அருள்மொழிவர்மன்
வெந்தயக்கீரை, அரக்கீரை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை. கீரை வேணுமா தாயி? தடித்த பெண் குரல் மூடிய கதவையும் தாண்டி காதில் அறைந்தது. ஜானு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவள் ஆறடி உயரம். நல்ல கருப்பு. வெறும் நெற்றி. வெளுத்துப்போன கவரிங் செயின். பழைய புடவை. கீரைக்காரியும் காமாட்சியை அளந்தாள். என்ன தாயி நீதான் இந்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கியா? கீரை வேணுமா. ஜானு கீரைக்கட்டுகளை புரட்டினாள். இது என்ன தங்கமா? பட்டா? புரட்டி பாக்கிறதுக்கு. இந்தா மணத்தக்காளி கீரையை கூட்டு வையி. வாய்புண், குடல்புண் எல்லாம் ஓடியே போயிடும். சரி கட்டு எவ்வளவு?..ம் ஆயிரம் ரூபாயா சொல்லப்போறேன். இருபது ரூபாய்க்கு பதினஞ்சு கொடேன். கீரையை கொடுத்து விட்டு போய்விட்டாள்.
அன்று தொடங்கிய பழக்கம். நெருங்கின உறவுக்காரியாகி விட்டாள். ஒருநாள் ஜானம்மா நீயும் தாத்தாவும் மட்டும் தானா? புள்ள குட்டி இல்லையா? விசாரித்தாள். ஒரு மகள், ரெண்டு பையன்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி ஒவ்வொரு ஊரில் இருக்காங்க. இத்தனை பிள்ளைகள் இருந்தும் நீங்க இரண்டு பேரும் இப்படி வந்து கிடக்கணுமாக்கும்.? சரி அதை விடு. ஜானம்மா மறைச்சு பேசாத. தாத்தா பாவம். இத்தனை வயதுக்கப்புறம் மஞ்சப்பையும், பழைய குடையுமாக வேலைக்கி போகிறார். ஜவுளிக்கடைக்கு கணக்கு எழுதுகிறார். எனக்கு தெரியும் தாயி. “ருக்கு ரெண்டு மகன்களும் ஆளுக்கு ஆயிரம் அனுப்புவாங்க. தாத்தா ஐந்தாயிரம் கொண்டு வருவார். ரெண்டு பேர் கஞ்சி குடிக்க அது போதாதா? சரி உன் கதைய சொல்லேன்.
ருக்கு வெற்றிலைச்சாறு துப்பி விட்டு வந்தாள். சுருக்கு பையிலிருந்து வெத்தலை எடுத்து காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவினாள். சுருட்டி வாயில் ஒதுக்கினாள். என் கதை மணக்குமாக்கும்? குடிக்கார புருசன் செத்துப்போனான். ஒரு மவனை நல்லா படிக்க வைச்சேன். வேலை கிடைச்சதும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். என்னை தலைமுழுகிட்டான். நான் கீரை விற்று வயித்த கழுவுகிறேன்… போதுமா? அடப்பாவமே உன் கதை இப்படியா?
ஜானம்மா எந்த கழுதையையும் நம்பக்கூடாது. நம்ம கையும் காலும் தான் நமக்கு துணை. மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான். அந்த நம்பிக்கை மட்டும் இருந்தா போதும்… மறுநாள் வந்து பேசிக் கொண்டிருந்தான். “ ஏன் ஜானம்மா மன்ணெண்ணை அடுப்பு வச்சிருக்கே? கேஸ் அடுப்பு இல்லியா? மகள் கேட்டா கொடுத்துட்டேன். அது சரி எங்க தெருவில் நாலு ரேஷன் கார்டுக்கு எண்ணை கிடைக்கும். வாங்கி வரவா?”
