– முனைவர் முல்லைத்தமிழ்
மாற்றான்காலம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம்.
மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“மாற்றானை செய்கின்ற காலந்தன்னை
வழுத்துகிறேன் நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.
– வர்ம குருநூல்
மேலும்,
“கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ
குலை குலைந்து நூற்றொருவர் குன்றி நிற்பர்
சீற்றமுடன் மேருவடி குழல் நரம்பில்
சிக்கலுற்ற வாசியினால் கலை பின்னித்து
ஆற்றலுடன் கரள் ரோக குணத்தைக் காட்டி
அரிய பரதாபமதால் அறுதிதானே”. – வர்ம குருநூல்
“கேளந்த மாற்றான் காலமிளக்குதற்கு வகையை தானே
வளமான உச்சியில் கைபிணைத்து மெல்லத்தட்டி
மேளந்த மேனி கைவெள்ளை கொண்டு மேலேந்தி
தள்ளி நிலை கணக்கறிந்து தூசிசுற்றி
தாளந்த தளித்தமுறிவெண்ணெயினால் தாரைசெய்து
தளராது அனுக்கோடு சர்வாங்கம் சுருதி சரம்
வாளந்த வழியறிந்து அணைத்துவிடு கைகால் வெள்ளை
விதமான ஜீவாத்ம கலைநிலையும் கண்டு தீரே”.
– வர்ம இராஜமுத்திரை
எனவும் குறிப்பிடுகிறது.
“மாற்றான்காலம் காண் நடுவரியுறும் நடுவில்
ஆற்றாதலுப்புறும் அசதியும் கூடுறத் துப்பும்
ஏற்றாதளவாறாக குருதியுமகம் நடுங்கியே
கூற்றான் கூடுறும் நாள்வரை குலைத்திடுமானே”.
–வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மாற்றான்காலம் எனும் வர்மம் நட்டெலும்பு எனும் எலும்புவரியின் நடு எலும்பில் இருப்பதாகும். அந்த வர்மத்தில் தாக்கம் கொண்டால் உடல் மனம் ஆகியவற்றில் காரணமின்றியே பலவீனம் உண்டாகும். அசதியும் தோன்றும். துப்பும்போது குருதியும் கலந்து விழும். உடலின் உள் நடுக்கம் தோன்றும். மரணம் வரையிலும் ஏதாவது ஒரு இன்னல் உண்டாகிக்கொண்டே இருக்கும்.
“காணுறும் பேடியும் கடமுறும் நாளுறப் பல்பிணி
ஆணுறக்கூடியே அடைந்துறும் மாத்திரைஉற்றுமே
நாணுமிக் கடமதும் வாடியேக் குலைந்துறும்
பேணுதற்குரியவாம் பெருமருந்துறவெனும்துணிவே”.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மாற்றான்காலத்தில் காயம் கொண்டால் மனதில் அச்ச உணர்வு நாளுக்குநாள் அதிகப்பட்டுக்கொண்டே வரும். தாக்கத்தின் பாதிப்பிற்கேற்ப பல பிணிகளும் தொடர்ந்து வரும். உடல் மெலிந்து கூச்ச உணர்வு தோன்றி உடலும் மனமும் வாட்டமுற்றுக் குலைந்துவிடும். இந்நோயில் இருந்து விடுபட்டு வாழ்வதற்கு பெருமருந்துகளைக் கையாளவேண்டும் என்பதாம்.
“உள்ளுறும் உறுப்பெலாம் ஊக்குறும் வன்மம்
தெள்ளுறத் தூண்டுறிலாங்கு நோவுறுபிணிகள்
அள்ளுறப் பிடித்தலும் தளர்வுடனச்சமும் போம்
விள்ளறாப் பிணிகள் விதவிதம் நலனாம்”. – வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மாற்றான் காலத்தினை முறைப்படி தூண்டித் தடவிக் கொடுத்தால் உடலின் உறுப்புகள் வலிமையடையும். பல வலியுண்டாக்கும் பிணிகளும் அடர்ந்தேறி பிடிக்கும் பிடிப்புகளும், தளர்வும், அச்சமும் போகும். மேலும், சொல்லொண்ணா பலபல பிணிகளும் இத்தலத்தைத் தூண்டுதலால் நலனடையும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவ்வர்மத்தின் நடுப்பகுதியில் மாத்திரையாய் தாக்கிவிட்டால் பஞ்சவர்ண குகையாகிய மார்புக்கூட்டின் கட்டுகள் குலைந்துவிடும். அதனால் மூளை, முதுகெலும்புத்தொடர் இவைகளிலிருந்து இருதய கமலம் என்ற தானத்திற்கு ஆற்றல் பரிமாற்றங்கள் செய்யும் நூற்றியொரு நுட்ப நாடிகளும் செயல் குறைந்துவிடும்.
இவ்வர்மம் இளக்குவதற்கு முதலில் உச்சியில் அமத்தடங்கல் செய்ய வேண்டும். உடலை கீழிருந்து மேலாக உள்ளங்கை பதிய அணைத்து மேல்நோக்கி தூக்கி தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் மெல்லிய துணியினால் சுற்றிக்கட்டி முறிவு எண்ணெயை நனைத்துவிட வேண்டும். இவ்வர்மம் கொண்டு தளர்ந்துவிடாமல் இருக்க அடங்கல்களை தூண்டிவர நலமாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் நோய் எதிர்ப்புத்திறன் குறைதல், மூச்சடைப்பு, நரம்பு செயலிழப்பு, அடிக்கடி படபடப்பு, பரபரப்பு, ஞாபகமறதி, தாகத்துடன் தளர்ச்சி, மயக்கம், ஜன்னி தோன்றி மரணமும் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, அனைத்து விதமான வலிகள், தளர்ச்சி, நரம்புப்பிணிகள், வயிற்றுப்பிணிகள், பயத்தினால் வரும் படபடப்பு போன்ற நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்மம் கொண்டவருக்கு நிலையான சுகம் உண்டாக தாமரைப்பூ குடிநீர், குறுந்தட்டி குடிநீர், ஆட்டீரல் குடிநீர், திராட்சாதி குடிநீர், ஆட்டு முதுகெலும்பு குடிநீர் போன்றவைகளை மாற்றி மாற்றி கொடுத்து வர நல்ல சுகம் உண்டாகும்.
Leave a Reply