பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்

பெண்களுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்

  • By Magazine
  • |

சிலம்ப ஆசான் ஜஸ்டின் பேட்டி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை மருதூர் குறிச்சியை சேர்ந்த களரி ஆசான் ஜஸ்டின்.

புதிய தென்றலுக்காக களரி ஆசான் ஜஸ்டின் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தோம் அப்போது அவர் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது

தாங்கள் களரி கலைகளை எப்போது  கொண்டீர்கள் ?

நான் எனது 12 வயது முதல் களரி தற்காப்பு கலையை கற்க தொடங்கினேன்.  எந்தெந்த ஆசான்களிடம் களரி கற்றுக் கொண்டீர்கள்.  முதன்முதலில் காட்டாத்துறையை சேர்ந்த பாலையன் ஆசான் என்பவரிடம் வர்ம மருத்துவத்தை கற்றுக் கொண்டேன் .

பின்னர் கல்லங்குழி பகுதியைச் சேர்ந்த சுந்தரமணி ஆசான் என்பவரிடம் கம்புச்சண்டை, கத்தி சண்டை, சுவடு முறைகள், ஜோடி அடி முறைகள் , டைவ் அடிப்பது போன்ற முறைகளை கற்றுக் கொண்டேன்.

 பின்னர் புலிப்பனம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் ஆசான் என்பவரிடம் ஒற்றை சுவடு முறைகள், ஜோடி முறைகள், தட்டு முறைகள், ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.

 பின்னர் புலிப்பனம் பகுதியைச் சேர்ந்த முத்தையன் ஆசான் என்பவரிடம் ஒற்றைச் சுவடு முறைகளை கற்றுக் கொண்டேன். அவரிடம் கற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். அவரது பயிற்சி முறைகள் மிகவும் கடினமானவை. வீரதீர செயல்களில் பெயர் பெற்ற பள்ளியாடி கூழையன் ஆசான்  என்பவர் இவரது சிஷ்யன் ஆவார்.

காட்டாத்துறை பயில்வான் வறுவேல் ஆசான் என்பவரிடம் சுவடு முறைகள், நடசாரி முறைகள், ரெட்டடி, வெட்டங்கம் கணபதி அங்கம், ஒற்றைச் சுவடு போன்ற முறைகளை கற்றுக் கொண்டேன்.

பின்னர் முருங்கவிளையை சேர்ந்த தாம்சன் ஆசான் அவர்களிடம் சுவடு முறைகள் கற்றுக் கொண்டேன் அவரிடம் உள்ள சுவடு முறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை ஆகும். அவர் 12 ஒற்றைச் சுவடுகளையும் சேர்த்து ஒரே சுவடாக வைத்திருந்தார் .

இது பிற முறைகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது மேலும் தட்டு முறை, ஒளிவு பிரிவு முறை, சுவடு முறைகள், ஜோடி முறைகள், வர்மம் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.

பின்னர் சாங்கை என்ற பகுதியைச் சேர்ந்த துளசி ஆசான் அவர்களிடம் கத்தி முறைகள், சுவடு முறைகள், நெடுங் கம்பு முறைகள் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சிறந்த மனிதநேயமிக்க அன்பான ஆசனாக திகழ்ந்தார். அவரிடமிருந்து இரண்டு ரகசிய முறைகளையும் கற்றுக் கொண்டேன்.

தங்களது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி எது

தமிழக கவர்னர் ஆர்.என் ரவி அவர்களிடம் விருது பெற்றது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவரது நிகழ்ச்சியில் களரி நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பித்து இருக்கிறேன். மேலும் அவருடன் சாலையில் நடந்து சென்றதும் எனது வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் ஆகும்.

மேலும் தாங்கள் என்னென்ன களரி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளீர்கள்

 மாயா என்ற தமிழ் டிவி சேனலில் களரி நிகழ்ச்சி செய்து இருக்கிறேன். மட்டுமல்லாமல் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் , ஏற்றக்கோடு போன்ற பகுதிகளில் களரி  நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன்.

 தாங்கள் கற்றுக் கொண்ட தற்காப்பு கலை ஏதேனும் சூழ்நிலையில் தங்களுக்கு பயன்பட்டுள்ளதா  ?

ஆம் நான் பெற்றுக் கொண்ட தற்காப்புகலை எனது உயிரை பாதுகாத்திருக்கிறது. முன்னர் மளிகை கடை வைத்திருந்த காலத்தில் ஒருமுறை கடைகளுக்கு பொருள்கள் வாங்குவதற்காக இரவு 10 மணி அளவில் நாகர்கோவிலில் கோட்டார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது  என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கும் நோக்கத்தில் ஒரு கும்பல் சுற்றி வளைத்தது அதில் ஒருவர் என்னை பின்புறம் இருந்து பிடித்து செயலிழக்க வைப்பதற்கு முயற்சி செய்தார். சுதாரித்துக் கொண்ட நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலையை பயன்படுத்தி அவரிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். இதனை கண்ட மற்றவர்கள் பயந்து வழி விட்டனர். நான் தப்பித்து வந்து விட்டேன் .  நான் தற்காப்பு கலையை கற்றிருக்காவிட்டால் அந்த சூழ்நிலையில் பயன்படுத்தியிருக்கா விட்டால் இன்று உயிருடன் இருப்பேனா என்பது மிகவும் சந்தேகமானது ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா உங்களின் கருத்து என்ன?

இப்போதைய காலகட்டம் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. சிறு பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை பெண்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது.

ஆகவே இனிவரும் காலங்களில் 5 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் . அதிலும் சிறந்த முறையில் தற்காப்புக்கு உதவும் விதமாக பயிற்சிகளை அளிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பாலியல் பலாத்காரங்கள் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

 பழைய கால களரி பயிற்சிக்கும் இன்றைய காலத்தில் அளிக்கப்படும் பயிற்சிக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?

 பழைய காலங்களில் உள்ள ஆசான்களிடம் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது பல ஆண்டுகள் அவர்கள் பின்னால் அலைய வேண்டும் பயிற்சி முறைகளும் மிகவும் கடினமாக இருக்கும்.  ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பலர் பணத்துக்காக கற்றுக் கொடுக்கிறார்கள். சிலர் தெரிந்ததை கற்றுக் கொடுக்கிறார்கள் . சிலர் தெரியாமலேயே கற்றுக் கொடுக்கிறார்கள். மேலும் இன்றைய காலகட்டத்தில் போட்டிகளில் கலந்து வெற்றி பெறும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பழைய காலத்தைப் போல தீவிரமாக சண்டை முறைக்கான பயிற்சிகள் தற்போது கற்பிக்கப்படுவதும் கற்பதும் குறைந்து வருகிறது.

மட்டுமல்லாமல் பலர் பழைய கால பாரம்பரியசுவடு முறைகள் நுட்பங்கள் ஆகியவற்றுடன் போலியாக தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கிய நுட்பங்களையும் புகுத்தி விடுகின்றனர். இதனால் அந்த முறைகள் போலியானவை போல் ஆகி விடுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

                               

பேட்டி கண்டவர்

ஜி. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்,

உதவி : திரு.R.அஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *