கே.பி. பத்மநாபன்
உயர்வான உழவரையே போற்றி நாட்டின்
உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்;
அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்
அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்;
இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை
எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்;
வயதான காலத்தில் வாட்டமின்றி
வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.!
சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்
சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்;
புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்
போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்;
இயன்றவரை தாய்மொழியில் கற்பித்தற்கே
ஏற்றபல சட்டமமுல் படுத்த வேண்டும்;
அயல்தேடி இளைஞரெலாம் போகா வண்ணம்
அனைவருக்கும் பணி உறுதி செய்தல் வேண்டும்!
மயலீயும் மதுவினையே ஒழித்துக்கட்டி
மக்கள்தம் உடல்நலனைப் பேண வேண்டும்;
பயமின்றி வீதியிலே எந்நேரத்துக்கும்
பாவையர்கள் பயணிக்கும் காவல் வேண்டும்;
நயவஞ்சகம் செய்தே நிதிகுவிக்கும்
நச்சுமனத்தோரை சிறையடைக்க வேண்டும்;
செயலாக இவைதம்மைச் செய்யும் ஆட்சி
செங்கோன்மை சிறப்புடைத்த அரசே அன்றோ?
Leave a Reply