அன்பாதவன்
காலையில் எழும்போதே ‘ஜில்’லென்றிருந்தது. இரவு நல்லமழை பெய்து இருந்தது. தலைஞாயிறு கிராமத்தில் இதுதான் பிரச்சனை. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லாமல் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் மாதிரி எப்போது வேண்டுமானாலும் பெய்து தீர்த்துவிடும் மழை…. அதனால் தானோ… ‘தமிழ்நாட்டின் சிரபுஞ்சி’….. பேரு பெத்த பேரு.
தலைஞாயிறு என்றவுடன் நீங்கள் மாயவரம் அருகிலுள்ள தலைஞாயிறு என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் இருப்பது திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு அஞ்சல்நிலைய முழுப்பெயர்தலை ஞாயிறு அக்ரஹாரம்.
ரவியும் எழுந்துவிட்டான். “ஏம்பா… டீ குடிச்சுட்டு வர்லாமா? “எனக்கு இளங்குளிருக்கு தோதாக கதகதப்பாக தேநீர் அருந்தினால் தேவலைப்போலே இருந்தது.
“ம்…. போலாம்” – என்றபடியே முற்றத்துக்கு சென்று வாய்க்கொப்பளித்து முகம்கழுவி துடைத்தேன். லுங்கியை ஒழுங்காய் உதறிக் கட்டி சட்டையை அணிந்து, கண்ணாடி எதிரில் நின்று தலைவாரினேன். கண்ணாடியில் தூக்க கலக்கம் தெளியாத முகமொன்று… இல்லை..
இரண்டு கண்ணாடிக்கு அருகில் இருந்த கோட்டோவியத்தில் லெனின் புன்னகைத்து இருக்க மற்றொரு காலண்டரில் ‘மாவீரன்’துப்பாக்கி ஏந்தியபடி கம்பீரமாக நின்றிருந்தார். நாங்கள் புரட்சிக்காரர்களோ தீவிரவாதிகளோ… சங்கிகள் விளிக்கும் அதென்ன… அர்பன் நக்சல்களோ அல்ல… வயிற்றுப் பிழைப்புக்காக வங்கிப் பணிக்கு வந்தவர்கள். பாரதமணித் திருநாட்டில் பட்டொளி வீசி பல இடங்களில் பறந்து கொண்டிருந்த எங்கள் குஜராத் வங்கியின் குக்கிராமக்கிளை இந்த ஊரில் எழுந்தருளி இருந்தது. கெயிக்வாட் ராஜா வாழ்க! வங்கித்தேர்வு எழுதி வெற்றி கண்ட வீரர்கள் நாங்கள்!
நாங்கள் ….. எனில் ….. நான்…. சிவக்குமார்… விழுப்புரத்துக்காரன்.. என்னுடன் ரவிகோயில் கும்மோணத்தான். வங்கி இருக்கும் அக்ரஹார வீதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கும் இளைஞர்கள்.
“கௌம்பலாமா”-கிளம்பினோம். அக்ரஹாரவீதிக்கு, விழிப்பு வந்து விட்டது…
வாசலில் நீர்தெளிக்கும் சிலர் வாகான உடலை வளைத்தபடி வாசல் கோலம் தீட்டும் சிலர்-என வடக்குவீதி இயங்கத் தொடங்கியது.
அக்ரஹாரத்தின் கடைசியில் இருந்த பெருமாள் கோயிலில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாத இசைத்தூவல்… இசையை ருசிக்கராகம் மொழியெல்லாம் தெரியணுமா என்ன….?
வேகவேகமாய் நடந்து எங்களருகில் வந்தார்…யக்யராமன், எங்கள் வங்கியின் முக்கியமான வாடிக்கையாளர்களுள் ஒருவர்…
“என்ன சார்டீ குடிக்கவா… குட்மார்னிங்… இன்னிக்கு காலையிலேயே ஒண்ணு தோணுது… சொல்லவா…. கேக்கறேளா..”
“சொல்லுங்க சார்…”
“புதன் தான் கல்விக்கிரகம் மத்ததெல்லாம் கலவிக்கிரகம் என்ன… நான் சொல்றது சரிதானே”
“நீங்க என்னிக்கு சார் தப்பா சொல்லிருக்கீங்க… ரொம்ப கரெக்ட்” – ரவியின் நக்கல்தொனியை அவர் புரிந்து கொண்டவராய்த் தெரியவில்லை.
“சரிங்க சார்- நான் பெருமாளச் சேவிச் சுட்டுவர்ரன்.. நீங்க ஒங்க ஜோலியப் பாருங்க….”-அக்ரஹாரத்தில் இருக்கும் பலரும் நிலத்தை குத்தகை விட்டு அதில் வரும் படியில் வாழ்ந்து வருபவர்கள். வீடெங்கும் திண்ணைக்கட்டி, காலை மாலை பக்திப்பரவசம், பகலெல்லாம் சீட்டாட்டம் என வாழும் சொகுசு கூட்டத்தில் யக்யராமனும் உண்டு. குத்தகை அல்லது விவசாய வருமானத்தை தனியார் நிறுவனங்களில் நீண்டகால வைப்புத் தொகைகளாக, டெபாசிட் செய்துவிட்டு அதில் இருந்து வரும் வட்டித் தொகையில் தினசரி வாழ்வை நடத்துபவர்… யக்யராமன் சொகுசு சுந்தர்.
“நல்லது சார்” – என்ற படியே கடைத்தெரு பக்கம் திரும்பினோம்.
’ஜோலி.’ அலுப்பாயிட்டு…’’ டவுன்வந்துட்டு..’’சோழன்போயிட்டு’-இதெல்லாம்.-கடைமடை தலைஞாயிறின் மண்மொழி.
பக்கிரிசாமி கடைக்கருகே.. கூட்டமாய் பலர்.. பக்கிரிசாமி கடை தலைஞாயிறு கடை வீதிதொடங்கும் முகப்பில்வேறு வடக்குத் தெருவும், மேலத்தெருவும் சந்திக்கும் வாகான இடத்தில் அமைந்திருந்தது “வாங்க காம்ரேடு” – பக்கிரிசாமி வாஞ்சையுடன் வரவேற்றார். பக்கிரிசாமிக்கு தனது தேநீர்க்கடைக்கு வரும் அனைவரும் ‘காம்ரேடு’ தான். பால்கார காம்ரேடு… மளிகைகடை காம்ரேடு போல… நாங்கள் பேங்க்கார காம்ரேடு. பக்கிரிசாமி கடைக்கு இன்னொரு பெயர் ‘காம்ரேடு கடை’
இளைஞர்களான எங்களுக்கு அந்த ‘காம்ரேடு’ எனும் சொல்லே… உயர்வு நவிற்சி அணிபோலப் பெருமிதமாய் இருந்தது. அந்த வயசும் அப்போதுதான் வங்கியின் தொழிற்சங்கத்தில் இணைந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
காம்ரேட்… எளிய மொழியில் காம்ரேடு – ஆனாலும் குரலில் தொனிக்கும் தோழமை அளிக்கும் தேநீர்போல திடம்… சுவை.
“என்ன காம்ரேடு… என்ன விசேஷம் இன்னைக்கு … இவ்ளோ கூட்டம் நம்ம கடையில” – என்றேன்.
“அந்த போர்டைப் பாருங்க…. என்ன விசேஷமுன்னு புரியும்”
பாய்லரை… பால் பாத்திரத்தைச் சுற்றி வைக்கப்பட்ட தகரமொன்றில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தது.
இன்று தோழர் பி.கே. பிறந்தநாளை முன்னிட்டு
சர்க்கரை டீ 5 பைசா
சீனி, டீ 10 பைசா
வழக்கமான விலையான 10 பைசா, 15 பைசா- வில் இருந்து ஐந்து பைசா விலைக் குறைப்பு. சர்க்கரை டீ என்பது நாட்டுச் சர்க்கரையில் கலந்து தயாரிப்பது.. சீனி, டீ என்பது வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கும் டீ – என்றறிக.
கடையில் பலப் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எல்லாமே கறுப்பு வெள்ளைப் படங்கள். 1984-ல் அதுவே பெரியவிஷயம். பக்கிரிசாமி கடையில் மட்டும்தான் ஜனசக்தியும் தீக்கதிரும் பெஞ்சுகளில் போடப்பட்டிருக்கும்.
“யாரு, காம்ரேடு – பி.கே.” “என்னக் காம்ரேடு அப்படிக் கேட்டுட்டீங்க. காம்ரேடு பி.கே.பத்தி படிச்சதில்லையா”
“அய்யா… நாங்களே இந்த ஊருக்குப் புதுசு.. எங்ககிட்டயே பதில் கேள்வி கேக்குறீங்களே…”
“அட… ஆமால்ல…. சரிசொல்லுங்க…. சக்கரடீயா…. சீனி டீயா…”
“சீனி டீ … யே குடுங்க”
“காம்ரேடு ராஜமாணிக்கம்.. நம்ம காம்ரேடு பி.கே. பத்திசாருங்களுக்கு சொல்லுங்க… கூட்டம் சேந்ததுலே கடைல… ஜோலி… பெருத்துட்டு”
“சார்… டீயை எடுத்துகிட்டு பைய இந்தப்பக்கம் வாங்க” – என்ற ராஜமாணிக்கம் பக்கம் ஒதுங்கினோம்.
“பரவாயில்ல..சார்… இந்த சின்னவயசுல.. இதுமாதிரி விஷயங்கள கேக்குறப் பொறுமை இருக்குதே… அது பெரியவிஷயம் தான்”
புகழ்ச்சி யாருக்குதான் பிடிக்காது. தேநீரைப் போலவே ருசியாய் இருந்து “சார்… நீங்க தோழர் பி.கே. பத்திதெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி சாட்டையடி…. சாணிப்பால் பத்தி தெரிஞ்சுக்கணும்.
“அதென்ன…சாட்டையடிச் சாணிப்பால்…” -கேள்வி எழுப்பியவன் ரவி…
“ஒடம்புசரியில்லன்னாலோ..சொல்லாமல் வேலைக்கு வராமல் இருந்து விட்டாலோ பண்ணையடிமைகள கட்டிவச்சு சாட்டையில் அடிப்பாங்க. அஞ்சு பிரிவச்ச சாட்டைல பிரிவை விலக்கி விட்டு கூரான கூழாங்கல்லைச் செருகி வீசுவாங்க…. சாட்டையால அடிக்கும்போது ரத்தங் கொட்டும்… ஒவ்வொரு வீசலுக்கும் துடிப்பான் கூலிக்காரன்… வீறிடும் கொரலுக்கு ஆதரவெல்லாம் கிடையாது.
“சாணிப்பால் … பத்தி சொல்லலியே…!”
சில பண்ணைக்காரனுவோ மாட்டுச்சாணத்த கரைச்சு மாட்டுக்கு மருந்து குடுக்குற மூங்கில் குழாயில் நிரப்பி குடிக்கச் சொல்லுவாங்க அதுதான் சாணிப்பால் ஒருகாலைத் தூக்கிகிட்டு சுடுமணல்ல நெடுநேரம் நிக்கிற கொக்குபிடித்தல், காலுக்கு கிட்டி போட்டு நிக்க வைக்கிறதுன்னு பலவிதமான தண்டனைங்க
“இப்போ சொன்ன சாணிப்பால் …. சாட்டையடிக்கும் நீங்க சொல்லப்போற…. தோழர் விவரத்துக்கும் என்ன சம்பந்தம் அய்யா”
“இருக்கு…. இல்லாம இப்படி ஒரு பீடி கையைப் போடுவேனா”என்றவர்… வெற்றிலைச் சீவலை கலந்துவாயில் அடக்கிக்கொண்டார். துளி நேர அமைதி… “ம்ம்….” எனச் செருமிக் கொண்டவர் சொல்லத் தொடங்கினார்.
“நேத்து வரைக்கும் இந்தப்பகுதியில அன்னாடங்காய்ச்சிங்களா… வாழ்க்க நடத்துறதுக்கே வழியில்லாம இருந்தவங்க…. இன்னைக்கு தானும் ஒரு மனுசராதலை நிமிந்து நடக்குறாங்கன்னா…. அதுக்கு தோழர் பி.கே… தான் வேர்…ன்னு சொல்லுவேன்” விடாமல் பேசியதில் மூச்சுவாங்கியது ராஜமாணிக்கம் அய்யாவுக்கு.
“தண்ணி வேணுங்களா…”
“வேணாங்கசார்…. தோழரைப்பத்தி பேச ஆரம்பிச்சாலே உணர்ச்சி வசப்பட்டறது… பழக்கமா போச்சு….”
“நிதானமாகவே சொல்லுங்க…” எங்களுக்கு நேரமிருக்கு”- என்றேன்.
“அதோ… அந்தபோட்டோங்க இருக்குல்ல….”
“ஆமா…”
“அதுல… நாலாவதா இருக்கே அதுதான் தோழர் பி.கே. இங்கதான்… பக்கத்துல மணக்குடில பொறந்து வளந்தவர். சின்னக் கிளாஸ் மட்டும் தான் படிச்சார்…. பெரிய பள்ளிக்கூடமெல்லாம் படிக்க முடியல…..”
“ஏனுங்க… அய்யா”
“அவரோட அப்பாவாங்குனகடனுக்கு வட்டியா… மணக்குடி பண்ணை சரவணப்பெருமாள்… இவரை அவரோட மாடு கண்ணுகளை மேய்க்க உத்தரவு போட்டுட்டார்… அம்பது அறுவது மாடுங்க… எல்லாத்தையும் ஓட்டிட்டு போய் வீட்டுக்கு சாயங்காலமாக ஓட்டிட்டு வரனும். ஏதும் தொலைஞ்சிட கிலைஞ்சிடக்கூடாது. வந்தவொடன… வந்த காலிகண்ணுங்கள முறையாகட்டி, மாடுகளுக்கு தண்ணிகாட்டி…. தீவனம் வைக்கனும்.”
“யே… யப்பா… கேக்கவே கஷ்டமா இருக்கே…”
“இவரு மட்டுமா கஷ்டப்பட்டாரு…. ஊருல இவுரு குடும்பத்தையும் சேத்து பலபேரு… பண்ணை அடிமைங்களாவேத் தான் இருந்தாங்க….
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா… சின்னவயசுல இருந்து சொல்ல முடியாத துயரங்களை பாத்து வளந்தவருக்கு ஒரு வெளிச்சமாகெடச்சது செங்கொடி இயக்கத்தோட தொடர்பு.
கீழத்தஞ்சையில் இன்றைய திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பண்ணை அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களிடம், ‘உன்னை அடித்தால் திருப்பிஅடி’ அதனால் என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம்’என்றொரு கலகக்குரல் 1942-ல் தமிழ்நாட்டில் ஒலித்தது, அந்தகுரல் தோழர்பி.கே. அவர்களின் குரல்.
நிலவுடைமையாளர்கள், தங்கள் நிலத்தில் வேலை செய்த ஆண், பெண்டிரை எப்படி நடத்தினார்கள்… என்ற விவரம் நமக்குத் தெரிந்தால் தான் தோழரது கோபக்குரலின் நியாயம் புரியும்.
சோழ மன்னர்களால், பிரம்மதேசங்களாக, சதுர்வேதி மங்கலங்களாக தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் போல காவிரிக்கரையின் செழுமைநிலங்களை உயர்சாதி ஆண்டைகள் பரம்பரையாக அனுபவித்து வர, அவர்களிடம் தொண்டு செய்யும் அடிமைகளாய் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களுமாய் பண்ணையில் கூலித்தொழிலாளிகளாய், வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வந்தது வரலாறு. அவர்களின் முன்னோர்கள், வாங்கியகடனுக்கு, ‘புரோநோட்’எழுதிக் கொடுத்துவிட்டு ‘சுகந்தை’ என்ற பெயருடன் விவசாயம் சார்ந்த வேலைகளை செய்து வந்தார்கள்.
ஒருபண்ணையாரிடம் அடிமையாய் இருப்பவர் அவரிடம் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். அவர்தரும் இடத்தில் தான்குடிசை போட்டு தங்கி இருத்தல் வேண்டும். வேறொரு இடத்துக்கு விரும்பினாலும் போக இயலாது. விடிஞ்சப்புறம் தான் ஏர் கட்டணும், சூரியன் உதிச்சப்புறம் தான் பொம்பளையாளுவோ வேலைக்கு போவனும். அது வாழ்க்கையில்லை… கொடூரம்! நிலவுடைமை ஆண்டைகள் வீட்டிலிருந்து அதிகாலை மூணுமணிக்கு கொம்பு ஊதப்படும். பண்ணையடிமைகள் விழித்துக் கிளம்பி, நாலரை மணிக்கு ஏர்பூட்ட காளைகளை அவிழ்க்க வேண்டும். கருக்கலில் கழனியில் கால்வைப்பார்கள். வெளியேற முற்பகல் 11 மணிக்கு கரையேறலாம். கஞ்சியை குடிக்கலாம்.
களைத்து வந்தவர்களுக்கு ஓய்வெல்லாம் கிடையாது. பசிக்கிற சிசுவுக்கு கரையேறித்தான் பாலூட்டனும் கஞ்சியைக் குடித்த பின்பு, மாடுகளைக் குளிப்பாட்டி வைக்கோல் வைத்து தீவனம் காட்டணும்! பிறகு கழனி வேலைகளை ராத்திரி ஏழு…. எட்டு மணிவரைக்கும் செய்து முடிக்கணும். வேலைக்கு வரும் ஆண்பெண் அனைவரும் பொழுது சாஞ்சபொறவே குடிசைதிரும்ப முடியும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கணும்னு… சங்கம் வச்சு தொழிலாளர்களைத் திரட்டி போராடுனவரு நம்ம காம்ரேடு… ஆம்பளையாளுகளுக்கு நிதமும் ரெண்டு படி நெல்லு… பொம்பளையாளுவளுக்கு மூணு நாளுக்கு ஒருக்கா 2 மரக்கா நெல்லும் கூலியாக கொடுப்பானுவோ. அந்த நெல்லக்குடிசைக்கு எடுத்துட்டு போய்…. ஒரல்லக்குத்தி, பொடைச்சி…. சுத்தப்படுத்தி சோறாக்கலாம்…. பிறகு வயல் வரப்புல…. கொளத்துல கிடைக்கிற மீனு, நண்டு, ராட்டு எதையாவது வச்சி கொழம்பு வைக்கணும். இதெல்லாம் செஞ்சி சாப்புடறத்துக்குள்ள ராத்திரி நெடுநேரமாகும்… அவங்களுக்கு தூக்கம் என்றதும்… ஓய்வு என்பது கடைசி மூச்சுவிட்ட பொறவுதான்”
“ச்ச்…” “எங்க கதயெல்லாம்… ருசியான கத இல்லீங்க, துயரம், வாழ்க்க பூரா துயரம்….”
“புரியுதுங்க அய்யா…. எங்களுக்கு இந்தகதை, இந்த வாழ்க்கையெல்லாம்புதுசு…. மேல சொல்லுங்க….”
“பண்ணையாளுங்க….. ஆம்பளையோ பொம்பளையோ ஒழைக்கிற வயது வந்துட்டா பண்ணையார் வீட்டுலக் கட்டாயம் வேலைக்கு வந்து சேர்ந்துடணும். பள்ளிக்கூடம் மூச்சே பேசக்கூடாது, பஸ்ல… போகக் கூடாது…. வாய்க்காகரையோரம்.. வரப்பு உள்ளவுமே நடக்கனும். இதெல்லாம் விட பெருங்கொடுமை ஒண்ணு இருந்தது.”
“அதென்ன… பெருங்கொடும”
“பண்ணையாளு குடும்பத்துல யாருக்காவது கல்யாணம் காட்சிண்ணா… மொதல்ல பெரியபண்ணை கிட்ட சொல்லி அனுமதி வாங்கணும்… அந்த நேரத்துல பத்திரத்துல கை யெழுத்து வாங்கிட்டு கடனா ஒருமூட்ட நெல்குடுப்பாங்க…. எல்லாத்த விடவும் கொடுஞ்துயரம் என்னன்னா…. கல்யாணப் பொண்ணு முதல்ராத்திரி கட்டாயம் பண்ணையார் கூடப்படுத்தாகணும்”
“அடப்பாவிங்களா… இவ்ளோ அட்டூழியம் செஞ்சிட்டு நல்லவனுவ மாதிரி பேசுறான்களே”
இப்படி… வாயிருந்தும் ஊமைங்களாய் இருந்த உழுகுடி ஜனங்களிடம் பேசினார்… தோழர்.! பேசினார்னா.. பரிவோடு பேசினார்…. அக்கறையோட பேசினார் அவங்கநெலமை புரிஞ்சு பேசினார்… அவங்க வாழ்க்கை மாறப் பேசினார்.”
ஓட்டுப் பொறுக்கப் பேசல….அந்த ஊமைச்சனங்கள் மத்தில கலகக்கொரலை எழுப்பியது தோழர் தான். அவர்தான் இந்த வட்டாரத்துல முதல் சூரியன்.. ஆமா அவர் தான் எங்களுக்கு எங்க மக்களுக்கு தலைஞாயிறு “அடபாருங்க இதோ காம்ரேட் பி.கே. வே வர்ராரே……! காம்ரேடுக்கு நூறு ஆயுசு.. “காம்ரேடுவாங்க பொறந்த நாள் வாழ்த்துகள்…”- – பக்கிரிசாமி முகத்தில் பெருமிதப் பேரொளி.
“வர்ரேம்பா… என்னப்பா இது. போர்டு கீர் டெல்லாம் வச்சி…. மாறவே மாட்டியா நீ தனிநபர் துதியெல்லாம் நமக்கு கெடையாதுப்பா … புரிஞ்சுக்க… உனக்கு எவ்வளவு பாரம்… எவ்ளோலாபம்…. அதுலப்போகப் தள்ளுபடி தர்ர… ம்… என்னவோப்போ… சொல்பேச்சு கேக்குறதே இல்ல… கட்சி தலைமைங்களப் போல… சரி… டீயப் போடு…”
“காம்ரேடு… இதெல்லாம் என்னோட தனிப்பட்ட திருப்திக்காக… நான் இன்றைக்கு ஒரு ஆளா மத்தவங்க மதிக்கிற மனுசனா..கடைக்காரனா… இந்த கடைத்தெருவுல .. நிக்கிறன்னா அதுக்கு நீங்க தான் காரணம்… பெரிய வார்த்தை எதுனா பேசியிருந்தா மன்னிச்சிக்குங்க” – பக்கிரிசாமி குரலில் பவ்யமும்.. ஒருவித ஒப்புவிப்பு மனநிலையும். ஆனால் ஜொலிக்கும் உண்மை.
“விடு இன்னிக்கு நேத்தா உன்னைய பாக்குறேன் ஜனங்களுக்கு விலை குறைச்சு தர்ரியே.. அதுவே பெரிசு.. என்னத் தோழர் ராஜமாணிக்கம் யார் இவங்க எங்கேயோப் பாத்த மாதிரி இருக்கு இந்தப் புள்ளைங்களை”
“வணக்கம் காம்ரேட்… பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னும் நூறுவருஷம் நீங்க நல்லபடியா வாழணும்.”
“பேராசையா ராஜமாணிக்கம் உங்களுக்கு அதுசரி… இவங்க யாருன்னு கேட்டேனே..”
“நம்மூரு பேங்க்-ல வேல செய்யுறவங்க… உங்க கதையத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அந்தநாள் போராட்டம்.. துயரம் சூழ்ந்த வாழ்க்கை…. எல்லாத்தையும் தான்..”
“வணக்கம் தம்பிங்களா…. உங்களத் தோழர்னு அழைக்கலாமா….”
“தாராளமா… காம்ரேடு… பி.கே… நான் ரவி கோபால் இது சிவக்குமார்… உங்க கதையக் கேட்டதுல உண்மையில பலப் புதுப் புதுசெய்திகளைத்தெரிஞ்சிக்கிட்டோம்…. போராட்டக்களம் காலம் பத்தி நீங்களும் விளக்கமாக சொல்லுங்களேன்.”
“அதுக்கு முன்னாடி உங்களுக்கு எங்களோட இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காம்ரேடு..”
“நன்றி தோழர்… இந்த சம்பிரதாயம் எல்லாம் அவசியமில்லை… இயல்பாக இருப்போம்..என்னோட வாழ்க்கை… ஒரு திறந்த புத்தகம்… பல நிகழ்வுகள்… பல வெற்றிகள்… பலபோராட்டங்கள்… சிலதோல்விகள் சரியானத் திட்டமிடலின்மையால்…” “அது உள்ளது… உங்களை போல போராளிகளைப் பார்க்குறதே அரிது… உங்க வாழ்க்கை சம்பவகள்..ஏதாவது ரெண்டு மூனு சொல்லுங்க… இதோ இவன் கதையா எழுதிடுவான்.”
ரவியின் குரலில் மிளிர்வது வஞ்சமா புகழ்ச்சியா என்பது புரியாமல் மையமாக புன்னகைத்து வைத்தேன்.
“எப்படிங்கய்யா பொழுதுபோகுது” “பொழுதுபோகாமலாப் போயுடும் மக்கள் பிரச்சனைகள் தான் நிறையவே இருக்கே.. இந்த தடவ அன்னப் போஸ்ட்டா பஞ்சாயத்து தலைவரா நம் ஊரு ஜனங்கள் தேர்ந்தெடுத்திருக்காங்க… பேங்க்லோன் யாருக்காவது வேணும்னா வருவாங்க… ரெண்டு தடவ உங்க பேங்க்குகே வந்து வாத்து லோன் 50 பேருக்கு வாங்கி கொடுத்திருக்கேன்… பிறகு அரசாங்க திட்டங்கள் இருக்கு… அந்தப்பணிகளைப் பாக்கணும்… ஓடுது அப்படியே.!
“அன்னப் போஸ்ட்ன்னா….” “டேய்… படுத்தாதடா…. அன்னப்போஸ்ட்ன்னா… பென்ஷன் பிஞ்சின் ஆனது மாதிரி…”
“இல்லைங்க தோழர் கீழ் வெண்மணி சம்பவத்துக்கு பிறகு கட்சியில இருந்து வெளியே வந்துட்டேன். மாசா மாசம்.. சமரன், மனஓசை.. செந்தாரகை, புதியமனிதன்.. அனுபத்திரிகை கவரும் படிப்பேன்…”
1948- ம் வருஷத்துல மார்ச் மாசம், எங்க கட்சி அரசாங்கத்தால தடை செய்யப்பட்டு…. பலதலைவர்கள்… ம்ஹூம்… போராளிகள் தலைமறைவாய் போயிட்டாங்க…. அன்னைக்கு ஆளுங்கட்சியா இருந்தவங்க வெகுமக்களுக்கு உழைக்கிற கட்சியையே வேட்டையாடினாங்கன்னா… நம்புவீங்களா… ஆனா… அதுதான் உண்மை. எங்க கட்சிக்கு ஆதரவு கொடுத்த பாவத்துக்காக எவ்ளோ உழைக்கும் மக்கள்… வெகு ஜனங்கள் அரசாங்கத்தால் கொடுமைபடுத்தப் பட்டாங்க…
நானும் இதுக்கு விதிவிலக்கில்ல ஆளும் வர்க்க்த்தோட திட்டமிட்ட சதியால நெடும்பலம் சதி வழக்குல என் பேரும் சேத்துட்டு, அரஸ்ட் பண்ணி திருச்சியில் மூன்றரை வருஷம்… ஜெயில்வாழ்க்க.
“தோழர் ஜெயிலில் இருந்தபோதே… அவரது துணைவியார் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.”-ராஜமாணிக்கம்
“அடடா… எத்தனைத்துயரம்” அது ஒரு மேதினம். வாட்டாக்குடி ரணியன் தோழரும் காலை காடந்தேத்தி அய்யனார் கோயில் அருகில் உள்ள எங்கள் தலைமறைவு குடிசையிலிருந்து வெளிவந்தோம்.
அய்யனார் கோயிலில் சிறிய பக்தர் கூட்டம் தேவைக்கருதி வளர்த்த தாடி… மீசை பக்திப் பழமாய் வேடம் தாங்கிய திருநீற்று மந்திரம். செங்குங்குமம். ரொம்பவும் நெருங்கிப் பார்த்தாலன்றி அடையாளம் கண்டுபிடிக்க இயலாத விவசாயி வேடம்!
