– முனைவர் முல்லைத்தமிழ்
அல்லிவர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம்.
அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு
தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று
வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.
– வர்மகுருநூல்
மேலும்,
“மாத்திரையாய் அணுகிடில் உள்மலரோவாடும்
சூதானயிரு வாய்வை தடுக்கும் கெத்தல்
தூய கண்கள் மங்கும் சிரசயரும் தூக்கம்
தாதான துழல் கோரவாத காசம்
தண்டு கூன் அனுக்கறிந்து தடவி மாற்றே”.
– வர்மகுருநூல்
“மாளாத அல்லிஅரசவர்மம் கெண்டதானால்
மைந்தனே செய்குணத்தை வருந்திக்கேளு
தாளாது கொண்டவுடன் பனிகுளிருமப்பா
தப்பாது நாழிகைதான் ஏழதாகும்
மாளப்பா குதம் கழியும் வயிறுமூதும்
தப்பாத நாழிகை தானம்பத்தேழாம்
வாளப்பா மரணமது உண்டாமென்று
மாமுனிவர் தாமுரைத்த வார்த்தையாமே”.
– வர்ம அகஸ்திய சாரி
“நடு நாபிக்கு பின் நால்விரல் மேல் நட்டெல் தொட்டு
ஒட்டியெல்லிடை வுறுமல்லிக்கொண்டிடிலோ
அடுத்துவரும் குணங்கண்டிரஃது காணாமல் ஓடுதற்குக்
கருத்தான மணிபூரம் தொடுத்து மேல் ஏற்றித்தடவி
படுத்துமின்னல் போக்கு சர்வாங்க அடவில் விரல்பதித்து
தாயடங்கல் செய்து தணியாமலிருபுறமும் தடவித்தாத்து
விடுத்துநல்மருந்து செய்து வாரிகோரி வகையறிந்து
எடுத்துதறிவிடு நலமாம் தானே”.
– வர்மகுருநூல்
“அல்லிஅரசவர்மம் இளக்குதற்கு அடவைக்கேளு
மெள்ளவே தூக்கி ஏந்தி மேனி
தல்லி நொறுக்கிட்டாலும் மெத்தவே குறிகள்
பல கொண்டிட்டாலும் குணம் வரவே
மெல்லிய தூசிதனை சுற்றித்தளரவே
எண்ணையிட்டு அடங்கல் தொட்டு
துல்லியமாக மருந்துகள் செய்திட
மகத்தான வர்மமிது சுகமாம் பாரே”.
– காலவர்மநூல்
என குறிப்பிடுகிறது. மேலும்,
அல்லிவன்மம் ரெண்டென்பார் அஃதுள்ளுறவாம்
சொல்லிசெல்வார் பெண்டிர்க்காம் ஒன்றுஇருபுறம்
வல்லித்தண்டுறும் நேர் நாபிப் பின் நால்விரல்மேல்
தல்லிடிக் கொண்டிடிலோ குழைந்துறும் கடனே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அல்லிவர்மம் இரண்டு என்பார்கள். அது பெண்களுக்கு இருபுறமும் உள்ளுறக் காண்பதாம் ஒன்று. மற்றொன்று தண்டு எனப்படும் முதுகெலும்பில் நாபியின் பின்னிருந்து நான்கு விரல் மேலாக இருக்கும். அத்தலத்தில் தல்லலோ இடியோ மாத்திரை மிஞ்சிக் கொண்டிடில் உடலானது குழைந்துவிடும் என்பதாம்.
கொண்டவுடனல்லிக்கு கழிக்குடல் முனைவிரியும்
தண்டமதும் குழைந்துடலம் வியர்க்கும் படபடக்கும்
பண்டமதில்வயிறூதும் பனிக்குளிரும்தளர்ச்சையாகும்
கண்டயிடம் கணக்கறிந்து கையிதங்கள் செய்யே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அல்லிவர்மம் மாத்திரையாய்க் கொண்டவுடன் மலம்கழிக்கும். குடலின் முனையெனும் குதம் விரிவடையும். தண்டமெனும் முதுகெலும்பும் உடலும் குழைந்துவிடும். வியர்வையும் படபடப்பும் உண்டாகும். பண்டமெனும் அகவுடலில் பனியும் குளிரும் தோன்றி தளர்ச்சை உண்டாகும். இவ்வாறு உண்டாகுமானால் தாக்கம் கொண்ட இடத்தின் மாத்திரை அறிந்து கைப்பாகம் செய்துவிட வேண்டும் என்பதாம்.
கொள்ளும் காண் குறைவு பலவும் பின்னாளாம்
அள்ளும் காண் அடிவயிறுழைந்து குழைந்தும்
தள்ளும் காண் இன்பம் தடமிழக்கும் மேல்
உள்ளும் காண் உறக்கமும் ஊணுமிழிவே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அல்லிவர்மம் மாத்திரை மிஞ்சி தாக்கம் கொள்ளும்போது பல்வேறு விளைவுகள் பின்னாட்களில் உண்டாகும். அடிவயிற்றில் இழுத்துப் பிடிப்பதைப் போன்றும், உழைச்சலும், உடல் பலவீனமும் உண்டாகும். இன உணர்வுகள் தடமிழந்து போவதோடு உறக்கமும் ஊணும் குறையும் என்பதாம்.
பண்புறும் அல்லியானது கேட்கின் பலதாம் அஃது
மாண்புறும் சடமும் இரைப்புடன் இழைப்புமீடழியும்
தண்புறும் குளிரும் வாதம் குணமுறும் உணர்வும்
வண்புறும் புணர்ச்சி வகையறிந்துறச் செய்யே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அல்லிவர்மத்தினுடைய பயனை கேட்கின் அது பலவாகும். முறைப்படி கைபாகம் அறிந்து தூண்டும்போது உடல் வலிமையுறும், இரைப்பு இழைப்பு மாறும். உடல் குளிர்தல், வாதம் போன்றவைகள் மாறி உணர்வுண்டாகும். புணர்ச்சியிலும் வன்மை தோன்றும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
அல்லிவர்மம் கொண்டவுடன் உதான சமான வாயுக்களின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படுவதால், மூச்சடைக்கும், கண்களில் நீர் உண்டாகும், அசதியுடன் தளர்ச்சையாகும், இருமல் தோன்றும், கை கால்கள் தளரும், தலை குழைந்து தூக்கம் உண்டாகும். உடலும் தளர்ந்துவிடும். மாத்திரை மீறிக்கொண்டால், கால்கள் இரண்டும் தளர்ந்துபோகும், அடிக்கடி பனி, குளிர், நடுக்கம் உண்டாகும். மூச்சடைத்து உள்கொழுத்தும், மலஜலம் தன்னை அறியாமல் இளகியோடும். இதற்கு 57 நாழிகைக்குள் மருத்துவ பரிகாரம் செய்துவிட நலம் உண்டாகும்.
அல்லி வர்மம் இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரை மெல்ல தூக்கி இருத்தி, பாதிப்பின் தன்மைகளை அறிந்து வர்மாணி தடவுமுறைப்படி தடவி, அடங்கல்களை தூண்டி, மெல்லிய துணியினால் சுற்றி கட்டி எண்ணெயிட்டு, மருந்துகளும் செய்துவர நல்ல சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் தாது சக்தி குறைந்து போவதுடன், வாதம் உண்டாகும். அதாவது ஒருபக்க வளைவு வாதம் அல்லது அரைகீழ் வாதம் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல், உள்ளங்கை, உள்ளங்கால், முழங்கை, முட்டு போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டி தடவும்போது, அரைகீழ்வாதம், நீரழிவுநோய், மூச்சிரைப்பு, மூச்சடைப்பு, வயிற்றுவலி, நுரையீரல் சார்ந்த பல நோய்கள் குணமாகும் என வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply