இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்

இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்

  • By Magazine
  • |

பேராசிரியர். முளங்குழி.பா.லாசர்

ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர்.

ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். திருமணத்துக்குபின் மணிகர்னிகா லட்சுமிபாய் என அழைக்கப்பட்டார்.

திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின் லட்சுமிபாய் தாமோதர்ராவ் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். எல்லோரும் மகிழ்ந்தனர். ஆனால் குறுகிய காலத்திலே அக்குழந்தை இறந்து போனது. வாரிசான தன் ஒரே மகன் இறந்த வருத்தத்தால் லட்சுமிபாயின் கணவர், மன்னர் கங்காதர்ராவ் நோயுற்றார். மரணமடைந்தார். 26 வயதுக்குள் மகன் மற்றும் கணவரை இழந்தார் லட்சுமிபாய்.

அப்போது வைசிராய் ஆக இருந்த டல்கௌசி பிரபு ஆங்கில ஆட்சி காலத்தில் வாரிசு இல்லாத நாடுகளை தங்கள் வசம் இணைத்துக் கொண்டார். வாரிசு இல்லாத நாடு என்று ஜாண்சியையும் கைப்பற்ற முனைந்தார். ஜாண்சிராணி லட்சுமிபாய் தன் வளர்ப்புமகன் தாமோதர் ராவை வாரிசாக நியமிக்க லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாண்சி நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசு கைப்பற்றிக்கொண்டு லட்சுமிபாய்க்கு 6000- ரூபாய் உதவிப்பணம் வழங்கியது. லட்சுமிபாய் ராணிமகாலில் தங்கியிருந்தார். வெள்ளையனை எதிர்க்க ரகசியமாகப் படை திரட்டி கொண்டிருந்தார். அவரது பள்ளித்தோழன் தாந்தாதோபே அவருக்குத் துணை நின்றான்.

1857- ஆம் ஆண்டு சிப்பாய்க்கலகம் தொடங்கியது. தமிழகத்தில் வேலூரில் நடந்த சிப்பாய் கலகத்தில் வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் ஆங்கிலேயர் அதை எளிதாக அடக்கினர். ஆனால் வட இந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் வீரர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டதால் அதை அடக்க ஆங்கிலேயர் திணறினர். அக்கலகத்தை அடக்குவதிலேயே கவனம் செலுத்தினர்.

நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜாண்சிராணி லட்சுமிபாய் ஜாண்சியை எளிதாகக் கைபற்றி ராணியாய் முடிசூட்டிக் கொண்டார். நல்லாட்சி புரிந்தார். கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுக்க ஒரு எட்டப்பன், மருது சகோதரர்களுக்கு கருத்துடையான், வேலுநாச்சியாருக்கு சிலம்பு ஆசான் வெற்றிவேல், தீரன் சின்னமலைக்கு சமையல்காரன் நல்லப்பன், கோபால் நாயக்கருக்கும், திப்பு சுல்தானுக்கும் உடனிருந்தோர் காட்டிக் கொடுப்பவர்களாக இருந்தனர்.

ஆனால் ஜாண்சி நாட்டுமக்கள் லட்சுமிபாயை உடன் பிறந்த சகோதரியாக தங்களை காக்க வந்த ராணியாக கருதி அன்பு செலுத்தியதால் ஒருவர் கூட அவருக்கு எதிராக வெள்ளையர்களுடன் சேரவில்லை. அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர்.

சிப்பாய் கலகத்தை அடக்கியபின் ஜாண்சி நாட்டைக் கைப்பற்றி, லட்சுமிபாயை உயிருடன் பிடித்து கைது செய்து அவமானப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் ஆங்கிலப்படைத் தளபதி ரோஸ் படையெடுத்துச் சென்றான். ஒன்றரை ஆண்டுகள் கடும்போர் நடந்தது. வெள்ளையர் வெற்றிபெற்றனர். ஜாண்சி நாட்டை கைப்பற்றினார்.

ஜாண்சிராணி லட்சுமிபாய் 20000 படைவீரர்களுடன், தாந்தாதோபே துணைபுரிய தப்பிச்சென்று குவாலியர் கோட்டையைக் கைப்பற்றி குவாலியரை ஆட்சி புரியத் தொடங்கினார். படைபலத்தைப் பெருக்கினார்.

எவ்வளவு முயன்றும் ஜாண்சிராணி லட்சுமிபாயைக் கைது செய்ய முடியவில்லையே என்ற கடும் ஆத்திரத்துடன் வெள்ளையர் தளபதி சர்.ரோஸ், படைத்தலைவன் ஸ்மித் தலைமையில் ஒரு மாபெரும் படையை அனுப்பினான். ஜாண்சிராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்து வா என்று கட்டளையிட்டான்.

அளவுக்கு அதிகமான பீரங்கிகள், துப்பாக்கிகள், காலாட்படை, சிற்றரசர்கள் துணையுடன் கூலிப்படையோடு குவாலியர் கோட்டையைக் கைப்பற்ற வெள்ளையர் வருவதை ஜாண்சிராணி அறிந்திருந்தார். வெள்ளையரை எதிர்த்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தார். மானமிழந்து வாழ்வதை விட சண்டையிட்டு மடிவதே மேல் என எண்ணினார்.

ஆணுடை தரித்தார். செவ்வாடை அணிந்து கொண்டார். குதிரை மேலேறினார். தன் வளர்ப்பு மகனை முதுகில் இறுகக் கட்டிக் கொண்டார். ஒரு கையிலே வாளை ஏந்தினார். மறுகையிலே தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டார். வீரர்கள் மத்தியிலே நின்று வீரவுரை நிகழ்த்தினார். கேட்ட வீரர்கள் ஆவேசமடைந்தனர். வீரத்தோடு போருக்குப் புறப்பட்டார்.

ஜாண்சிராணி லட்சுமிபாய் போருக்குப் புறப்பட்ட காட்சியானது காளிதேவியே போர்க்கோலம் கொண்டு புறப்பட்டது போலிருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதினர்.

கடும்போர் மூண்டது. லட்சுமிபாய் இரு கைகளிலும் வாளேந்தி ஆவேசமாக போரிட்டு கொண்டிருந்தார். தாகத்தால் தவித்தார். குதிரையிலிருந்து கீழே இறங்கினார். தண்ணீர் கேட்டார். ஒரு வீரன் ஓடி வந்து ஒரு குவளை தண்ணீர் கொடுத்தான். வாங்கிய அவர் நீ யார் என்று கேட்டார். அவன் நான் இந்தியன் என்றான். யார் படையில் போர் புரிகிறாய் என்று கேட்டார். வெள்ளையர் படையில் என்றான். இந்திய நாட்டில் பிறந்திருந்தும் வெள்ளையன் கூலிப்படையில் பணிபுரிய வெட்கமாக இல்லையா? என்று கூறி தண்ணீரைக் கீழே கொட்டி அவனை விரட்டினார்.

தன் வீரன் கொண்டு சென்ற தண்ணீரைக் குடித்து விட்டு ஆவேசமாகப் போர் புரிந்தார். ஜாண்சிராணி லட்சுமிபாய்க்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று வீரர்கள் அவரைச்சுற்றி

வியூகம் அமைத்து நின்றே போரிட்டனர். வெள்ளை வீரன் ஒருவன் சுட்ட துப்பாக்கிக் குண்டு அவர்  நெஞ்சை துளைத்தது. அப்போதும் இரு வெள்ளை வீரர்களைக் கொன்றுவிட்டு மண்ணில் பிணமாகச் சாய்ந்தார்.

ஏற்கெனவே அவர் கூறியிருந்தபடி வீரர்கள் ஓடிச்சென்று அவரைத் தூக்கி கொண்டு போனார்கள். ஜாண்சிராணி ஆணுடையிலிருந்ததால் வெள்ளையர்க்கு அவரை அடையாளம் தெரியவில்லை. ஜாண்சிநாட்டு வீரர்கள் அவரை ரகசியமாய் தகனம் செய்து அவர் சாம்பல் கூட வெள்ளையர் கையில் கிடைக்காமல் செய்தனர். வெள்ளையர் ஏமாற்றம் அடைந்தனர்.

போர்ப்படை ஒன்றைத்தானே உருவாக்கி, வெள்ளையரை எதிர்த்து ஆறு ஆண்டுகள் போராடி தன் 31-ஆம் வயதில் இம்மண்ணை விட்டு மறைந்தார்.

வீரமங்கை ஜாண்சிராணி லட்சுமிபாய் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிய, இந்திய தேசிய ராணுவம் அமைத்த மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தம் ராணுவ பெண்கள் படைப்பிரிவுக்கு ஜாண்சிராணி படைப்பிரிவு என்று பெயரிட்டு ஜாண்சிராணி லட்சுமிபாயைப் பெருமைப்படுத்தினார்.

இந்தியநாட்டுப் பேற்றோர்களில் பலர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஜாண்சிராணி லட்சுமிபாய் எனப் பெயர் சூட்டினர்.

வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் அவரைப் மிக மிகப் புகழ்ந்து உயர்வாக எழுதினர். மாணவர் பாடபுத்தகத்தில் அவர் வரலாறு சேர்க்கப்பட்டது.

உலக வரலாற்றில் ஜாண்சிராணி லட்சுமிபாய்க்கு நிகரான ஒரு வீரப்பெண்மணி  இதுவரை தோன்றியதுமில்லை. இனி தோன்றப்போவதுமில்லை என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *