(குமரி மாவட்ட கழியல் சந்தப்பாடல்)
– மருந்துவாழ் மலையன்
பனைமரத்தின் மேலிருந்து
பனங்குருவி பாடுது
கூடிழந்தக் கதையைச் சொல்லி
கழியெடுத்து ஆடுது
பாளை சீவி இறக்கையிலே
பயினி மணம் தூக்குது
பனங்கருக்கு கிழித்த காயம்
ஓலைப்பூவால் ஆறுது
பனம்பழத்த அவிச்சிதின்ன
காலம் மாறிப் போனது
பனங்கிலுக்கு பெல்லடித்து
நுங்கு வண்டி ஓட்டினோம்
பயனி காய்ஞ்ச கூப்பனியை
தொட்டு நக்கி ஓடினோம்
புளிப்பயனி புட்டு செஞ்ச
செரட்ட எல்லாம் காணல
பனங்கிழங்கு எடுக்கையிலே
தவணு வெட்டித் திங்குவோம்
நுங்கு தண்ணி கண்ணிலூற்றி
அம்மன் நோயைப் போக்குவோம்
பனமரத்தச் சுத்தி வாழ்ந்த
மனுச சனம் நோகுது
பனமரத்த காணலியே
எந்த மனசு தேடுது
Leave a Reply