மேதினக் கொடியேற்று நிகழ்வுக்காகவும், இயக்கப்பணிகளுக்காவும் வேட்டைக் காரனிருப்பு போகவேண்டும். காடந்தேத்தி, பிரிஞ்சு மூலை அரிச்சந்திரா ஆத்தும தகு தாண்டி தலைஞாயிறு அப்புறம் இரண்டரை மைலு… மெதுவாக நடக்கத் தொடங்கினோம்.
அரிச்சந்திரா ரொம்பவும் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஆலங்குடி தொடங்கி மணக்குடி பிரிஞ்சுமூலை, தலைஞாயிறு வழியாக வேட்டைக்காரனிருப்பு தாண்டி வங்காளக்குடாவில் சங்கமம் ஆகும். அரிச்சந்திரா ஆறு… இந்த தலைஞாயிறு மண்ணோட தாய்ப்பால்ன்னே… சொல்லலாம்.
வெயில்மெல்லமெல்லஏறத்தொடங்கி வியர்வையும் பெருமூச்சும்….! சிறிய ஓய்வுக்காக பிரிஞ்சு மூலைமதகில் அமர்ந்தோம்… அரிச்சந்திராவில் இருந்து வீசியக் குளிர்ந்தகாற்று இதமாய் இருந்தது. ஆற்றில் கிழக்கு நோக்கில் நீர், மேற்குப்பார்த்து நீந்தும் கூட்டம்… போராட்டமே வாழ்க்கை… வாழத்தானே வேண்டும். மீனுங்ககத்து கொடுத்தவாழ்க்க!
பிரிஞ்சுமூலை தாண்டி நடக்க ஆரம்பிச்சோம். “ஆ” – என்றார் தோழர்ரணியன்.
“என்னாச்சு தோழர்”
“தெரியலத் தோழர் ஏதோ முள்குத்துற மாதிரி இருந்தது.கால் கடுக்குது… என்னால நடக்கமுடியும்னு தோணல… நானிங்கேயே எங்கேயாவது தோழர்கள் வீட்ல தங்கிக்கிறேன். நீங்க, தடங்கல் சொல்லாம வேட்டைக்காரனிருப்பு போய், மே தின வேலைப்பாருங்க.”
“அதெல்லாம் சரியில்ல உங்கள விட்டுட்டு எப்படி போகமுடியும்.”
“தோழர் விவாதத்துக்கும், உணர்வு வயப்படலுக்கும் இது நேரமில்ல… காவல்துறை நாமறிந்ததுதான்… சொல்றதை கேளுங்க”
தூரத்தில் ஏதோ ஜீப் வருவது போல ஒலி, “போங்க தோழர்.கௌம்புங்க, நான் ஆத்துல குதிச்சிடுறேன்”- என்ற ரணியன் சட்டென அரிச்சந்திராவில்கு தித்தார்.
போலீஸ் ஜீப் தான்.. நான் ஓடி அருகிலுள்ள புதர்பக்கம் ஒளிந்தேன்… ஜீப் நின்றது…
ஆற்றில் கால்வலியில் தத்தளிக்கும் தோழர்… வாகனத்திலிருந்து இறங்கிய அதிகாரியின் கையில் துப்பாக்கி “ஏய் ரணியன்… தப்பிக்க பாக்காத… சரண்டர் ஆயிடு”
துப்பாக்கி ஓசை”
“புரட்சி ஓங்குக” – ரணியன் தோழரின் கடைசி வார்த்தைகள் கண்ணெதிரில் என்னருமைத் தோழரைப் பறிகொடுத்தேன்.
சற்று கனமான மவுனம் பின் அவரேதொடர்ந்தார்,
“நான் செய்ததிலேயே திருப்தியான சம்பவம் ஒண்ணுன்னா… அது அந்த பாலகிருஷ்ணனை கூறு போட்டது தான்.”
“அது யாருங்க தோழர், பாலகிருஷ்ணன்…” “படிச்சதில்லையா… கீழவெண்மணி சம்பவம்… 48 பேர்.. பொம்பளைங்களும் கொழந்தைகளுமா. ஒரே குடிசைக்குள்ள வச்சி எரிச்சது…”
“ஆமா… ஆமா..ஞாபகத்துக்கு வர்ரது”
“ஆனா… அதிகார வர்க்கத்துக்கு துதியிடும் நீதிமன்றம் அந்த கொலைகாரப் பாவிய நிரபராதின்னு விடுவிச்சது… விடுவித்த காரணம் தான் விநோதமானது…”
“அப்படியென்ன விநோதம்…?”
“சொந்தக்கார் வைத்திருக்கும் வசதியுள்ள நிலப்பிரபு, தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புக்கு வலியச் சென்று தீ வைத்திருப்பாரென்று கருத முடியாது.”
“அடக்கடவுளே…”
“கடவுள்களான திருவாரூர் தியாகராசரும் வரல, சிக்கல் சிங்காரவேலனும் வரல. எட்டுக்குடி முருகனும் வரல, வேளாங்கண்ணி மாதாவும் வரல, நாகூர் ஆண்டவரும் வரல… உயிருக்கு போராடி நாப்பத்தெட்டு மனித உயிர்கள் அலறிய நேரத்தில் கூட எந்த கடவுளும் வரல… ஆனா. நான் ஒரு முடிவெடுத்தேன்.”
“என்ன முடிவு… தோழர்.”
“பாலகிருஷ்ணனோட முடிவுதான்.”
“ஒருநாள் வாய்ச்சது… வரப்போரம் நடந்து வந்தவனை 48 துண்டா வெட்டின பிறகுதான் ஒரு நல்ல தீர்ப்பு எழுதுன திருப்தி கெடச்சது.”
“போலீஸ் பிடிக்கலியா…”
“நம்ம போலீஸ் கோர்ட்டுக்கெல்லாம் சாட்சியம் தான் வேணும்… சாட்சியமே இல்லாம செஞ்ச சம்பவம் அது”
கதைகேட்டுக் கொண்டிருந்ததில் நேரம்போனதே தெரியவில்லை.
“பக்கிரி… தோழர்..மணி என்னாச்சு…?”
“காம்ரேடு… மாவோ காம்ரோடு போட்டோ மேலகடிகாரமிருக்குதுபார்த்துக்கோங்க…”
“அய்யய்யோ… டேய்ரவி… மணி 9.50…. போகலாம்ண்டா…”
“தோழர் உங்ககிட்ட உத்தரவு வாங்கிக்கிறோம். நேரமாயிடுச்சு…” “என்னவோதெரியல.. உங்க கதையக் கேட்டபிறகு உங்க கால்ல விழணும்போல இருக்கு…”
“இல்லைத் தோழர்… ஏற்பதற்கில்லை… தயவு செய்து மனதில் வையுங்கள்… எதன் பொருட்டும் எவர் பொருட்டும் யார் காலிலும் விழாதீர்கள்… பாதம் தாங்காதீர்கள். அது உங்கள் சுயத்தின் வீழ்ச்சி… படித்தவர்கள் புரிந்துகொள்வீர்கள்… என்று நம்புகிறேன்”
“இதெல்லாம் எங்கள் தலைமுறைக்கு புதியசெய்தி” எனினும் தங்கள் கரங்களை இறுகப்பற்றி குலுக்கலாமா… அதற்கும் ஆட்சேபணையில்லையே…”
புன்னகைத்த தோழர் பி.கே.. கரங்களை நீட்டினார். நாங்களும் நீட்டவெது வெதுப்பு..புத்தனல்… புதுசாய் உணர்ந்தோம்.
“விடை பெறுகிறோம்.” “செவ்வணக்கம்…”
வீடுதிரும்பி…. மழித்தல்… குளித்தல்… அழகுக்கு அழகு சேர்த்தலென… கடிகாரம் துரத்தும் காலை. நிமிடங்கள் துளித்துளியாய் எங்களைத் தின்றன. “யப்பாராசா… இன்னைக்கு காலை டிபனை சாப்பிடாமலே கை கழுவுவோம்… என்ன சொல்ற..”ரவியின் செம்பழுப்பு முகத்தைப் பார்த்தேன். “நீ சொன்னா… அதுக்கு அப்பீல் ஏது… நீ அடிச்சி ஆடு” – திமிர்பிடிச்சவன் ரவிகோபால்.
“சரி கௌம்பு.. ஓடுவோம்”- நடையே ஓட்டமாய்க் கொண்டு வங்கியில் நுழந்தோம். அவரவர் இருக்கையில் அமரப் போகையில் “மேலாளர் அவரது அறையில் இருந்து வெளியேவந்தார்.
“என்ன சிவம்… ரவி..எங்கப் – போய்சுத் திட்டுவர்ரீங்க… மணி என்னத் தெரியுமா… 10.40..சீட்ல ஆளில்லாதத பாத்துட்டு உங்க பேர்ல ஒருத்தர் கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கார்… அதுவும் ரைட்டிங்கில்… என்னப்பா. இப்டி பண்றீங்களேப்பா..” – மூச்சு வாங்கியது மூர்த்திசாருக்கு.
“அது யார் சார்.. இந்த கிராமத்துல எங்க மேல கம்ப்ளெயிண்ட் பண்றது. பார்ரா ரவி.. இந்த அக்குறும்பு அநியாயத்த..” “டேய்… வாயவச்சிகிட்டு சும்மா இர்ரா… மூர்த்திசார். யார் சார் எங்க மேல புகார் கொடுத்தது..?”
“அதே கேபின்ல ஒக்காந்து இருக்காரே… அந்தப்பெரியவர் தான். அவர் தான் இந்த பஞ்சாயத்து தலைவர் தெரியும்ல…?
எட்டிப் பார்த்தோம் மேலாளர் அறைக்குள் மவுனமாக அமர்ந்திருந்தார்.. காம்ரேடு பி.கே.
Leave a Reply