வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்

வரவுக்கு மீறி செலவுகள் செய்தால்

  • By Magazine
  • |

வெ.சின்னசாமி

ஆனமுதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும்

                                     தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு- அவ்வை

                இன்று ரொக்கம் நாளை கடன் என்றும், கடன் அன்பை முறிக்கும் என்றும் சின்ன பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடை வரையிலும் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் கடனாளி ஆகாதே, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்காதே என்று எச்சரிக்கை விடுக்கிறது.

வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் இரண்டணா கடனில் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை அவமானமான கருதி தங்கள் வருவாய்க்குள்ளேயே இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்க்கையை கட்டமைத்தனர்.

இல்லத்தரசிகளும் ‘சிறுவாடு’ சேர்த்து வைத்து அந்தப் பணத்தை அவசர அவசிய தேவைக்கு பயன்படுத்தினர். சுப நிகழ்ச்சிகளையும் ஆடம்பரமின்றி நடத்தினர்.

சமீபகால வாழ்க்கைமுறையில் இருபாலரும் வீண் செலவுகளையும், தேவையற்ற பொருட்களையும் கடன் கிடைக்கிறதே என்பதற்காக வாங்கி குவிக்கின்றனர். போதாதற்கு என்னிடம் மூன்று கடன் அட்டை இருக்கிறது என்று கெத்து வேறு காண்பிக்கின்றனர்.

ஒருவன் தனக்குரிய வருமானத்தை விட அதிக அளவில் செலவு செய்தால் மானம் இழப்பான், மதி இழப்பான், திருடன் என்று பழிக்கப்படுவான். நல்லவர்களுக்கும் பொல்லாதவன் ஆகி விடுவான். ஏழு பிறவியிலும் தீயவனாய் விளங்குவான் என்கிறாள் அவ்வைப்பாட்டி.

கடன்படாத ஏழ்மை பெரும் செல்வம்’ என்கிறது அரேபியப் பழமொழி. மனநிறைவு என்பது இயற்கையிலேயே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை என்கிறார் கிரேக்கஞானி சாக்ரடீஸ்.

வருவாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. செலவினங்கள் வருவாயை விட அதிகமாகாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற உயரிய பொருளாதாரச் சிந்தனையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

  ஆகாறு அளிவிட்டித் தாயெனுங் கேடில்லை

                போகாறு அகலாக் கடை

என்று எடுத்துரைத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை. அந்நூல்களும், அறிஞர்களும் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறியாதெனில் வருவாய்க்குள் வாழப்பழகு. கடன் வாங்கி கௌரவத்தை இழக்காதே. சேமிப்பை கைக்கொள். வாழ்க்கை உனதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *