கே.பி. பத்மநாபன்
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே
புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று;
சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்
சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள்
எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி
எல்லோரும் முகநூலில், வலைதளத்தில்
நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;
நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்!
நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி
நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில்
சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்
சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு
சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற
செவ்வியநல் இன்பத்திற் கீடிங் கேது?
பித்துப்பிடித்தாற்போல் அலைபேசிக்குள்
பெரிதாக மூழ்கிடுவோர் அறியா உண்மை!
முத்தமிடும் மழலையின் அன்பு
முற்றாக நமைமயக்கும் புத்தகங்கள்;
ஒத்தமன எண்ணமுடை நண்பன் போல
உள்ளத்தை அரவணைக்கும் புத்தகங்கள்;
வித்தகத்தைத் தருவதுடன் கற்பனையின்
விருந்தினையும் ஊட்டிடுமே புத்தகங்கள்;
இத்தரையில் இறப்புவரை வாசிப்போர்கள்
ஏழ்பிறப்பின் பேரின்பம் பெற்றவர்காண்!
Leave a Reply