பொன்.குமார்
எழுத்தாளர் குமரி ஆதவன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளராகவும் இயங்கி வருகிறார். குமரி ஆதவன் பல்வேறு சூழல்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிர் நதியின் ஓசை என்னும் கட்டுரைத் தொகுப்பாக்கித் தந்துள்ளார். தலைப்பு ஒரு கவிதைத் தொகுப்புக்கான தலைப்பு போல் உள்ளது.
இயற்கை மனிதனுக்கு தந்திருக்கிற மிகப்பெரிய கொடை நீராதாரம். நீர் ஆதாரங்கள் அதிகமாக அழிக்கப்பட்ட காலம் இந்த நூற்றாண்டுதான். ஏராளம் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய் பூமி வளம் இழந்த காரணத்தால் பச்சை ஆடை கட்டி பவனி வந்த நிலம், நிர்வாணமாய் நிலை குலைந்து நிற்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்கள் முழுமையும் நிறைந்திருந்த வளங்கள் திருடப்பட்டு, இதயம் இழந்த மனிதன் போல் இன்னலுற்றுக் கிடக்கின்றது. குறிப்பாகக் குமரி மண்ணையும் தமிழ் மொழியையும் காப்பாற்ற எண்ணற்ற உயிர் தியாகங்களை நம் முன்னோர்கள் செய்தார்கள். அதன் பயனாய் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அவர்கள் பெற்றுத் தந்த எல்லாவற்றையும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் “ என முன்னுரையிலேயே தொகுப்பின் நோக்கத்தைத் தெரிவித்துள்ளார் குமரி ஆதவன்.
புரட்சியும் விடுதலையும் தொகுப்பின் முதல் கட்டுரை. நாட்டில் புரட்சிச் செய்தவர்கள் பலர். விடுதலைக்கு போராடியவர்கள் பலர். புரட்சியும் செய்து விடுதலைக்கும் வித்திட்டு வாழ்ந்தவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் மார்ஷல் நேசமணி. அவரைப்பற்றிய கட்டுரை இது. புரட்சியாளர் வைகுண்டர் வழியில் வந்தவர். இயேசுவின் வாழ்வையும் ஏற்றுக்கொண்டவர். வாழும் சூழ்நிலையே ஒருவரை புரட்சியாளர் ஆக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் புரட்சியாளரான நேசமணிக்கு எதிர்ப்புகளும் இருந்தன. சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்னும் நீதிமன்ற தீர்ப்பு வாசகம் உருவாவதற்குக் காரணமானவர். வரிகட்டுவோர் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்னும் நிலை இருந்த போது 1943-இல் திரூமூலம் சட்டசபைக்கு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்தியாவிலேயே அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்று தெரிவித்துள்ளார். தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடினாலே வெற்றி கிட்டும் என்று உணர்த்தியவர். மேலும் அவர் செய்த புரட்சிகளைச் செய்தவர் என கட்டுரை மூலம் தெரிவித்துள்ளார். மார்ஷல் மறைந்தாலும் அவரின் கொள்கைகள் மறையாது என்று கட்டுரையை முடித்துள்ளார்.
உலகமே அஞ்சிய ஒரு நாள் 26.12.2004. சுனாமியால் பலர் உயிர் இழந்தனர். உயிருடன் இருந்தவர்கள் வீடுகளை இழந்தனர். சுனாமி ஓர் இரவில் வந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்னும் மனத்தில் இருக்கிறது. சுனாமி ஏற்படுத்திய சேதத்தை சரிசெய்யவே சில மாதங்கள் தேவைப்பட்டன. சுனாமியும் களம் கண்ட காட்சிகளும் என்னும் கட்டுரையில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் சுனாமிக்குப் பின்னான நிலையையும் விளக்கியுள்ளார். கட்டுரையை எழுதும் போதும் கண்ணீருடன் எழுதுவதாக தெரிவித்துள்ளார். குழியில் பிணங்களை இறக்குகிற போது வெளியான கண்ணீரின் ஈரம் இன்னும் காயாமலே உள்ளது என்கிறார். சுனாமி குறித்த எச்சரிக்கையை அரசு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் சுனாமி பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இறுதியாக உதவியவர்கள் சாதி, மதம் மாறாமல் உதவினார்கள் என்று பாராட்டியுள்ளார்.
ஒக்கிப்புயலும் ஓயாத கண்ணீரும் என்பது தொகுப்பின் மூன்றாம் கட்டுரை. ஒக்கிப்புயல் குறித்து முன் எச்சரிக்கை செய்யாமல் மத்திய மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று குற்றம் சொல்வதை விமர்சித்துள்ளார். அறிவிப்பு வரும் முன்னரே புயல் வந்து அழிவை ஏற்படுத்தி விட்டது என்பது அரசின் மெத்தனப்போக்கைக் காட்டுகிறது. முன் எச்சரிக்கை தராத அரசு பின் நடவடிக்கையிலும் கோட்டை விட்டது என்கிறார். கடற்படை என்பது மீனவர்களைக் காக்கவும் பயன்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஒரு மீனவர் காணாமல் போனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதற்கு பின்னரே இறப்பின் பலன். அதுவரை அந்த குடும்பம் என்ன செய்யும் என்னும் கேள்வியையும் எழுப்பியுள்ளார் கட்டுரையாளர் குமரி ஆதவன். மக்கள் ஒன்றிணைந்து தங்கள் உறவுகளையும் உன்னதமான போராட்ட உணர்வுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்கான தேவையைத்தான் ஒக்கிப்புயல் ஏற்படுத்தியிருக்கிறது என்று கட்டுரையின் இறுதியில் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை அருமையாக அறிவுரைத்துள்ளது அறம் துறந்த ஊடகங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். நேர்மையாகச் சொல்ல வேண்டும். அதுவே ஊடகங்களின் தர்மம். ஊடகங்களின் கடமை. ஊடகங்களின் அறம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப, அதிகாரத்திற்கு ஏற்ப செய்திகளை பரப்பி வருகின்றன. மக்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறது. பயத்துடனேயே இருக்கச் செய்கிறது. கொரானா காலத்தில் ஊடகங்கள் அறத்துடன் நடந்துகொள்ளவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார். மக்களை மனநோயாளியாக்கியது ஊடகங்களே என்கிறார். தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் பொருத்தவரை அறக்கொலையே ஊடகங்கள் செய்துள்ளது என்கிறார். அரசு ஊடகமான அகில இந்திய வானொலியும் ஆட்சியாளர்களுக்கு துதிபாடுகின்றன என குட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களை அதிகாரமும் மிரட்டிவைத்துள்ளது எனவும் எழுதியுள்ளார்.
புத்துலகு படைப்போம் என்னும் கட்டுரையில் இயற்கையைக் காப்போம் என்கிறார். இயற்கையைக் கடவுள் என்று வணங்கிக் கொண்டே இயற்கையை அழிக்கிறோம் என்று விமர்சித்துள்ளார். இயற்கையோ சுனாமி, புயல், பெருமழை, பூகம்பம் என பதிலடி தருகிறது என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குழந்தைகள் வாழ நல்ல காற்றை, நல்ல நீரை சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
குளம் , குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளைக் காக்க வேண்டும் என்கிறது உயிர்நதியின் ஓசை என்னும் கட்டுரை. சங்க காலத்தில் இருந்த நீர் மேலாண்மை தற்போதும் தேவை என்கிறார். இயற்கையை எதிர்த்து நீண்ட காலம் மனிதர் வாழ்தல் அரிது என்கிறார். நீர்வளம் நிறைந்த பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனம் கண்டறிந்து சிறுதொகையாக பிச்சைப்போட்டுவிட்டு சுரண்ட ஆரம்பித்துவிட்டது என்கிறார். காற்றைப்போல் நீரும் பொதுவானது என்கிறார். நீரால் பொருள்களை உருவாக்க முடியும் நீரை உருவாக்க முடியாது என்றும் உணர்த்துகிறார். மழை நீரை சேமித்தாலே போதும் கர்நாடகத்திடமும் கேரளத்திடமும் கையேந்த தேவையில்லை என்கிறார். நீர் நிலைகள் காக்க சட்டம் இயற்ற வேண்டும், நீராதாரங்களை அழிக்கும் கார்ப்பரேட்டுகளை அழிக்கக் கூடாது, ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும், விவசாயிகள் தலைமையில் நீர் ஆதார பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்னும் ஆலோசனைகளையும் குமரி ஆதவன் வழங்கியுள்ளார்.
இந்தியாவில், தமிழகத்தில் குமரிக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. ஒரு பெருமை உண்டு. உலகின் அதிசயம் குமரி என்னும் தலைப்பில் குமரியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் குமரி ஆதவன். குமரிக்கண்டமே முதல் கண்டம் என்கிறார். அதில் பேசியதே முதல் மொழி தமிழ் என்கிறார். தமிழ் மொழியைப் பற்றியும் பேசியுள்ளார். தமிழின் கிளை மொழிகளே மற்றவை என்கிறார். இயற்கையாகவே இயற்கை வளம் நிறைந்தது கன்னியாகுமரி. குமரியின் வரலாற்றையும் கூறியுள்ளார். புரட்சிக்கு மட்டுமில்லை ஆன்மீகத்திற்கும் பெயர் பெற்றது குமரி என அடையாளப்படுத்துகிறார். தொழில் வளத்தைப் பெருக்கலாம் என்றும் ஒரு விமானத் தளம் அமைக்கலாம் என்றும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். மலைகள் நிறைந்த குமரியைக் காக்க வேண்டும் என்பதும் குமரியின் கோரிக்கை.
பொங்கல் திருவிழாவை மானுடர் திருவிழா என்று அடையாளப்படுத்துகிறார். பொங்கல் திருவிழாவைத் தமிழர் என்றில்லாமல் அனைவருக்கும் பொதுவான விழா என்கிறார். சமயம் கடந்த விழா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்விழா தமிழர்களிடமிருந்தே உலகம் முழுவதும் பரவியுள்ளது என்கிறார். குமரியை நாஞ்சில் நாடு என்பர். குமரி நாஞ்சில் என்றால் உழவு என்கிறார்.
தமிழ் நிலமும் உடைந்த கனவுகளும் என்னும் கட்டுரையும் குமரி நிலத்தைப் பற்றியே பேசுகிறது. சேர நாடு சிதறி வேணாடாகி வேணாடு திருவிதாங்கூராக மாறி நம்பூதிரிகள் வசமாகி நெடிய போராட்டத்திற்கு பின் சென்னை மாநிலத்தோடு இணைத்து கன்னியாகுமரி மாவட்டமான வரலாறு வரை பேசியுள்ளார். மாவட்டமானாலும் அதன் கனவுகள் தொடரவே செய்கின்றன என்கிறார். விமான நிலையம், துறைமுகம், தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டியுள்ளார்.
இத்தொகுப்பில் ஒரு வித்தியாசமான, முக்கியமான கட்டுரை அப்பச்சி தேர்தல். காமராஜர் கன்னியாகுமரியில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கதை. சொந்த தகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப் பட்டவரை கன்னியாகுமரி வெற்றிப்பெற வைத்த கதை. ஒரு தேர்தல் பிரச்சாரமென்றால் எப்படி இருக்க வேண்டுமென காட்டிய கதை. தேர்தல் நிதியை மறுத்துள்ளார். ஆனால் மக்கள் தந்த சில்லரைக் காசுகளை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதையும் வெற்றிப் பெற்ற பிறகு கட்சி நிதியாக தந்து விடுகிறார். காமராசரை எதிர்க்க தி. மு. க. முயன்ற போது அண்ணா ஏற்கவில்லை. பெரியாரும் காமராசருக்கு ஆதரவு. விருதுநகரில் அண்ணாச்சி போல கன்னியாகுமரியில் அப்பச்சி. விருதுநகரில் காமராசர் தோற்ற போது மார்ஷல் நேசமணி தான் ராஜினாமா செய்கிறேன் கன்னியாகுமரியில் நில்லுங்கள் என்று அழைத்துள்ளார். ஆனால் நேச மணி இறந்த பிறகு இடைத்தேர்தலில் நிற்கும் நிலை காமராசருக்கு ஏற்பட்டுவிட்டது. வெற்றியோ தோல்வியோ ஏற்பதே ஜனநாயகம் என்றவர் காமராசர். காமராசர் பைபிளை விரும்பி வாசித்துள்ளதையும் அறியமுடிகிறது. இக்கட்டுரையை பலரிடம் பேசி தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
அதீத சுதந்திரம் ஆபத்து என்பது கொரானா காலம் தொடர்பானது. கொரானா ஒரு பெருந்தொற்று. மக்கள் கூடும் போதெல்லாம் தொற்று பரவத் தொடங்கியது. கொரானாவிற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை. மணியடித்தால், விளக்கேற்றினால், சாணத்தில் குளித்தால் தொற்று தொடராது என்னும் மூடநம்பிக்கைகளை குமரி விமர்சித்துள்ளார். கொரனா காலத்தில் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தொற்று குறைந்ததால் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. தாராளமாக போகலாம், வரலாம், கூடலாம் என்றது. இச்சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு மக்கள் கூடினர். இது ஆபத்தையே விளைவிக்கும் என்கிறார் ஆசிரியர். அரசு தளர்ந்தினாலும் மக்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதுமுள்ள 336 நபர்களை சந்தித்து நேர்காணல் நடத்தி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரை அழிந்துவரும் கிராமிய விளையாட்டுக்களும் பண்பாட்டுச் சவால்களும். தமிழக விளையாட்டுகள் தொலைக்கப்பட்டது குறித்து. கணினிமயமாகிவிட்ட காலத்தில் கிராம விளையாட்டுகள் விளையாடினால் கௌரவ குறைவு என்று கருதும் சூழலில் கிராம விளையாட்டுகள் தொலைந்து போய்விட்டன என்கிறார். விளையாட்டுகள் என்பன உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நல்லது என்கிறார். உடம்பையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுபவை என்கிறார். சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளும் உள்ளன என்று விளையாட்டுகளை பட்டியலிட்டுத் தந்துள்ளார். கிராம விளையாட்டுகள் பண்பாடு சார்ந்தவை என்றும் குறிப்பிட்டு விளையாட்டுகளை மீட்டெடுக்க செய்யவேண்டியவையையும் அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.
சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு என்னும் கட்டுரை இயேசுவை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. இயேசுவை முன்னுதாரணமாகக் காட்டி கட்டுரையை எழுதியுள்ளார். இயேசு குழந்தையாக இருக்கும் போதே போராட ஆரம்பித்துவிட்டார் என்கிறார். கடவுளின் மகனாகவும் புரட்சியாளராகவும் புதிய மானுடச் சிந்தனையாளராகவும் காட்சி தந்து சிற்றறிவைப் போதிக்கும் இயேசுவிற்கு வருடமொருமுறை பிறப்பு இல்லை என்கிறார். விண்ணில் கடவுளுக்கு மகிமையும் மண்ணில் சமாதானமும் மனிதர் மேல் நேசமும் உண்டாகட்டும் என்பதே இயேசுவின் பிறப்புச் செய்தி என்கிறார். அநீதிகளை எதிர்த்தவர், கோவிலை வியாபாரமாக மாற்றியவரைத் துரத்தியவர், குழந்தைகளை அதிகமாக நேசித்தவர், சாதியை வெறுத்தவர் என்று இயேசுவைக் காட்டியுள்ளார்.
மக்களுக்கு அறம் முக்கியம். மக்களுக்கு அறத்தை வலியுறுத்த வேண்டியது இலக்கியத்தின் பணி. எனவே இலக்கியத்தில் அறம் அவசியம். எழுத்தாளர் குமரி ஆதவன் சிலப்பதிகாரத்தில் அறம் எந்தளவிற்கு உள்ளது என்பதை ஆய்ந்து ஒரு கட்டுரையாக தந்துள்ளார். துறவறத்திற்கும் இல்லத்திற்கும் இடையே இரண்டு அறங்களையும் வலியுறுத்தியே காப்பியம் இயற்றப்பட்டுள்ளது என்கிறார். முதன்மைப் பாத்திரங்கள் உள்பட அனைத்து பாத்திரங்களும் அறத்தையே போதிக்கின்றன என்கிறார். சான்றுகள் பலவும் தந்துள்ளார். கோவலன் அறம் மீறியதையும் அதன் விளைவையும் கூட குறிப்பிட்டுள்ளார். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் சிறந்த அறம் என்கிறது. கோவலன் கொல்லப்பட்டதை அறம் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். கண்ணகிக்குக் கோட்டங்கள் எழுப்பப் பட்டுள்ளதால் அறம் உண்மையாகிறது என்கிறார். சிலப்பதிகாரம் ஓர் அறக்காப்பியம் என முடித்து அறத்துடன் வாழ்வதே அறம் என்று கட்டுரையை நிறைவுச் செய்துள்ளார்.
எழுத்தாளரான குமரி ஆதவன் உயிர் நதியின் ஓசை என்னும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் இயற்கை, வரலாறு என இரண்டு வகைகளாக உள்ளன. இயற்கை பகுதியில் முக்கியமாக நீர்நிலைகளைக் காக்க வேண்டும் என்கிறார். மலைகள் சிதைப்பதையும் தடுக்க வேண்டும் என்கிறார். இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிராகவே முடியும் என்று எச்சரித்துள்ளார். இயற்கைத் தொடர்பாக அரசுகளுக்கும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். வரலாற்றில் எடுத்துக்காட்டுகளாக வாழ்ந்த காமராசர், மார்ஷல் நேசமணி ஆகியோர் குறித்தும் எழுதியுள்ளார். மேலும் கட்டுரைகள் மூலம் மனித குலத்திற்கு தேவையான பல விசயங்களை பேசியுள்ளார். கட்டுரைகளைக் கள ஆய்வுச் செய்தே எழுதியுள்ளார். கட்டுரைகள் அவரின் மெனக்கெடல்களுக்கு சான்று. கட்டுரைகளை வலுப்படுத்த மேற்கோள்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். சங்கக் கால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரையிலான வாசிப்பறிவைக் காட்டியுள்ளார். தொகுப்பையும் இயற்கைச் சார்ந்தவை இயற்கைச் சாராதவை என இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம். குமரி ஆதவனின் மனத்தில் குமரி ஒரு முக்கிய இடத்திலுள்ளதைக் கூறுகின்றன குமரி தொடர்பான அவரின் எழுத்துகள். உயிர் நதியின் ஓசை என்னும் இக்கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் குமரி ஆதவனின் சமூக அக்கறைக்கும், மனித மேம்பாட்டுக்கும், இயற்கை வளத்திற்கும் சான்றாக மட்டுமின்றி வழிவகுக்கவும் செய்கின்றன. உயிர் நதியின் ஓசையில் குமரி ஆதவனின் உள்ளத்தின் ஓசையையும் கேட்க முடிகிறது. தொடர்ந்து ஒலிக்கட்டும்.
வெளியீடு
தமிழன் பதிப்பகம் குமரி 9442303783
Leave a Reply