தலைவாசல்
திருவள்ளுவர் உலகப் பொதுமறை எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர்.
திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர்.
வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப்புகினும்
கற்கை நன்றே… என்கிறார் அவ்வை.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
என ஆணையிடுகிறான் அய்யன் வள்ளுவன்.
கற்றிலனாயினும் கேட்க எனும் குரல்
கேளுபாப்பா
கேளுபாப்பா
கேள்விகளாயிரம் கேளுபாப்பா
கேட்டால் கிடைப்பது பொதுஅறிவு…
என பாட வைத்தது….. கல்வி என்பது வாழ்க்கையின் வழிகாட்டி என்கிறார் தொல்காப்பியர்.கம்பன் 622குறட்பாக்களின் கருத்துக்களை தன் இராமகாதையில் பெய்துள்ளான்.
குறிக்கோள்
இக்கட்டுரை செப்பவந்தது
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..
என்ற குறள் பற்றி.
ஆம்…
மாடு என்றால் செல்வம், தமிழில் பசு என்ற சொல்லும் லத்தீனத்தில் பெசா என்ற சொல்லும் ஆங்கிலத்தில் பைசா எனும் சொல்லும் செல்வத்தின் அடையாளம்.
விழுச்செல்வம் என்றால் விழுமிய சிறப்புடைய குற்றமற்ற செல்வம், என்று பொருள்..
நன்றேதரினும் அல்வழிச்செல்வம் வேண்டா என்று வட்டிக்கடையில் கிட்டிய வேலையை வெட்டிவிட்டு நல்வழிச் செல்வந்தரும் கல்வியின்வழி தமிழ் படிக்கவந்த செட்டிப்பிள்ளை தமிழறிஞர் வ. சுப. மாணிக்கனார்.
ஆள்கொல்லியைக்கண்டேன் என அஞ்சி ஓடிப்போனார் ஒரு ஞானி
அது என்ன ஆட்கொல்லி என்று நாடிப்போன இருவர் ஒரு தாழிநிறைய தங்கக்காசு இருப்பதைக்கண்டனர் மகிழ்ச்சி கொண்டனர் பங்குவைத்துக் கொண்டனர்.. பக்கத்து ஊர் சத்திரத்தில் உணவு வாங்கி உண்டு செல்ல முடிவெடுத்து, ஒருவன் உணவு வாங்கப்போனான் மற்றவன் புதையலுக்கு காவலானான்.. வரும்வழியில் நண்பனின் உணவில் நஞ்சுகலந்து எடுத்து வந்தான்,மற்றவன், பங்கையும் கவரயெண்ணி..
மற்றவனோ பக்கத்து கிணற்றில் கைகழுவி வருவோம் என்று முன்பின்னாக இருவரும் செல்கையில் கிணற்றருகே வருகையில் புதையல் காவலன் நஞ்சுகலந்தவனை கிணற்றுள் தள்ளிக்கொன்றான்.. நஞ்சுகலந்த உணவை உண்டு இவனும் மாண்டான்.. ஞானியார் திரும்பி வருகையில் ஆட்கொல்லிசெய்த வேலையைக்கண்டு மீண்டும் அலறிஓடினார்.. இதைத்தான் பொய்யில் புலவன் “கல்லார் கட்பட்ட திரு” என்று(குறள் 408ல்)புகன்றார்.கற்றவன் கண்ணில் பட்டடிருந்தால் “பயன்மரம் உள்ளூர் பழத்தற்றால் செல்வம் நயனுடையான் கண்படின்”(குறள்216)
என்ற அருள் வாக்கிற்கு ஏற்ப பலருக்கு பொருள்வாய்த்திருக்குமல்லவா.
கல்வி, மனிதனின் மூன்றாவது கண்
எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392) தான் பெற்ற பட்டங்களைத் தன் அன்னையிடம் காட்டுகிறான் ஒரு இளைஞன். அவளோ. இதைல்லாம் என்னிடம் ஏன் காட்டுகிறாய் எனக்குத்தான் கண்ணில்லையே என்கிறாள்..அன்னையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிகின்றது.. ஆம்… அன்னைக்கு கண் இருக்கிறது அதில் பார்வையும் உள்ளது ஆனால் அவளுக்கு எழுத படிக்ககத் தெரியாது என்பதைத்தான் எனக்கு கண்ணில்லையே என்கிறாள்.
கல்விக்கண் திறந்த காமராசரைப்பெற என்னதவஞ் செய்தாளோ தமிழன்னை.
ஞாலம் கருதினும் கைகூடும்:
காலை எழுந்தவுடன் படிப்பு
இது பாரதி சொன்னது
ஞாலம் கருதினும் கைகூடும்
காலம்கருதி இடத்தாற் செயின் (குறள்.484)…என்ற குறட்பாவின் புதுப்பா…. இதையே வேடிக்கையாக…
மூன்றுமணிக்கு விழிக்கிறவன் முனிவன்
நான்கு மணிக்கு விழிக்கிறவன் ஞானி ஐந்து மணிக்கு விழிக்கிறவன் அறிஞன் ஆறு மணிக்கு விழிக்கிறவன் மனிதன் ஏழுமணிக்கு விழிக்கிறவன் எருமைமாடு என்று மாணவர்களிடையே உரையாடும் போது, கலியமூர்த்தி ஐ பி எஸ் தன் விழிப்புணர்வு பேச்சில் குறிப்பிடுவார்.
கலைமானின் கனவும் காந்தியாரின் கடிதமும்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு
நூல் கற்றாரோடு ஏனையவர் (குறள் 410) என்ற குறட்பா..
ஒரு கலைமானின் கனவும் காந்தியின் கடிதமும் பற்றிய செய்தியில் ஒளிவிடுகின்றது.
ஆம்… காந்தியார் உருசிய அறிஞர் டால்சுடாய்க்கு எழுதிய கடிதத்தில்
தங்கள் பொதுமைக்கருத்துக்கு ஊற்றுக்கண் எது எனக்கேட்க
உங்கள் இந்தியாவின் தெற்கிலுள்ள தமிழ் மொழியில் திருக்குறள் என்ற நூலின்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்.. (குறள். 972) என்ற பாடலும்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்(குறள்1062) என்ற பாடலும்தான்.. என்று பதிலிறுத்தார்..
குறளைப் படிப்பதற்காகவே மறுபிறப்பில் தமிழ் நாட்டில் பிறக்கவேண்டுமென்று ஆசையுற்றார் காந்தியார்… இப்படி தகவல்களை பரிமாறிக்கொள்வதே கல்வியின் பயன்… இப்படி பகிராதவர் விலங்கொடு அனையராவர்.. (கல்லாமையால் பகிரமுடியவில்லை)…இதோ ஒரு காட்சி…
கலைமான் ஒன்று இமயமலைச்சாரலில் அருவிக்கரையில் நரந்தம் உண்டதை கனவியதாக, பதிற்றுப்பத்து வரிகள் பேசுகின்றன ஆனால் அக்கவரிக்கு கல்விஅறிவு இல்லாததால் இன்னொரு மானுக்கு கடத்துகிற தன்மையில்லை..
ஆனால் புலவனுக்கு கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கவரிமான் கண்ட கனவை சக மனிதனுக்குக் கடத்துகிற கல்விஅறிவு செயல்பாட்டில் உள்ளதைக்காட்டுகிறது.
கற்றவர்…
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச்சொல்
எனும் குறள் 200-ன்படி நடப்பர்,கல்லாதார் இக்குறளைக் கடப்பர்.
கோபத்தீ தணிக்கும் கல்விநீர்
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடுஒப்பாரும்போல்வரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே. சீரொழுகு சான்றோர் சினம் (மூதுரை.23)என்கிறார் அவ்வை.இதையே ஆசான் தம் குரலில் ஊழிபெயரினும் தான்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்(குறள். 969) என முழங்குகிறார்.
பெற்றோரும் கல்வி கற்றோரும்
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்றது புறம்
ஈன்றபொழுதிற்பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோனெனக் கேட்டதாய் (குறள். 69)
தந்தை மகற்காற்றும் நன்றி அவை”யத்து
முந்தி இருப்பச் செயல் (குறள்.67)
சான்றோனாகுதல் கல்வி கற்றதனால் ஆய பயன் என்பதும்
அவை என்பது கல்விகற்ற சான்றோர் கூடுமிடம் என்பதும் வெள்ளிடைமலை.
மன்னனும் மாடுமேய்ப்போனும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர்துக்கின்
மன்னனில் கற்றோர்க்கே சிறப்பு
மன்னர்க்கு தான் ஆளும் நாடு தவிர சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
ஒருமன்னன் நகர்வலம் வருகையில் உழைத்தக் களைப்பில் ஒரு ஆலமரநிழலில் தூங்கிக்கொண்டிருந்தான்..சாலையோரத்தில் நின்ற பிற வேலையற்றதுகள் மன்னனை வணங்கினரர்.. மன்னன் சேவகனிடம் அவனை அழைத்து வரச்சொன்னார்.
அவன் எனக்கு மன்னரிடம்எந்த வேலையுமில்லை மன்னருக்கு என்னிடம் ஏதேனும் வேலையிருந்தால் என்னிடம் வரச்சொலல்லுங்கள் என்றான்..
மன்னர் இறங்கி வந்துஉனக்கு பெரிய அறிவாளி எற்று நி”னைப்போ என்றார்.. சோதித்துப்பார்த்தால் தெரியுமென்றான் மா”டு மேய்ப்பவன்.. சரி மன்னனர்கள் பந்தயம் வைத்துதான் உரையாடுவோம் என்கேள்விக்கு நீ தெரியாதென்றால் ஐந்து வராகன் தரவேண்டும் உன்கேள்விங்கு எனக்கு பதில் தெரியவில்லையேல் நான் 100 வராகன் தருவேன் எனறார்
பையன் கேட்டான் “மூன்று கொம்பு இரண்டு திமில் நான்கு வால் கொண்ட மிருகத்தினன் பெயரர் எது. என்றான்
எனக்கு பதில் தெரியாது எனச்சொல்லி 100 வராகனைக்கொடுத்தார் அந்த விலங்கின் பெயரை நீயே சொல் என்றார் எனக்கும் தெரியாது என்று 5 வராகனை கொடுத்துவிட்டு 95 வராகனுடன் போனான்.
இவ்விடத்தில் மன்னனைவிட மதியூகி மாடன்.
இளமையில் கல்
தலைவாரி பூச்சூடிஉன்னை பாட
சாலைக்கு போவென்று சொன்னாளுன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
மலைவாழையல்லவோகல்வி…
என பெண்பிள்ளையை பள்ளிக்கு ஆற்றுப்படுத்துகிறார் புரட்சிக்கவி.
அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் வேட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறான் முண்டாசுக்கவி.
அழியாச்செல்வம்
வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது கள்ளத்தான் ஆகாது கொள்ளினும் குறையாது…
என விவேக சிந்தாமணி சொல்லும்
,…………………………………………. (அடுத்த இதழில் முடியும்).
– குமரி எழிலன்
Leave a Reply