– செல்வி ஞானதாஸ்
குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார்.
கோபமாக அடிக்க ஓங்கிய லத்தியை கீழே வைத்துவிட்டு டேய் எதற்காக திரும்ப பார்த்தாய் என்று 80 வயதுக்கும் மதிப்பு கொடுக்காமல் கேட்டான் 40 வயது பாலா.
குட்டப்பன் தவிக்கும் பார்வையில் பதிலளிக்க தொடங்கினார். நான் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தவன். எனக்கு அழகிய அன்பான மனைவியும், நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இரண்டு ஆண் பிள்கைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
நிறைய சொத்துக்களும் உண்டு. அனைத்தையும் நன்கு பராமரித்ததுடன் கடின உழைப்பால் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு குறையும் வைக்காமல் வாழ்ந்து வந்தேன். பிள்ளைகள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினர். யாரும் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நல்ல குணத்துடன் வளர்ந்தனர். அவர்களை நினைத்தாலே எனக்கு பெருமையாக இருக்கும். நன்கு படிக்க வைத்தேன்.. வேலையும் கிடைத்தது. நல்ல வரன்களை பார்த்து திருமணத்தை முடித்து விட்டேன். நான்கு பேருக்கும் குழந்தைகளும் பிறந்தன.
பாலா குறுக்கிட்டு நல்லா தானே இருந்திருக்கிங்க. பின்பு ஏன் திருடப் பார்த்தீர் என்று கோபமாக. தொடர்ந்தார் குட்டப்பன் ஒரு காலத்தில் என் மகன்கள் என் பேச்சுக்கு எவ்வாறு மறுபேச்சு பேசவில்லையோ அதே போல் அவர்கள் மனைவி பேச்சுக்கும் மறு பேச்சு ஒன்றும் பேசமாட்டார்கள். என்னை எந்த அளவு நம்பினார்களோ அதே அளவு அவர்கள் மனைவியையும் நம்பினார்கள்.
அப்படி தானய்யா வாழ வேண்டும். அப்போது அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். அவர்களுக்கு அதற்கு தானே திருமணம் செய்து வைப்பது. அவர்கள் தானே இனி உங்களுக்கு உலகம் என்றான் பாலா.
அப்படித்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் பகுத்தறிவும் வேண்டும். அம்மா அப்பாவை பாரம் என சொல்லும் மனைவியை ஏன் எதற்கு என கேட்க வேண்டும். இல்லை என்றால் மனைவி சொல்வது உண்மையா என யோசிக்க வேண்டும். நம்ம அப்பா அப்படி சொல்லி இருப்பாங்களா என்று சிந்திக்க வேண்டும். அதற்கு தான் படிக்க வைத்தது.
என்னய்யா சொல்லுற மனைவியிடம் மகன் சண்டை போடவா சொல்ற. மனைவியை தெய்வமாக மதிப்பவன் தான் உண்மையான கணவன் அவளை எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்றான் பாலா.
மனைவியை நம்ப வேண்டும். அதே போல் வளர்த்த பெற்றோரையும் மறந்து விடக் கூடாது. கோடிக்கணக்கில் உள்ள சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி கொடுத்து விட்டு ஒருவாய் சோற்றுக்காக கையேந்தி நிற்கிறேன். இரு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் இருவரையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட மூத்த மகனிடம் நச்சரித்துக் கொண்டே இருந்தாள் மூத்த மருமகள். மூத்தவன் இளையவனிடம் பேசி இருவரும் சண்டையும் போட்டு முடிவில் நான் மூத்தவன் வீட்டிலும் மனைவி இளையவன் வீட்டிலுமாக பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள். இருவரும் மதில் சுவரும் கட்டினார்கள்.
நாட்கள் சென்றன. பேரக்குழந்தைகளோ, மகனோ, மருமகளோ என்னிடம் பேசுவதே இல்லை.
உன் இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தாயே. உன்னை அவர்கள் பார்க்க மாட்டார்களா என்றார் பாலா கோபமாக.
ஆமாம் அவர்களும் அவர்கள் குழந்தைகள், கணவன் என கணவன் வீட்டிலேயே இருக்கிறார்கள். இங்கு ஏதாவது சொன்னால் பிரச்சனை வரும் என்று நினைத்து ஒன்றுமே சொல்ல மாட்டார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். எதற்கு திருடப் பார்த்தாய் கோபமாக லத்தியை கையில் எடுத்தான் பொறுமை இழந்தவனாக.
நான் திருடவில்லை. என் மனைவியை பார்க்க சென்றேன். மகன்கள் இருவரும் வேலைக்கு சென்றார்கள். அவளை எட்டிப் பார்த்து விட்டு சென்று விடுகிறேன் என கெஞ்சினேன். இப்படி பலமுறை சென்று விரட்டி இருக்கிறார்கள். மருமகள் போலீசில் பிடித்து கொடுப்பேன் என கத்துவாள். நானும் கெஞ்சுவேன். மனைவியும் தவிப்பாள். இந்த வயதில் என்ன காதல் வேண்டிக்கிடக்கு என கேவலமாக திட்டி அனுப்பினாள். மனதிற்குள் ஏதோ தவிப்பு. மீண்டும் ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். அதைத்தான் திருட வந்தேன் என பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்தாள் மருமகள் என அழுதார் குட்டப்பன்.
பாலாவின் கண்களிலிருந்து கண்ணீர் வர இரு கைகளையும் குவித்து மன்னிப்புக் கேட்டதுடன் வேகமாக தன் இரு சக்கர வாகனத்தில் பறந்து தன் இரு தங்கை வீடுகளிலும் இருந்த தன் பெற்றோரை அழைத்து வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருவரையும் கட்டி அணைத்தான்.
குட்டப்பனின் மகன்களை வரவழைத்து கண்டித்து இருவரையும் சேர்த்து வைத்தான். இருவரையும் மனம்நோக செய்தால் சொத்துக்களை திருப்பி எழுதி வாங்குவதாக மிரட்டி விட்டார். பாலாவும் வாழ்வியலை கற்றார்.
Leave a Reply