“வேரறுந்த கல்வி…விலைக்கு விற்கப்படும் கல்வி…”

  • By Magazine
  • |

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் அவர்களை வைத்திருக்கத் துடிக்கும் ஒரு சிலரின் ஆர்வங்கள் மிகமிகச் சிறிய அளவினரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். புல்வெளியும் மரங்களும் போல் காட்சியளிக்கும் வாழ்க்கை நிலை.

இளைய தலைமுறைகள் என்ன சாப்பிடுகிறோம்… எதற்குச் சாப்பிடுகிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் உண்ணும் உணவு வகைகள்… ஆயிரக்கணக்கான இரசாயனங்களினால் சுவையூட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் புதிய புதிய அவதாரங்கள் சந்தைகளில் சந்தடியின்றி விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இலாபநோக்கையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், குழந்தைகள், பெரியவர் எனும் பாகுபாடின்றி புகழ்வாய்ந்த விளம்பரங்களால் அவர்களைக் கவர்ந்து விடுகின்றனர். விழிப்புணர்வில்லா மக்களை, விழிப்படையாமல் பாதுகாக்கும் பல்வேறு தலைகீழ் நெறிகளையே எல்லோரும் கடைபிடித்து வர வேண்டும் எனும் அரசியல் நோக்குடைய பல திட்டங்கள் கூட இந்த விழிப்புநிலை அடையாமைக்கு காரணமாகின்றன. உயர்கல்வி கற்றவர்கள் ஊதியத்தொகையின் மதிப்பினை நோக்கி மட்டுமே பயணிப்பதால் சமூக விழிப்புணர்வுக்கு ஏதோ ஒரு சிலர் மட்டுமே பங்களிக்கின்றனர். மீதி பேர் உயர்மட்ட மேழைகளின் (பணக்காரர்களின்) சட்டைப்பைகளில் சங்கமமாகி அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான அதி மேதாவிகளாகி விடுகின்றனர்.

கல்வி வளர்ச்சி என்பது வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கான மக்களை பெருவாரியாக உற்பத்தி செய்வதால், வேலையில்லா திண்டாட்டம் பெருகி ஐந்துக்கும் பத்துக்கும் அல்லோலப்படும் சூளல் ஏற்படுகிறது. இந்த சூழலைத் தக்க வைக்கத் துடிக்கும் மேழைகளை அரசும், அதன் சார்புடைய அதிகாரமும் வலுப்படுத்தி வருவதும், வலுப்படுத்த துடிப்பதும், மறைமுகமாக மக்களை வஞ்சிக்கும் செயல் என்பது விரல்விட்டு எண்ணும் அளவில் உள்ள ஒரு சிலராலேயே புரிந்துகொள்ள முடிகிறது. அரசு திட்டங்களும் அங்கிருக்கும் ஓட்டைகளும் ஏழைமக்களுக்கு ஒருபோதும் உதவாது என சலித்துப் பேசும் தெருவோரப் பேச்சுகள் கூட மனதை வருத்துவதாகவே உள்ளது.

இந்தியாவில் அன்றாடம் நடைபெறும் ஆக்கிரமிப்புகள், தீவிரவாத தாக்குதல்கள், மதமொழி வெறித்தனங்கள், சாதியப்படுகொலைகள், ஆணவப் படுகொலைகள், கடன் தொல்லையால் ஆயிரங்காலத்து பயிர்களாய் வாழவேண்டிய பிஞ்சுகள், இளசுகள் என தற்கொலைக்குள் தூக்கி வீசப்படும் நிலை.

தேர்தல் அச்சத்தால் தூண்டப்படும் கொலைகள் ஏன் என்றே புரியவில்லை. நெஞ்சம் பதைக்கிறது. சீரற்ற கல்வி மனிதர்களை வேரற்ற மரமாக்கிமவிட்டன. எதற்கும் துணிந்து நில், நேர்மையாக வாழக் கற்றுக்கொள் என வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் துணிந்து நின்று கேள்வி கேட்டவன் சமுதாய சாக்கடைகளால் நாறடிக்கப்படுகிறான் அல்லது நாசமாக்கப்படுகிறான்… நொடிப்பொழுதில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்ட நல்ல இதயங்கள் நாட்டுக்காக துணிந்து நின்றால் நடமாட முடியாமல் முடக்கப்படுகின்றன. வேரறுந்த கல்வி… விலைக்கு விற்கப்படும் கல்வி… இதைத்தான் செய்யும்.

திறமைகள் மதிக்கப்படுவதில்லை… மாறாக விலைக்கு வாங்கப்படுகின்றன. மக்களை மடையர்களாகவே வைத்திருக்கத் தூண்டும் பல்வேறு பிரிவினை கலாச்சாரங்களும் அதனையேத் தூண்டும் பிரச்சாரங்களும்… பாவம் இளைஞர்கள்-இளைஞிகளாவது சிந்திக்கத் தொடங்கினால் துளியளவேனும் விழிப்புணர்வு அடைய வாய்ப்புண்டு என நம்பலாம். ஆனால் ஒன்று நல்ல அரசியல் தலைவர்கள் சிலர் இருக்க… மற்றவர்களும் பலர் இருக்கின்றார்களே!

இந்திய உழைப்பாளர்களின் உடல்திறனையும், உள்ளத்திறனையும் உடைத்து பலவீனப்படுத்த திட்டமிட்டு அயல்நாட்டு தீவிரவாத அமைப்புகளும், கடத்தல் கும்பல்களும் பல்வேறு வகையான உணவுகளையும், போதைப்பொருட்களையும், பாக்கு, புகையிலை, மிட்டாய்கள் என அண்டை நாடுகள் வழியும், துறைமுகங்கள் வாயிலாகவும் கடல்வழி மூலமும் இந்தியாவுக்குள் கொண்டு வருவது சர்வ சாதாரணமாகி விடுகிறது. துறைமுகங்களில் கோடிக்கணக்கான மதிப்புடைய போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. அரசும் அக்கரையோடு செயல்படுகிறது. ஆனாலும் மக்களிடையே, உழைக்கும் உழைப்பாளர்களிடையே விழிப்புணர்வில்லையே.

எலிக்கு இரை வைத்து பிடிப்பது போன்று இந்திய உழைப்பாளர்களை பொறி வைத்து பிடித்து அவர்கள் உடல் நலத்தையும், உழைப்பையும் உருக்குலைக்கும் திட்டங்கள் இன்னும் அவர்களால் உணரப்படவில்லையே என்பது தான் அவர்களின் அறிவின் ஊனம். போதைப்பாக்குகளையும், புகையிலைகளையும் அன்றாடம் பயன்படுத்தும் அறியாமை நிறைந்த உழைப்பாளர்கள் இது அன்னியர்களால் சதிசெய்து ஏவப்பட்ட விசம் தோய்ந்த அம்பு என்பதை ஏன் புரிந்துகொள்ள மறக்கிறார்கள்? அந்த அளவு விழிப்புணர்வை இழந்துவிட்டார்களா? புரியவே முடியவில்லை. போதைப்பாக்குகளும், புகையிலையும் மற்றும் உயர் ரக போதைப்பொருட்களும்… படிப்படியாக மூளையை மழுங்கடிக்கச் செய்யும், கண்களைப் பாதிக்கும், இரைப்பை, குடல் எனப் பாதித்து, உடல் தசைகளை பலவீனப்படுத்தும். மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கோபம், ஞாபகமறதி, எளிதில் வியர்வை தோன்றி உடலின் ஆற்றல் இயக்கிகளான கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்றவைகளின் இயக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இளமையிலேயே முதுமைநிலைத் தோன்றும், ஆண் கருக்கள் சிதைவடையும், எலும்புகள், மூட்டுகள் சிதைவடையும், ஆண்மை குறைந்து வலுவிழக்கும். முதலில் வலிமை போல் ஒரு பொய்நிலை தோன்றி இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விடும். இப்படி ஆயிரம் ஆயிரம் தீமைகள்… இதனை உழைப்பாளர்கள் உணரவேண்டும். அதற்கு கிராமந்தோறும் தன்னார்வலர்கள் முயலவேண்டும். அரசு அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இந்திய நாடு உண்மையாகவே முன்னேற வேண்டுமென்றால் அவர்கள் மேல்நோக்குப் பார்வை உடையவர்களாக வேண்டும். அறிவை அறிவியலால் திறக்க வேண்டும். கீழ்நோக்கிப் பார்த்து மேல்நோக்கி எழ வேண்டும்.

அன்புடன், 

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *