மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”

மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு.

கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது.

நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும்.

பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக இருக்கும். இதனை சட்டிகருணை, சேனைகிழங்கு என்றும் அழைப்பர்.

கருணைசெடியின் இலைகள் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் ஒன்று சேர்ந்து குடை போன்று விரிந்து காணப்படும்.

சிறுகருணை மற்றும் பெருங்கருணை செடியின் இலைகள் ஒரே போன்று காணப்படும். ஆனால், பெருங்கருணை உயரமாகவும், சிறுகருணை குட்டையாகவும் வளரும் தன்மை உடையது.

கருணைகிழங்கின் பூர்வீகம் ஆசியா. இது இந்தியா, ஆப்பிரிக்கா, இலங்கை, சைனா ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இது ஒரு வருட தாவரம், கிழங்குகள் முதிர்வடைந்ததும் இலைகள் வாடி மடிந்துவிடும்.

நாட்பட்ட கருணைசெடி கரும்சிவப்பு நிற அழகான பெரிய ஒரே ஒரு பூவை கொடுக்கும். இதனை சமைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு.

கருணைகிழங்கின் தோல் அரிப்பு தன்மை கொண்டது. நாம் கருணைகிழங்கு என்று இங்கு குறிப்பிடுவது சிறுகருணை ஆகும்.

தாவரவியல் பெயர்: Amorphophallus paeoniifolius

ஆங்கில பெயர்: Elephan foot yam

குறிப்பு:

சிறுகருணை, பெருங்கருணை இரண்டுக்கும்  ஒரே தாவரவியல் பெயர் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபெயர்கள்

சிறுகருணை, பிடிகருணை, கருணைகிழங்கு

கருணைகிழங்கில் அடங்கியுள்ள உயிர் சத்துக்கள்

விட்டமின் B1, B2, B3, B6, B9, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஏ.

தாதுசத்துக்கள்

கால்சியம், நாகம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம்.

தாவர வேதிப்பொருட்கள்

Omega 3 Fatty acid, Beta sitosterol, Xylose, Diosgenin

பிற சத்துகள்

அதிக அளவில் நார்சத்து மற்றும் மாவுசத்து, புரதசத்து போன்றவை அடங்கியுள்ளன.

கருணை கிழங்கின்மருத்துவபயன்கள்

1. மூலநோய்க்கு

சிறு கருணை கிழங்கின் தோல் நீக்கி துண்டுகளாக்கி உலர்த்தி பின்னர் தயிரில் மூன்றுவேளை ஊற வைத்து உலர்த்தி எடுத்த கிழங்கு 200 கிராம், சுக்கு 40 கிராம், சீரகம் 40 கிராம், இந்துப்பு 40 கிராம் சேர்த்து பொடித்து சூரணமாக்கி கொள்ளவும்.  இதை ஒரு கரண்டி மோரில் கலந்து தினம் இருவேளை 2 மாதம் முதல் 6 மாதம் வரை சாப்பிட்டு வர மூலநோய்கள் அகலும். நார்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலும் அகலுகிறது.

2. நோய் எதிர்ப்புசக்திக்கு

கருணை கிழங்கில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குடலில் நன்மை பயக்கும் நுண்கிருமிகளை பாதுகாத்து குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

மேலும் “தேரன் நோய் அணுகா விதி” என்னும் வைத்ய நூலில், நோய் அணுகாமல் இருப்பதற்கு சமைத்து சாப்பிட வேண்டிய ஒரே ஒரு கிழங்கு வகை கருணைகிழங்கு  என குறிப்பிட்டிருப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கருணை கிழங்கிற்கும் உள்ள தொடர்பு நன்கு புலனாகும்.

3. கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடை குறைப்பதற்கு

கருணைகிழங்கினை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கச் செய்கிறது. கருணை கிழங்கில் உள்ள ஓமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் நல்ல கொழுப்பை கூட்டுகிறது. மேலும், நார்சத்து அதிகம் இருப்பதால் பசியை குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது.

4. இருதய ஆரோக்கியத்திற்கு

வாரம் இரு நாட்களாவது கருணை கிழங்கை சமைத்து சாப்பிடுவது இருதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

கருணைகிழங்கில் பொட்டாசியம் சத்து மற்றும் பிற சத்துக்களும் அதிகம் இருப்பதால், அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இருதயம் சீராக துடிக்கச் செய்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதால், இருதய அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இரத்த உறைதலை தடுக்கும் குணம் இருப்பதால், இரத்த ஓட்டத்தை சீராக்கி இருதய ஆரோக்கியத்தை பேணுகிறது.

 5. மூளை நரம்பு மண்டலம் வலுப்படுத்துவதற்கு

கருணை கிழங்கில் மூளை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் விட்டமின் B சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகசத்து, செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருள்கள் இருப்பதால், நல்ல ஞாபகசக்தி, மறதிநோய், மூளைச்சுருக்கம் மற்றும் மனப்பிறழ்வு (Anxiety) ஆகியவற்றிற்கு சிறந்ததாகிறது.

6. நச்சுத்தன்மை அகற்றலும், கல்லீரல் பாதுகாப்பும்

கருணைகிழங்கில் உள்ள  Quercetin என்னும் தாவர வேதிப்பொருள், கல்லீரலை பாதுகாக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி உடலை பாதுகாக்கிறது.

7. தோல் ஆரோக்கியத்திற்கு

கருணைகிழங்கில் விட்டமின் C சத்து உள்ளது. இவை முகத்தில் அடிக்கடி முகப்பரு தோன்றுவதை தடுக்கிறது. மேலும் தோல் சுருக்கம் ஏற்படாமல் தோலை பளபளப்பாக்குகிறது.

8. எலும்பு ஆரோக்கியத்திற்கு

கருணைகிழங்கில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ் சத்து உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகிறது.

9. நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு

கருணைகிழங்கில் மாவுச்சத்து இருப்பினும், சர்க்கரை குறியீட்டு அளவு (Glycemic index- 51) குறைவாக இருப்பதாலும், உடலுக்கு தேவையான உயர் மற்றும் தாது சத்துக்கள் நிரம்பி இருப்பதாலும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் செய்கை இருப்பதாலும், இது நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.

10. மூட்டு வீக்கத்திற்கு

கருணைகிழங்கின் தோல் சீவி அரைத்து நெய் கலந்து சூடாக்கி, பூசிவர மூட்டுவீக்கம் மாறும்.

11.பெண்களுக்கு ஹார்மோன் சமநிலைப்படுத்துவதற்கு

கருணைகிழங்கில் உள்ள            Diosgenin  என்னும் தாவர வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போன்று செயல்படுவதால், பூப்பு – பருவ வயதை கடந்தவர்களுக்கு திடீரென ஏற்படும் அதிக சூடு, அதிக வியர்வை, மனநிலை மாற்றம் போன்றவற்றிற்கு, கருணைகிழங்கை சமைத்து சாப்பிட நல்ல மாற்றத்தை உணரமுடியும். மேலும் இதற்கு புற்றுநோயை தடுக்கும் குணமும் உண்டு.

கவனிக்க வேண்டியவைகள்

  1. .கருணைகிழங்கு தோலில் கால்சியம் ஆக்சலேட் என்னும் படிவம் இருப்பதால், ஊரல், தடிப்பு, நமைச்சல் உண்டாகும். இதனை தடுப்பதற்கு கைகளில் எண்ணெய் தேய்க்கலாம்.
  2. கருணைகிழங்குடன் புளி சேர்த்து சமைப்பதால் அதன் சத்துக்கள் குறையாமல், வாய் மற்றும் தொண்டையில் கரகரப்பு, அரிப்பு ஏற்படாமல் உண்ணலாம்.
  3. அதிக அளவில் உண்பதால், வயறு உப்பல், வாயு, வயிற்றுவலி உண்டாகலாம்.
  4. இரத்தம் உறைதலை தடுக்கும் தன்மை இருப்பதால், அறுவைசிகிட்சைக்கு முன் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *