குறைந்த கூலியில்குறைந்த கூலியில்  நிறைய உழைப்பாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..குறைந்த கூலியில்

  • By Magazine
  • |

உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின்     47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் திட்டங்களும் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன. மட்டுமல்ல, ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளன. அவர் முதலில் கையெழுத்து இட்டது மனித சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் பயன் தரக்கூடிய “பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகும்”. இது மனித சமூகத்தின் செயல்பாடுகளால் ஆளப்படும் வெப்ப அதிகரிப்பு, உணவு பாதுகாப்பு, அவற்றில் ஏற்படும் பலவித சவால்கள், பயிர்களின் விளைச்சல் மாற்றங்கள், எதிர்பாராத வெள்ள சேதங்கள், இயற்கை பேரழிவுகள், சுகாதார மாற்றங்கள் என பல்வேறு விசயங்களை உள்ளடக்கியதாகும். இவைகள் அனைத்தையும் உலகோடு இணைத்து கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகிக்கொள்வது உலக மக்களை கேள்விக்குறிக்குள் வீழ்த்தி உள்ளது.

அடுத்து அவர், “உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து விலகும் ஆவணத்தில்” கையெழுத்திட்டுள்ளார். இஃது உலக மக்களுக்கு பல்வேறு வகைகளில் உருவாகும் சுகாதாரம் சார்ந்த பிரட்சனைகளில் முன்னேற்பாடாக செயல்படும் தன்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகும். இது மட்டுமன்றி இவரது பதவி ஏற்பிற்கு பின் நடந்துவரும் பல்வேறு திட்டங்களும் செயல்பாடுகளும் எளிதில் பிற நாட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிலேயே உள்ளது. தன் நாடு, தன் முனைப்பு, தன் வளர்ச்சி எனும் உள்நாட்டு சிந்தனை சார்ந்து இயங்கத் தொடங்கி உள்ள டிரம்பின் செயல்பாடுகள் பல நாடுகளின் தொடர்பில் ஓர் அச்சத்தையும் அதேநேரம் அமெரிக்க பூர்வ குடிகளிடம் ஓர் உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும். இவரது உலகளாவிய பார்வை வெகுவான சுருக்கத்தை உருவாக்கி உள்ளது.

வரிவிதிப்புத் திட்டங்கள், போர்க்கருவிகள் தயாரித்தல், விநியோகித்தல் எனும் திட்டங்களும், குடிபெயர்ந்தோர்களை குடியமர்த்த மறுக்கும் திட்டங்களும் உலகளாவிய அளவில் டிரம்பின் வல்லரசுக் கனவை படம்பிடித்துக் காட்டி வருகிறது. இவர் நினைத்தால் வளைகுடா போர்கள், ரஷ்யா உக்ரேனிய போர்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனும் உலகநாடுகளின் எதிர்பார்ப்புகள் இன்றுவரை முழுமை அடையாத ஏமாற்றமாகவே உள்ளது. அமெரிக்கா பிற நாடுகளின் பல்வேறு தொடர்புகளிலிருந்து தனித்த விதமாக செயல்படுவது பல நாடுகளின் இறையாண்மைக்குக் கூட ஓர் அச்சுறுத்தலாகவே அமைந்துவிட்டது எனவும் கருத இடமளிக்கிறது. இனி இந்தியாவைப் பார்ப்போம்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையை கணக்கி லெடுத்துக் கொண்டு செயல்படும் நோக்கு குறைந்துகொண்டே வருகிறது. கல்விக்கூடங்கள் நாளுக்கு நாள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இது தனியார் முதலீட்டிற்கு ஓர் ஒப்பற்ற வருவாய்தளமாக மாறிவருகிறது. மாணவர்கள் கல்வி கற்று உயர்நிலையடையும் வழிவகைகளை மேற்கொள்ளும் சூழலில் அவர்கள் எதை வைத்து எப்படி சாப்பிடுவார்கள் என்ற திட்டமும் மிகமிக இன்றியமையாதது என்பதனை அரசு கணக்கில் கொள்ளவேண்டும்.

வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை நோக்கி வாழ்வாதாரம் தேடி அன்றாடம் இடம்பெயரும் மனித உழைப்பாளிகளின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே வருகிறது. கல்வி கற்றவர்கள் பெருகிவரும் சூழலில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உயரிய இடத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டிய கடமையும் அரசிற்கு உள்ளது. 2024-2025 ஆண்டு பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகள் சார்ந்த ஊக்கத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. 2024-இல் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் 41 கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டு திட்ட காலத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை எளிமையாக்கும் ஐந்து திட்டங்களை அறிவித்திருந்தனர். 

இந்த பட்ஜெட்டில் அத்தகைய திட்ட வரையறைகள் காணப்படவில்லை. 2023-2024 ஆண்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 10.2% ஆகவும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 13% ஆகவும் உயர்ந்திருப்பதாகவும் கால் முறை சக்திக் கணக்கெடுப்பு (றிலிதிஷி) அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் எண்ணற்றோர் வேலை இழந்து பரிதாப நிலைக்குள் ஆளாக்கப்பட்டனர். இந்த சூழலில், சிறு வருமானமாவது போதும் என பலரும் சிறுகுறு தொழில்கள் செய்யவும் சிறு வணிகங்களில் ஈடுபடவும் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைந்து சுயவேலை செய்வோர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது என்பதனை தேசிய புள்ளியல் துறை (PLFS) 2023-2024-கான காலமுறை தொழிலாளர் உழைப்பு சக்தி கணக்கெடுப்பு மூலம் வெளியிட்டது. இதனால் வேலையின்மை விகிதம் 3.2% தேக்கமடைந்துள்ளதையும் அதற்கு அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என்பதையும் காட்டுகிறது. இதைப்போன்றே சாதாரண சுயதொழில் செய்யும் ஆண்களின் வருமானமும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பதனை பொருளாதார ஆய்வுகளும் தெளிவுபடுத்தி வருகிறது. 2017-2018 ஆண் தொழிலாளர்களின் மாத சம்பளம் 12,665 ஆக இருந்தது. அஃது 2023-2024-ல் 11,858 ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் வேலைவாய்ப்பின்மையால் உழைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதே ஆகும். இதுபோலவே விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு திட்டவட்டமாக நிர்ணயிக்காததால் விவசாயத்துறை கூலிகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார தளங்கள் முழுவதும் அரசின் கையிலிருந்து பெருமுதலாளிகளின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படும்போது… கார்பரேட்டுகளுக்கு படித்த பட்டதாரிகளும் மடைமாற்றமடைகின்றனர். குறைந்த கூலியில் நிறைய உழைப்பாளர்கள்… இவர்கள் உருவாகவில்லை, உருவாக்கப்படுகிறார்கள்… வேலை செய்ய கஷ்டம் என்று சொத்துக்களை விற்று வட்டிக்கு விட்டுவிட்டு கிடைக்கும் வட்டியில் வாழ்க்கை நடத்தும் பொருளாதார சூழல் உருவாகி வருகிறது. பிள்ளைகளின் கதி… உழைக்கும் நிலங்கள் பிறர் கையில்… கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விடுகிறது…

தொழிற்சாலைகள் பெருக்கம், விவசாய உற்பத்திப் பெருக்கம், வணிக விரிவாக்கம், நீர் சேர்க்கை, நிலம் சேர்க்கை, சுகாதார வளர்ச்சிகள் என எண்ணற்ற எதிர்கால தேவைகள் நம் மண்ணிற்கு உள்ளன.

காட்டையும், களனியையும் விற்று ஒருவன் வீட்டைக் கட்டிவிட்டு கடனில் விழுந்து கடைசியில் வீட்டையும் விற்றுவிட்டு பிச்சை எடுத்து வாழ்ந்ததாக கிராமப்புறங்களில் கதை சொல்வதுபோல் மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் மாறி மாறி கடன் வாங்கி மக்களின் தலையில் சுமத்தி, நாட்டையே நலன் கெடுத்து விடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம்.

50,000 கடன் பெற்றவன் கட்ட முடியாமல் தவிக்கும் நேரம் வங்கிகளும் காவல்துறையும் இணைந்து அவன் உடமைகளையும், வீட்டையும் கைப்பற்றி கிடைத்த விலைக்கு ஏலம் விடும் வண்ணம் வகை செய்யப்பட்ட சட்டங்கள்…

ஆயிரம் லட்சம் கோடிகள் கடன் வாங்கியவர்களின் வாராக்கடனுக்கு மக்களின் கோடிக்கோடியான வரிப்பணத்தை தள்ளுபடி செய்து வாழ்வழிக்கிறதே… இது எந்த வழியில் நீதி…? நீதி தேவர்கள் சற்று சிந்திக்கட்டும்… ஏழைகளுக்கு செய்ய வேண்டிய சேவையை மேழைகளுக்கு செய்யும் நீதி நீதியில்லை…

இன்று இந்தியாவின் மொத்த கடன் 197 லட்சம் கோடி. இந்திய தேசிய உற்பத்தி 357 லட்சம் கோடி. இதன்படி, கடன் விகிதாச்சாரம் 55% ஆக உயர்ந்து நிற்கிறது. பணத்துக்கெதிரான டாலரின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. அப்படி எனில், நாம் கட்டும் வட்டி மதிப்பு டாலருக்கு ஒப்பிடும்போது ஏறிக்கொண்டே செல்கிறது. தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனையும் வருகின்ற அரசெல்லாம் கடனாளியாக மாற்றவில்லை. கடன் சுமைக்குள் அழுத்தப் பார்க்கிறது. இதுதான் தந்தை மகனுக்கு ஆற்றும் கடனோ? என எண்ணத் தோன்றுகின்றது. இந்திய தேச மொத்த உற்பத்தியின் (PLFS) மதிப்பீடுகள் கடந்த ஆண்டு 8.2% ஆக இருந்த உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டு அதாவது 2024-2025 இல் 6.4% அக குறையும் என்று கணித்துள்ளது. இஃது அரசின் நிகர வருவாயை பாதிக்கும் ஒரு மந்தநிலை ஆகும் என்பதையே காட்டுகிறது.

இன்றைய பட்ஜெட் மதிப்பீட்டில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, விவசாயம், கல்வி, உணவுமானியம், எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகியவற்றிற்கான பொது செலவினங்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் பிரதம மந்திரியின் மத்திய நிதி உதவி திட்டங்களான ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா போன்றவற்றிற்காக திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (ஸிணி) 47,469 கோடி மற்றும் 38,575 கோடிகளாக சரிந்துள்ளன. இதுபோலவே தேசிய நூறுநாள் வேலைவாய்ப்புக்கான செலவும் முந்தைய ஆண்டை விட 3,654 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே நாம் பொருளாதார நெருக்கடியில் உள்ளோம் என்பதனை உலகிற்கு படம்பிடித்துக் காட்டுகின்றது.

இந்தியா வளமை மிக்க நாடு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அறிவு, திறன், உழைப்பு, வளம் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆனால், நாம் ஏன் பிற நாடுகளை கடனுக்காக கை நீட்டுகிறோம். நாம் ஏன் பிற நாடுகளைப்போல் அறிவியல் முன்னேற்றம் அடையவில்லை…

சிந்தனைக் குறைபாடா? செயல் குறைபாடா? உழைப்பின்மையா? ஏன்? ஏன்? என்ற கேள்விகள் தான் எழுகிறது. ஆம்… ஆம்… அறிவியலை பயன்படுத்திக் கொள்ளவில்லை… என்று பலரும் முனகும் தெருமுனை ஓசை காதில் விழுகிறது… வளர்ச்சித்திட்டங்களை வகுப்போம்…

விளைநிலங்களை விற்று, வணிக முதலீட்டை எடுத்து வீட்டைக் கட்டாமல்… வருவாய் தரும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.

அன்புடன், 

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *