– முனைவர் முல்லைத்தமிழ்
அழல்வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம்.
அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் அழைக்கப்படுகிறது.
“பின்னெல் நாலிறைகீழ் அரசவர்மம்
பிசகாமல் அஞ்சிறை கீழ் அழல்வர்மம்”.
– வர்ம அகஸ்தியசாரி
“சுகமான மண்ணீரல் பதியின் பின்னே
சொல் நுறுக்கெல் ஓர் விரலின்சார்வில் தானே
திரமான அழல் வர்மம்”.
– வர்ம குருநூல்
மேலும்,
“தொகுப்பான அழல் வர்மம் கொண்டுதானால்
சொல்லுகிறேன் அழல் மீறிவுடல் மயங்கும்
வகுப்பான இளைப்பிருமல் அதியமாகும்
வகையான நாழிகை தான் ஏழதாகும்
தொகுப்பான அழல் மீறி ஜன்னியுண்டாம்
சொல்லுகிறேன் கடிகையது கடந்துதானால்
வகுப்பான அடங்கலது பார்த்து செய்து
வகையான ஏறண்டத்தெண்ணெய்கொள்ளே”.
– வர்ம அகஸ்தியசாரி
“சுகமான மண்ணீரல் பதியின் பின்னே
சொல் நுறுக்கெல் ஓர் விரலின் சார்பில் தானே
திரமான அழலாடி காந்துந் தேகம்
திமிராகும் கரசூலை வாதமாகும்
வரமான ஆதாரம் கிடுங்கும் மூல
வாசி சுற்றிக்கறங்கி குண்டலியோ சுண்டும்
அரமான பிரமை சுளுக்கயதி கைகால்
அயர்ந்து சன்னிவாதம் வரில் அபத்தந்தானே”.
– வர்ம குருநூல்
எனவும்,
“அபத்தமுறும் அழல்வர்மம் அடர்கள் மாற
தொடர்புறும் வாய்வுஅவுசதங்கள் பலதும் வேணும்
பவத்தமுறும் பவனமதில் அனலெழும்பி அலைகடல்
வற்றினார்போல் வறட்சையாகுமிக்குணங்கள்
உவத்தமுற மாறுதற்கறிந்தடவுமுறையடங்கலுற
வாரிகோரி வன்பள்ளை கால்கைவெள்ளை
சிவத்தநிற உள்ளியினால் உணக்கல் மாறும்
உள்ளபடி தாமரையின் குடிநீர்கொள்ளே”.
– வர்ம குருநூல்
“ஆனந்தமான அரச வர்மம் ஐவிரல் கீழ்
அழல் வர்மம் கொண்டுதானால்
ஊனந்தமான உடலயரும் தளர்ச்சையாகி
உறுதியுடன் அழல் மிகுந்திளைப்பு
ஈனந்தமான இருமலுடன் கை கால் கோச்சும்
இளக்குதற்கு இதமாக பின் வாரி முன் கோரி
நானந்தமான நாழிகை ஏழின் முன்னே நலமுடனே
தடவியே நல்மருந்தும் செய்யே”.
– வர்ம குருசூட்சம்
குறிப்பிடுகிறது. மேலும்,
வன்மம் கேள் அழல் ஆக்குமாம் அழல்தனை
வன்மம் கேள் அழல் மூன்றாங் கடந்தனில்
வன்மம் கேள் புயத்திடை நடுவிலொன்றாம்
வன்மம் கேள் நட்டெல் நடு சார்பிலுமாம்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அழல் எனும் வன்மம் தன்னைக் கேட்கில் உடல் முழுவதும் அழலாகி சூட்டினை மிஞ்சிடச் செய்யும். அத்தகைய அழல் வர்மமானது உடலில் மூன்று இடத்தில் உள்ளது. இருபுயங்களுக்கும் நடுவில் ஒன்று, நடுமுதுகில் ஒன்று, நடுமுதுகினை சார்ந்து ஒன்று என மூன்றுமாகும்.
வன்மமழல் மூன்றுக்கும் குணமேயொன்றாம்
வன்மதலம் அஃதொத்து சித்து குணமாம்
வன்மமது கொண்டவுடனழலே மிஞ்சும்கூறு
வன்மமதால் அசதியுடன் விறைத்திடுங்காணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அழல் வர்மங்கள் மூன்றின் குணங்களும் ஒன்றாகும். எனினும் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து சிறுகுண பேதங்கள் தோன்றும். இந்த வர்மம் கொண்டவுடன் உடல் முழுவதும் அழல் மிஞ்சி அசதியுடன் உடல் நடுக்கம் உண்டாகும் என்பதாம்.
காணுறும் வன்மமழல் வலிமையுறகொள்ளில்
கூனுறும் குடக்கமுடன் வியர்வை தாகமும்
வேணுறும் மயக்கமுடன் தளர்ச்சையச்சம்
நாணுறும் சன்னியுடன் நடுநடுங்கும்தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அழல் வர்மம் வலிமையாய் தாக்கம் கொண்டால் நிமிரொண்ணா வலியுடன் மனமும் உடலும் பேதலித்து வியர்வையும், தாகமும் உண்டாகும். மயக்கமும், தளர்ச்சையும், அச்சமும் தோன்றி உடல் நடுநடுங்கும் என்பதாம்.
அழல்வன்மம் அச்சமுடன் காம இச்சையாம்
அழலதனால் தாகமுறும்தளர்வும் தோன்றுமஃது
உழற்றிவிடும் பலபிணியால் தூக்கமறும்நினைவு
துழமையுறும் துண்துணிப்பும் போமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அழல் வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு முறையான மருத்துவமுறைகள் கையாளாவிட்டால் பிற்காலங்களில் அச்சவுணர்வும், அடிக்கடி காம உணர்வும், தாகமும், தளர்ச்சையும் உண்டாகும். மட்டுமன்றி, பல பிணிகள் தோன்றி தூக்கம் கெடும். நினைவு குன்றும், உடல் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையையும் இழந்துவிடும் என்பதாம்.
வன்மம் அழலைத் தூண்டிடிலோ அதிகத்தாகம் நிலைவுண்டாம்
குன்மம் போலேக் காந்தலுறும் கொடிய வலிகள் போக்கிடுமாம்
தன்மம் சன்னி மயக்கமுடன் தளர்ச்சி அச்சம் போக்கிடுமாம்
நன்மம் நினைவும் தான்பெருகி நலமே ஆகும் என்னலுமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
அழல் வர்மத்தை தூண்டினால் அதிகமான தாகம் குறைவடையும். குன்மம் போலே உடலில் தோன்றும் காந்தல் வலிகள் மாறும். கொடிய வலிகளையும் போக்கும். சன்னி, மயக்கம், தளர்ச்சி, அச்சம் போக்கி நினைவாற்றலையும் பெருக்கிவிடும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், வயறு ஊதும், மூச்சடைக்கும், இருமல் உண்டாகும், உடலெங்கும் அழல் தோன்றி அசதியுடன் வியர்வையாகும். வலியும் வீக்கமும் அதிகரித்து ஜன்னி உண்டாகும், மீண்டும் மயக்கம் உண்டாகும். மாத்திரை மிஞ்சிக்கொண்டால், மயக்கமும், ஜன்னியும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். இதற்கு ஏழு நாழிகைக்குள் சிறந்த பரிகாரம் செய்யவில்லையெனில், பல்வேறு பின்விளைவுகள் உண்டாகும்.
இவ்வர்மம் இளக்குவதற்கு உச்சியில் தட்டி, கழுத்துறை தடவி, புயத்திலிருந்து முன்னும் பின்னும் கத்தரிக்கோல் மாறலாக தடவி, அடங்கல்களை தூண்டி, பக்கதாரை வழியே நன்றாகத் தடவி, மேலும் கீழும் ஏற்றி இறக்கி, வர்மாணி தடவுமுறைகள் செய்து, வர்மாணி அடங்கல்களையும் தூண்டிவிட குணம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்திற்கு சரியான பரிகாரம் செய்யாவிடில், உடலெங்கும் எரிச்சலும், எப்போதும் சுரம் அடிப்பது போன்ற உடல் சூடும் வேதனையும் உண்டாகும். மேலும் தொடர்ந்து உடல் தளர்ச்சை தோன்றி மூலாதாரத்தில் வாயு சுழன்று மலக்கட்டு உண்டாகும். பித்துபிடித்தவன் போல் மனக்குழப்பமும், அச்சமும் உண்டாகி பிரமை தோன்றும். உடலெங்கும் கொழுத்தும், கோச்சலும் அதிகமாகி சிலருக்கு ஜன்னி உண்டாகி உடலெங்கும் வீங்கி அசாத்தியமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, அதிகச் சூடு, ஜன்னி, மனநோய்கள், இதயநோய்கள், வயிற்றுவலி, தொண்டைவலி, நுரையீரல்நோய்கள், நாள்பட்ட இருமல் போன்ற நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply