– செல்வி ஞானதாஸ்
ஆனந்தி பெயருக்கு ஏற்றார்போல் ஆனந்தமானவள். அவளை சுற்றி இருப்பவர்களை ஆனந்தமாக வைத்திருக்க ஆசைப்படுபவள்.
இன்று அவள் கணவன், காலையில் கோபமாக பேசிவிட்டு வேலைக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டில் இருக்கக் கூடாது எங்காவது சென்றுவிட வேண்டும். கைப்பேசியோ, பணமோ எடுக்காமல் ஏதாவது அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டும் அல்லது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும். இனி உயிருடன் வாழவேக் கூடாது. நான் இவ்வளவு பாசமாகவும், உண்மையாகவும் விட்டுக் கொடுத்தலுடன் இருந்த பிறகும் ஒன்றுக்கும் மதிப்பே இல்லை என தனியாக அழுதாள். நான் தவறு செய்யவே இல்லையே என மனதுள் ஏங்கினாள்.
திடீரென நினைவுக்கு வந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, அவசரமாக அனுப்பி விட்டாள். பின்பு குழந்தைகளின் சீருடையை துவைத்து போட தொடங்கினாள். கூடவே கணவனின் துணிகளையும் துவைத்தாள்.
பின்பு வீட்டை சுத்தம் செய்தாள். தான் ஆசையாக வளர்த்த செடிகளும், காய்கறிகளும் வாடிவிடுமே என நினைத்து அவற்றுக்கு தண்ணீர் தெளித்தாள். வீட்டினுள் சென்றாள் துணிகள் கலைந்து கிடந்தன. அவற்றை மடித்து வைத்தாள். மதியம் ஆகிவிட்டது. மதிய உணவை மாமியார், மாமனாருக்கு பரிமாறினாள். வாசம் மூக்கை துளைக்க தானும் உணவை உண்டாள். பாத்திரங்களை சுத்தம் செய்தாள்.
மணியும் பிற்பகல் இரண்டு ஆகிவிட்டது. ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தாள். நனைத்து காயப்போட்ட துணிகளை எடுத்து மடித்து வைத்தாள். இப்போது பார்த்தால் வீடு அழகாக இருந்தது.
தேனீர் போடும் நேரமும் வந்தது. தேனீர் போட்டு முடித்ததும் பள்ளிக்கு சென்ற குழந்தைகளும் வந்தன. அவர்களுக்கு தேனீர் கொடுத்தும் பள்ளியில் நடந்தவற்றை கேட்டும், அவர்களுடன் கொஞ்சியும் மகிழ்ந்தாள். வீட்டுப்பாடம் எழுத வைத்தாள். பாடங்களை படித்து கொடுக்க தொடங்கினாள்.
அப்போதே வேலைக்கு சென்ற கணவன் வந்துவிட்டார். ஆனந்தியை கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி. காலையில் கோபமாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டார். அவளும் சிரித்தாள்.
உயிரை விட வேண்டும் என நினைத்து அழுதவளுக்கு தன் கடமைகளை ஒவ்வொன்றாக செய்ததில் நேரம் வேகமாக ஓடியது. ஒருவரின் ஒரு நிமிட முடிவு தான் தனக்கு வரப்போகும் முழு சந்தோஷத்தையும், முழு வாழ்க்கையையும் மாற்றுகிறது.
வாழ்க்கை வாழ்வதற்கே. பின்பு தான் யோசித்தாள் தான் எடுத்த முடிவு தவறு என்று. எங்காவது சென்றிருந்தாலோ, உயிரை மாய்த்திருந்தாலோ எனது குழந்தைகள் யாரிடம் கொஞ்சுவார்கள். என்னையே நினைத்து வந்த கணவனின் நிலை என்ன. கோபம் நேரம் செல்ல செல்ல மாறும். பிரிந்த உயிர் வரவே வராது. நம் கடமைகளை செவ்வனே செய்யும் போது நம்மால் யாருக்கும் பயனில்லை என்ற சிந்தனை வராது. வாழ்வை ரசித்து வாழ பழகினால் மிகவும் அழகானது நம் வாழ்க்கை தான்.
Leave a Reply