A. தர்மராஜ் (த.ராசு)
அரவாணிகளையே மூன்றாம் பாலினத்தவர் என்றும், ஊனமுற்றவர்களையே மாற்று திறனாளிகள் என்றும் நாம் அழைக்கிறோம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வதையே கலாச்சாரமாய்க் கொண்டிருக்கும் இந்தியர்களான நம்மில் பாலினத்தவரில் ஆண்பால், பெண்பால் என்று ஏதேனும் ஒன்று என்றில்லாமல் மிக அபூர்வமாக ஒருசில குடும்பங்களில் ஒரு சில குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவராக பிறந்து விடுகின்றனர். குழந்தையாக பிறக்கும் போதே உடனடியாக என்றில்லாமல், ஓரிரு நாள் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் பிறப்புறுப்பில் காணப்படும் வித்தியாசத்தைக் கொண்டு தாயும் தந்தையுமான பெற்றவர்களான அவர்களை ஆணுமில்லாத பெண்ணுமில்லாத மூன்றாம் பாலினத்தவராக அறிந்து கொள்ள வைத்து விடுகிறது.
முழுமையான ஓர் ஆணாகவும் இல்லாமல், முழுமையான ஒரு பெண்ணாகவும் இல்லாமல் இப்படி அபூர்வமான ஒரு மூன்றாம் பாலினத்தவராக ஒரு குழந்தை பிறந்து விடுகிற போது அந்தக் குடும்பத்தில் தாயாகவும் தந்தையாகவும் உள்ளவர்கள் வெட்கத்துக்கு, வேதனைக்கும் உள்ளாகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிள்ளைச் செல்வம் என்று ஒன்று பிறக்கும் போது அங்கு மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் காணப்படாமல், வெட்கமும் வேதனையும் காணப்படுவதாகி விடுகிறது. அந்தக் குழந்தை சில நாட்களில் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் அதற்கென்று உள்ளதாக அறியப்படும் வளர்ப்பிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது.
அரவாணிகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர் அவர்கள் பிறந்த இடத்திலிருந்து தாய் தந்தையரால் ஒதுக்கப்பட்டவர்கள். இன்னும் சற்று பச்சையாகச் சொன்னால் பிச்சையெடுக்கும் படியாக விரட்டி விடப்பட்டவர்களாவர். அவர்கள் தங்களுக்கென்று உள்ள வாழ்வுரிமையை இயன்ற விதங்களில் அனுபவித்து வாழ்ந்து முடிக்கும் விதமாய் அந்தந்த பகுதிகளில் உள்ள மத்திய மாநில அரசுகள் இப்போதுள்ளதை விட இன்னும் உருப்படியான விதத்தில் திட்டங்களை வகுத்து அவர்களை இன்னும் நல்ல விதமாய் வாழ்க்கை வழி செய்ய முன்வரக் கூடும்.
மனித இனத்தவர் ஆனாகவும் பெண்ணாகவும் தனித்தனியாக பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் பல்லாயிரம் ஆண்டுக்காலத்துக்கு முந்திய ஆதி காலத்திலிருந்தே ஆண் பெண் அல்லாத அரவாணி என்ற மூன்றாம் பாலினத்தவரும், ஊனமுற்றோராகிய மாற்றுத் திறனாளிகளும் மிக அபூர்வமான குறைந்த எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையாக இருந்தே வந்திருக்கின்றனர். மனித இனத்தவரில் மட்டுமல்லாமல், பூமியில் வாழ்ந்து வரும் பிற அனைத்து உயிரினங்களிலும் கூட இந்த அரிதான பிறப்பு வேறுபாடுகள் சிறிதான அளவிலேனும் இடம் வகிப்பதாகவே இருக்கும்.
ஆண் பெண் அல்லாத மூன்றாம் பாலினத்தவர் ஆகிய அரவாணிகள் மனித இனத்தவரில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பிறந்து விட நேர்கிறது. அவ்விதக் குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்க விரும்பாமல் இவர்கள் பிறந்த இடத்திலிருந்து மனதில் வேதனை உணர்வுகளுடனேயே ஏதேனும் ஒருவகையில் கடத்தி விடுகின்றனர்.
அரவாணிகளும், ஊனமுற்றவர்களும் நடைமுறை வாழ்க்கையில் மிக அபூர்வமாகவே ஏதேனும் ஒருசில குடும்பங்களில் மட்டும் பிறந்து அவர்களை சோதனைக்கு உட்படுத்தி விடுகிற ஒன்று தான். பிறப்பிலேயே அமைந்து விடுகிற இந்தக் குறைபாடு என்பது சமூக வாழ்வில் மற்ற மனிதர்களோடும் குடும்பங்களோடும் சமத்துவமாய் கலந்து வாழ்வதற்கு வழிவிடாமல் பாதிக்கும் பாதியாகவோ முழுவதுமாகவோ பிரித்து வைத்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சோதனைக்கு உட்படுத்துவதாகி விடுகிறது. கடவுள் ஏன் நம்மை இப்படிப் படைத்து விட்டார் அல்லது ஏன் இப்படி தண்டித்து விட்டார் என்ற மனசாட்சியின் உறுத்தல் எப்போதனும் ஒருமுறையோ அல்லது பற்பல நேரங்களிலுமோ சுட்டிக் காட்டுவதாகவோ சுட்டெரிப்பதாகவோ சுற்றிச் சுழன்று கொண்டிருக்கக் கூடும்.
அரவாணிகளும் ஊனமுற்றோரும் வேறு யாருமல்ல, நம் சகோதர்கள் தான் என்று நாம் ஒரு கணம் நினைத்து மனதில் இருத்திப் பார்ப்போம். அவர்கள் இன்றைய நமது சமூக வாழ்வில் சந்திக்கின்ற தடுமாற்றங்களும் சோதனைகளும் ஒன்றல்ல, இரண்டல்ல, நூறும் உண்டு, ஆயிரமும் உண்டு.
மனித இனத்தவரைப் பொறுத்த வரையில் அரவாணி என்று இனம் காட்டப்படும் மூன்றாம் பாலினத்தவரிலும், ஊனமுற்றோராகிய மாற்றுத் திறனாளிகளிடையிலும் இந்த இருபதாம் நூற்றாண்டாகிய இன்றைய காலத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்கின்ற அவர்களுடைய அனுபவங்களை அவ்விதமான உடல் குறைபாடுகள் எதுவும் இல்லால் சகஜமாய் வாழுகின்ற யதார்த்த உலகில் ஓரளவேனும் நெருங்கிச் சென்று புரிந்து கொள்வது நலமானதாக இருக்கும்.
மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகளைப் போலவே உடல் உறுப்பு வளர்ச்சியில் குறைபாடு உள்ள ஊனமுற்றவர்களையே மாற்றுத்திறனாளிகள் என்று நாம் அழைக்கிறோம். உலக மக்களில் சுமார் 15 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு விதத்தில் உடல் அளவில் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உலக சுகாதார அமைப்பு, பிறவியிலேயே உடல் ஊனம் ஏற்பட்டிருப்போர் இளமையிலோ அல்லது வளர்கின்ற காலத்திலோ ஏதேனும் நோய், விபத்து, முதுமை அல்லது மனநோய் போன்ற காரணத்தாலோ உடலளவிலான ஊனங்கள் ஏற்படலாம்.
வாசகரே! வாருங்களேன்… என்னுடன் சற்றும் நேரம் நாம் வாழ்கிற காலத்தில் நமது சுற்றுவட்டாரப் பகுதியில் ஏதோ ஒரு ஒதுக்குப் பகுதியில் எளிமையான குடியிருப்புப் பகுதியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகின்ற அவர்களில் ஒரு சிலரின் வாழ்நாள் நகர்வுகளை ஒரு அனுபவத்திற்காக நெருங்கிச் சென்று கண்டு வரலாமே.
உங்களில் ஒருவனாகிய நானும் ஒரு மூத்த சகோதரனாய் நின்று அவ்வாறே நினைத்துப் பார்க்கிறேன். வாசகராகிய நீங்களும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டி விரும்பி அழைக்கிறேன்.
ஐ.நா சபையின் முடிவுக்கு ஏற்ப ஊனுமுற்றோர் என்று சொல்வதே மாற்றுத் திறனுடையோர் என்று மாற்றியழைக்கப்பட்டதோடு அதுவரை சமூக நலத்துறையோடு இணைந்திருந்த ஊனமுற்றோருக்கான பணிகளையும் திட்டங்களையும் தனியாகப் பிரித்து மாற்றுத்திறனாளிகள் துறை என்று அவர்களுக்கென்றே தனியாக ஒரு துறையினை தமிழக அரசு உருவாக்கியிருப்பது உலகார்ந்த மனிதநேய உணர்வையும் தனிமனித உரிமைகளையும் பெருமைபடுத்தியுள்ள ஒரு நல்ல சமூக சீர்திருத்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் உள்ளுக்குள் ஏதேனும் மாற்றுத்திறன் இருந்து உடலுறுப்பில் மட்டும் குறைபாடு உள்ளவர்களை என்பது போலவே எந்த மாற்றுத்திறனும் இல்லாதிருந்து, உடலில் ஊனமுற்றோரை மாற்றுத்திறன் படைத்தோர் என்று கருணைப்பார்வை கலந்து மிகைப்பட கூறுவதும் சரியாக இருக்காது. பொதுப்படையான இரண்டு சொல்லாக்கங்களுமே அவர்களிடம் இருக்கக் கூடிய உடல் மற்றும் திறன் சார்ந்த படிமானங்களை சரியாகப் பிரதிபலிப்பவை அல்ல.
பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி, உறுப்புகளில் குறையேதும் இல்லாமல் கச்சிதமாய், அளவெடுத்து படைத்தது போல் முழுமைத் தோற்றம் தருபவர்களிடையிலும் எவ்விதமான ஒரு தனித்திறமையும் இல்லாதவர்கள் இருப்பது போலேவே உடல் ஊனமுற்றவர்களிடையிலும் ஒரு சிலர் எவ்வித தனித்திறமையும் இல்லாதவர்கள் இருக்கவே இருப்பார்கள் என்ற உண்மையை நேர்கொண்ட பார்வையோடு எதிர்கொள்வதில் தயக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ குறுக்கிடத் தேவையில்லை. உறுதிப்படுத்தக் கூடிய உடல்சார்ந்த திறமைகள் என்பவை தேகபலம், வேகநகர்வு, விளையாட்டுத் திறன் என்று ஒன்றிரண்டு மட்டும் தான். மேலும் அவை வெறும் வெளித்தோற்ற தகுதிகள் மட்டும் தான். அனைவருக்கும் பொதுவாக அமையக் கூடிய உள்ளார்ந்த அறிவுகள் திறமைகளோ ஏராளம்! அவ்வாறு அறிவுசார்ந்த பல்வகைப்பட்ட விஷயங்களில் ஊனமுற்றோர்க்கான தகுதிகளையும், உரிமைகளையும்,வாய்ப்புகளையும் கருணைப் பார்வையின்றி நேர்கொண்ட பார்வையோடு முறையாக அங்கீகரித்தாலும் கூட, மற்றவர்களைப் போலவே அவர்களும் சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கருணை வழியில் அல்லாத நேர்வழிப்பட்ட உரிமைகளைத் தானே அவர்களும் விரும்பி எதிர்பார்க்கிறார்கள்!
உடல் ஊனமுற்றோரை அவர்களின் ஊனத்தை மறைப்பது போல், அவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் தனத்திறன் பெற்றோராகவே இருப்பார்கள் என்ற பொருளில் ஒட்டு மொத்தமாக மாற்றுத்திறனாளி என்ற சொல்லால் மிகைபட அழைத்தாலும் நாளடைவில் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கௌரவம் தான் என்பது புரிந்து கொள்ளப்பட்டு ஊனமுற்றோர் என்ற பொருளுக்கு தான் வந்து நிற்கும். கருணையை விரும்பாத போலவே, அப்போது அவர்கள் அதனையும் விரும்பாத ஒருநிலையே வந்து விடக்கூடும். மறைப்பது எதுவும் வெளிப்பட்டுத் தானே தீரும். உண்மைத் தோற்றத்தை மிகையான மகுடச்சூட்டல்கள் ஒரு போதும் மாற்றி விடுவதில்லையே?
நடைமுறை வாழ்வில் நாம் காண்கிற உண்மையின் படி, பிறப்பு வழியில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை என்பதால் ஒரு பிரிவு மக்களை தீண்டத்தகாதோர் என்று வைத்ததால் படிந்து போயிருந்த ஒரு சமூக இழிவை மாற்றுவதற்காக அவர்களை அரிஜன் (கடவுளின் புத்திரர்) என்று மிகைபட கௌரவமாக மாற்றி அழைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் நம் சமூகங்களில் ஜனநாயக சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும் சாதி சம்பிரதாய நம்பிக்கைகள் முற்றிலுமாக மாறாதிருக்கின்ற நிலையில் அரிஜன் என்ற கௌரவ சொல்லாக்கமும் கூட நாளடைவில் தாழ்த்தப்பட்ட நிலையைப் பிரதிபலிக்கும் பொருளையே அது தந்து விட்டது அல்லவா?
அதுபோல், இயல்பாகவே கற்பில் சிறந்து வாழ்ந்து வரும் கணவன் மனைவியர் மீது கற்பரசி என்றும் கற்பரசன் என்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கௌரவங்களை கீரிடமாய் ஏற்றி வைத்துப் பேசினாலும் கூட, அவர்களும் நடைமுறையில் அரசு மரியாதைகளைப் பெற்று விடுவதில்லையே!
ஊனமுற்றோரை மாற்றுதிறனாளி என்று மாற்றி அழைத்தாலும், ஊனம் ஊனம் தான். ஆனாலும் அது சிறுபிள்ளைகள் கூட உடனடியாகக் கண்டு கொள்ளக் கூடிய ஒரு வெளித்தோற்றக் குறைபாடு தான். இவர்களை உடல் ஊனமுற்றோர் என்று நேர்கொண்ட பார்வையுடன் அழைக்கும் போது கூட, அந்த சொல்லாக்கமானது அவர்களில் சிலருக்கோ, பலருக்கோ ஏதேனும் உள்ளார்ந்த ஒரு மாற்றுத்திறன் அமைந்திருக்கும் என்ற இயற்கை வழியிலான உண்மையை சற்றேனும் மறுப்பதாகவே, மறைப்பதாகவோ இல்லை.
உண்மையில் எல்லா மனிதருமே ஏதேனும் ஒரு சிறு அளவிலேனும் குறை உள்ளவர்கள் தான். ஊனமுற்றோர் எல்லோருமே ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்கள் என்கிற உண்மை பொருளை பிள்ளைப் பருவத்தைத் தாண்டிவிட்ட எல்லா மனிதருமே புரிந்து கொள்கிற அறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கும் நிலையில், மிகை கௌரவங்கள் அவர்களுக்கே எவ்விதத்திலும் பெருமை சேர்க்கப் போவதில்லை. எதிலும் எப்போதும் நேர்கொண்ட பார்வைகளில் தாழ்வு இல்லை என்பதோடு அதுவே கௌரவமானது என்பதால், அவ்வித நேர்கொண்ட பார்வைகளைப் பரிந்துரைப்பதே எப்போதும் நிலையான பலன்களைத் தருவதாக அமையும்.
ஆகவே, மாற்றுத்திறனாளிகள் என்ற மிகைக் கௌரவச் சொல்லாக்கத்தைத் தவிர்த்து, உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லாக்கத்தையே நாம் பின்பற்றுவதில் தாழ்வு ஏதுமில்லை. அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளும், வாய்ப்புகளும் ஊழலுக்கு இடமில்லாமல் முழுமையாகச் சென்றடைவதை மட்டும் உறுதிப்படுத்தி, சகோதர பாவத்துடன் அவர்களை சமூக நீரோட்டத்தில் இணைக்கின்ற நேர்கொண்ட பார்வைகளைத் தலைநிமிரச் செய்வதே போதுமானதும், அதிக பொருத்தமானதுமாக இருக்கும். நல்ல விதைகள் கூட பண்டபாத நிலத்தில் விதைத்தால் சரியாக பலன் தருவதில்லை. ஊழல்கள் மலிந்திருந்தால் நல்ல திட்டங்களும், சட்டங்களும் கூட அவற்றின் இலக்குகளை அடைவதே இல்லை.
ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை
இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக ஒரு தனித்துறையை உருவாக்கி அவர்களுக்கென்று பற்பல திட்டங்களை நிறைவேற்றியது தமிழ்நாட்டில் தான்.
தமிழ்நாட்டில் உள்ள ஊனமுற்றோரின் நலம் மற்றும் மறுவாழ்வினை முற்றிலுமாக கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான நலப்பணிகளை மேம்படுத்திப் பார்த்து கொள்வதற்கும், அவர்களுக்கான நெடுநாள் தேவைகளை நிறைவேற்றுகின்ற விதத்திலும் சமூக நலத்துறையின் ஒரு பிரிவாக ஊகமுற்றோர் மறுவாழ்வு ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது.
ஊனமுற்றோருக்கு சமவாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு உரிமைகளை ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 உறுதி செய்கிறது. இதற்கான தடையற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் பங்கெடுப்பதற்கென்று அடையாள அட்டை ஒன்று உள்ளது. இதனை ஊனமுற்றவர்கள் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்திற்கு விண்ணப்பித்து இந்த அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அரசு மருத்துவமனை டாக்டர்கள் மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்திற்கே நேரில் வந்து அவர்களை நேரில் பார்த்து பரிந்துரை செய்கிறார்கள். இதற்காக கண் டாக்டர்கள், காது, மூக்கு, தொண்டை டாக்டர், மனநல டாக்டர், முடநீக்கியல் சிறப்பு டாக்டர் ஆகியோர் மாதத்தில் ஒருவர் வீதம் வருகை தந்து ஊனத்தின் தன்மை அறிந்து சான்றிதழுக்கு பரிந்துரைக்கின்றனர்.
ஊனமுற்றேருக்கான அடையாள அட்டையுடன் ஊனம் தெரியும் புகைப்படம், ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருப்பதற்கான அரசு டாக்டரிடம் பெறப்பட்ட சான்று, ஆண்டு வருமானம் ரூ 24.000-க்கு மிகாமல் இருப்பதற்கான சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகளில் குறிப்பிடதக்கது. மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல். இதை பெறுவதற்கான தகுதிகள். இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால¢ இயங்க கூடியவராக இருக்க வேண்டும். 12 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள். ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரம் வரை. 12 முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு சிறிய மூன்று சக்கரவண்டி. 16 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு பெரிய மூன்று சக்கர வண்டி வழங்கப்படும்.
அடுத்து குறிப்பிடத்தக்க மறுவாழ்வுத் திட்டத்தில் காதொலி கருவி வழங்குதல். இதற்கு அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். 3 வயது முதல் 70 வயது வரை இருக்கலாம். வருட வருமானம் ரூ.30 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
கண்பார்வையற்றோருக்கு கறுப்புக் கண்ணாடி மற்றும் பிரெய்லி கைக்கடிகாரம்.
செயற்கை கால் வழங்கும் திட்டத்தில் விபத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ கால் முட்டிக்கு கீழே துண்டிக்கப்பட்டவருக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தப்படும். தேவைப்பட்டவர்களுக்கு நவீன செயற்கை அவயங்கள் பொருத்துவதற்கான திட்டமும் உள்ளது.
ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் மோட்டார் பொருத்திய வாகனம் வழங்குவதும் ஒன்று. இதைப் பெறுபவர்கள் கல்வி பயிலும் மாணவ மாணவியராகவும் இரு கால்களும் பாதிக்கப்பட்டவர்களாயும், அதே நேரத்தில் இரு கைகளும் நன்கு செயல்படக் கூடியவராகவும் இருக்க வேண்டும். பணிக்கு செல்லும் கடும் ஊனமுற்ற நபர்கள் மோட்டார் பொருந்திய 3 சக்கர சைக்கிள் வாங்கிட மானியம் வழங்கப்படுகிறது. அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் 30 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான சான்றிதழ்களை உரிய முறையில் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் கண் பார்வையற்றவரை கண்பார்வை உள்ளவர் திருமணம் செய்தால் ரூ.25 ஆயிரம் நிதி உதவித்தொகை வழங்குவதும் ஒன்று. இருவருக்கும் அதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும். வயது 18 பூர்த்தியாகி இருக்க வேண்டும். உதவித்தொகை ரொக்கமாகவும், சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 4 கிராம் தங்கம் உண்டு.
மற்றும் கல்வி கற்பதற்கு உதவித்தொகை வழங்குதல், ஆய்வுக்கூட தொழில் நுட்பப் பயிற்சி கணினி பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. கடும் ஊனமுற்றோர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், வேலை வாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது.
மற்றொரு திட்டம் : அவர்கள் சுயவேலை வாய்ப்பு புரிவதற்கு அரசு மானியமாக வங்கிக் கடன் உதவியும் ஒன்று. இதற்கு ஊனமுற்றோர் என்பதற்கு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வங்கிகளில் ஏற்கனவே கடன் பெற்று நிலுவைத் தொகை இல்லாதவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வங்கிக்கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படும்.
பெட்டிக்கடை வைப்பதற்கு கடன் மானியம் வழங்கப்படும். இதற்கு அரசு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம். 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வங்கிகளில் ஏற்கனவே கடன் பெற்று நிலுவை இருக்கக் கூடாது. பெட்டிக் கடைக்கு விலைப்புள்ளி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வங்கிகடன் தொகை 15 ஆயிரம். அரசு மானியம் ரூ.5 ஆயிரம். ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டமும் ஒன்று. 18 வயது முதல் 55 வரை உள்ளவர்கள் இதை பெறுவதற்கு தகுதி உடையவர்கள். நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு உள்ளேயும், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் ரூ.80 ஆயிரத்துக்கு உள்ளேயும் பெறுபவர்களாய் இருக்க வேண்டும். இவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்றுப் பயனடையலாம்.
மேலும், இவர்களுக்கான அரசு உதவித் திட்டங்களில் பஸ் பயணச்சலுகையும் ஒன்று. இந்த சலுகையை பெறுவதற்கு அவர்கள் பார்வையற்றோர் என்பதற்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். ஒரே மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரே வழித்தடத்தில் சென்று வருபவராக இருக்க வேண்டும்.
இவர்களுக்கான நலத்திட்டங்களில் மருத்துவ உதவிகளும் அடங்கும். இந்த மருத்துவ உதவிகளில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிறவியிலேயே பாதங்கள் வளைந்துள்ள குழந்தைகளுக்கு முடநீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு சம்பந்தப்பட்ட ஊனமுற்றவர்கள் விண்ணப்பம் கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
மேலண்ண உதடு பிறவுபட்ட குறைபாடு உள்ளவர்கள் ஒட்டுறுப்பு அறுவை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது.
மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர், புற உலக சிந்தனை அற்றவர் (ஆட்டிசம்) முதலான ஊனமுற்றவர்களக்கு சட்டபூர்வ பாதுகாவலரை நியமித்துக் கொள்வதற்கு உரிய சான்றிதழின் பேரில் வழி உள்ளது. மத்திய அரசு தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 விதிகளின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழுவின் மூலம் கார்டியன் (பாதுகாவலர்) நியமனச்சான்று பெற்றுக் கொள்ளலாம்.
ஊனமுற்றோருக்கான வாழ்வுரிமைச் சட்டத்தில் பாரபட்சமின்மை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதன்படி, சக்கர நாற்காலிகளில் இருக்கிறவர்கள் உட்பட அனைத்து ஊனமுற்றோருக்கும், அரசுப் போக்குவரத்துத் துறைகளாக பஸ், ரயில், கப்பல், விமானம் ஆகியவற்றில் தேவையான வசதிகளைச் செய்ய அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் ஊனமுற்றோருக்கென இட ஒதுக்கீடு செய்துள்ள பணியிடங்கள் பற்றிய விபரங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அளிக்கும். ஊனமுற்றவரின் பணியிடம் காலியாகி அந்த பணியிடத்தை மற்றொரு ஊனமுற்றவரால் நிரப்ப வேண்டிருந்து அந்த வட்டாரத்திலிருந்து மற்றொரு ஊனமுற்றவர் கிடைக்காதிருந்தால் அந்த காலியிடம் ஊனமில்லாத வேறு ஒருவரைக் கொண்டு நிரப்பப்படலாம்.
ஊனமுற்றோருக்கான சிறப்புப் பயிற்சிகள் மற்றும் பணிநியமனத்திற்கான வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.
உடல் ஊனத்தைக் காரணமாக்கி பதவி உயர்வு தாமதித்தல், கட்டாய ஓய்வு ஆகியவை கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது சம்பந்தப்பட்டவர்களால் மேல்முறையீட்டுக்கு உரியது.
ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கவும், வீடு கட்டவும், தொழில் நடத்தவும், சிறப்புப் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கவும், தொழிற்சாலை அமைக்கவும், பள்ளிகள் மற்றம் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கவும் அரசு சலுகை விலையில் நிலம் வழங்கும். மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அரசாங்கமும், உள்ளாட்சி அமைப்புகளும் இம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்.
மாநில அரசு தன்னுடைய பொருளாதார வரையறைக்கு உட்பட்டு ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பார்வையற்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.20 ஆயிரமும், 3 ஆம் இடம் பெறுவோருக்கு 15 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் இடத்துக்கு ரூ.6 ஆயிரமும், அடுத்து ரூ.4500-ம் அடுத்து ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும். 12-ஆம் வகுப்பிற்கு ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. பள்ளிகளின் ஊனமுற்றவர்கள் இருப்பதைப் பொறுத்துதான் இப்பரிசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது.
காது கேளாத மாற்றுத் திறனாளிகளில் 10 – ஆம் வகுப்பில் மாநிலஅளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் இடம் 30 ஆயிரமும், மூன்றாம் இடம் 15 ஆயிரம் வழங்கப்படும். 12- ஆம் வகுப்புக்கு மாநில அளவில் முதலிடம் ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் ரூ.30 ஆயிரம், மூன்றாம் இடம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உபகரணங்கள், கல்வியின் உதவிதொகை குறித்த அரசாணைகள் 1964 ஆண்டு முதலானவை வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2023- ஆம் ஆண்டு வரை 128 அரசாணைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதை வெளியிட்டுள்ளார்.
தொடரும்…
Leave a Reply