேளை மக்கள் அதிகம் வருவதற்கு வேண்டி சிலசமயம் காபரேடேன்சும் நம்முடைய கோவில் வளாகத்தில் வைக்கும்” என்று சொன்னபோது  வேடன் அவரை நிரம்பவே தொந்தரவு செய்திருப்பது தெரிகிறது.

 என்.ஆர்.மதுவின் கருத்தை புறங்கை கொண்டு தள்ளி விடும் வேடன், ‘எல்லா மனிதர்களுக்கும் சமத்துவம் கூறும் அம்பேத்கர் அரசியல்தான் நம்பும் அரசியல்’ என்கிறார்.

இதே சிக்கல் தோழர்களுக்கும் வருகிறது .  இந்தியச் சூழலில் சாதி குறித்த, வர்க்கம் குறித்த தங்களுடைய  கருத்துகளை  மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை வேடன் வரிகள்  உணர்த்தி நிற்கின்றன.

‘தலைப்பாகையில் என்னவொரு பிரகாசம் தலைப் பாகையில் என்னவொரு பிரகாசம்’ என்று.  வேடன் மேடையில் அதிர்கையில் அய்யன்காளியின் தலைப் பாகையில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன ,அவரின் வில் வண்டி புதிய வேகம் கொள்கிறது .

அப்பா முரளி  கேரளம் திருச்சூர் அம்மா இலங்கை மூன்று குழந்தைகள் கொண்ட இந்தக் குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாக வந்தவர்  ஹிரன்தாஸ் என்னும் வேடன் .தொடக்கத்தில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு சென்ற வேடன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தபோது இசையை தன்னுள் வரித்துக் கொண்டார்.

நேரடியாக வேடனை எதிர்கொள்ள முடியாத சாதி சமூகமும் அதிகார சமூகமும் போதை பொருள் தொடர் பான பிரச்சனை ஒன்றிலும் வேடனை வேட்டையாட பார்க்கின்றனர் . வேடன் கழுத்தில் புலிப்பல் அணிந் திருப்பது வனவிலங்கு சட்டத்திற்கு எதிரானது என்று முஷ்டி உயர்கிறது.

புலிப்பல்லுக்காக வேடனை சட்டத்தின் முன் நிறுத்தத் துடிப்பவர்கள் வீட்டுச்சுவரில் யானை கொம்பினை மாட்டி வைத்திருந்த நடிகர் மோகன் லால் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற குரலும் எழுகிறது, இரண்டு வகை நீதி இங்கு செயல்படுகிறது என்கிறார்கள் வேடனை பின்துணைப்பவர்கள் .  .கேரளம் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சனையான போதை பொருள் பயன்பாட்டில் வேடனும் சமீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளியில் வந்த வேடன் தன்னைப் பின்தொடரும் இளை ஞர்களுக்கு போதையின் தீங்குகள் குறித்து பேசிய காணொலி பரவலாக சென்று சேர்ந்திருக்கிறது.

ஆதிவாசி பின்புலம் சார்ந்த சமூகச்சூழலில் கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்துவதை எப்படி எடுத்துக்கொள்வது என்னும் கேள்வியும் எழுகிறது .

போதை பழக்கத்தை  சட்டம் ஒழுங்கு சார்ந்து அணுகு வதா ? ஒழுக்கம் அறவியல் சார்ந்து அணுகுவதா? என்பது வேடன் தொடர்பான பிரச்சனையில் எழும்பும் மற்றொரு விவாதம். வேடன்  இதை வாழ்வியல் சார்ந்த ஒன்றாக எடுத்துக்கொள்கிறார் என்பது அவரின் மொழிகளில் இருந்து தெரிகிறது.

என்றாலும் கேரளத்தின் இளையோர் போதையில் சிக்குண்டு இருக்கிறார்கள் என்பதன் ஆழம் புரிந்த வேடன் தன்னை பின்தொடரும் இளையோர்களுக்கு போதையின்  ஆபத்தினை  எடுத்துக்கூறும் காணொலி சமீபத்தில் வெளிவந்து பரவலாக சென்று சேர்ந்துள்ளது .

 ஒருவேளை கேரள அரசாங்கமே போதைக்கு எதிரான வேடனின் இந்தக் காணொலியின் பின்வெளிச்சமாகவும் இருக்கலாம் . எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் சட்டம் ஒழுங்காக அணுகாமல் அறவியல் சார்ந்து அணு கும் முயற்சி ஆரோக்கியமானது. இது நல்ல முயற்சி .

காணொலி ஒன்றில்  கேட்ட வேடனின் பாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது . பழமையான தலித் விடுதலைப் பாடல் இது. அதனை வேடனின்  இசையில் கேட்கும் போது வேறொரு வலியைத் தருகிறது .

“புலையர் எல்லாரும்  இங்கு

சேரமர் ஆனால் என்ன

புலையரின் புலை மாறுமோ

இந்தக் கேரளத்தில்

இதிலொரு சுகம் வருமோ

பறையர் எல்லாரும் இங்கு

சாம்பவர் ஆனால் என்ன

பறையரின் பழி தீருமோ

இந்தக் கேரளத்தில்  

இதிலொரு சுகம் வருமோ

குறவர் எல்லாரும் இங்கு

சித்தனர் ஆனால் என்ன

குறவனின் குற மாறுமோ

இந்தக் கேரளத்தில்  

இதிலொரு சுகம் வருமோ

காளையை விற்பதுபோலே

நம்முடைய தந்தையரை

விற்றவர் விலைவாங்கியதும்

மறப்பதில்லை

அடிமைத்தனம் மறக்க முடியுமோ

விற்கையில் விலைக்கு மாறும்

கொல்கையில் கொலைக்கு மாறும்

கிட்டும்போது கடைக்கீற்றதும்

மறப்பதில்லை

அடிமைத்தனம் மறக்க முடியுமோ

ஆயிரத்தில் அதிக வருடம்

அடிமையாய் கிடந்த மக்கள்

அடிமைத்தனம்  மறக்கமுடியுமோ

இந்த நிலத்தினில்

அடிமைத்தனம்  மறக்கமுடியுமோ

இந்த நிலத்தினில்

இனியொரு சுபம் வருமோ “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *