மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்

மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்

  • By Magazine
  • |

– முனைவர் மோகனா, பழனி

நண்பர்களே..இப்போது, நெகிழி இன்றி நம் வாழ்க்கை இல்லை எனற நிலையில் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நெகிழியின் துணுக்களான, மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகிய இரண்டும் மனித உயிரணுக்களில் (விந்தணுக்கள்) நுழைந்திருப்பது என்ற தகவல் நம் இதயத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணும் விஷயம் ஆகும். இது ஏன் ஏற்பட்டது இதன் காரணி என்ன? இதனால் விளையும் பாதிப்புகள் என்ன ? என்பதை அறியும்போது இன்னும் அதிக மன அதிர்வை உண்டாக்குகிறது.

ஆம், மனித விந்துவில் நானோ நெகிழித்துண்டுகள் மற்றும் நுண் நெகிழிதுனுக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது , இது சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்பதையும், ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்த கவலைகளை எழுப்புகிறது என்பதையும் குறிக்கிறது.  ஆண் இனப்பெருக்க அமைப்பை மாசுபடுத்தி விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

உடலுக்குள் ஊன்றும் நெகிழி என்பது – மனித இனப்பெருக்கத்தின் மீதான மாயச்சாயல்

“இனி மனிதன் நெகிழியோடு பிறக்கிறான்;

உயிரோடு நெகிழியோடு வாழ்கிறான்!”

மனிதன் நெகிழியை உடைத்தான்,-இன்று

நெகிழி மனிதன் உயிரை உடைக்கிறது..

அழிக்க அவதாரம் எடுத்துள்ளது..

இது வெறும் கவிதையல்ல. இன்று உலகம் எதிர்நோக்கும் கசப்பான உண்மை. சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் மனித இனத்திற்கே ஒரு பெரிய எச்சரிக்கையை எழுப்புகின்றன – மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastics) மட்டும் அல்ல, நானோ பிளாஸ்டிக் (Nanoplastics) துணுக்குகளும் கண்டறியப்பட்டுள்ளன. மிகச் சிறிய ஆனால் மிகக்  கொடிய நுழைவுகள் –

மைக்ரோ & நானோ பிளாஸ்டிக் என்றால் என்ன?

மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துண்டுகள்.. நானோ பிளாஸ்டிக் என்பது இதைவிட மில்லியன் மடங்கு சிறியது – அதாவது, மனித  செல் அளவுக்கும் கீழே!

இவை கண்ணுக்குத் தெரியாமல் நாம் சுவாசிக்கும் காற்றிலும் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் இப்போது கலந்து இருப்பவை.

எப்படி இவை விந்தணுக்களில் நுழைந்தன?

உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பேக்கிங், பாட்டில்கள், கடல் உணவுகள் மூலமும், காற்று மாசு, நாம் சுவாசிக்கும் தூசி மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் வாயிலாகவும். உடலுக்குள் நுழைந்துள்ளன,

 உடலுக்குள் நுழைந்த நானோ அளவானவை இரத்தத்தை கடந்து விந்தணுக் கட்டமைப்புக்கே நுழையக் கூடியவை. அத்தனை வலிமை உடையவை அவை.

இந்த நானோநெகிழித்  துணுக்குகள், மனிதனின் விந்தணுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும்.? விபரீதம்தான். அந்த நுழைவு என்பது நடத்தும் களியாட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

மனித இனப்பெருக்கத்திற்கான தாக்கங்கள்

1.விந்தணு எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

                விந்தணுக்களின் இயக்கம்மற்றும் செயல்பாடு  குறையும்; முடிவில் அவைகளின் பணி புரியும் திறன் பெரிதும் பாதிக்கப்படும். அதாவது இனப்பெருக்கத் தன்மை குறையும்.

2 DNA-வில் இடர்பாடுகள்

நானோ பிளாஸ்டிக்கள் உயிரணுவின்  மூலக்கூறுகளை உடைக்கும். இது மூலாதார மாற்றங்கள் (mutations) ஏற்படுத்தக்கூடும். DNA-வின் அமைப்பை மாற்றி அமைக்கும்.

3. ஹார்மோன் சீரழிவு

BPA போன்ற வேதிப்பொருட்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரின் இனப்பெருக்க ஹார்மோன்களிலும் சமநிலையை அழிக்கும்.

4. எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பிறவியிலேயே பாதிப்புகள் ஏற்படும்.

இப்படியான பிறவிச் செல்களின் பாதிப்புகள் புதிய தலைமுறைக்கு மரபணுவாக செல்லும் அபாயம் உள்ளது.

5.செல்லுலார் சேதம்

 நெகிழி துகள்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, விந்தணுக்களை சேதப்படுத்துகின்றன மற்றும் குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் குறைந்த தரத்திற்கு வழிவகுக்கும்.

ஓர் ஆய்வில் விந்தணுவில் , நுண் நெகிழி வெளிப்பாடு என்பது விந்தணு செயலிழப்புடன் தொடர்புடையது, இதில் விந்தணு இயக்கம் குறைதல் மற்றும் உருவவியல் அசாதாரணங்கள் அதிகரித்தல் ஆகியவை அடங்கும்

                இது வெறும் அறிவியல் அல்ல; இதில் நம்  சமூகப் பொறுப்பும் கூட இருக்கிறது.  இது ஒரு மனித உரிமை, பெண்கள் மற்றும் ஆண்கள் இனப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த நெருக்கடியான விஷயம் ஆகும். எதிர்கால பரம்பரையை பாதிக்கும்,என்பது மிகவும் ஆபத்தானது. இந்த அமைதியான படையெடுப்பாளர்கள் உலகளாவிய கருவுறுதல் நெருக்கடிக்கும் நீண்டகால சுகாதார அபாயங்களுக்கும் பங்களிக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *