வங்கிகளின் நம்பகத்தன்மை

வங்கிகளின் நம்பகத்தன்மை

  • By Magazine
  • |

பழனி அரங்கசாமி

பொதுமக்களும், உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஓய்வூதியம் பெறுகின்ற முதியோர்களும் குடும்ப செலவு போக மீதப் பணத்தை தங்களது வருங்காலத் தேவைகளுக்காகவும், வீடு, மனை, சிறுதொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காகவும் சேர்த்து வைக்கின்றனர். இப்படிச் சேமிக்கின்ற பணத்தை தொடர்ந்து வீட்டில் வைத்திருக்க இயலாது. சிற்சில சமயங்களில் நாமோ, துணைவியாரோ, பிள்ளைகளோ வீண்செலவு செய்திடக் கூடும். திருடர் பயம் வேறு.

தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்குவோரிடம் கடனாகவோ பங்குத் தொகையாகவோ கொடுத்தால், பணம் மீண்டும் வரும் என்கிற உறுதியில்லை. முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் தருகிறேன் என்று கூறி கோடிக்கணக்கில் வசூலித்துப் பின்னர் மறைந்து விடுகின்றனர். வட்டியோ பங்குத் தொகையோ வராதது மட்டுமல்ல முதலே முழுகிப் போய் விடும். பாடுபட்டு சேர்த்த பணத்தை திட்டமிட்டு ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் மோசடிக்காரர்கள் பற்றிய விவரங்கள் செய்தித்தாள்களிலும் வந்து கொண்டுள்ளன. எனவே தான் சட்டதிட்டங்களுக்கும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்கும் உட்பட்டு நடத்தப்பெறும் பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்கிலும், வைப்புத்தொகையிலும், தொடர் வைப்பிலும் பொதுமக்கள் தமது பணத்தைச் சேமித்து வைக்கிறார்கள். இந்தியா முழுதும் உள்ள இத்தகைய பல்லாயிரக்கணக்கான வங்கிகள் பொதுமக்களின் சேமிப்புக்கும் பண பாதுகாப்புக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க வேண்டும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நிதானமான வட்டி விகிதத்தில் தனிப்பட்டோருக்கும், சிறு குறு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் கடன் கொடுத்து நன்மை புரிவதோடு, லட்சக்கணக்கான அலுவலர்களுக்கும், கணக்கர்களுக்கும், மேலாளர்கட்கும் வேலை வாய்ப்பினையும் வங்கிகள் கொடுத்து வருகின்றன. தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்கியவர்களுக்கும், அஞ்சியவர்களுக்கும் நம்பிக்கைக்குரிய புகலிடமாக இருந்தவையே தேசீய மயமாக்கப் பெற்ற பொதுத்துறை வங்கிகள் ஆகும். அடுத்த நிலையில் கூட்டுறவு முறையில் நடத்தப்பெற்று வரும் வங்கிகளையும் கிராமப்புற மக்கள் உள்பட்ட மத்திய தரவர்க்கத்தினர் நம்பி வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் கல்கத்தா என்னும் பெயரில் 1806 ஆம் ஆண்டில் முதன் முதலாகத் தொடங்க பெற்ற வங்கி தான் -ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி இன்றைய நிலையில் நாடு முழுதும் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாவாக 22,500 கிளைகளோடு பணிபுரிந்து வருகிறது. இந்த வங்கியினையும், இதுபோன்று தேசீய மயமாக்கப்பபெற்ற பன்னிரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ரிசர்வு வங்கி கண்காணித்து வருகிறது. நம்நாட்டில் உள்ள வங்கிகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.    பொதுத்துறை வங்கிகள்

2. அரசின் உதவியோடு பணியாற்றும் கூட்டுறவு வங்கிகள்

3. தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்

இவை அனைத்துமே ஏறத்தாழ சிறந்த முறையில் இந்திராகாந்தி பிரதமராக வருகின்ற காலம் வரை சிறப்புடன் பணிபுரிந்து வந்தன. இந்திராகாந்தி நெருக்கடி நிலையை கொண்டு வந்த காலம் முதல் சிறுக சிறுக வங்கித்தொழிலில் நிர்வாக சீர்கேடுகள் தொடங்கிவிட்டன. வங்கி பணத்தை கையாடலாம் என்னும் பழக்கமே இந்திராகாந்தியின் பெயரால் ஸ்டேட் பாங்க்கிலிருந்து எடுக்கப்பட்ட அறுபது லட்சரூபாய் நகர்வாலா வழக்கே ஒரு முன்னுதாரணமாக அமைந்து விட்டது. அது போன்றே தொழில் துவங்குவதாக லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ பணம் கடனாகப் பெற்று, அதனை திரும்பச் செலுத்தாமல் நஷ்டக்கணக்கு காட்டி பெயரளவில் திறந்த தொழிலகங்களைப் பற்பலர் மூடிவிட்டனர்.

வங்கிகளுக்கு இப்படித் திட்டமிட்டே நஷ்டத்தை ஏற்படுத்தியோரில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் அடங்குவர். தொடர்ந்து வந்த வாராக் கடன்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன.

 அண்மையில் திவாலா ஆகிப்போன நியூ இந்தியா கூட்டுறவு வங்கியினை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். வங்கி திவாலா ஆகிப்போனால் அந்த வங்கிக்கு என்று குழுவை நியமித்து ஐந்துக்கு நான்கு பழுதில்லை என்று கருதி ஏதோ ஒரு தொகையை ஏகதேசமாக முடிவு செய்து அதனை வாடிக்கையாளருக்குக் கொடுப்பர். இப்போது அந்தத் தீர்வும் இல்லாமல், எவ்வளவு பணம் சேமிப்பிலோ, வைப்புக் கணக்கிலோ, தொடர்வைப்பிலோ இருந்தாலும் வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் வாடிக்கையாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே இழப்புக்குரிய ஈடாக கொடுக்கப்பெறும். மீதமுள்ள பணம் எவ்வளவு இருந்தாலும் அது தொலைந்தது தான். சேமிப்புப்பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு புறம் விளம்பரம் செய்து விட்டு சேமித்த பணத்தை இப்படி விழுங்கி விடுவது எந்த வகையில் நியாயம் ஆகும்? இது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் எத்துணை அநியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தனிமனித உரிமைக்கு அரணாக இருக்கும் ஜனநாயக நாட்டில் தனிமனித உடைமைக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை அல்லவா?

திவால் ஆகும் வங்கியினை காப்பாற்ற அதனை ஒழுங்காக இயங்கும் வங்கிகளோடு இணைக்கும் வழிமுறைகளை அரசு சிந்திப்பதாக கூறப்படுகிறது. நூற்றைக் கெடுத்தது குறுணி என்னும் பழமொழியை போல சீராக இயங்கும். வங்கிகளும் சீர்குலைந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. மகளிர் குழு, விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயம் பொய்த்துப் போனால் நஷ்ட ஈடு இவற்றோடு நிர்வாகச் சீர்கேடுகளால் கூட்டுறவு வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதுபற்றிய கவலையின்றி சிற்சில மாநிலங்கள் குறிப்பிட்ட தொகையினை இலவசமாக கொடுக்க முயன்றால், மத்திய அரசும் ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து இலவசத்தொகை வழங்குகிறது. ஆம் ஆத்மி அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியவுடன், நாங்கள் டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அளிப்போம் என்று கூறியது மத்திய அரசு. தேர்தலுக்கு முன்போ பின்போ அரசினர் கொடுக்கும் இலவசங்களுக்கென்று வங்கியில் பதிவு செய்து கொண்டோருக்கும் என்று ஏதேனும் ஒரு திட்டத்தில் உதவித்தொகை கொடுக்கப் பெறுகிறது.

இத்தகைய இலவசங்களுக்கு எதிராக மூன்று வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அம்பாணியின் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பெற்ற 16 லட்சம் கோடியினை முழுதுமாகத் தள்ளிவிட்டது பற்றி கேள்வி எழுப்பப் பெற்ற போது பிரதமர் பதிலளிக்க வரவில்லை என்று மூன்று நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது. இப்படி முழுதுமாகவும், சில்லரையாகவும் பொதுமக்களின் பணம் விரயம் செய்யப் பெறுவதால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 87 ரூபாய் அளவுக்குக் கீழிறங்கி விட்டது.

மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்.

என்னும் புறநானூற்றின் பாடற்பகுதியே நினைவுக்கு வருகிறது. இயற்கையே பொய்த்தாலும், நாட்டையாளும் மன்னரே அதற்குப் பொறுப்பேற்று மக்களுக்கு உதவிட வேண்டும் என்பதே பண்டைத் தமிழ்நாட்டின் நிலவரமாக இருந்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில், ஊழலையும், ஒழுங்கின்மையினையும் உரிய காலத்தில் அரசினர் தான் கட்டுப்படுத்தி மக்களாட்சியின் தனித்தன்மையினை நிலை நாட்ட வேண்டும்.

ஒட்டு மொத்தமான இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்தால், வங்கிகளின்  மீதிருந்த நம்பகத் தன்மையை பொதுமக்கள் இழக்க நேரிடுகிறது. அவற்றின் வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் தவறா, தேர்தலையும், ஓட்டுகளையும், மனதிற்கொண்டு இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் தவறா, வங்கி அலுவலர்களின் ஊழல் நடவடிக்கைகளா அல்லது இத்தகைய காரணங்களினால், ஏற்படும் ஒட்டு மொத்தமான சீர்கேடா என்று புரியவில்லை. எப்படியாயினும் பொதுமக்களின் வாழ்வாதாரமாகவுள்ள சேமிப்பினை சீர்குலைப்பதும் நஷ்டப்படுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கெடுத்துவிடும். மக்களை கை தூக்கிவிட்டு, அவர்களுக்கு வாழும் வகைதனை கூறவேண்டிய அரசினரே, வங்கிகளின் நிர்வாகத்தில் குற்றம் புரிந்தோரை விலக்கியும், கடுமையாக தண்டித்தும், வங்கிகளின் சீரான வளர்ச்சிக்குக் கை கொடுத்து அவற்றின் நம்பகத்தன்மையினை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *