முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

  • By Magazine
  • |

– எம்.செந்தில்குமார்

தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் மாலாவின் மேல் அதிகமான பாசம் தினேஷ் வைத்திருப்பதால் அதற்கு சம்மதம் சொல்லி அதிக கடலைகளை வாங்கி கொடுப்பான். மாலா கடலையை சாப்பிட்டபடியே தினேஷிடம் அவனது தாய் தந்தையர்களை பற்றி அடிக்கடி கேட்பாள்.

அதற்கு தினேஷ் எனது அப்பா ரிட்டயர்டு வாத்தியார், அம்மா வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்கள் என்பான். மாலா மனதுக்குள் சிரித்துக் கொள்வாள். தினேஷ் மாலாவிடம் ஆமா ஏன் என் அப்பா, அம்மாவை பற்றி தினமும் கேட்கிறாய், ஏன் மாமியார், மாமனாரை பற்றி தெரிந்து கொள்ள ஆசையா என்று கேட்பான். அதற்கு மாலா ஆம் என்று புன்முறுவலோடு புன்னகை செய்து பதில் சொல்வாள் மாலா.

உன் அப்பாவுக்கு பென்ஷன் வருகிறதா என்று மாலா தினேஷிடம் கேட்டதற்கு, தினேஷ் வருகிறது என்றும் அந்த பென்ஷன் பணத்தை எனது அப்பாவின் செலவிற்காக வைத்துக் கொள்ள சொல்வேன் அதில் ஒரு பைசா கூட வேண்டாம் என்பேன் என்று மாலாவிடம் சொல்கிறான்.

நீ பெற்றோரை அன்பாக பார்த்துக் கொள்வாயா என்று மாலா கேட்பாள். அதற்கு தினேஷ் அம்மா, அப்பாவின் உடல்நலன் தான் எனக்கு முக்கியம். அவர்கள் இருவரையும் என் கண் போல பார்த்துக் கொள்வேன் என்பான். மாலா மனதுக்குள் சிரித்துக் கொள்வாள். தினேஷ் மாலாவிடம்  நாம் காதல் செய்யும் போது ஏன் எனது பெற்றோர்களைப் பற்றி  தினந்தோறும் கேட்கிறாய் என்பான். அதற்கு மாலா பல காரணங்களை சொல்லி மழுப்பி விடுவாள்.

தினேஷ் பணிபர்ஸ் போட்டோவில் தினேஷின் தாய் தந்தையின் படத்தை பார்த்து அவர்களை தெரிந்து கொள்கிறாள் மாலா. நமது திருமணம் நடக்கும் போது எனது தாய் தந்தையரையும் நாம் கூடவே வைத்து காப்பாற்ற வேண்டும் என்பாள். அதற்கு காதல் போதையில் நிச்சயமாக என்பான் தினேஷ். உனது பெற்றோரையும், எனது பெற்றோரையும் கூட்டு குடும்பமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சம்மதமா என்கிறாள் மாலா. அதற்கு மாலாவின் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுக்கிறான் தினேஷ்.

தினந்தோறும் கடற்கரையை விட்டு அவர்கள் போக இரவு எட்டுமணி ஆகிவிடும். அப்போது மாலா தினேஷை கூட்டிக் கொண்டு மிகப்பெரிய ஹோட்டலுக்கு சென்று இரவு டிபனை முடித்து விட்டு எனது தாய் தந்தை சாப்பிட உணவை பார்சல் செய்து கொடுக்குமாறு சொல்வாள். அதற்கும் தினேஷ் தான் தினந்தோறும் செலவு செய்ய வேண்டும்.

அதற்கு பிறகு தனது குடும்பத்திற்கான செலவையும் தினேஷிடம் இருந்து தினசரி வாங்கிக் கொள்வாள்.

தினேஷிற்கு எப்படியாவது மாலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துணிந்து விட்டான். இப்படி வருடங்கள் பல கடந்தன. பீச்சை விட்டு தினேஷை அனுப்பிவிட்டு ஹோட்டலில் வாங்கிக் கொண்ட உணவு பொருட்கள் எடுத்துக் கொண்டு தினேஷ் அங்கு இருந்து மறைந்த உடன் கடற்கரையை நோக்கி ஓடுவாள். அங்கு கடலையை விற்றுக் கொண்டு இருக்கும் தினேஷின் அப்பாவிடம் வாங்கி வந்த டிபனை கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு தினேஷிடம் இருந்து வாங்கிய பணத்தை தினேஷின் அப்பாவிடம் கொடுத்துவிட்டு அவரை பத்திரமாக கடலை விற்றது போதும் நீங்கள் ஆட்டோவில் வீட்டிற்கு செல்லுங்கள் உங்கள் மகனிடம் இருந்து வாங்கிய காசு இது உங்கள் மருத்துவம் மற்றும் தினசரி செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறாள்.

அப்போது தினேஷின் அப்பா கண்ணீர் விட்டு அழுகிறார். யார் பெற்ற பிள்ளையோ நீ எங்களுக்காக  இவ்வளவு பாடுபடுகிறாய். நீ எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும்மா என்று வாழ்த்துவார். அதற்கு மாலா நான் எங்கும் செல்ல மாட்டேன். நீங்கள் எனது மாமனார். உங்களை நான் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன். நமக்குள் நடக்கும் இந்த நாடகம் யாருக்கும் தெரிய வேண்டாம். நான் எப்பவும் உங்கள் மருமகள் தான். நான் தினேஷ் மனைவிஎன்று ஆறுதல் வார்த்தை கூறி தினேஷின் அப்பாவை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைப்பாள்.

தினேஷ் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே தினேஷின் அப்பா ஆட்டோவில் வீட்டுக்கு வந்து தினேஷிடம் இன்று நான் கடலை விற்ற வருமானம் என்று கூறி பணத்தை கொடுப்பார். அந்த பணத்தை வாங்கிய தினேஷ் அதை பெற்றோர் கொடுத்த காசாகவே நினைத்து பெருமிதம் கொள்வான். மாலா தனது அம்மா அப்பாவுக்காக வாங்கிய காசு தான் அது என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.

ஒரு வழியாக தினேஷிற்கும், மாலாவிற்கும் முறைபடி திருமணம் நடைபெற்றது. மாலாவிடம் தினேஷ், தனது அப்பாவை தினந்தோறும் சாப்பிட சொல்லாதே அவர்களிடம் கரிசனம் காட்டாதே. அவரையும், எனது அம்மாவையும் எனது அம்மாவையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாம். நம் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கிறார்கள். முதியோர் என்றால் அவர்கள் பென்சனில் சாப்பாட்டு செலவையும், மருத்துவ செலவுகளையும் அவர்கள் ஒதுக்கி கொள்ள வேண்டியது தானே என்று மாலாவிடம் அடிக்கடி புலம்புவான். அதற்கு மாலா “மவனே இருக்குடா உனக்கு இன்னும் இருக்கு” என்று  மனதில் நினைத்துக் கொள்வாள்.

ஞாயிற்றுக்கிழமை தினேஷ் மாலாவை மாகாபலிபுரம் அழைத்துச் செல்ல திட்டமிடுகிறான். சனிக்கிழமை இரவே தனது அம்மா அப்பாவிடம் சென்று கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். அதனால் நீங்கள் உங்கள் மகள் வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறுகிறான். தினேஷ் அப்பா, அம்மா தயங்கி நிற்கவே, தினேஷ் ஏன் நீங்கள் தானே உங்க மகளுக்கு 5 பவுன் நகை போட்டீங்க. ஏன் இவள் இரண்டு நாள் அவள் உங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டாளா என்று பெற்றோரை கடிந்து கொள்கிறான்.

தினேஷ் அப்பா, அம்மா என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கிறார்கள். மாலாவை ஒரு பார்வை பார்க்கிறார்கள். தனது கண்களாலேயே அதற்கு பதில் அளிக்கிறாள். அவங்க கல்யாணம் பண்ணி கொடுத்த மகள் வீட்டுக்கு எப்படி செல்வார்கள்… கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு என்று கோபமாக தினேஷை பார்த்து கண்டிப்போடு கேட்கிறாள். மேலும் இது நியாயமா? மாமாவையும் அத்தையும் தனியாக விட்டுவிட்டு கோவில், குளம் என்று புண்ணியத்தை நாம் போய் தேட வேண்டாம். தாய் தந்தையர்கள் தான் நமக்கு முதல் தெய்வம். அவர்களை விட்டு விட்டு நாம் கோவிலுக்கு சென்று அங்குள்ள சாமி சிலையை வாங்கினால் சாமி நமக்கு நிச்சயம் தண்டனை தான் தருவார். நாளைக்கே நமக்கு ஒரு குழந்தை பிறந்து ஆளாகி அவனும் நம்மளை இப்படி செய்தால் என்ன செய்வது என்று தினேஷ் முகத்தில் அறைந்தார் போல் கேட்டாள். அதற்கு தினேஷ் அது நடக்க இன்னும் 50 வருஷம் இருக்கு அப்போது பார்த்து கொள்ளலாம் என்று சொன்னான். மாலா நான் கோவிலுக்கு அத்தையையும் , மாமாவையும் விட்டு விட்டு வரவில்லை என்று சொன்னாள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஆகி சண்டை முற்றுகிறது.

அதற்கு தினேஷ் அம்மாவும், அப்பாவும் தனது மகள் வீட்டிற்கு கிளம்ப தயாராகிறார்கள். மாலா தனது மொபைலை எடுத்து தனது தாய் தந்தையரை தனது வீட்டிற்கு வர சொன்னாள். தினேஷ் தனது மாமனார் மாமியாரை பார்த்தவுடன் திகைத்து போகிறான். வீட்டில் சிறிது நேரம் அமைதி நிலவுகிறது.

தினேஷ் அப்பா மாலாவை பார்த்து எங்கள் இருவரால் உங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கிறது. ஆகவே நாங்கள் காசி, இராமேஸ்வரம் என்று போகிறோம் என்று அவர்களிடம் சொல்கிறார்கள். அதற்கு தினேஷ் எதற்கு காசி, இராமேஸ்வரம் போக வேண்டும் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். வாருங்கள் என்று தனது பையில் உள்ள விசிட்டிங் கார்டு எடுத்து நீட்டுகிறான்.

அந்த விசிட்டிங் கார்டை தட்டி விட்ட மாலா உங்களை சிறுவயது முதல் படிக்க வைத்து ஈ, எறும்பு கடிக்காமல் உங்களை ஆளாக்கி வளர்த்த அவர்களை தினந்தோறும் பீச்சில் கடலை விற்று அந்த வருமானத்தில் சாப்பிட சொல்லும் நீங்களும் ஒரு மனுஷனா? என்று தினேஷ் கன்னத்தில் அறையாத குறையாக கேட்டாள். அதைக் கேட்ட தினேஷ் அதிர்ந்து போனான். இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்டான்.

நாம் காதலித்த போது பீச்சில் தினமும் கடலை வாங்கி வருவேனே அது யாருடைய கடலை என்று தெரியுமா? அது உங்க அப்பா விற்ற கடலை தான். அதை தான் நாம் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். இரவு ஹோட்டலில் தினந்தோறும் எனது பெற்றோர்களுக்காக இரவு உணவு வாங்குவேனே, அது யாருக்காக தெரியுமா? உனது தாய், தந்தைக்காக தான். மேலும் கை செலவுக்காக பணம் கேட்பேனே அது யாருக்காக தெரியுமா? உனது தாய், தந்தைக்காக தான் என்று சொல்ல தினேஷ் முகம் மாறி போனது.

இனிமேல் எனது பெற்றோர்களும், உங்க அம்மா, அப்பாவும், நாமும் ஒரே இடத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் நீ கட்டியத்தாலி என்று அதை கழட்ட முயல்கிறாள் மாலதி. தினேஷ் அதிர்ந்து போகிறான். தான் செய்த தவறை உணர்கிறான். மாலாவிடம் தனது மாமனார், மாமியார் மற்றும் பெற்றோர்களிடம் தினேஷ் மன்னிப்பு கேட்டான். இரு வீட்டாரும் இராமேஸ்வரம் கோவிலுக்கு தோஷம் கழிப்பதற்காக கிளம்ப தயாரானார்கள். தினேஷ் பாக்கெட்டில் இருந்த முதியோர் இல்ல விசிட்டிங் கார்டு கீழே விழுந்து கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *