நதி  கற்று தரும் பாடம்

நதி  கற்று தரும் பாடம்

  • By Magazine
  • |

 – சஜிபிரபு மாறச்சன்

விரிந்த வானம், பரந்த நீலக்கடல், கனி தரும் மரம், வீசும் காற்று, எரியும் நெருப்பு, ஓடும் நதி என்று எவ்வளவோ வளங்களை இப்பிரபஞ்சம் நமக்கு அளித்திருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றையும் நாம் ஊன்றி பார்த்து உள்ளம் தேய்ந்தால் எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை நாம் அவற்றிடம் கற்றுத்தேர்ந்து, அறிவுத் தெளிவை நாம் அடையலாம்.

ஓடும் நதி நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, நான்கு வேதங்களும் பதினெட்டு புராணங்களும் கூட சொல்லித் தருவதில்லை.

நதியின் தொடக்கம் முதல் கடலை கட்டித் தழுவும் அதன் கடைசிக் கணம் வரை, ஒவ்வொரு நிலையையும் நம் நெஞ்சில் நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால், அது நமக்காக நடத்தும் பாடம்  என்று நன்றாக புரியும்.

பிறக்கும் போது எந்த நதியும் பிரவாகமாக பெருக்கெடுப்பதில்லை. சிறிய நீர்ப் பெருக்காகவே வாழ்வை தொடங்குகின்றன. பிறந்த இடத்திலேயே நதி தேங்கி நின்று விடுவதில்லை. அப்படி நின்றுவிட்டால், அது நாறும் குட்டையே தவிர அது நதி அல்ல. ஒவ்வோர் அடியாக முன்னோக்கி நகர்வதே வாழ்வின் வளர்ச்சி. அது பிறந்த இடத்திலிருந்து முன்னோக்கி நடக்கிறது. தானாகவே எந்த நதியும் பெருகிவிடாது. செல்லும் வழியில் நீரோடைகளும், சுனைகளும் சேர்ந்தால் தான் நதியின் வெள்ளம் பெருகி வேகம் கூடும்.

உயர்ந்த மலையில் பிறக்கும் நதி, அருவியாக இறங்கி தாழ்ந்த நிலத்தில் பாய்ந்து, உயிர் வளர்க்கும் உணவுக்கு ஆதாரமாகிறது.

எல்லா உயிர்களுக்கும் நானே ஆதாரம் என்று அது ஆணவம் கொள்ளாமல் கடமையை செய்யும் கர்மயோகியாக தன் போக்கில் தளராமல் நடக்கிறது. எந்த பயணமும் தடையில்லாமல் நடப்பதில்லை.

சோதனை இல்லாமல் சாதனை சாத்தியமில்லை. நதியின் பாதையில் மலையும், மேடும், மரமும், பாறையும் தடுப்புச் சுவர்களாக எதிர்த்து நிற்கின்றன. தகர்க்க முடிந்த தடைகளை தகர்த்து, தகர்க்க முடியாத வன்பாறைகளை எதிர்த்து மோதி ஆற்றலை சிதறவிடாமல் பணிந்து கொடுத்து, சுற்றி வளைந்து, நதி தனது பயணத்தை தொடர்கிறது.

தடைகளை கண்டு கலங்கி நின்று, செய்வதறியாமல் வந்த வழியில் திரும்ப நினைக்கும் நதி எங்குமில்லை. தனது பயணத்தில் எந்த இடத்திலும் நதிக்கு இளைப்பாறுதல் இல்லை. உனது இலக்கை அடையும் வரை ஓரிடத்திலும் தயங்கி நின்று விடாதே என்ற விவேகானந்தரின் அற்புத மொழிக்கு ஆதர்சமே நதியின் பயணம் தான்.

எந்த தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருப்பது தானே இயற்கையின் விதி. இதை நதி நன்றாகவே அறியும். அதனால் தான் வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவோடு, எந்த குறையும், புலம்பலும் இல்லாமல் தனது தனித்துவத்தைக் கலைத்து அமைதியாகக் கடலில் கலந்து விடுகிறது.

எப்பேர்பட்ட ஞானியும், மேதையும் இளம் பருவத்தில் சிறிய நீர்ப்பெருக்கை போல் மிகச் சாதாரணமாகவே காட்சி தருகின்றனர். நெஞ்சில் நேர்ந்து கொண்ட வாழ்க்கை இலட்சியங்களை அடையும் வரை, இளைப்பாறுதல் இன்றி நதியை போல் பயணத்தை தொடருங்கள். வெற்றி உங்களுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *