நகைகடன்: புதியக் கட்டுபாடுகள்?

  • By Magazine
  • |

வேண்டும்! ஏழைகளின் நலனில் அக்கறை!

உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் 2008- ஆம் ஆண்டில் தீவிரமாக போராடத் தொடங்கி அஃது ஓய்வுற்று ஓரளவு சமாளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போல் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தாறுமாறான வரிவிதிப்புகள், உலக நாடுகளை ஒரு விதமான பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது.

உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழலும் வெகுவாக பாதிப்படைந்து மக்கள் 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். அமெரிக்காவின் பெரும்பான்மையான செல்வங்களும் அந்நாட்டின் மொத்த மக்கள் விகிதத்தில் ஒரே ஒரு (1%) சதவிகிதத்தினர் கையிலேயே உள்ளது. மீதி 99% சதவிகிதத்தினரும் அரசு சார்ந்தோ அல்லது அரசின் ஆதரவு பெற்ற ஒரு சதவீதமுள்ள(1%)  பணக்காரர்களின் தொழிற்துறைகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயநிலை உள்ளது. இதனால் அங்கு மிக இக்கட்டான ஒரு பொருளாதார சமத்துவமின்மை நிலவுகிறது.

சாதாரண அமெரிக்கர்களின் அடிப்படை வாழ்விற்கான செலவினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நிதி பற்றாக்குறையும் வாழ்வியல் நெருக்கங்களும் அதிகரித்து வருவதாலேயே மக்கள் அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

வங்கிக்கடன்கள், வசதிப்படைத்தோரிடம் வாராக்கடன்கள் அனைத்தையும் அரசு மாறுபட்ட கண்ணோட்டத்தில் கையாளுவதால் சாதாரண மக்களின் கடன் சுமைகள் அதிகரிப்பதோடு, வட்டி கட்டுவதிலேயே வாழ்வில் கடினமாக உழைத்து ஈட்டும் வருவாயும் தொலைந்து விடுகிறது. இது மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

எந்திரமயமாக்கல் பரவலாகி விட்டதால் நிரந்தர பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி விடுவதால் வாழ்வாதாரம் கேட்டு மக்களே தெருவில் இறங்கி போராட வைத்துள்ளது.

அமெரிக்க நாட்டின் நிச்சயமற்ற பொருளாதார திட்டங்களாலும் வரிவிதிப்புகளாலும் பணவீக்கத்திற்கு வழிவகுப்பதால் விலைவாசி அதிகரிப்பும் அதற்கேற்ப அனைத்துக் கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன. ஆனால் ஊதியம் உயர்த்தப்படாததால் மக்களின் வாங்கும் திறனும் அதிகமாக குறைந்து விடுகிறது. இது வாழ்க்கையில் வெறுப்பையும், வெறுமை உணர்வையும் உருவாக்கி உள்ளது. முதியவர்கள், குழந்தைகள் போன்றோருக்கான பராமரிப்புகள், மருத்துவசேவைகள் கூட அங்கு நிலவும் பொருளாதார குறைபாட்டால் நிலைகுலைந்து விட்டன.

அமெரிக்க அரசியலில் ஒரு சதவீதம் (1%) பணக்காரர்களாக இருக்கும் கார்பரேட்டுகளின் வலிமை ஓங்கி இருப்பதால் அவர்களின் நிறுவனங்களின் செல்வாக்கு பெருகிவிட்டன. அரசு அவர்களுக்கு சாதகமாகவே பல்வேறு சட்டதிட்டங்களை உருவாக்குகின்றது. கார்பரேட்டுகளின் அழுத்தங்களுக்கேற்ப அரசும் ஒத்துறவாடி செயல்படுவதால் உழைப்பாளர்கள் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ளனர். ஏழை தொழிலாளரின் பல குடும்பங்கள் தடந்தெரியாமல் நிலைகுலைந்து வருகின்றன.

இவை அனைத்தையும் புரிந்துகொண்ட 90% தொகை கொண்ட சாதாரண அமெரிக்கர்களில் பெருவாரியானோர், தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். அரசுக்கும் அங்கு நிலவும் பொருளாதார சமச்சீர் இன்மைக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களின் போராட்டங்கள் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்றைய விலைவாசி உயர்வுகளுக்கும் கார்பரேட்டுகளின் வளர்ச்சிகளுக்கும் நேரடி தொடர்புகள் பற்றி சாதாரண மக்கள் கூட தெருவில் பேசி வருகின்றனர்.

இந்தியாவில் நிகழும் பல்வேறு சூழல்கள் கூட பல வழிகளில் சாதாரண மக்களை மட்டுமே பாதித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு விதிக்கப்படுகின்ற சட்டதிட்டங்கள் அனைத்துமே சாதாரண மக்களை மட்டுமே பாதிப்படைய செய்கின்றன. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நகைக்கடன் திட்டமானது முழுக்க முழுக்க ஏழைகள் தலையில் இடியினை விழச் செய்துள்ளது. தெருமுனைகளில் பேசும் ஏழைகளின் குமுறல் வசதி படைத்த சூழலில் வாழும் உயர் அதிகாரிகளின் கண்களில் படுவதில்லை. காரணம், அவர்களுக்கு ஐயாயிரம் பத்தாயிரம் என்பது கண்ணுக்குத் தெரியாத வைரஸ் போன்றது. ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு அது ஒரு பெருந்தொகை. கடினமாக உழைத்து ஒரு கிராம் இரண்டு கிராம் என சேர்த்து வைக்கும் நகைகள் அணிந்து அழகு பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவசரகாலங்களில் அடகு வைத்து சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்கும் கூடத்தான். அடகு வைக்கும் சூழலையோ, நிலமையையோ துளி கூட அறியாத-உணராத உயர் பதவியாளர் கண்களுக்கு ஏழைகள் காலிலிட்டு மிதிக்கும் தூசாகவும், கடுகு போலவும் தெரிவதால் தான் இப்படி திட்டம் போடுகிறார்கள். ஐந்துக்கும் பத்துக்கும் கூட அலையும் ஏழைகளைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் என ஊர்முனைகள் தோறும் மக்கள் முனகுவது அரசுக்காவது புரிந்தால் நல்லது.

1. ரிசர்வ் வங்கியின் ஒன்பது விதிகள்:

  நகை மதிப்பில் 75% மட்டுமே கடன் வழங்கப்படும் இது முந்தைய மதிப்பை விட 5% குறைவு. (LTV-75%)

2.ஆதாரம்: (Proof of Gold ownership)

அடகு வைக்கும் நகைகள் எப்போது வாங்கப்பட்டது, எங்கு வாங்கப்பட்டது என்பது போன்ற ரசீதுகள் கொடுக்கப்பட வேண்டும்.

3. தங்கத்தின் தன்மை (Purity certificate)

நகையின் தூயத்தன்மை மற்றும் கற்கள், குறைபாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மட்டுமன்றி, நகையை ஒளிப்படம் (Photo) எடுத்து நாம் கடன்பெறும் வங்கிக்கோ, அல்லது நிதிநிறுவனங்களுக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.

4. தகுதி (Specified Gold Eligibility)

தங்கம் கண்டிப்பாக 22 காரட்டாக இருக்கவேண்டும். மட்டுமல்ல, தங்கக்காசுகளை அடகு வைக்க வேண்டுமெனில், அதுவும் கண்டிப்பாக 22 காரட்டாக இருக்கவேண்டும். அதுவும், நாணயங்கள் வங்கிகளிலிருந்து மட்டும் தான் வாங்கி இருக்க வேண்டும்.

5. தங்கம் குறைந்த காரட்டில் இருந்தால் (Standardized gold valuation) அதன் மதிப்பு 22 காரட்டுக்கு மாற்றப்பட்டு கணக்கிடப்பட்டு அந்த திட்ட மதிப்பிற்கு ஏற்பவே கடன் வழங்கப்படும்.

6. Loan Limit : ஒரு கிலோ வரைக்கும் மட்டுமுள்ள தங்கம் மட்டுமே.

7. வெள்ளிக்கு தூய்மை (Loan against silver): 925 Purity

8.கடன் ஒப்பந்த விளக்கம் (Detailed loan agreement):

நகை மதிப்புத்தன்மை, வழங்கப்பட்ட தொகை, நகை மீட்டெடுக்காத சூழலில் ஏற்படும் நிலை, ஏலமிட்ட நகையை மீட்கும் சட்டதிட்டங்கள் என அனைத்தும் தெளிவாக வழங்கப்பட வேண்டும்.

9. Timely release of Gold collateral

நகைக்கடன் செலுத்திய உடனே நகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். தவறினால் வங்கியோ, நிதிநிறுவனமோ, ஒவ்வொரு நாளுக்கும் 5000 ரூபாய் வீதம் நகைக்கடன் அடகு வைத்துள்ள நபருக்கு வழங்கவேண்டும்.

இப்படி ஏன் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது என்றால் திருட்டு நகைகளை விற்பதிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு என்பது ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்துவதாக இருந்தாலும், திருட்டு நகைகளை விற்பதும் வாங்குவதும் திருடர்களின் மாறுபட்ட சாதனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, விற்கும் திருடனும் வாங்கும் திருடனும் வலிமை உள்ளவர்களாக இருந்தால் மாற்று வழிகளைக் கண்டுபிடித்து பரிசுப்பொருளாக மாற்றிப் பெறும் உத்தியைக் கையாள வாய்ப்புள்ளது. இனி பரிசுப்பொருள் எங்கு எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? என்பன போன்ற புதிய சட்டங்களும் தேவைபடும்.

மொத்தத்தில் ஏழை மக்களின் அவசரகால தேவைகளின்போது கடன்பெற நினைக்கும் நினைப்பு கனவாகிப் போகிறது. இந்த சூழல் மிகமிக ஏழை மக்களை வேறு வழியில் பள்ளத்தில் விழச் செய்துவிடும். அதாவது, ஊர்புறங்களில் உள்ள சிறுசிறு நகைக்கடன் வழங்குபவர்களின் பிடியில் விழ வைத்துவிடும். அங்குள்ள வட்டி விகிதம் தாறுமாறான ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மக்கள் வங்கியை விட்டு விலகி வீட்டுக்கு வீடு கந்துவட்டி பெறும் கடன்காரர்கள் ஆகிவிடுவார்கள். அரசு மீண்டும் நன்கு சிந்தித்து ஏழை மக்களுக்கான எளிமையான திட்டங்களைக் கொண்டுவராவிட்டால் அடிமட்ட மக்கள் அடிமட்ட மக்களாகவே நொந்து வாழவேண்டிய சூழல் தான்.

அன்புடன், 

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *