நமது மூலிகை மருத்துவர்
கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது.
இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும்.
முலாம்பழச் செடியை விதை மூலம் நடவு செய்யலாம். இது குறுகிய நாட்களில் பயன்தரும் செடி. நடவு செய்து 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.
முலாம் செடியின் காய் பழுத்ததும் ஒரு தனிப்பட்ட கஸ்தூரி மணம் உண்டாகும். ஆகவே இதற்கு ஆங்கிலத்தில் Musk melon என்ற பெயர் உண்டு.
தாவரவியல் பெயர் : Cucumis melo
ஆங்கிலப் பெயர் : Muskmelon
வேறுபெயர்கள் : கிர்ணி, முலாம்
இதில் அடங்கியுள்ள உயிர்சத்துக்கள்
அதிக அளவில் விட்டமின் A , விட்டமின் C சத்து , மேலும் விட்டமின் K, விட்டமின் B1, B3 , B5, B6, B9 போன்றவைகள்.
தாதுசத்துக்கள்
அதிக அளவில பொட்டாசியம் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகசத்து, தாமிரசத்து, மாங்கனீசு, செலினியம்
தாவரவேதிப்பொருள்கள்
Lutein, Zeaxanthin, Citrullin, Crypto xanthine, oxykine, melatonin
பிறசத்துக்கள்
நீர்சத்து, நார்சத்து, புரதசத்து, மாவுசத்து
விதைகளில்
அதிக அளவில் புரதச்சத்தும், omega-3, Fatty acid-ம் உள்ளது.
முலாம்பழத்தின் மருத்துவப்பயன்கள்
1. உடல் சூட்டை தணிப்பதற்கு
முலாம்பழம் கோடைக்காலங்களுக்கு ஏற்ற சிறந்த பழம். இது உடல்சூட்டை தணிக்கும். 80 சதவீதத்திற்கு மேல் நீர்சத்து இருப்பதாலும், ஏராளமான உயிர்சத்துக்கள், தாதுசத்துக்கள் நிரம்பி இருப்பதாலும் கோடைகாலங்களில் வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும்உடம்பிலுள்ள நீர்சத்துக்கள் குறையாமல் பாதுகாக்கிறது.
2. தோல் ஆரோக்கியத்திற்கு
முலாம்பழச்சாறு தொடர்ந்து சாப்பிட்டு வருவது, தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் அதிக அளவில் விட்டமின் Aமற்றும் விட்டமின் C சத்துக்கள் இருப்பதால் தோல் சுருக்கம், தோல் உலர்தல் ஏற்படாமல் பாதுகாத்து தோலை பழப்பழப்பாக்குகிறது. முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது.
முக சுருக்கம் மாறி முகப்பொலிவு உண்டாக்க, முலாம்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவலாம்.
3. கண் ஆரோக்கியத்திற்கு
ஒரு டம்ளர் முலாம்பழத்தில் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் A சத்து அடங்கியுள்ளது. இதில் Beta carotene, Lutein, Zeaxanthin போன்ற கண்பார்வை தெளிவிற்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிக அளவில் இருப்பதால், பார்வை கோளாறை தடுத்து நல்ல பார்வைதிறனை பெற செய்கிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய
விட்டமின் A சத்து போலவே ஒரு டம்ளர் முலாம்பழத்தில் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் C சத்தும் அடங்கியுள்ளது. விட்டமின் C மற்றும் விட்டமின் A சத்துக்கள் இரத்தத்தில் அதிக அளவில் நோய் கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கிறது. ஆகவே நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு தினம் முலாம்பழம் சாப்பிடலாம்.
5. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு
முலாம்பழத்தில் உள்ள விட்டமின் A சத்து தோலில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்து, முடி வறட்சி தன்மை, முடி உதிர்தலை மாற்றி உறுதியாக பழபழப்பாக வளரச் செய்கிறது. Citrullin என்னும் தாவரவேதிப்பொருள் தோலில் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படச் செய்து முடி ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
6. இருதய ஆரோக்கியத்திற்கு
முலாம்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இது அதிகரித்த இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மெக்னீசியம் சத்து சீரான இதய துடிப்பிற்கு உதவுகிறது. அடினோசின் (Adenosine) என்னும் தாவரவேதிப் பொருள் இரத்தம் உறைதலை தடுத்து இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (LDL) சத்தை குறைத்து நல்ல கொழுப்பு சத்தை (HDL) அதிகரிக்கச் செய்து இருதய ஆரோக்கியத்தை பேணுகிறது.
7. கருவின் சீரான வளர்ச்சிக்கு
முலாம்பழத்தில் உள்ள போலேட் (Folate) என்னும் உயிர்சத்து (B9) கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் அதிகமாக உள்ள பொட்டாசியம் சத்து, நீர்கோர்ப்பதை குறைக்கச் செய்கிறது.
8. நல்ல தூக்கத்திற்கு
முலாம்பழத்தில் melatonin என்னும் தூக்கத்திற்கான ஹார்மோன் சத்து இருப்பதால், மூளை நரம்புகளையும், தசைகளையும் தளரச்செய்து நல்ல தூக்கத்தை தருகிறது. இதற்கு முலாம்பழத்தை இரவில் சாப்பிட வேண்டும்.
9. நீரிழிவு நோய்க்கு
முலாம்பழம் குறைந்த அளவில் நீரிழிவு நோயாளர்கள் உண்ணலாம். இதில் உள்ள Oxykine என்னும் தாவரவேதிப் பொருளும், விட்டமின் B6 உயிர்சத்தும் நிரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குறைக்கிறது. மேலும் சிறுநீரக கற்கள் உருவாகமலும் பாதுகாக்கிறது.
10. புற்றுநோய் தடுப்பிற்கு
முலாம்பழத்தில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை வெளியேற்ற உதவும் விட்டமின் A மற்றும் விட்டமின் C சத்தும் மற்றும் Lutein, Zeaxanthin, Cryptoxanthin போன்ற வீரியமிக்க ஆன்டி ஆக்சிடன்களும் இருப்பதால், தினம் முலாம்பழம் சாப்பிடுவது புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு சிறந்தது.
11. நுரையீரல் பாதுகாப்பிற்கு
புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை முலாம்பழம் தடுக்கிறது.
12. சீரான மாதவிடாய்க்கு
மாதவிடாய் காலங்களில் இருநாட்கள் முலாம்பழம் சாப்பிட்டு வர சீரான இரத்தபோக்கு உண்டாகும். வயிற்றுவலி குறையும்.
13. கவனிக்க வேண்டியவைகள்
கர்ப்பிணிகள், மதுமேக நோயாளர்கள் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.
Leave a Reply