ராஜன் ஆத்தியப்பன்
ஏனோ தெரியவில்லை
சிறுவயதுமுதல் லாரிகளின்மேல்
பகையோடிருக்கிறேன்.
அதன் முகம் எனக்கு
மகிழ்ச்சியளிக்கவில்லை.
பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள்
சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும்.
எதிரே ஹாரன் பிளிறலோடு
லாரி வரும்போது
நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன்
கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால்
குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும்.
“பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம்
லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து
நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது.
இப்போது இங்கிருந்து எட்டிப்பார்த்தால்
பூமியின் எல்லா திக்குகளின் கொல்லைப்
புறங்களையும் காணலாம்
உதவி செய்வதை உபத்திரவம் என்று சொல்லாதே”
அன்புக்குரியவள் பேச்சை மறுக்க முடியவில்லை.
ஆனாலும் ஏனோ லாரியச்சம் தீரவில்லை.
‘அந்த
செயற்கை மிருகம் எல்லாரையும் அடித்துச் சாப்பிடுமோ’
புறநகரில் மழைக்கு ஒதுங்கவென்றே
காத்திருக்கும் தேநீர் கடையொன்றில்
மழையோடும் தேநீரை அருந்தியபடி
நண்பனும் நானும் நின்றிருந்த அன்றொருநாள்
சாலையிலிருந்து சற்று இறங்கிவந்து
நின்ற டிப்பர் லாரியிலிருந்து தலைநீட்டிய ஓட்டி
லெட்சுமிபுரத்திற்கு வழி கேட்டான்.
எந்த வழி சென்றாலும் நமது சாலைகள்
லட்சுமிபுரத்தை சென்றடைவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன’
என்று நான் கூறுமுன் யாரோ ஒருவர்
திசைகளை வகிடெடுத்து விளக்கத்தொடங்கினார்.
லாரியில் கருங்கல் சுமையிருந்தது.
புளிக்குத்தியில் உசேன்பாய் நுணுக்கிக்
கொத்திக் கூட்டி வைத்திருக்கும்
இறைச்சித் துண்டுகளைப் போலிருந்தது.
கருப்பு இறைச்சி!
லாரியின் நெற்றியில்’ஜெய் ஆஞ்சனேயா’ பெயர்.
பக்கவாட்டில் பிடித்துநிற்கும் இரும்புத் தடுப்பில் வரையப்பட்ட
மலை தூக்கி பறக்கும் மாருதி’
அவர் முகம் நேராக இல்லை.
இந்த படத்தில் சற்று வெளியே திரும்பியிருக்கிறது
லேசான பெருமிதத்தோடு.
வண்டி
கிளம்புமுன் ஓடிச்சென்று தொட்டு கண்ணில் ஒற்றினான் நண்பன்.
மாருதி உபாசகன்.
கல் வளராது என்று எத்தனைச் சொன்னாலும் கேட்கமாட்டான்.
சுசீந்திரம் ஆஞ்சனேயர் வருடந்தோறும் வளர்வதாக
சத்தியமடித்துச் சொல்பவன்.
டயர் அழுத்திச் சென்றிருந்த சிறுபள்ளத்தில் வெள்ளம் சேர்ந்திருந்தது.
மிச்சமிருந்த தேநீரில் இன்னும் கசப்பு கூடியிருந்தது.
Leave a Reply