இவள் யோசிப்பதை பார்த்து ரேஷன் கடை ரேட்டே குடு போதும் என்கிறாள். ரெண்டு பேருக்கும் விட்டகுறை தொட்ட குறைதான் ஜானம்மா. பெத்த புள்ளக எட்டி பாக்காதுகளா? இந்த வீட்டில் தண்ணீர் கிடையாது. தெருவில் போய்த்தான் பிடிக்க வேண்டும். ஜானம்மா தெரு பம்பில் அடிச்சு பிடிக்க முடியுமா உன்னால? எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் தண்ணீர் கேன் போடுறான். அவன் கிட்ட சொல்றேன். தங்கமான தம்பி தண்ணீர் கேன் பையன் தங்கதுரை களையாக இருந்தான். பாட்டி போலீஸ் வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். கிடைச்சவுடனே போயிடுவேன். வாட்டர் கேன் முப்பது ரூபாய். இவள் பேசாமல் இருக்கவும் “சரி இருபது கொடுங்க பாட்டி” என்கிறான். என்னை உங்க பேரனா நினைச்சுக்கங்க.
பாட்டி ரேசனில் நல்ல அரிசி கொடுக்கிறாங்க. கார்டு தாங்க வாங்கித்தரேன். வேறு என்ன பாட்டி வேணும்? சொல்லுங்க. வித்தியாசம் பார்க்காமல் உதவி செய்தான். ருக்கு ஒரு பக்கம் ஜானம்மா ரேசன் கடை சேலை வேட்டி கிடைச்சுது. இதை வச்சுக்க என்றாள். இவள் கண் கலங்கியது. இங்க பாரு நமக்குள்ள என்னா? மக்கமாரு மக எல்லாம் இருந்தும் ஒரு நாதி எட்டிப்பாக்கலியே? ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. துணிப்பார்சலை கையில் திணித்தாள். அழாத ஜானம்மா.
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்கவே ருக்கு எட்டிப் பார்த்தாள். ஜானம்மா தாத்தாவ ஆட்டோவில் தூக்கிட்டு வராங்களே… கடவுளே என்னாச்சு? தாத்தாவின் கடை முதலாளி வேகமாக வந்தார். அம்மா அய்யா திடீர்னு மயக்கமாயிட்டார். டாக்டர் ஊசி போட்டிருக்கார். நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். செலவுக்கு வச்சுக்குங்க. பணம் கொடுத்து விட்டுப் போனார். அதன் பிறகு தாத்தா கண் திறக்கவேயில்லை. உயிர் போய்விட்டதை சாயங்காலம் தான் தெரிந்து கொண்ட ஜானு அய்யோ மோசம் பண்ணிட்டிங்களே என்று அலறினாள். ருக்கு தங்கதுரை தெருக்காரர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்.
ஜானம்மா உம் பிள்ளைங்க மொபைல் நம்பர் கொடுங்க. ருக்கு எல்லோருக்கும் தகவல் சொன்னாள். மூத்த மருமகள் வனிதா கணவன் சிவராமனிடம் அவசரப்படாதீங்க… உங்க தம்பி முதலில் போகட்டும் என்றாள். தம்பி ராகவன் வேகமாக புறப்பட்டான். அவன் மனைவி சங்கரி போனவர் போயிட்டார். நாம் மெல்ல போகலாம் என்று முனகினாள். மகள் வேணி அப்பா என்னை அனாதையாக்கிட்டீங்களே என்று அழுதபடியே ஓடிவந்தாள். கிழடு ரெண்டும் இங்க வந்து மூணுமாசம் கூட ஆகலை. தெருவே கூடி நிக்கிது பாரேன். பெரிய மருமகள் சின்னவளிடம் சொன்னாள். அத்தை பேச்சில் மயங்காதவங்க கிடையாதே.
பதினாறு நாளும் சண்டைதான் இதுவரை ஆன செலவை எப்படி பங்கு வைப்பது? ஏம்மா அப்பா ஏதாவது சேர்த்து வச்சு இருக்காரா? ஜானு இல்லையென்று தலையசைத்தாள். இந்த அப்பாவுக்கு புத்தியே கிடையாது. செலவாளி.. நாலுகாசு சேர்த்து வச்சிருக்கலாம்ல? இப்போ பாரு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு? அப்பா உங்க மூணு பேரையும் படிக்க வச்சாரு. வேணியை கல்யாணம் பண்ணி கொடுத்தாரு. எல்லாமே அந்த குறைஞ்ச சம்பளத்தில் செஞ்சது தான். சின்னவன் மெல்ல அண்ணா உன் சம்பளத்துக்கு இதெல்லாம் தூசு என்றான். அது சரி நாங்க ஒவ்வொருத்தர் மாதிரி பங்களாவா கட்டியிருக்கோம் என்று அண்ணி பதிலடி கொடுத்தாள். சரி அந்த பேச்சை விடுங்க. இப்ப நடக்கிறதை பேசுங்க. சின்னமருமகள் சமாதானம் செய்தாள்.
உங்க சண்டைய அப்புறம் வச்சுகோங்க. அம்மா போட்டு இருந்த செயின் கல்தோடு ஒண்ணையும் காணுமே? அதெல்லாம் எங்க போச்சு? அதையெல்லாம் வித்துதான் செலவு நடந்திருக்கு. அடப்பாவிகளா அம்மா அதையெல்லாம் தர்றதா சொல்லிருந்தாங்க. அய்யோ மோசம் போயிட்டனே . சிண்ண அண்ணி வேணி உன் கல்யாணக்கடனே நிறைய ஆகி இருக்கு. தகுதிக்கு மீறி பெரிய இடத்தில் உன்னைக் கொடுத்து இருக்கார். போன மாசம் நீ கார் வாங்கியிருக்கே. எங்களுக்கும் தெரியும் என்று பாய்ந்தாள். அது அது பைனான்ஸில் வாங்கி இருக்கோம். எங்க வீட்டுக்காரர் கேட்பாரே. நான் என்ன சொல்லுவேன்? ஆமா உங்க அப்பா கோடிக்கணக்கில் வச்சுட்டு போயிருக்கார் பாரு இது பெரிய மருமகள். உங்க அப்பா செத்துப் போனப்போ நீங்க நாலு சில்வர் கிளாஸ், ஆறு ஸ்பூன் கொண்டு வந்தது எங்களுக்கும் தெரியும் அண்ணி.
சரி சரி சண்டை போடாதீங்க. செலவு லிஸ்ட்டை பாருங்க. அதெல்லாம் மகன்கள் பொறுப்பு. என்னை விடுங்க. நான் கிளம்புறேன். அம்மா இனிமே நீ பட்டுச் சேலை எல்லாம் கட்ட முடியாது. நாலுபட்டை நான் எடுத்துக்கிறேன். இரண்டு மருமகள்களும் வேகமாக வந்தார்கள். அம்மா தாயி வெள்ளி ஜரிகை பட்டு நல்ல விலைக்கு போகும். அதை வச்சிட்டு போ. நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. அம்மா அந்த பித்தளை அண்டாவை கொடு. அப்பா நினைவாக வச்சிக்குறேன். அதுக்கு யாரிடம் பர்மிஷன் வாங்கணும். பெரியண்ணன் வேணி நீ எடுத்துட்டு போடா என்றான். அதை மட்டும் எடுத்துக்கிட்டு போங்க நாத்தனாரே அண்ணிகள் அனுமதி கொடுத்தார்கள். அண்ணா அண்டாவை மூட தாம்பாளம் வேணும். அதையும் எடுத்துக்கிறேன். அம்மா உலகம் ரொம்ப மோசமாக இருக்கு. பார்த்து நடந்துக்க இன்னொரு நாள் வரேன். அப்புறம் அம்மா போஸ்ட் ஆபிஸில் பணம் போட்டிருந்தியே என்னாச்சு? சின்ன அண்ணன்.
அதை எடுத்தாச்சே என்றான். பாவிகளா பல்லைக்கடித்தபடி சாபம் கொடுத்தாள். போய்விட்டாள்.
சரிம்மா. அப்பா காரியமெல்லாம் முடிஞ்சுது. நாங்க கிளம்புறோம். பெங்களுரில் ரொம்ப குளிரா இருக்கும். உனக்கு தாங்காது இங்கேயே இரும்மா என்று பெரியவன் சொன்னான். ஜானு தலையாட்டினாள் . அம்மா இது பழகின இடம். உனக்கு பிரச்சனை இருக்காது. எங்க ஊரெல்லாம் வயசானவங்களுக்கு செட்ஆகாது. இது சின்னவன். ஜானு தலையாட்டினாள். அம்மா அமைதியாக இருந்தது மகன்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அம்மா இனிமேல் இந்த வீடு உனக்கு தேவையில்லை. சின்ன வீடா பாரு என்று பெரியவன் சொன்னான். என்னங்க மரச்சாமான் நிறைய கிடக்கு. எல்லாத்தையும் விலைக்கு போடணும் என்று சொன்னாள் சின்ன மருமகள். மரபீரோவை கலைத்தார்கள். சின்ன வெள்ளிப்பாலாடை கிடைத்தது. அட என்னங்க நீங்க சின்ன வயசில் வச்சு இருந்தது நமக்குத்தானே. எடுத்து உள்ளே வைங்க. அக்கா அதை எங்கிட்ட கொடுங்க. எங்க வீட்டுக்காரர் அதை பற்றி கதையா சொல்லியிருக்கார். ரெண்டு மருமகளும் விடுவதாக இல்லை. உள்ளே வந்த ருக்கு வேடிக்கை பார்த்தாள். பெரியவன் சரி சண்டை போடாதீங்க. அதை விலைக்கு போட்டு பணத்தை பங்கு வைங்க என்று பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தான்.
அம்மா நாங்க மாசம் ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறோம். ரேசன் அரிசி சாப்பாட்டுக்கு போதும். விதவை பென்சன், முதியோர் பென்சன் ஏதாவது ஏற்பாடு பண்றோம். சரிம்மா நாங்க கிளம்புறோம். உடம்பை பாத்துகோங்க. சரிப்பா பேரன், பேத்திகளை கேட்டதா சொல்லுங்க. பெரிய லீவுக்கு பிள்ளைகளை அழைச்சிட்டு வாங்க. எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒரு ஏமாற்றம் தெரிந்தது. கிளம்பி போனார்கள். பெரிய மருமகள் சின்னவளிடம் கிழடு நம்மோடு வந்தால் வேலைக்காரியா நிறுத்திடலாம்னு நினைச்சேன். தைரியமா நம்மை போகச் சொல்லுது பாரேன். ஆமாக்கா பொல்லாத பொம்பளை. அந்த கீரைக்கார அம்மா வேண்டாத யோசனை எல்லாம் சொல்லிக் கொடுக்கும் போலிருக்கு.
எப்படியோ வீட்டை சுத்தம் பண்ணிட்டோம். வேற விக்கிறமாதிரி பொருள் எதுவும் இல்லை. வேணி வந்து பாத்து ஏமாறட்டும். இவர் மாசம் பிறந்ததும் அம்மாவுக்கு பணம் அனுப்பணும் பார். ஆயிரம் அனுப்பினா போதும். நமக்கு தெரியாம எதுவும் அனுப்பிடாம பாத்துக்கணும். அக்கா உங்க அப்பாவுக்கு பணம் அனுப்புறீங்களா? ம்… அது வந்து பாவம். பெத்த கடனுக்கு நாமதானே பாத்தாகணும். உன் தம்பி வீடு கட்டறானே? நீங்கதானே ரெண்டு லட்சம் கொடுத்தீங்களாம்? அது கடனாகத்தான் கொடுத்திருக்கோம். மூணு மாசத்தில் தர்றதா சொல்லித்தான் வாங்கியிருக்கான். அது சரி உங்களுக்கு யார் சொன்னாங்க? சரி டிரெயின் வந்துடுச்சு. நாங்க கிளம்புறோம்,
ருக்கு வேகமாக வந்தாள். ஜானம்மா புள்ளைங்க ஊருக்கு போகுது. நீங்க போகலையா? ஜானகி உடைந்து கதறினாள். ருக்கு என்னை யாருமே கூப்பிடலை. அனாதையாக நிக்கிறேன். அட நீ வேற. யாரு தாயே அனாதை? நாங்களெல்லாம் இல்லையா? தண்ணீர் கேன் தங்கதுரை வந்தான். பாட்டியம்மா உங்க மகன்கள் கூட போகலியா? துரை உன்னை விட்டு போக பாட்டிக்கு மனசே இல்லையப்பா. ஆகா அப்படியா. கவலைப்படாத பாட்டி. சீக்கிரம் எனக்கு போலீஸ் வேலை கிடைச்சிடும். நான் உன்னை பாத்துக்கிறேன்.
ருக்கு அவர் இருக்கும்போதே நாங்க வேண்டாத சுமை ஆயிட்டோம். இரண்டு மருமகளும் வயித்துக்கே சோறு போட யோசனை செஞ்சாங்க. தாத்தா பசி தாங்க மாட்டார். வாய்விட்டு கேக்க மாட்டார். அந்த கொடுமை தாங்காமத்தான் நாங்க வெளியே வந்தோம். பென்சன் சொத்து ஏதாவது இருந்தாதான் வயசானவர்களுக்கு மதிப்பு. எதுவும் இல்லைன்னா அவங்களை தூக்கி தெருவில் வீசிடுவாங்க. தாங்க முடியாமல் கதறினாள் ஜானகி. தங்கதுரை அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அந்தக் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
ஆறுதல் சொல்லிவிட்டு இரண்டு பேரும் போய்விட்டார்கள். வீட்டு வாடகை, மளிகை சாமான். கரண்ட் பில், மூன்று வேளை சாப்பாடு. என்ன செய்யப்போகிறேன்? அப்படி ஒரு வெட்கம் கெட்ட வாழ்க்கை தேவையா? இனி இருந்து என்ன சாதிக்கப் போகிறேன்? ஒரு முடிவுக்கு வந்தாள். அரளி விதை வாங்கி வந்தாள். கதவை சாத்திவிட்டு விதையை அரைத்தாள். குடிக்க போகும் போது கதவை திறந்து கொண்டு ஓடி வந்து ருக்கு கையை தட்டி விட்டாள். பாவி மனுசி நான் சந்தேகப்பட்டேன். இப்படி ஏதாவது பண்ணுவேன்னு. கிளம்புற நேரத்திலிருந்தே எனக்கு மனசு சரியில்லை. உம் புள்ளைங்க உன்னைய கூப்பிடாம ஊருக்கு போறதை பார்த்தேன். கிளவியை தலைமுழுகிட்டு போவுதுவோன்னு தெரிஞ்சிகிட்டேன். ஜானகி அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள், தங்கதுரையும் வந்துவிட்டான்.
ஏன் பாட்டி நாங்களெல்லாம் இல்லையா? நாங்க குடிக்கிற கஞ்சியில் உனக்கும் ஒரு வாய் தர மாட்டேமா? சாகறதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது. வாழறதுக்கு வழியோ இல்லை? ஜானம்மா ஒருவழி சொல்றேன். கேப்பியா? கேட்டாள் ருக்கு. மறுவாரம் ஜானகி மெஸ் பிறந்து விட்டது. உழைக்கிற கூட்டம் அங்கே பசியாறியது. ருக்கு ஓடிவந்து ஜானம்மா தபால்காரர் வந்திருக்கார். உம் பையன்கள் மணியார்டர் அனுப்பி இருக்காங்க. வந்து வாங்கிக்கோ என்றாள். மணியார்டரை திருப்பி அனுப்பிவிடு ருக்கு என்றாள் ஜானகி.
Leave a Reply